வெள்ளி, 18 மே, 2012

தாராவி – உண்மை முகத்தின் சிறு அறிமுகம்

தாராவி, குட்டி தமிழ்நாடு. தமிழகத்தின் அனைத்துக் கட்சி, அரசியல் அமைப்புகள், இயக்கங்களின் கிளைகள், பொருட்கள் என அனைத்தையும் இங்கே காணலாம். சாதியை தமிழன் இங்கேயும் தூக்கி சுமப்பதும், அதனூடாக சண்டைகள் மாணவர் மட்டம் வரைக்கும் சில நேரங்களில் நீளுவதும் தமிழின வரலாற்றில் நீண்டகாலமாக கெடுவாய்ப்பு. தாராவியில் பார்ப்பனர்களை காணவே முடியாது. அவர்கள் தமது குடியிருப்பை தாராவியை சுற்றியுள்ள மாதுங்கா, சயான் போன்ற உயர்தட்ட பணக்காரர்களுக்கு நடுவில் அமைத்துக் கொண்டனர்.


தன்னகத்தே உழைக்கும் மக்களின் வாழ்க்கையை ஒரு வரலாறாக கொண்டிருக்கும் தாராவியை பற்றிய ஒரு சுறுக்கமான அறிமுகம்தான் இக்கட்டுரையின் நோக்கம்.


18 வது நூற்றாண்டில் தாராவி தீவாகவே இருந்தது. சிம்னாஜி அப்பா என்னும் இராணுவ தளபதி வசாய் என்னும் பகுதியை கைப்பற்றினார். அதற்கு முன்பாக தாராவியை கைப்பற்றியிருந்தார். 19 ம் நூற்றாண்டில் இறுதிக்கும் முன்வரை தாராவியின் தற்கால நிலப்பரப்பு பெரும்பாலும் சதுப்பு நிலப்பகுதியாக இருந்த கால கட்டத்தில் கோலிஎன்று அறியப்படுகிற மீனவ மக்கள் குடியேறினார்கள். ஆனால், மீன்பிடி தொழ்ல் அந்த பகுதியில் குடியேற்றங்களுக்காக நிரப்பட்ட பொழுது வழக்கொழிந்து போனது. தாராவிக்கு அடுத்தாற்போம் உள்ள சயான் பகுதியில் வந்த அணைக்கட்டு தீவுப்பகுதியாக இருந்த தாராவியை மும்பை என்னும் தீவு நகரத்தோடு இணைக்கும் பணியை விரைவாக செய்து முடித்தது.


தாராவி தன் மரபு சார்ந்த மீன்பிடி தொழிலை இழந்தது. அதுவே, பிழைப்பு தேடி வரும் புதிய சமூங்களுக்கான குடியேற்றமாக மாறுவதற்கான வாய்ப்பாக அமைந்தது. குசராத்திலிருந்து குடியேறிய மக்கள் மண்பாண்டம் செய்வதை தொழிலாக கொண்டனர். தமிழகத்திலிருந்து குடியேறியவர்கள் பெரும்பாலும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் தங்கள் வாழ்வாதரத்தை அமைத்துக் கொண்டனர். இவர்களோடு மராத்தியத்தை சார்ந்த சமாரஎன்று அறியப்படுபவர்களும் இணைந்து தோல் பதனிடும் தொழிற்சாலைகளை நிறுவினர். உத்திரபிரதேசத்திலிருந்து குடியேறியவர்கள் எம்ப்ராய்டரியை தமது தொழிலாக கொண்டனர்.


தமிழகத்திலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் குடியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் இஸ்லாமியர்கள், ஆதி திராவிடர்கள் மற்றும் நாடார் சமூகத்தை சார்ந்தவர்களாகவே இருந்தனர்.1920 க்கு பிறகு இவர்களது வரவு எண்ணிக்கை அளவில் அதிகரித்தது. மும்பையின் முதல் தமிழ் பள்ளியும், இவர்கள் வருகைக்கு பின் 1924 இல் நிறுவப்பட்டது. அடுத்த 40 ஆண்டுகளில் தாராவியில் இருந்த ஒரே தமிழ் பள்ளியாகவும் இதுவே திகழ்ந்தது. இன்று வரை மும்பையின் மேற்கு பகுதிக்குச் செல்ல மக்கள் தேர்வு செய்யும் ரயில் நிலையமாகிய மாகிமிற்கு ஒத்தையடி வழித்தடம் மட்டும்தான் முதலில் இருந்தது. தாரவியின் சதுப்பு நிலத்தின் பஞ்சம் பிழைக்க வந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அன்றைய காங்கிரசை சார்ந்த சமூக நல ஆர்வலர், பின்னர் சுயமரியாதை இயங்கிய தோழர் எம்.வி.துரைசாமியின் (http://shrimvduraiswamy.blogspot.in ) முன் முயறிசியில்தான் 1960 இல் தாராவி கூட்டுறவு குடியிருப்பு சங்கம் நிறுவப்பட்டது. அதன் கீழ் 338 குடியிருப்புகளும், 97 கடைகளும் உருவாக்கப்பட்டன. அந்த குடியிருப்புக்கு டாக்டர்.பாலிகா நகர் என்று பெயரிடப்பட்டது. தாராவியில் குடியிருப்புகள் உருவாக்குவதில், மும்பை பெருநகரத்தின் நடுவே தமிழர்களும், இன்னபிற சமூகத்தினரும் அவலமான சூழ்நிலையில் வாழும் சூழலை போக்க முன்முயற்சி எடுத்த துரைசாமி அவர்கள் தம் பெயரை முன்னிலைப்படுத்தாது, தாராவியில் சுகாதரமற்று வாழ்ந்து வந்த மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கிய மருத்துவர் பாலிகாவின் பெயரையே சூட்டியது, பெயருக்காக சண்டை போடும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ள வேண்டிய நற்பண்புகளில் ஒன்று.


தாராவியில் பெரும்பகுதி தமிழ் மக்கள் தொகையை பறையர் சமூகத்தவர்களே ஆட்கொள்கிறார்கள். இவர்களின் முன்னோர்கள் நிறுவிய மும்பை தென்னிந்திய ஆதி-திராவிட மகாஜன சபையின் சார்பாக தமக்கான பிள்ளையார் கோவிலை நிறுவியிருக்கிறார்கள். மும்பை வழக்கப்படி கொண்டாடப்படும் பிள்ளையார் சதுர்த்தி இந்த சங்கத்தினால் நூறாவது முறையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த அமைப்பின் சார்பாக ஒரு பள்ளிக்கூடமும் மிகச் சமீபத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த சமூகம் மட்டுமில்லாமல் மும்பையில் தக்ஷிணமாற நாடார் சங்கம் ஒன்றும் உள்ளது. இந்த அமைப்பின் சார்பாக தொடங்கப்பட்டுள்ள “காமராசர் உயர்நிலைப் பள்ளி” ஏழை தாராவி மாணவர்களின் கல்வியின் ஏற்றத்தின் பெரும்பங்கு வகித்த்து என்றால் மிகையாகாது. இந்த கட்டுரையின் தொகுப்பாளனான நான் அந்த பள்ளியில்தான் படித்தேன். அதனூடாக தமிழ் உள்பட நான்கு மொழிகள் கற்கும் வாய்ப்பு கிட்டியது.


கூடுதலாக மரபுசார் மண்பாண்டம், மற்றும் நெசவுத்தொழில், ப்ளாஸ்டிக் மீள் உற்பத்த்தி என்பதோடு மட்டுமில்லாமல் கழிவுகளை மீளுறபத்தி செய்யும் தொழிற்சாலைகளும் பரவலாக இங்கு உள்ளன. இங்கு 5000 வகையான வணிக வாய்ப்புகளும் ஒற்றை அறை தொழிற்சாலைகளும் நிரம்ப உள்ளன.


மீள்கட்டமைப்பு திட்டங்கள்

1997 முதல் ஹாங்காங்கில் உள்ள தய் ஹாங் என்ற குடிசைபகுதி மீள்கட்டமைப்பு செய்யப்பட்டதை முன்மாதிரியாக கொண்டு தாராவியை மீள்கட்டமைப்பு செய்வதற்கான பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. 2004 இல் மீள் கட்டமைப்பிற்கான திட்ட மதிப்பீடு 5000 கோடியை தாண்டிவிட்டது. 2010 இல் இதே மதிப்பீடு 15000 கோடியை தாண்டியிருக்கிறது, முன்னேற்றமும், மீள்கட்டமைப்பும் அங்கங்கே, அவ்வப்போது எட்டி, எட்டி பார்க்கிறது என்பதுதான் எதார்த்தம்.


தாராவியின் முன்னேற்றம் என்பதாக முன்வைக்கப்படும் திட்டங்களுக்கு உலக அளவிலான நிறுவனங்கள் ஏலத்தில் பங்கெடுக்கின்றன. இதில் லெஹ்மன் பிரதர்ஸ் நிறுவனமும் அடக்கம். இது ஒரு பங்கு தரகு நிறுவனம்., இந்த நிறுவனம் தாக்கல் செய்த கூடுதலாக மதிப்பிடப்பட்ட பத்திரங்களை தன்னுடைய கணக்கு புத்தகங்களில் காலாண்டு இறுதிநிலை அறிக்கையில் அதன் உண்மையான கடன்தன்மையை மறைத்த விதத்தில் திரித்து தயாரித்தது. இதை நம்பி முதலீடு செய்தவர்கள் லெஹ்மன் பிரதர்ஸ் நிறுவனம் திவாலாகும் பொழுது பெரும் நெருக்கடிக்கு உள்ளாயினர். இந்த நிறுவனம் திவாலாகும் கட்டத்தில் அமெரிக்க அரசு 900 பில்லியன் டாலர் மக்கள் வரிப்பணத்தை கொடுத்து அந்த நிறுவனத்தை நெருக்கடியிலிருந்து மீட்டிருக்கிறது. இப்படியான மோசடித்தனமான நிறுவனம் தாராவிக்குள் முன்னேற்றம், மீள்கட்டுமானம் என்ற பெயரில் நுழைய முயற்சிப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. காலம், காலமாக வாழவே தகுதியற்றிருந்த மண்ணை வாழ பண்படுத்திய மக்களை முன்னேற்றம், மீள்கட்டமைப்பு போன்ற திட்டங்கள் மக்களுக்கு பங்களிப்பது போல தோற்றம் கொண்டிருந்தாலும் கண்டிப்பாக, அது தாராவி வாழ் மக்களை மெல்ல வெளியேற்றி பன்னாட்டு நிறுவனங்கள் ஆக்கிரமிப்பதற்காகவே அமையும் என்பதை உலகமயமாதலின் வரலாறறிந்தவர்களால தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.


மிகச்சமீபத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் மீள்கட்டமைப்பு திட்டம் அமெரிக்க வாழ் முகேஷ் மேஹ்தாவால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின்படி தாராவியில் வசிக்கும் 57,000 குடும்பத்திற்கு சேவை செய்யும் பொருட்டு 3,00,00,000(மூன்று கோடி) சதுர அடிக்கு குடியிருப்பு, பள்ளி, விளையாட்டு திடல், சாலை போன்றவை அமைக்கப்படும். ஆனால், விற்பனைக்காக கட்டப்படப் போகும் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களுக்காக இன்னபிற வசதிகளுக்காக பயன்படுத்தப்படப் போகும் நில அளவு எவ்வளவு தெரியுமா? 4,00,00,000( நான்கு கோடி). வாழ பண்படுத்திய மக்களுக்கு 3 கோடி சதுர அடி, பணம் வைத்திருக்கும் ஒரே காரணத்திற்காக தாராவி பக்கம் வரவே முகம் சுழிக்கும் மக்களுக்காக 4 கோடி சதுர அடி.. ஆக, மக்களுக்கு வசதிகள் செய்து தரப்போகிறோம் என்கிற பெயரில் கொள்ளையடிக்கப் போவது சில நிறுவனங்களும், அரசு அதிகாரிகளும், முதலாளிகளும்தான். காலப்போக்கில் விலைவாசி ஏற்றம், வசதி வாய்ப்பு பணக்காரர்களுக்கான தாராவியாக மாறும் பொழுது மூன்று கோடி சதுர அடியும் பிடுங்கப்படும் அல்லது மக்களே விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை இயல்பாக உருவாகும் என்பதையும் நாம் இந்நேரத்தில் நினைவில் கொள்ளுதல் நலம்.


இதில் இரண்டாயிரமாவது ஆண்டிற்கு முன்பு குடியிருந்தவர்களுக்குதான் வீடுண்டு. இத்தனை ஆண்டுகாலமாக சொந்த வீடில்லாது, வாடகை வீட்டிலேயே 10-15 ஆண்டுகளை ஓட்டிவிட்ட, வறுமையில் வாடும் குடும்பத்திற்கு வீடு கிடையாது. வீடு கிடைப்பவர்களுக்கும் எத்தனை சதுர அடியை அரசு முன்வைத்திருக்கும் திட்டத்தின்படி தருவதாக கூறியிருக்கிறார்கள் என்றால் 225 சதுர அடி. இந்த 225 சதுர அடி என்னும் அநீதிக்கு எதிராக மக்களிடையே கடும் எதிர்ப்பு இருந்து வருவது கள நிலவரம். அதோடு, இத்தனை ஆண்டுகாலமாக சிறு பெட்டிக்கடை, மளிகைக்கடை மட்டுமில்லாமல் கடலை, மிக்சர், சிப்ஸ் போன்றவை தயாரிக்கும் சிறு நிறுவன்ங்கள் வைத்து தம் பிழைப்பை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு தமது கடையும், பிழைப்பதற்கான வாய்ப்பும் மீண்டும் அமையும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.


இது போன்ற ஐயங்களுக்கு அரசின் பதில் என்னவென்றால் சுற்றுசூழலை மாசுபடுத்தாத வணிக நிறுவனங்களை மீண்டும் சட்டபூர்வமாக இடமாற்றம் செய்து தருமாம். ஏழைகளிடம் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதென்றால், அரசுக்கு அலாதி பிரியம். ஆனால், சுற்றுசூழலை மாசுபடுத்தும் பெரும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுக்கும் பொழுது அந்த அக்கறை, அக்கரைக்கு சென்றுவிடுவதற்கு நாம் யாரை நொந்து கொள்வது.


தாராவி அதன் தொடக்க காலம் தொட்டு சந்தித்து வரும் பிரச்சினைகளில் முக்கியமான பிரச்சினை சுகாதாரம் தொடர்பானது. கழிவறை வசதி இன்றுவரை நேர் செய்யப்படவில்லை. இருக்கும் கழிவறைகள் சுத்தப்படுத்தப்படுவதில்லை. சுத்தப்படுத்தப்படுவதற்கு வழக்கம்போல் இந்தியாவெங்கும் உள்ளபடி தாழ்த்தப்பட்டவர்களைத்தான் அரசு அங்கே பணித்திருக்கிறது. அதுவும் போதுமான அளவில் ஊழியர்கள் கிடையாது. நவம்பர் 2006 இன் படி 1440 நபர்களுக்கு ஒரு கழிவறை என்ற விகிதத்தில்தான் தாராவியில் கழிவறைகள் உள்ளன. இன்றளவும் திறந்தவெளி கழிப்பிடங்களாக மக்களால் பயன்படுத்தபடுகின்றன. அதனூடாக தொற்றுநோய் பரவல் என்பது விரைவாக நடக்குமிடமாக இன்றளவும் தாராவி உள்ளது. தண்ணீரை பொறுத்தவரை தண்ணீர் விநியோகம் சீராக கிடையாது. அப்படியே வரும் தண்ணீர் குழாய்கள் சாக்கடைகள் வழியாக வருவது, அந்த குழாய்கள் துருப்புடித்து, ஓட்டை விழுந்து சாக்கடை நீர் கலந்து வரும் நீரையே மக்கள் பயன்படுத்தும் சூழல் இன்றளவும் நிலவுகிறது. தண்ணீரை தனியார்மயமாக்குவது, பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீர் தொழிலில் முதலீடு செய்வது, அரசு சுகாதரமற்ற நீரை வழங்குவது போன்றவற்றை வாசகர்கள் இவ்விடத்தில் பொருத்தி பார்த்தால் கூடுதல் விளக்கங்களும், தெளிவும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது

====================================================================================

வோல் ஸ்ட்ரீட்டின் குற்றத் தன்மையை லெஹ்மன் திவால் அறிக்கை அம்பலப்படுத்துகிறது

http://www.wsws.org/tamil/articles/2010/mar/100319_lehman.shtml

http://www.sra.gov.in/htmlpages/Dharavi.htm

http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4147:2008-09-27-07-54-49&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50