திங்கள், 2 ஜூன், 2014

பால்தாக்கரேயும், மகாராஷ்டிர தலித்துகளும் – ஆனந்த் டெல்டும்டே

teltumpte article

பால்தாக்கரேவின் மரணத்திற்கு பின்னான நிகழ்வுகள் பலரின் கோழைத்தனத்தை அம்பலப்படுத்தியது. ஊடகங்களில் சிலரால் எரிச்சலூட்டும் வகையில் அவர் மீதும், அவரின் பண்பின் மீதும் பொழியப்பட்ட புகழுரைகள் பொருத்தமற்றதாகவே இருந்தன.
‘இறந்தவர்களை பற்றி நல்லதை பேசு அல்லதை பேசாதே’ என்ற லத்தீன் பொன்பொழியின் பின்னே எல்லா நேரங்களில் ஒளிந்து கொள்வது அரசியல் நாகரிகம் என்று விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும், அது கோழைத்தனத்தையும், முதுகெலும்பின்மையையும் அம்பலப்படுத்தும் செயலேயாகும். சமூகத்திலுள்ள பிரச்சினைகள் குறித்து ஊடகங்களில்,  தாராளமாக வாரி வழங்கி அறிவுரைகளை இட்டு நிரப்பும் எவரொருவருக்கும், நவம்பர் 18 ஆம் தேதி தாக்கரேயின், அவர் ஆதரவு குண்டர்களின், மக்கள் விரோதத் தன்மை குறித்து வாய் திறந்து முனகும் துணிச்சல் கூட இல்லை. நேர்மையாக சொன்னால்,  இவர்கள் முழங்கியிருக்க வேண்டியது ஐம்பது ஆண்டுகளில் மராத்தியரல்லாத ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றதோடு அவர்களின் வாழ்க்கையை அழித்த சாதனையை குறித்துதான்.
மராத்தியர்களுக்கேனும் ஏதாவது செய்தாராயென்றால், அவர்களை குறுகிய எண்ணம் கொண்டவர்களாக மாற்றியதை தவிர எதையும் உருப்படியாக அவர் செய்ததில்லை.
தென்னிந்தியர்கள், குஜராத்தியர்கள், உத்திரபிரதேசம் – பீகாரைச் சார்ந்த வடமாநிலத்தவர்கள், வங்க தேசத்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பணத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் அவர் நடத்திய சுயநல அடையாள அரசியலால் விளைந்த கேடுகள் குறித்து வெகுசிலர் மட்டுமே தம் துணிச்சலை திரட்டி பேசினர். கூடுதலாக, அவரது நாசிச ஏதேச்சதிகார நடவடிக்கைகள் சமூகத்தில் எந்தளவு குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை குறித்தும் பேசினர். ஆனால், அவர்கள் பேச மறந்த பக்கமென்று ஒன்றும் இருந்தது.
அது, பால்தாக்கரே அம்பேத்கரிய தலித்துகள்(மகர்கள்) தொடர்பாக உள்ளூர கொண்டிருந்த  வெறுப்பு குறித்தது.
தாக்கரே தலித்துகளுக்கு ஆதரவானவர் என்ற பொய் பரப்புரையின் வழியாக ‘அவர் சாதிக்கு எதிரானவர்’ என்ற போலி பிம்பம் உருவாக்கப்பட்டது. உண்மை என்னவென்றால் சாதிய மேலாதிக்கத்தை பயன்படுத்துவதில் அவருக்கு குற்றவுணர்வே இருந்ததில்லை. தாக்கரேயின் மனதில், அம்பேத்கர் மற்றும் அவரது வழிநடப்பவர்கள் குறித்த வெறுப்பு வெகு ஆழமாக வேறூன்றியிருந்தது.
ஒட்டுண்ணியின் பிறப்பு
தாக்கரே துணிச்சல் மிக்கவர் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால், தாக்கரேவின்
bal thackarey
அரசியல் துணிச்சல் என்பது அவ்வப்போது மக்கள் எதை விரும்புகிறார்கள் என்று கண்டறிந்து விற்பனை செய்யும் சந்தை உணர்வேயன்றி, மக்கள் நலனை அடிப்படையாக கொண்டதல்ல. இப்படியான பச்சோந்தி குணம் ஒரு கார்ட்டூனிஸ்டுக்கு இயற்கை குணம் போல வாய்த்தது வியப்புக்குரியதன்று.  இப்படித்தான்  அவரது அரசியல்வாழ்க்கை தொடங்கியது.
ஒருங்கிணைந்த மகாராஷ்டிர இயக்கம்’ மக்களிடையே ஏற்படுத்திய தாக்கத்தை பயன்படுத்தி பாலசாகேப் தாக்கரேயும் அவரது சகோதரர் ஸ்ரீகாந்த தாக்கரேயும் இணைந்து 1960 ஆகஸ்டில் ‘மார்மிக்’ என்னும் மராத்தி கேலிசித்திர வார இதழை தொடங்கினர். மார்மிக்கிற்கென்று எந்த குறிப்பிட்ட சித்தாந்த பின்புலம் இல்லையென்றாலும், அது இஸ்லாமியர்களை கேலி செய்வதையும், ஜவகர்லால் நேரு மற்றும்எஸ்.ஏ.டாங்கே உள்ளிட்டவர்களை சோவியத் யூனியனுக்கு சார்பாக இருந்ததாக விமர்சிப்பதையுமே தன்னுடைய இலக்காகக் கொண்டிருந்தது.
பின்னர் அது, மகாராஷ்டிரா-கர்நாடக எல்லை பிரச்சினையில் நடுவண் அரசு நியாயமாக செயல்படவில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்ததன் மூலம் மராத்திய மக்களிடையே தம் செல்வாக்கை உயர்த்திக் கொண்டது.
உயர்ந்த தமது செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டு, காங்கிரசின் (வெளிப்படையான)  ஆதரவோடு 1966 ஆம் ஆண்டு சிவசேனை என்னும் கட்சியை தொடங்கினார். கட்சியின் வளர்ச்சிக்கு தீனிதேடி, மராத்திய பாட்டாளிகளின் வேலை வாய்ப்பை தென்னிந்தியர்கள் பிடுங்கிக் கொள்வதாக பிரச்சாரத்தை மேற்கொண்டார். இது, முதலாளிகளை நோக்கிய போராட்ட களத்திலிருந்து பாட்டாளிகளின் கவனத்தை திசைதிருப்பியது. இதனாலேயே, தொழிலதிபர்கள் மற்றும் அதிகார வர்க்கத்திடமிருந்து மிகுந்த ஆதரவு கிட்டியது.
இந்த பிரச்சாரத்தின் பலனை அறுவடை செய்ய, 30 அக்டோபரில் 1966இல் சிவசேனா தசரா பேரணி ஒன்றை ஒருங்கிணைத்தது, இதற்கு தலைமையேற்றவர் ‘ராம்ராவ் நாயக்’ என்னும் காங்கிரஸ் தலைவர். பேரணி முடிந்து திரும்பிய சிவசேனா குண்டர் படை, வழியிலிருந்ததென்னிந்தியர்களின் கடைகள் மற்றும் உணவகங்களை  அதிகார வர்க்கத்தின் முழு ஒப்புதல் மற்றும் அனுமதியோடு தாக்கி அழித்தது. இந்த தாக்குதல்கள் நடந்து ஓராண்டுகளுக்கு பின்(1967 டிசம்பரில்) சிபிஐ கட்சியின் தலைமை அலுவலகத்தையும் காங்கிரஸ் துணையோடு அடித்து நொறுக்கியது சிவசேனை கும்பல்.
அன்றைய சூழலில், பாட்டாளிகளின் வீரியமான போராட்டத்தை நசுக்க விரும்பிய காங்கிரஸின் முக்கிய பிரமுகர்களாக இருந்த வசந்த்ராவ் நாயக், வசந்த்தாதா பாட்டீல் உள்ளிட்டவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் தனிப்பட்ட குண்டர் படை போன்றே சிவசேனை செயல்பட்டது.
தம் விசுவாசத்தினை, வெளிப்படுத்துவதன் மூலம் தொழிலதிபர்களின் உள்ளத்தில் இடம்பிடிக்க அந்த குண்டர் படை செய்த கயமைத்தனம் என்னவென்றால், மக்கள் நடுவில் நன்மதிப்பை பெற்றிருந்த தொழிற்சங்க தலைவரும், தீவிர கம்யூனிசவாதியுமான கிருஷ்ண தேசாய்யை கொலை செய்தது. இந்த கொலையின் ஊடாக மக்கள் மனதில், சிவசேனா மீது ஒரு விதமான அச்சவுணர்வு உருவாகி விட்டிருந்தது. இந்த அச்சத்தை  நல்ல முதலீடாக பயன்படுத்தி தம் கொடூர நிழலை மகாராஷ்டிராவெங்கும் பரவவிட்டவர், அதை தொடர்ந்து ஐம்பதாண்டு காலம் தக்கவைத்துக் கொண்டார் .
குயுக்தியான செயல்திட்டம்
கம்யூனிச இயக்கங்களை முறியடித்துவிட்டோம் என்று இறுமாப்போடு இருந்தவர்களுக்கு மற்றொரு அச்சுறுத்தலாக வந்து சேர்ந்தது  ‘தலித் சிறுத்தைகள்’ அமைப்பு. இந்த அமைப்பு 1972 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது, அநீதியான சாதிய அமைப்பினை கடுமையாக எதிர்த்து களமாடியதோடு மட்டுமில்லாமல், காங்கிரசோடு நட்பு பாராட்டிய இந்திய குடியரசு கட்சியின் (RPI) – கொள்கைக்கு முரணான – சந்தர்ப்பவாத கூட்டணிக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்தனர்.
1974 இல் தென் – மத்திய மும்பை நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்ட சிவசேனாவின் ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளரான ‘ராம்ராவ் ஆதிக்’கை(Ramrao Adik) ஆதரித்த இந்திய குடியரசு கட்சியின் தலைவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று தலித் மக்களுக்கு சிறுத்தைகள் அறைகூவல் விடுத்திருந்தனர்.
சிறுத்தைகளின் கோரிக்கைக்கு இசைவளித்த தலித்துகளுக்கு ‘பாடம்’ கற்பிக்க வேண்டும் என்று வன்மம் கொண்ட  சிவசேனை, ஜனவரி 1974 ல் தலித்துகள் பலமான தளமாக இருந்த வர்லி பிடிடி சாலில் (Chawl – மும்பையில் பகுதிகளுக்கு இடப்படும் துணைப்பெயர்) தலித்துகளுக்கு எதிராக கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டது. இந்து தெய்வங்களை தலித் சிறுத்தைகள் இழிவுப்படுத்தியதாக காரணம் கற்பித்தது.
சிவசேனையில் தாக்குதலால் மூண்ட கலவரம் நகரின் பிறபகுதிகளுக்கும் பரவி, ஒருவாரம் வரை அது நீடித்தது. தலித் சிறுத்தைகள் அமைப்பில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டபக்வத் ஜாதவ் (Bhagvat Jadhav) மிகக் கொடூரமாக சிவசேனையால் கொலை செய்யப்பட்டார். இது அம்பேத்கரிய தலித்துகள் மற்றும் சிவசேனை இடையே வெளிப்படையான மோதல் போக்கை உருவாக்கியது. அதோடு, வியப்பூட்டும் வகையில் எஸ்.ஏ.டாங்கேவின் மகளான சிபிஐ-ன் ரோஜா அதிக் (Adhik) தோற்றார்.
ambedkar
சிறுத்தைகளிடமிருந்து தலித்துகளை அந்நியப்படுத்தும் துணிச்சல் காங்கிரசுக்கு இல்லை என்ற சூழலில் காங்கிரஸ் சிவசேனையை வாடகைக்கு வாங்கி நடத்தப்பட்ட கலவரம்தான் வர்லி கலவரம். சிவசேனையை பொறுத்தவரை வந்தவரை லாபம் என்ற அளவில்தான் இந்த கலவரத்தில் ஈடுபட்டது. எந்த காலத்திலும் இந்த அம்பேத்கரிய தலித்துகள் சிவசேனையை ஆதரிக்க மாட்டார்கள் என்பதை தெளிவாக உணர்ந்திருந்த தாக்கரே, இந்த கலவரத்தின் மூலம் தலித்துகளை பொது நீரோட்டத்திலிருந்து அந்நியப்படுத்திவிடலாம் என்ற  திட்டத்தின் அடிப்படையிலேயே காங்கிரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்திசைந்தார்.
அவர்களை இந்து மத வெறுப்பாளர்கள் என்ற முத்திரை குத்துவதன் மூலம் தலித்தல்லாதோர் மற்றும் மகரல்லாத தலித் சாதிகளையும் ஒருங்கிணைத்துவிடலாமென்று திட்டமிட்டார்.
தலித் உட்சாதி பிரிவுகளின் மீது தாக்கரே அழுத்தம் கொடுத்தும் பிரச்சாரம் செய்யும்வரை தலித்துகளை உட்சாதி பிளவுகளை வைத்து அடையாளம் காணும் போக்கு இருந்திருக்கவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது. ஆக, மக்களை சாதிரீதியாக பிளவுப்படுத்துவதில் சாதிவெறியர்களை எல்லாம் விஞ்சியவர்தான் தாக்கரே.
இந்த வகை அணுகுமுறை, அவர் எதிர்ப்பார்த்ததைவிட சாதகமான பலனையே தந்தது. தலித் உட்சாதிகளை பொறுத்தவரையிலோ, சாதி இந்துக்களின் கட்சியில் இருப்பதை குறித்து பெருமித உணர்வு கொள்ளும் போக்கு வளர்ந்தது.
தாக்கரேயின்  அம்பேத்கர் மீதான வெறுப்பு
அம்பேத்கர் மீதும், அம்பேத்கரிய தலித் மக்கள் மீதும் ஆழ்ந்த வெறுப்பை கொண்டிருந்த தாக்கரே, அம்பேத்கரை  இழிவுப்படுத்துவதற்கான வாய்ப்பை தவற விட்டதேயில்லை. 1978-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா அரசு மராட்வாடா பல்கலைக் கழகத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்டுவதற்கு முடிவெடுத்ததை தொடர்ச்சியாக எதிர்த்த ஒரே அரசியல் கட்சி சிவசனை மட்டும்தான். அத்தோடு நில்லாமல் தலித்துகளின் கோரிக்கையை, “வீட்டுல திங்க சோறில்லாதவனுகளுக்கு பல்கலைக் கழகம் கேக்குதான்னு?” என்று மிகத் தரம்தாழ்ந்து இழிவுப்படுத்தினார்.
பல்கலைக்கழகத்திற்கு ஒரு தீண்டப்படாதவரின் பெயரை இடுவது என்ற  செய்தி மராத்வாடாவை ஒட்டிய பகுதிகளில் பதட்டத்தை  உண்டுபண்ணியது. தலித்துகளும் அவர்தம் உடமைகளும் கடுமையாக தாக்கப்பட்டன. 50,000 தலித்துகள் வீடற்றவர்களாக்கப்பட்டனர். (தருமபுரி தாக்குதல் நினைவுக்கு வருதா?) இந்த கும்பலை வழிநடத்தியது காங்கிரசின் நிலவுடமை சக்திகளும், ஜனதா கட்சியின் நாஜி சித்தாந்திகளும், சிவசேனையின் ஓநாய் ஊளைகளும்தான்.
இப்படியான சூழலில்,
நாண்டேத் என்ற பகுதியைச் சார்ந்த தலித் சிறுத்தைகள் அமைப்பின் உறுப்பினர் கௌதம் வாக்மாரே தீக்குளித்தது இடதுசாரி இயக்கத்தையும், தலித்துகளையும் தெருவுக்கு இழுத்து வந்தது, தொடர் போராட்டங்களை நிகழ்த்த வைத்தது.  ஆனால், கௌதம் என்பவரை பால் தாக்கரே ‘குடிகாரன்’ என்று இழிவுப்படுத்தினார்.
மாநில அரசு இந்த பிரச்சினைக்கு புதுவகையான தீர்வை முன்வைத்தது. பல்கலைக் கழகத்தின் பாதிக்கு மட்டும் அம்பேத்கர் பெயரையும், நாண்டேத்தில் அமைக்கப்பட இருக்கும் மீதிக்கு சுவாமி ராமனந்த் தீர்த்தரின் பெயரையும் இடப் போவதாக அறிவித்தது. பெரிய விலைக்கு பிறகு கிடைத்த இந்த வெற்றிக்கான(!) இந்த சமரச சூத்திரத்தை வடிவமைத்து கொடுத்தவர் ராம்தாஸ் அதாவ்லே.
ஆனால், அம்பேத்கரின் பெயர் பல்கலைக் கழகத்தை தீட்டாக்குவதை தாக்கரேயால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பெயர் மாற்றம் குறித்த அரசின் இரண்டாவது அறிவிப்பையும் நிராகரிப்பதாக அறிவித்த சிவசேனை, மாநில அளவிலான முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்தது.
மும்பை – தானே உள்ளிட்ட பகுதிகளில் வலுவாக இருந்த சிவசேனை தனது எல்லையை விரிவுப்படுத்த கைகொண்ட செயல்திட்டத்தின் முக்கியமான அங்கம் தொடர்ந்து அம்பேத்கரிய தலித்துகளை தாக்குவது என்பதுதான்.
கலாச்சார ரீதியாக  இந்து மதத்திலிருந்து விடுபடும் திட்டங்கள் (பௌத்த மத மாற்றம்), கல்வியில் முன்னேற்றம், தம் சாதியை வெளிப்படையாக சொல்லும் துணிவு உள்ளிட்ட  செயல்பாடுகளால் கோபமுற்றிருந்த கிராமப்புற சாதி இந்துக்களின் தலித் விரோத மனநிலைக்கு சரியான தீனியாக அமைந்தது சிவசேனையின் மேற்கண்ட திட்டம்.
ஆக, இந்த தலித்விரோத மனநிலையை ஈர்த்து வாக்குகளாக்கும் தமது வேலைதிட்டத்தின் மூலம் மகாராஷ்டிராவில் இருந்து ஆட்சியை பிடித்தது சிவசேனை. ஆட்சியை பிடிப்பது அத்தனை எளிதாக இருந்ததற்கு மற்றொரு காரணம் என்னவென்றால், வேறெந்த கட்சியும் சிவசேனையை போல அத்தனை வெளிப்படையாக தலித்துகளை புறக்கணிக்கும் போக்கை கொண்டிருக்கவில்லை.
சிவசேனா மற்றொன்றிலும் எச்சரிக்கையாக வேலை செய்தது. அது என்னவென்றால், அம்பேத்கரிய தலித்துகளை புறக்கணிப்பதும், கொள்கைரீதியாக (அம்பேத்கரை) பின்பற்றாத பிற தலித் சாதிகளை ஒருங்கிணைத்து பிற்படுத்தப்பட்ட சாதி மனநிலைக்கு இட்டுச் செல்வதும்தான் .
1980 களின் நடுப்பகுதியில், அம்பேத்கரிய தலித்துகள் மீது குறிப்பாக மராத்வாடா, விதர்பா உள்ளிட்ட பகுதிகளில் தொடர் தாக்குதல்களை நிகழ்த்த தொடங்கியது சிவசேனா. (இந்த பகுதிகளில்தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள், அதிலெல்லாம் கவனம் செலுத்தாத சிவசேனா தலித் விரோத போக்கையே மக்கள் நடுவில் விதைக்க காரணமென்ன?)
1953 முதலே நில அதிகாரத்திற்கான போராட்டமென்பது தலித்துகளின் பொருளியல் போராட்டத்தின் முக்கிய அங்கமாகவே இருந்தது. அப்படியான முதல் போராட்டம் அம்பேத்கரின்  ஆலோசனையின் பேரில் மராத்வாடாவில் நடத்தப்பட்டது. பிற்காலத்தில்,  ஒரு அறவழி போராட்டம்1963 இல் வாக்மாரே தலைமையில் தேசிய அளவில் தொடங்கியது.
தலித்துகள் நிலத்தின் மீது தம் உரிமையை உறுதி செய்வதை சிவசேனை எதிர்த்தது மட்டுமில்லாமல் தலித்துகளின் தானிய கையிருப்பையும் சேதப்படுத்தி குடியிருப்புகளையும் தாக்கியது. விவசாய கூலிகளும், கடைநிலை தொழிலாளிகளுமாக சில  ஏழை தலித்துகளும் இதில் கொல்லப்பட்டனர். மகர் சாதியை சார்ந்த சகோதரர்கள் இருவர் வன்முறை கும்பலால்  11 ஆகஸ்ட், 1991 அன்று படுகொலை செய்யப்பட்டனர். இதில் தலித்துகளை அச்சுறுத்தும் விதமாக சிவசேனையினரால் கல்லால் அடித்தே கொலை செய்யப்பட்டார் அம்பாதாஸ் சாவனே.
இதன்பிறகு, சிவசேனை பாஜகவோடு கூட்டணி வைத்துக் கொண்டு  ஆட்சிக்கு வந்தவுடன் எடுத்த முதல் முடிவு என்னவாக இருந்தது தெரியுமா? தலித்துகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தியதற்காக தொடரப்பட்ட 1100 வழக்குகளை ரத்து செய்ததுதான். இதற்கு ராமதாஸ் அதாவ்லேயின் ஒப்புதலும் இருந்தது என்பதுதான் (துன்பியல்)நகைமுரண்.
அம்பேத்கரின் இந்து மதத்தின்  புதிர்கள் நூலுக்கு எதிரான தாக்கரேயின் நிலைப்பாடும், 1987-88 ல் ரமாபாய் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் அவருடைய பங்கும் பெரும்பாலும்  அனைவரும்
thanks tehelka.com (this picture used here with fare use policy)
thanks tehelka.com (this picture used here with fair use policy), Not under Creative Commons Licence
அறிந்தது என்ற வகையில் அதை குறித்து விரிவாக பேசாமல், மேற்கொண்டு தகவல்களை அலசுவோம்.
தலித் தலைமையின் சிதைவு
அம்பேத்கரையும், அம்பேத்கரிய தலித்துகளை இழிவுப்படுத்தும் பாலதாக்கரேயின் உரைகள், குடிசைவாசிகள் மீதான அவருடைய தொடர் வெறுப்பு பிரச்சாரம், பண முதலைகளுக்கான ஆதரவு போன்றவை கண்டிப்பாக அவரது தலித் வெறுப்பு நிலைப்பாடு என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.
ஆனால், தலித் அரசியல் என்பது  எந்தளவுக்கு சிதைந்து போய்விட்டதென்றால், அதற்கு இதுபோன்ற விசயங்களில் கவனம் செலுத்த நேரமேயிருப்பதில்லை. தங்களுடைய அந்தர்பல்டிகளுக்கு அம்பேத்கரின் பெயரை பயன்படுத்திக் கொண்டும், தலித்துகளை அதிகாரப்படுத்துகிறோம் என்று  கூறிக் கொண்டும், தம் சந்தர்ப்பவாதத்திற்கு பல்வேறு வகையான விளக்கங்களை அள்ளி வீசிய வண்னம் இருக்கின்றனர். இதுபோதாதென்று தலித் அரசியல்வாதிகள் சொந்த நலன்களின் பொருட்டு தங்களுக்குள் மோதிக் கொள்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆகையால, மகுடிக்கு ஆடும் பாம்பை போல  இந்த தலைவர்களை பணத்தை வீசி ஆட்டுவிப்பது அத்தனை கடினமான காரியமல்ல.
இந்திரா பிரியதர்சினி’யை குறித்து நூல் எழுதிய அந்த காலத்து வீரிய சிறுத்தையும் இதற்கு விதிவிலக்காகாமல் தாக்கரேவிடம் தஞ்சம் புகுந்ததை இதற்கு எடுத்துக் காட்டாக கொள்ளலாம்.
‘தலித் விடுதலை சேனை’யின் தானை தலைவர் நாம்தேவ் தசாலும் இதற்கு விதிவிலக்காக அமையவில்லை. இவர் மோடியின் புகழ்பாடுவதோடு மட்டுமில்லாமல், தாக்கரேயின் இறுதிச் சடங்கிற்கும் தானே சென்று ஆஜரானார். கடைசியாக, இந்த சந்தர்ப்பவாத வரிசையில் தன்னை இணைத்துக் கொண்டவர் ராம்தாஸ் அதாவலே, சிவசேனையோடு கூட்டணி அமைத்து அதற்கு ‘அறிவுப்பூர்வமான’ விளக்கங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
29 நவம்பர் அன்று தலித்துகளுக்கு விடுத்த வேண்டுகோளில் டிசம்பர் 6  அன்று அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்த வரும் தலித்துகள் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.   அம்பேத்கரை இழிவுப்படுத்துவதில் எந்த வாய்ப்பையும் விட்டு தராது தொடர்ந்து இழிவுப்படுத்தி வந்த ஒருவருக்கு மரியாதை செலுத்த தலித்துகளையே அழைத்த செயல் வெட்கங்கெட்டத்தனமானது. அதை அதாவ்லே செய்தார்.
தனது கழிசடை மொழிநடையில் தாக்கரே அம்பேத்கர் நிஜாமின் கைக்கூலி என்றும், கண்ணாடி அணிந்த பூசணிக்காய் என்றும் விமர்சித்தார். அதோடு மட்டுமா? ‘சக்பால்’என்ற பெயரிலிருந்து எப்படி ‘அம்பேத்கர்’ ஆனார் என்பதை விளக்குகிறேன் பேர்வழி என்று பீமாபாயின் (அம்பேத்கரின் தாய்) நடத்தையின் மீது வக்கிர புத்தியோடு சந்தேகம் எழுப்பியதோடு மட்டுமில்லாமல், பாப்ரி மஸ்ஜித் இடிப்பை ‘மானவ் முக்தி தின்’ (மானுட விடுதலை நாள்) என்ற பெயரில் டிசம்பர 6 இல் ஒரு கொண்டாட்டமாக உருவாக்க முனைந்த, அதாவ்லேயை ஒட்டுண்ணி என்று விமர்சித்த ஆனந்த டிகே சிவசேனையில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். அருகில் பந்தி போட்டு தற்போது அமர்ந்திருப்பவர் ராமதாஸ் அதாவ்லே.
இதில் வெட்கம் வேண்டாமா? என்று கேட்காதீர்கள், அதிகாரமும், பணமும் சுயமரியாதைக்கு மேலானதாகத்தான் இந்த ஓட்டரசியல்வாதிகளுக்கு தோன்றும்.
———————————————————————————————————————————————————–
http://www.youtube.com/watch?v=yiizeJePOYo
கிருஷ்ண தேசாய் கொலை (இங்கே க்ளிக் செய்யுங்கள்)
சிவசேனையோடு இந்திய குடியரசு கட்சி கூட்டணி  (இங்கே க்ளிக் செய்யுங்கள்)
ஆங்கில மூலம் : Counter CurrentsEPW
தமிழில்: மகிழ்நன்

நன்றி: மாற்று

கருத்துகள் இல்லை: