திங்கள், 17 நவம்பர், 2008

சட்டக்கல்லூரியில் சாதி வெறிக்கு அடங்கமறுத்து திருப்பி அடித்த மாணவர்கள்


சட்டக்கல்லூரியில் மாணவர்கள் தாக்கப்பட்ட நிகழ்வை சன் நியூஸ் தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. அந்த நிகழ்வு எனக்குள் அதிர்வை ஏற்படுத்தி இருந்தாலும், இதற்கு என்ன காரணமாக இருக்கும் அலுவலகத்திற்கு சென்றவுடன் செய்திகளை பார்த்து எதனால் இந்த வன்முறை தூண்டப்பட்டது என்று அறிந்து கொள்ள வேண்டும்,என்ற ஆவலோடு ரயிலில் சென்று அமர்ந்தேன், என் எதிரில் ஒரு தமிழன்பர் தினகரன் நாளிதழை புரட்டிக்கொண்டிருந்தார், அதில் நான் சன் நியூஸ் தொலைக்காட்சியில் பார்த்த நிகழ்வு நிழற்படமாக வந்திருந்தது, அவரிடம் செய்தித்தாளை கேட்டு பெற்று அந்நாளிதழில் வந்திருந்த செய்தியை வாசித்தேன், அப்பொழுது மெலிதாக காரணம் பிடிப்பட்டது, இருந்தும் குழப்பம் நீடித்தது. அலுவலகத்திற்கு சென்று செய்திகளை உலா வந்தேன், குழப்பம்..........அடித்தது யார்?.......அடி வாங்கியது?..........ஏன் அடித்தார்கள்? இந்த வன்முறைக்கு தூண்டுதலாக இருந்த காரணம் என்ன?...........எந்த செய்தித்தாளும், செய்தி தொலைக்காட்சியும் வெளியிட்டனவா?.................என்பது மிகப்பெரிய ஐயம்.

 

(பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிடுவதே இந்தியாவிலேயே அதிகமான வாசகர் வட்டம் கொண்ட நாளேடு எமது, அதிகமான பார்வையாளர்களை கொண்டது எம் தொலைக்காட்சி நிறுவனம் என்று விளம்பரம் தேடுவதற்குதானேயன்றி உண்மையான சமூக அக்கறையோடு அல்ல என்பது என்  திண்ணமான எண்ணம், அது பெருமளவு உண்மையும் கூட)

 

 அதற்கு பிறகு இணையத்தில் தொடர்ச்சியாக உலா வந்தும், செய்தித்தாள்களை வாசித்தும், தொலைக்காட்சி செய்திகளை பார்த்தும் உணர்ந்த செய்தியின் வெளிப்பாடுதான் இந்த கட்டுரை

 

தேவர் ஜெயந்தி விழா நடைபெற்றதாம், அதற்கு தங்களை தேவர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் மாணவர்கள் சுவரொட்டியோ(விளம்பரமோ) அச்சிட்டிருக்கின்றனர், அதில் சட்டமேதை அம்பேதகரின் பெயரை லாவகமாக தவிர்த்திருக்கின்றன்ர், அவர்கள் ஏன் அம்பேத்கரின் பெயரை பயன்படுத்த வேண்டும்? என்ற கேள்வி எழலாம், அம்பேத்கரை தலைவராக ஏற்றுக் கொள்ளச் சொல்லி யாரையும் நாம் கட்டாயப்படுத்த தேவையில்லைதான், ஆனால், விழா நடத்தியது (அம்பேத்கர்) சட்டக் கல்லூரி  மாணவர்களாயிற்றே, அங்கு தவிர்த்ததுதான் தவறு, பல நூற்றாண்டுகளாக சேரிகளில் சாதியின் பெயரால், தீண்டாமை கொடுமையால் முடங்கி அடிமைப்பட்டு கிடந்த ஒரு இனம் இன்று படித்து முன்னேறியிருந்தாலும் இன்று இந்த நவீன சேரிக்குள் ஆதிக்க சாதி திமிர் பிடித்த சாக்கடை  கண்ணோட்டத்தை, சாதித் திமிரையும் இன்றும் சந்திக்கத்தான் வேண்டியிருக்கிறது.

 

தன்னை ஈனப்பிறவியாக பார்க்கும் இந்த சமூகத்தால் தன் தலைவன்,     மாமேதை, உலக அறிவாளிகளில் ஒருவர், சட்ட மேதை, பாரத ரத்னா என பல புகழ் பெயர் சூட்டப்பட்டும் இன்றளவும் கீழ்ச்சாதியில் பிறந்தவனாக கீழ்ச்சாதியாக பாவிக்க படுகிறானே, இழிவுபடுத்த படுகிறானே என்ற சினம் வரத்தானே செய்யும். அதுதானே நியாமும்கூட. சுயமரியாதை உணர்வு வந்த பிறகு சாதி ஆதிக்கத்திற்கு அடங்க மறுக்கத்தானே செய்யும் அவன் உணர்வுகள், திருப்பி அடிக்கத்தானே தூண்டும்.

 

அடிப்படையில், கல்லூரி வளாகத்தில் தேவர்  ஜெயந்தி கொண்டாட அனுமதியளித்தது தவறு, அதற்காகத்தான் கல்லூரி முதல்வர் மீது முதல் வழக்கு பதியப்படிருக்க வேண்டும், (ஆனால் இந்த ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகள் இதை செய்ய மாட்டார்கள் என்பது திண்ணம்) முத்துராமலிங்கம் ஒன்றும் பொதுவான தலைவரில்லை (யாருக்காவது அவர் தலைவராக இருக்க தகுதியுடையவரா? என்பது இன்னொரு கேள்வி, அவருடைய தகுதியை ஓரளவாவது தெரிந்து கொள்ள இங்கே சுட்டவும்), இன்றைய நிலையில் ஆதிக்க சாதி திமிரின் அடையாளம்தான் முத்துராமலிங்கம். அந்த சாதி வெறியனின் அடையாளத்தை முன்னிறுத்தி சட்ட மேதை அம்பேத்கரை அவமானப்படுத்தியதை அந்த மாணவர்கள் அல்ல, அரசு தட்டிக் கேட்டிருக்க வேண்டும்,

 

அரசு தட்டி கேட்க வில்லை! மாணவர்கள் தட்டி கேட்டார்கள்!!!

இதில் அவர்களை கைது செய்வதற்கு பதிலாக இன்றாவது சுயமரியாதை உணர்வு எழுந்ததே, இன்னும் வீரியத்தோடு போராடு , சாதி ஒழியும் வரை போராடு என்று தட்டியல்லவா கொடுத்திருக்க வேண்டும் இது சாதி ஒழிப்பு அரசாக இருந்திருந்தால்..................................

 

இவ்வளவு சினம் கொண்டு தாக்கும்படிக்கு தூண்டிய அந்த சாதி ஆதிக்க உணர்வுகளைதான் முதலில் அரசு தட்டி கேட்க வேண்டும், பிறகுதான் அம்மாணவர்களை நோக்கி சட்டம் பாய வேண்டும்,

 இல்லையென்றால், சட்டம் எழுதியரை இழிவுபடுத்திய மாணவர்களை தட்டி கேட்டதற்காக மாணவர்கள் கைது என்றுதான் செய்தித்தாள்கள் செய்தி வெளியிட வேண்டும், அதுதான் பொருத்தமாகவும் இருக்கும்.

 

பக்கம் பக்கமாக செய்திகளை வெளியிட்டு, நாளும் நடந்த நிகழ்வை காட்சியாக காண்பித்து பணம் சம்பாதிக்கும் ஊடகங்கள் முதலில்

1)      சமூக அக்கறை பெறட்டும்  சொல்லட்டும்,

2)      சாதி சிக்கல்களை வெளிப்படையாக அலசட்டும் பிறகு

 

பிறகு சொல்லட்டும் இது காட்டு மிராண்டித்தனமா? அல்லது மனிதத்தன்மையா? என்று.

 

##  ஈழத்தமிழனுக்கு குரல் கொடுக்கும் போலித்தமிழனே நம் அருகில் வாழும் நம் சகோதரனை சேரியில் ஒடுக்குவதை முதலில் நிறுத்து!

## ஈழத்தமிழனுக்கு தமிழனாய் குரல் கொடுக்க சாதியின் கழுத்தறுத்து மனிதனாய் வா இன்னொருமுறை கருத்தறித்து!