வியாழன், 25 மார்ச், 2010

கறை நல்லது............?


இரண்டங்குலம் இன்னும் நெருக்கி நடந்தால் பள்ளிக்கூடத்தினுள் நுழைந்துவிடலாம். நெருங்காமல் கடந்து செல்கிறான் முத்து. பள்ளிக்கு அருகிலிருக்கும் ஈர்ப்பு காரணமோ என்னவோ? எட்டா கனிக்கு ஏன் கொட்டாவி விட வேண்டாம் என்று நினைத்துக் கொண்டானோ தெரியவில்லை...கடந்தாண்டு இதே பள்ளியினுள் இருந்து வெளியே வந்தது இன்னும் நினைவிருக்கிறது அவனுக்கு...பள்ளிக்கருகில் இப்பொழுது சென்று 50 காசுக்கு தேன் மிட்டாய் வாங்கி சப்பிக் கொண்டு என்ன நினைத்தானோ தெரியவில்லை...அருகிலிக்கும் மசாலா கடலை தயாரிக்கும் கூடத்தினுள் நுழைந்துவிட்டான்...

அந்த பணிக்கூடம் வெளியே புகை கக்கி கொண்டேயிருக்கிறது. சன்னல் வழியே அனல்காற்று வீசுகிறது. நம் கண்களும் உள்ளே சென்ற சிறுவனை தேடுகிறதில்லையா...நாளும் அவனை கவனித்தால் தேடாது, உங்கள் கண்களை கொஞ்சம் காத்திருக்கச் சொல்லுங்கள். பள்ளிக்கு இடைவேளை விடப்படுகிறது, அருகிலிருக்கும் பெட்டிக்கடையில் நிறைய குழந்தைகள் ஈ போல் மொய்த்து கொண்டிருக்கின்றனர்..ஆளுக்கு 50 பைசா, 1 ரூபாய்..5 ரூபாய் என்று வசதிப்படி தின்பண்டம் வாங்கி தின்கின்றனர்.

மாலை சரியாக நான்கு மணி பள்ளியின் இறுதி மணி அடிக்கிறது. வெண்மை நிற சட்டை அணிந்து சென்ற முத்து இப்பொழுது கரிக்கறையோடு வருகிறான். சட்டையின் வெண்மை குறையாத அழுக்குப்படியாத சட்டைகளோடு மாணவர்கள் நடந்து செல்கின்றனர். இவன் தன் கறையை தடவியபடி அவர்களை கடந்து செல்கின்றான் முத்து. சாலையின் இருபுறமும் இருக்கும் பலகைகள், பதாகைகள் ஆகியற்றை பார்த்து கொண்டே செல்கிறான்..

“ குழந்தைகளை பணிக்கு அமர்த்தாதீர்கள்” “குழந்தைகளை பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம்” என்று பதாகைகள் மிளிர்கின்றன.

ஏழைக்கெதற்கு பொழுதுபோக்கென்று நினைத்தார்களோ என்னவோ எந்த கேள்வியும் கேட்காமல் பொழுதுபோக்கு சாதனங்களை பாதுகாப்பாக கண்ணாடி கூண்டுக்குள் அடைத்து வைத்திருக்கின்றனர் கடைக்காரர்கள்.....முத்துவுக்கும் ஏழ்மைக்கும் தொலைவா என்ன? தொலைவிலிருந்த படியே ஒரு கடையின் முன் நின்று தொலைக்காட்சியை வெறித்து பார்த்து கொண்டிருக்கிறான்....

“ கறை நல்லது.........”என்று ஒரு சிறுகுழந்தை நடிக்கும் விளம்பரப்படம் ஒளி(லி)க்கிறது.

நீங்க சொல்லுங்க கறை நல்லதா?

3 கருத்துகள்:

என்.ஆர்.சிபி சொன்னது…

நன்று!

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

சமூக அக்கறை உள்ள சிறந்த பதிவு வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி !

safiresh சொன்னது…

good and contiu............