புதன், 6 மார்ச், 2013

நான் ஏன் பேசக்கூடாது - 1


தடிகளை கைகளில் ஏந்தி பத்துப் பன்னிரெண்டு பார்சிகள் வரிசையாக என் முன் அச்சுறுத்தும் முறையில் நின்று கொண்டிருந்ததும், கருணையை வேண்டியும் அஞ்சிய பார்வையுடன் அவர்கள் முன் நான் நின்றிந்ததுமான காட்சி 18 நீண்ட ஆண்டுகள் கழிந்த பின்னும் என் மனத்திரையிலிருந்து மறையவே இல்லை. இன்று கூட அந்த நிகழ்ச்சியை  என்னால் நினைவுப்படுத்திப் பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் அதை நினைவுப்படுத்தி பார்த்த எந்த ஒரு நேரத்திலும் என் கண்கள் கலங்காமல் இருந்ததில்லை. (விசாவுக்காக காத்திருக்கிறேன் நூலில் அண்ணல் அம்பேத்கர்)

மேலே இருக்கிற வரிகளுக்கு சொந்தக்காரர் அம்பேத்கர் மட்டுமல்ல, தீண்டாமை கொடுமையை பல நூற்றாண்டுகளாக அனுபவித்து வரும் தலித் மக்களின் உள்ளத்தில் ஆழ்ந்து உரைந்து கிடக்கும் வலி அது. உலகத்தின் மிக உயரிய பட்டங்களை பெற்ற மாமேதைக்கே கண்ணீர் முட்டுகிறதென்றால், என்னை போன்ற சாதாரணர்களுக்கு கண்ணீர் ஒன்றும் எட்டாத தூரமல்ல. எங்கள் வலி  எமக்கு கண்ணீரை தரும், நாங்கள் புலம்புவோம், அரற்றுவோம்.

சாதி நீண்டகால பழக்கம், அதை உடனடியாக துறக்க முடியாது என்கிறார்கள். இதையேதான் காந்தி சொன்னார். காத்திருக்கச் சொன்னார். சாதிய விதிகளை மீறுவது குறித்தும் அவருக்கொன்று அபாரமான தலித் ஆதரவு மனநிலை இருந்ததில்லை. இருந்ததெல்லாம் அப்பட்டமான வர்ணாசிரம ஆதரவு மனநிலையே..சாதியை மீறி இயங்குவது குற்றமே  என்ற மனநிலையில்தான் அவர் கீழ்க்கண்ட சொற்களை உதிர்த்திருக்க வேண்டும். இல்லை, காந்தி சொன்ன காலக்கட்டத்தை பாருங்கள்  என்று ஓடோடி வந்து வக்காலத்து வாங்கக் கூடும், அவருடைய இறுதி நாட்களில் அவர் செய்த துரோகம் ’வக்காலத்துகளுக்கு’ பதில் சொல்லும்.

”நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு மரத் தச்சரின் மகன் தான் ஒரு வக்கீலாக வேண்டும் என்று ஒரு போதும் விரும்பியதில்லை.ஆனால் இன்று ஒரு தச்சரின் மகன் வக்கீலாக வேண்டும் என்று விரும்புகிறார். ஏனெனில், பணம் திருடுவதற்கு, அந்தத் தொழில்தான் மிக்க எளிதான வழி என்பதை அவர் அறிந்து கொண்டிருக்கின்றார். (மகாத்மா காந்தி நூல்கள் தொகுப்பு -7, பக்கம்89,90,91)

ஒடுக்குதலின் வலி கொஞ்சமும் புரியாமல், ஒரு தீர்வை முன்வைக்கும் காந்தியின் அயோக்கியத்தனத்தின் முன் அண்ணல் அம்பேத்கரின் வலிமிகுந்த அனுபவம் எப்படி வெளிப்படுகின்றது பாருங்கள்.  தீர்வை  எவன் முன்வைக்க முடியுமென்று தெரியும்.

“ஒரு தோட்டிப் பெண் ஒரு குழந்தையை ஈணும்போது எங்கு தோட்டி வேலை காலியாக இருக்கிறது என்றுதான் அவருடைய கண்கள் தேடுகின்றன. இத்தகைய விசித்திரமான, வேதனையான, வாதனையான அமைப்புமுறை நிலவுவதற்கு இந்து மதத்தின் வருண-அமைப்பு முறையே காரணம். இதிலிருந்து எந்த முன்னேற்றத்தை நாம் காண முடியும். " – அம்பேத்கர் (தொகுதி 37, பக்கம் 691)

பெண்கள் பிரசவிக்கும் பொழுது ஆணா, பெண்ணா என்ற தயக்கம் இருக்கும் கட்டமைப்பு இது. மேற்சொன்ன வகையிலான வலி உலகம் முழுக்க இருக்கின்ற வேறெந்த பெண்ணுக்கும் வந்துவிடாது.

என் தாய் கேட்டார் “ ஏண்டா, நீ ஒத்தை ஆளா சாதிய ஒழிச்சிடுவியா?”
”ஏன் முடியாதா?” என்றேன்..
“எத்தனையோ தலைவருங்க வந்துட்டு போய்ட்டாய்ங்க, கொஞ்சம்..கொஞ்சமா மாறிடும்.” என்றார் அவர்.
”மாறிடுச்சின்னா, ஒரு ஊர்த்தெரு பொண்ணை அவங்க வீட்ல போய் பொண்ணு கேட்டு கட்டி வச்சிடு. அப்புறம் நான் இதை பேசலை…என்னை ஒரு கும்பல் மனுசனாவே மதிக்கலைங்கிற வலிதாம்மா இது, நீ என்ன மனுசனாத்தானே பெத்தே…ஏன் இன்னும் இந்த சமூகம்  என்னை மனுசனா பார்க்க மறுக்குது.”  என்றேன்..

இந்த உரையாடல் கண்டிப்பாக ஒரு சேரி வீட்டில்தான் நடக்கும். சாதி மறுப்பு எங்களது அவசியம் எங்களுக்கு எவரும் கற்றுத் தர வேண்டியதில்லை. பிறருக்கு அது…?

காந்தி காத்திருக்கச் சொன்னாரென்று சொன்னேனல்லவா? இன்றும் கூட காத்திருக்கச் சொல்கிறார்கள், அதைச் சொல்லும் போது அவர்கள் உண்மையாகவே வலிகளை உணர்ந்து சொல்வது போல தோன்றும்,

”ஆமா காயப்பட்டுட்டே, அதுக்கு இப்ப இன்னாங்குறே, உடனே எல்லாம் மாறிடுமா? அவங்களும் பழகிட்டாங்க இல்ல, அவங்களை கொல்லச் சொல்றியா? கத்திக்கு, கத்தி தீர்வாகுமா? கொஞ்சம் காத்திரு, புரட்சி வரும், தமிழ்த்தேசியம் வரும்….”

இப்படியாக பல வியாக்யானங்கள் நீளும்.   இறுதி நாட்களில் புலிகளிடம் கப்பல் வரும்  என்று கூறி  ஏமாற்று வித்தை காண்பித்தது போல…

நாங்கள் யாரையும் கொல்லச் சொல்லவில்லை,  எங்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களை வேண்டுமானால் கத்தி கொல்லலாம், நடைபிணங்களாய் வாழ பணிக்கப்பட்டிருக்கும் எம்மை கொல்லை சொற்களே போதும், இதுகாறும் கொன்றிருக்கிறது, இன்னும் உங்கள் சொற்களுக்கு வலிமை இருக்கிறது, கூர்மை மழுங்கிவிட வில்லை.

”ஏண்டா பறப்பயலே, பறப்பய மாதிரி திரியாதே, சக்கிலியன் மாதிரி ட்ரெஸ் போட்டிருக்கே,”

இவை சொற்கள் மட்டுமல்ல….வலிகளை தூவும் விதைகள், சில நேரங்களில் வன்மத்தை கூட தூவிடும். தூவிய கைகளையும், தூவப்பட்ட விதைகளையும் விட்டு, விட்டு துளித்த தளிரை மட்டும் குற்றம் சொல்லி கடந்து போவது , இந்த சமூகத்திற்கு  எளிதுதான்.

காத்திருக்கச் சொன்ன காந்தியை ”எத்தனை காலத்துக்குடா காத்திருப்பது, என்னையாடா காத்திருக்கச் சொல்றே?” என்று சினம் கொண்டு காந்தியை நாங்கள் கொல்லவில்லை. எங்களுக்கு துரோகம் செய்த காந்தியின் உயிரை காக்க, இந்த கேடுகெட்ட தேசம் கொண்டாடிய காந்தியின் உயிரை காக்க, இரட்டை வாக்குரிமையை விட்டுக் கொடுத்து, காத்திருக்க ஒத்துக் கொண்டோம். ஆனால், காந்தி இரண்டகம் செய்தார். அப்பொழுதும், நாங்கள் அவரை கொல்லவில்லை. காத்திருந்தோம்.  எவன் கொன்றான்  என்று ஊருக்கே தெரியும். (கோட்சே  என்னும் பார்ப்பான் கையில் ’இஸ்மாயில்’ பெயரை பச்சை குத்திக் கொண்டே காந்தியை கொலை செய்தான்.)

கோபத்தை இத்தனை காலமும் சொற்களில்தான் வெளிப்படுத்தியிருக்கிறோம். ஒருவேளை நடைமுறையில் தவறிழைக்கிறோமோ என்ற அச்சம் அவ்வப்போது வந்துதான் போகிறது. அந்த முரண்பாடுகள் சில நேரங்களில் வேறு பாதையை சிந்திக்கும் திசையையும் காண்பிக்கிறது. எங்கள் ரத்தத்தால் சிவந்த மண் மீண்டும் சிவந்தால் என்ன  என்று கூட மனம் கேட்கிறது. ஆனால், கண்டிப்பாக தற்காலிக விடுதலைக்கு இனியும் தயாராக இல்லை  என்ற காரணத்தினாலேயே உங்கள் கைகோர்க்க காத்து நிற்கிறோம். எங்கள் கைகளை தள்ளிவிடும் வசதி உங்கள் கைகளுக்கு இருந்தாலும், உங்களை கைகளை பற்றிக் கொள்ளத்தான் துடிக்கிறோம். எங்கள் சிந்தையை சிவக்க வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

அண்ணல்  எங்களுக்கு கீழ்க்கண்டதைத்தான் போதித்தார். அத்தனை கொடுமைகளை இழைத்த கூட்டத்தை முதன்மை குற்றவாளியாக்காமல், அவர்களையும் அரவணைத்து பொது எதிரியை வீழ்த்தச் சொல்லியிருக்கிறார். இந்து  ஏகாதிபத்தியத்தை வீழ்த்தச் சொல்லியிருக்கிறார்.

 “நீங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி – சாதியைக் கடைப்பிடிக்கும் மக்கள் அல்ல; சாதிகளின் மதமான இந்து மதத்தை மக்களுக்குக் கற்றுத் தந்திருக்கிற சாஸ்திரங்களே உங்கள் பயங்கர எதிரி.” – அண்ணல் அம்பேத்கர்

இந்த அணுகுமுறையைத்தான் நாங்களும் விரும்புகிறோம். ஆனால், சக மனிதர்களையே   எதிரியாக கருதி, முன்னேற்றத்திற்கு தீ வைக்கும் கும்பல், எம் மக்கள் தீப்பெட்டி வாங்கவோ, பெட்ரோல் வாங்கவோ வக்கற்று இல்லை  என்பதை மறக்கிறார்கள்.

எமது மக்களின் பண்பும் இன்னும் சொல்லப் போனால், பொது புத்தியில் படிந்திருக்கும் சொல்லின் எல்லைக்குள் நின்று சொல்ல வேண்டுமானால் “சாதி புத்தி”யில் நாங்கள் யாரையும் பழிவாங்கியே ஆகவேண்டும்  என்ற நிலைத்த நிலைப்பாடில் நின்று கொன்று குவிக்க வில்லை. ஆனால், வன்மம் இருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் குறிப்பிடும் அந்த 18 ஆண்டுகாலம் போல நீண்ட காலமாக நாங்கள் பட்ட ரணத்தின் சுவடுகள் இருக்கிறது. அதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். அதேவேளையில், எங்கள் வலிகளும் அத்தனை எளிதாக கடந்து போகக் கூடியது அல்ல.

ஆனால், இதை சொற்களில் வெளிப்படுத்தினாலோ,  எதிர்த்தியங்கினாலோ எங்களுக்கு பெயர் முரடர்கள், திருடர்கள்….நாங்கள் பழிவாங்க கிளம்பியிருக்கிறோம். சமூகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க கிளம்பியிருக்கிறோம். வன்மத்தோடு திரிகிறோம்.  என்றே எம்மை வரையறுக்கிறார்கள்.

முரடர்களாக இருக்கிறார்கள், பண்படாது இருக்கிறார்கள் ஆகவே இந்து மதத்திற்கு தகுதியானவர்களாக மாற்றத்தான் அண்ணல் அம்பேத்கர் பௌத்தம் தழுவினார்  என்று ”தமிழ் இந்து தளம்” கக்கும் வன்மத்திற்கு நிகரான வன்மமன்றி வேறென்ன?

”கலந்து வாழ விருப்பமில்லை என்பதற்காக, அவர்கள் தண்டிக்கப்படவில்லை. இந்துக்களுடன் ஒன்றாக சேர்ந்து இருக்க வேண்டும் என்று விரும்புவதால்தான் அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.” – (அண்ணல் அம்பேத்கர், ஆங்கில தொகுப்பு 5)

  உங்கள் கைகளுக்காக காத்திருக்கிறோம்.