திங்கள், 2 ஜூன், 2014

மீனவர்களுக்கானதா பாஜக அரசாங்கம்?

இலங்கையிடம் வலுவாகப் பேசி தமிழர்களின் உரிமைகளை உறுதி செய்வோம் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக தலைவர்கள் பேசினார்கள். இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், மீனவர் நலன்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறதா? என்று கேட்டால், மீனவர்களே அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஏன் இப்படி நடக்கிறது?
உண்மையில், பாஜகவின் அணுகுமுறை, காங்கிரஸ் ஆட்சியாளர்களிடமிருந்து வேறுபட்டது அல்ல. பாஜகவின் கடந்த ஆட்சிக் காலத்தில் மீனவர்கள் கொல்லப்பட்ட போது, “வழி தெரியாமல் சென்றுவிடும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடலோர காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என்று இலங்கை கடற்படையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்” என்றுதான் அவர்கள் கூறி வந்தனர்.
ஒரு எடுத்துக்காட்டுக்கு, அன்று ஆட்சியிலிருந்த கருணாநிதி நவம்பர் 28,2000 தேதியிட்ட கடிதம் ஒன்றை பார்க்கலாம். தே.ஜ.கூட்டணி சார்பாக அன்று பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு மீனவர் படுகொலையை தடுத்த நிறுத்த வேண்டுமென்று அவர் கடிதம் எழுதினார். அதற்கு டிசம்பர் 22, 2000 தேதியிட்டு எழுதிய பதில் கடிதத்தில் வாஜ்பாயும் இனி மீனவர் படுகொலை நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறினார். ஆனால், நடந்தது என்ன?
வாக்குறுதி அளிக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து வாரம் கடக்கவில்லை, 2 மீனவர்கள் ஜனவரி 29, 2001 அன்று 2 மீனவர்கள் கொல்லப்பட்டனர். (இணைப்பு)
அதோடு மட்டுமல்ல, பாஜக ஆட்சிகாலத்திலும் மீனவர்கள் கொல்லப்பட்டனர். பாஜகவும் கண்டிப்பதாக சொல்லிக் கொண்டே இருந்தது. 2014 தேர்தலின்போது, கீழ்க்காணும் பட்டியலை மறைத்தபடியே பிரச்சாரம் செய்தனர், பாஜக அணியினர்.
8.12.1999 அன்று RMS 1512 என்ற படகில் சென்ற வழிவிட்டான்,
19.02.1999 அன்று RMS 600 என்ற படகில் சென்ற செல்வபாண்டியன்,
10.05.2000 அன்று RMS1126 என்ற படகில் சென்ற முனீஸ்வரன்,
19.06.2001 அன்று TU 328 என்ற படகில் சென்ற பாபு,
16.02.2001 அன்று RMS 583 என்ற படகில் சென்ற் முருகன்,
03.08.2001 அன்று RMS 1654 என்ற படகில் சென்ற சரவணன், கோட்டை, முனீஸ்வரன்,
18.10.2003 அன்று RMS 229/MB என்ற படகில் சென்ற பிரபு,
09.09.2004 அன்று RMS 401 என்ற படகில் சென்ற நாகநாதன் உள்ளிட்ட பல மீனவர்கள் இலங்கை கடற்படையால சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நாம் பட்டியலைக் காட்டில் வாதிட்டால், “ஏதோ சில கொலைகள் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் நடந்ததுதான். ஆனால், தற்போது, வந்திருக்கின்ற பிரதமர் மிகவும் ‘ஆண்மையான’ பிரதமர். ஆகவே, இலங்கை பயப்படும், சீனா அஞ்சும் என்று சவடால் அடிக்கின்றனர்.
உண்மை வெகுதூரத்தில் இல்லை. தற்போது பிராதமராக உள்ள, குஜராத் மாநில முன்னாள் முதல்வர் மோடியால் தன் சொந்த மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் படுகொலையை தடுக்க முடிந்ததில்லை.
ஜனவரி 27,2014 அன்று வந்த செய்தி குறிப்பின்படி,
“நடுவண் அரசுக்கும், மாநில அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தும், இந்த குறிப்பிட்ட மீன்பிடி காலத்தில் மட்டும் 150 பேர் கைது செய்யப்பட்டிருப்பதும், 32 படகுகள் முடக்கப்பட்டதும் நடந்திருக்கின்றது. இதற்கு எந்த அரசும் நிரந்த தீர்வு தரும் நடவடிக்கையை எடுக்கவில்லை” என்று மோடியிடம் கோரிக்கை வைக்கச் சென்ற குழுவில் இடம்பெற்ற பரத் மோடி என்னும் மீனவர் சங்க பிரதிநிதி கூறியிருக்கின்றார்.
மேலும், ‘ இலங்கையோடு பேச்சுவார்த்தை நடத்த முடியுமென்றால், பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை நடத்துவதில் என்ன சிக்கல். நரேந்திர மோடி அவர்கள் இந்த பிரச்சனையை நடுவண் அரசுக்கு எடுத்துக் கூறி, உரிய தீர்வை எட்ட முயற்சிக்க வேண்டும். சிறிய கால இடைவெளிக்கு பிறகு, பாகிஸ்தான் அரசு மீனவர்களை விடுவித்தாலும், படகுகளை திரும்பத் தருவதில்லை. தோராயமாக அது திரும்ப தர வேண்டிய படகுகளின் எண்ணிக்கை மட்டும் 815’என்று அவர் கோரியிருக்கின்றார். (இணைப்பு – First post)
பிப்ரவரி 27,2014 ஆம் தேதி 30 குஜராத்தி மீனவர்களை பாகிஸ்தான் கப்பற்படை கைது செய்திருக்கின்றது. பாகிஸ்தானை பொறுத்தவரையில் 240 குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் சிறையிலிருப்பதாக செய்திகள் சொல்கின்றன. (இணைப்பு – Times of India)
அதில் நவாஸ் ஷெரீபின் வருகையை ஒட்டி 150 மீனவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்தது.
14 அக்டோபர், 2013 அன்று பாகிஸ்தான் Marine ஒரு மீனவனை சுட்டுக் கொன்றிருக்கின்றது. இதுவரைக்கும் பாகிஸ்தானிய சிறைகளில் 14 மீனவர்கள் மரணித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. (இணைப்பு – Times of India)
மோடியினுடைய ஆட்சி இருக்கும் பொழுதே, அவரது மாநிலத்தின் மீனவர்களை பாகிஸ்தான் இராணுவம் சுட்டுக் கொள்வதும், கைது செய்வதும் தொடர்கதையாகத்தான் இருந்தது, இப்போதும் தொடர்கிறது.
ஆனால் தனது பதவியேற்பு விழாவுக்கு நவாஷ் ஷெரிப்பை அழைத்த மோடி இதுகுறித்து பேசியதாக செய்திகள் இல்லை. மாறாக, இந்திய வர்த்தக நிறுவனங்களில் நலன்களை மையப்படுத்தியும், தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாகவுமே பேசியிருக்கிறார்.

ஆட்சி மாறினாலும், மாநிலங்கள் மாறினாலும் மீனவர்களின் நிலை நாடுமுழுவதும் ஒரே மாதிரிதான் இருக்கின்றது. ஆட்சியாளர்களும், மீனவர்களின் அவல நிலையை மாற்றும் அக்கறை இல்லை.
நம்மிடம் இருக்கும் ஒரே வழி, மக்கள் நலன்களை மையப்படுத்திய உறவை அண்டை நாடுகளோடு பராமறிக்கும் அரசுகள்தான். அப்படிப்பட்ட அரசை ஏற்படுத்த, எந்த அவதாரமும் மண்ணில் பிறப்பெடுக்காது. நமக்கான அரசை நோக்கிய பயணத்தை நாமே நடத்தி முடிக்க வேண்டும். நாளை நமதே, நாளை உழைக்கும் மக்களாகிய நம்முடையதே!.

நன்றி : மாற்று

கருத்துகள் இல்லை: