வியாழன், 9 ஜூலை, 2009

நாடோடி- காதலர்களுக்கும், காதலர்களின் நண்பர்களுக்கும் அறிவுரை

நாடோடி- காதலர்களுக்கும், காதலர்களின் நண்பர்களுக்கும் அறிவுரை

தமிழர்களுக்கு நிரந்தரமாகிவிட்ட புலம்பெயர் வாழ்க்கையின் சாட்சியாக தாய்தமிழகம் விட்டு மும்பையில் வாழும் தமிழனாகிய நான் என்னைப் போன்றே புலம்பெயர்ந்த மும்பை தமிழ் நண்பர்களோடு நாடோடி திரைப்படம் பார்க்க மாட்டுங்கா பகுதியில் உள்ள அரோரா திரையரங்கிற்கு சென்றோம். திரையரங்கு முன்றைய எங்கள் அனுபவத்தைவிட அதிக அளவில் இளைஞர்களால் நிரம்பி வழிந்தது. இளைஞர்கள் இதற்கு முன்பு ரஜினி, விஜய், அஜித் போன்று திரையை இளைஞர்களுக்கு போதையூட்டும் கருவியாக பயன்படுத்தும் நடிகர்களின் நடிக்கும் திரைப்பட்த்திற்கே இவ்வளவு கூட்ட்த்தை கண்டிருக்கிறேன்.

திரையரங்கிற்குள் நுழைந்தவுடனேயே, திரைப்பட்த்தின் தொடக்கம் இந்திய தேசியப்பாடலோடு தொடங்கியது. சில தமிழ் இளைஞர்கள் முன்பே முடிவு செய்து வந்தது போல் இந்திய தேசியப் பாடலுக்கு எழும்ப மறுத்து அமர்ந்திருந்தனர். இலங்கை பிரச்சினையில் ஈழத்தமிழர்களுக்கு இந்திய தேசியம் செய்த துரோகத்தையும், இந்தியர்களாக அடையாளப்படுத்தப் பட்டிருக்கும் இந்திய தேசிய உணர்வை மீறி தமிழ் இன-உணர்வோடு போராடிய தமிழர்களை மதிக்காததற்கும், தமிழ் இளைஞர்களின் எதிர்வினையாகவே நான் இதை கண்டேன்.

இந்திய தேசியத்திற்கு வலுக்கட்டாயமாக மதிப்பு தெரிவிக்க வைக்க திரையரங்குகளில் இந்திய தேசியம் ஒலிக்க வைப்பதற்கு பதிலாக, இந்தியாவில் வாழும் பல்வேறு ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் மெய்யான உணர்வுகளை மதிப்பதே இந்திய தேசியம் கோரும் மதிப்பை இயல்பாக பெற்றுத் தரும், இல்லையேல் போலிகள் வருங்கால வரலாற்று பக்கங்களில் சிதறி விழுவதை தடுக்க இயலாது.

இந்திய தேசியப்பாடல் முடிந்தது, திரைப்படம் தொடங்கியது, தொடக்கமே தமிழகத்தில் கிராமங்கள் (உண்மையாக) காணாத சீரான தார் சாலையை காட்டியது, தார் சாலையின் ஊடாகவே திரைப்படத்தில் உழைத்த கலைஞர்களின் பெயர் வரிசை மெதுவாக நகர்ந்தது. பெயர் வரிசை முடிந்ததும் இன்னொரு வரிசை காத்திருந்தது, காவல்துறை ஆட்சேர்ப்பு வரிசை.........தமிழக இளைஞர்களின் வாழ்க்கை வழியில் பெற்றோர்கள் வலியிறுத்தும் அரசு வேலையும், அதற்காக இளைஞர்கள் நேர்மையாக, அரசு வேலை கிடைத்து விடாதா? என்ற உழைப்பையும் ஒரு சில காட்சிகளில் உணர வைத்து விடுகிறார் இயக்குனர்..


காதல் என்றாலே வெறுத்தொதுக்கும் இந்த சமூகத்தில் காதலை வரவேற்பதற்கும், காதல் என்ற பெயரால் தன்னுடைய காமப்பசிக்கு
விளக்குபிடிக்க ஆள்தேடும் வேலையை செய்யும் நண்பர்களுக்கு, நண்பனின் காதல் என்றவுடன் கண்மூடித்தனமாக உதவி செய்ய கிளம்பும் நண்பர்களுக்கு என கொஞ்சம் அழுத்தமாகவே குட்டு வைத்திருக்கிறார் இயக்குனர்.


காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க இதுவரை பொருளாதாரம்தான் காரணம் என்று மட்டும் சொல்லிவிட்டு, காதல் என்ற இயற்கை உணர்வை நாம் வாழும் சாதி வன்மையாக எதிர்க்கிறது என்ற உண்மையை இதுவரை தவிர்த்து வந்த திரையுலகத்தில், சாதி என்ற கேவலமான சிந்தனையும் காதலை எதிர்க்க காரணம் என்று ஒரு நிமிட வசனத்திலாவது சொல்லத்துணிவு கொண்ட இயக்குனருக்கு பாராட்டுக்கள் நிறையவே வந்து குவிய வேண்டும்....( ஆனால் கொஞ்சம் இந்த சாதிய இழி சிந்தனையை இன்னும் பேசியிருக்கலாமோ என்ற எதிர்ப்பார்ப்பு இல்லாமிலில்லை, பிரச்சினையில்லை)அடுத்த பெண்ணடிமைத்தனத்தை கொஞ்சம் தொட்டிருப்பதும் ஆறுதலான செய்தி....தன்னுடைய போலி சமூக மதிப்பை நிலைநாட்ட தன் மகளை மிரட்டி, தற்கொலை செய்து கொள்வேன் என உணர்வுரீதியில் மிரட்டி, தன் காதலனை, மாமனை விடுத்து வேறொருவனை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தும் தகப்பனையும், அதற்கு ஒத்துப்போகும் தாயையும், தன் அடிமைச்சின்னமாகிய தாலியை தனக்கு மேலும் சில ஆண்டுகாலம் உறுதி செய்து தரச்சொல்லி காலில் விழும் தாயிடம், தன் உணர்வுகளுக்கு, உரிமைகளுக்கு பூட்டுப்போட்டு தானும் போய் அடிமைச்சங்கிலியில் மாட்டிக் கொள்கிறாள், இந்த கதாப்பாத்திரத்தில் வரும் பெண்.

அதே நேரத்தில், இதே போலி மதிப்பைக் காட்டி தன் பெண்ணின் உள்ளத்து உணர்வுகளை தடுக்க நினைக்கும் தகப்பனுக்கு, கதையின் நாயகனின் தங்கையின் காதலின் ஊடாக பதில் சொல்ல முனைந்திருக்கிறார் இயக்குனர். வாழ்க்கை துணையாக வருவதற்கு சாதி தகுதி கிடையாது, நற்பண்பு, திறமை மட்டுமே என்று உறுதியாக சொல்லிச் சென்றிருக்கிறார்.

மற்றொரு பரிணாமத்தில், காதலர்கள் தாங்கள் காதலிக்கும் போது தங்கள் பாலியல் தேவைகளை மட்டும் தீர்த்துக் கொள்ள முழுமுயற்சி எடுக்கின்றனரே ஒழிய, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள எள்ளளவு முயற்சி கூட எடுப்பதில்லை. இப்படி பாலியல் தேவைக்காக இணையும் காதலர்கள், தேவை முடிந்ததும் பிரிந்து போய்விடுவார்கள் என்று கதாப்பாத்திரங்களின் மூலம் சொல்ல முயற்சித்திருக்கிறார்.( ஆனால், பெண்ணோ/ஆணோ விருப்பப்பட்டு ஒரு உறவில் நீடிக்க வேண்டுமேயொழிய, வலுக்கட்டாயமாக இல்லை,என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம்).


இப்படி பல விசயங்கள் படத்தில் ரசிக்க வைத்தாலும், நடுவில் சேர்க்கப்பட்ட குத்துப்பாட்டு தேவையற்றது. மக்கள் ஆபாச குத்துப்பாட்டு விரும்புகிறார்கள், என்று சொல்லி படைப்பாளிகள் ஆபாசத்தை திணித்துவிட்டு தப்பிக்க முயல்வதை நிறுத்த வேண்டும். படத்தை உருவாக்கி திரையிட்டபின் மக்கள் தியேட்டர் குத்துப்பாட்டு திரையை கிழித்த்தாக எங்காவது கேட்ட்துண்டா? மாற்று சினிமா பற்றி சிந்திப்பவர்கள், இதற்கு மாற்று குறித்து சிந்திக்க வேண்டும். இயல்பான வாழ்க்கை பற்றி சிந்திப்பவர்கள், இப்படி ஆபாச குத்துப்பாட்டுதான் நம் வாழ்க்கைக்கு தேவையா?என்பதையும் சிந்திக்க வேண்டும்.

இப்படி ரசிக்க பல செய்திகள் இருந்தாலும், முழுக்க முழுக்க இது மாற்று சினிமா என ஒப்புக்கொள்ள முடியாவிட்டாலும், மாற்று சினிமாவுக்கான முன்முயற்சி என்று இதை நாம் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளலாம். சமூக அக்கறையுள்ள நம் சகோதரர்கள், ஒடுக்கப்பட்ட, பிறபடுத்தப்பட்ட உழைக்கும் மக்களில் இருந்து தம் சமூக அக்கறையை, கவலையை வெளிப்படுந்த முனைந்திருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியை தருகிறது.

இளைஞர்கள் இது போன்ற சினிமாக்களுக்குதான் இப்பொழுது சினிமாவுக்கு போகிறார்கள், ரசிக்கிறார்கள். இயக்குனர்கள் இதுபோன்ற, இதைவிட சிறப்பான, காதலைவிட முக்கியமான சமூக பிரச்சினைகளை தொட்டு சிறந்த திரைப்படங்களை உருவாக்க வேண்டும்.