திங்கள், 26 நவம்பர், 2007
எல்லாப் பெண்களும் கற்பில்லாதவர்களா ? - தந்தை பெரியார்
ஆஸ்திகப் பெண்: என்ன அய்யா பகுத்தறிவுவாதியே! மனுதர்ம சாஸ்திரத்தில் மற்ற விஷயங்களைப் பற்றி மறுப்புகள் எப்படி இருந்தாலும், பெண்களைக் கடவுளே விபசாரிகளாய்ப் பிறப்பித்துவிட்டார். ஆதலால் அவர்கள் விஷயத்தில் ஆண்கள் கவனமாய் இருக்கவேண்டுமென்று சொல்லி இருப்பது மாத்திரம் பெரிய அயோக்கியத்தனம் என்பதே எனது அபிப்பிராயம். அது விஷயத்தில் நான் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன்.
நாஸ்திகன்: அம்மா! அப்படித் தாங்கள் சொல்லக்கூடாது. மனு தர்ம சாஸ்திரத்தில் மற்ற எந்த விஷயங்கள் அயோக்கியத்தனமாக இருந்தாலும், இந்த விஷயத்தில் மனு தர்ம சாஸ்திரம் சொல்லுவதை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
ஆ-பெண்: அதென்ன அய்யா, நீங்கள் கூட அப்படிச் சொல்கின்றீர்கள். இதுதானா உங்கள் அறிவு இயக்கத்தின் யோக்கியதை ? எல்லாப் பெண்களுமா விபசாரிகள் ?
நா-ன்: ஆம் அம்மா! எல்லோருமேதான் 'விபசாரிகள் '. இதற்காக நீங்கள் கோபித்துக்கொள்வதில் பயனில்லை.
ஆ-பெண்: என்ன அய்யா உலகத்தில் உள்ள பெண்கள் எல்லோரையுமா விபசாரிகள் என்று நினைக்கிறீர்கள் ?
நா-ன்: ஆம். ஆம். ஆம். இந்த உலகத்தில் உள்ள பெண்கள் மாத்திரமல்லர். மேல் உலகத்தில் உள்ள பெண்களையும்கூடத்தான் நான் 'கற்பு உள்ளவர்கள் ' என்று சொல்வதில்லை.
ஆ-பெண்: சொல்லுவது தர்மமாகுமா ?
நா-ன்: கடவுளால் உண்டாக்கப்பட்ட வேதத்தின் சாரமானது மனுதர்ம சாஸ்திரம் சொல்லுவது எப்படிப் பொய்யாகும்; அதர்மமாகும். சொல்லுங்கள் பார்ப்போம். வேண்டுமானால், அது சரியென்று ருஜுப்படுத்தவும் தயாராய் இருக்கிறேன்.
ஆ-பெண்: என்ன ருஜூ! நாசமாய்ப்போன ருஜூ! சற்றுக் காட்டுங்கள் பார்ப்போம்.
நா-ன்: நமது பெரியவர்கள் கற்பைப் பரீஷிக்கத்தக்க பரீஷைகள் வைத்திருக்கின்றார்கள். ஆதலால் அவர்களை நாம் சுலபத்தில் ஏமாற்றிவிட முடியாது.
ஆ-பெண்: என்ன பரீஷை அய்யா அது ?
நா-ன்: சொல்லட்டுமா; ,கோபித்துக்கொள்ளக் கூடாது.
ஆ-பெண்: கோபமென்னையா ? மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம். தாராளமாய்ச் சொல்லுங்கள்.
நா-ன்: 'தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை ' என்கிற பொய்யாமொழிப் புலவரின் வேதவாக்கைக் கேட்டிருக்கிறீர்களா ?
ஆ-பெண்: ஆம், கேட்டிருக்கிறேன்.
நா-ன்: சரி...ஊரில் மழை பெய்து மூன்று வருஷமாச்சுது. குடிக்கத் தண்ணீர் கிடையாது. தயவு செய்து ஓர் இரண்டு உளவு (2 அங்குலம்) மழை பெய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்.
ஆ-பெண்: இது நம்மாலாகின்ற காரியமா ? தெய்வத்திற்கு இஷ்டமிருந்தாலல்லவா முடியும் ? இந்த ஊர்க்காரர்கள் என்ன அக்கிரமம் பண்ணினார்களோ! அதனால இந்தப் பாவிகள் மழை இல்லாமல் தவிக்கின்றார்கள்.
நா-ன்: எந்தப் பாவி எப்படித் தவித்தாலும், நீங்கள் கற்புள்ளவர்களாயிருந்தால், மழை பெய்யுமென்றால் பெய்துதானே ஆகவேண்டும். அல்லது இந்த ஊரில் ஒரு கற்புள்ள பெண்ணாவது இருந்தால் மழை பெய்துதானே தீர வேண்டும். எப்போது பெண்கள் சொன்னால் மழை பெய்வதில்லையோ, அப்போதே பெண்கள் எல்லாம் கற்புள்ளவர்கள் அல்லர். விபசாரிகள் என்று ருஜுவாகவில்லையா ? பொறுமையாய் யோசித்துப் பாருங்கள். இதையெல்லாம் நான் சொல்லவில்லை. வேதங்களும் சாஸ்திரங்களும் சொல்லுகின்றன. ஆகையால், இனிமேல் சாஸ்திரங்களைப் பற்றிச் சந்தேகப்படாதீர்கள். அதிலும் ரிஷிகளும் முனிவர்களும் சொன்ன வாக்கியமும், கடவுள் சொன்ன வேதத்தின் சத்தாகியதும், இந்த மதத்திற்கு ஆதாரமானதும், மோட்சத்திற்குச் சாதனமானதுமான மனுதர்ம சாஸ்திரம் பொய்யாகுமா ? அதனால்தானே நான்கூட கலியாணம் செய்துகொள்ளவில்லை.
ஆ-பெண்: எதனால்தான் ?
நா-ன்: பெண்களைக் கலியாணம் செய்து கொண்டால் புருஷன்மார்கள் அவர்கள் விபசாரித்தனம் செய்யாமல் ஜாக்கிரதையாகக் காப்பாற்ற வேண்டுமென்று மனுதர்ம சாஸ்திரத்தில் இருக்கிறதனால்தான்.
ஆ-பெண்: பின்னை என்ன செய்கின்றீர்கள் ?
நா-ன்: கடவுளோ பிறவியிலேயே பெண்களை விபசாரிகளாய்ப் பிறப்பித்துவிட்டார். யார் காப்பாற்றிப் பார்த்தும் முடியாமல் போய்விட்டது. சாஸ்திரங்கள் நிபந்தனையின்படி ஒரு சொட்டு மழைக்கும் வழியில்லை. கற்பு உள்ள பெண் என்று தெரிவதற்கு மனித முயற்சியை மீறி நடக்க முடியாத காரியங்களைச் செய்து காட்டவேண்டுமென்ற கதைகளும் எழுதி வைத்திருக்கிறார்கள். மழை பெய்ய வைப்பவளும், வாழைத் தண்டை எரிப்பவளும், சூரியனை மறைப்பவளும், இரும்புக் கடலையை வேக வைப்பவளுமே பத்தினிகள் என்று லைசென்ஸ் பெற முடிகிறது. ஆதலால் எவனோ கட்டிக் கொண்டு காப்பாற்றட்டும். கடவுள் செயல் பிரகாரம் நமக்குக் கிடைப்பது கிடைக்கட்டும் என்பதாகக் கருதிச் 'சிவனே ' என்று உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றமாட்டானா என்கிற தைரியம் உண்டு.
ஆ-பெண்: அப்படியானால், நீங்கள் முன் சொல்லிக் கொண்டிருந்ததில் ஒன்றும் குற்றமில்லை. இந்த மனுதர்ம சாஸ்திரமும், வேதமும், பொய்யாமொழியும், நீதியும் இவற்றை உண்டாக்கியதோ அல்லது ஒப்புக்கொண்டதோ ஆன கடவுளும் நாசமாய்ப் போகட்டும். இனிமேல் இந்த ஆஸ்திகம் நமக்கு வேண்டவே வேண்டாம். நம் எதிரிகள் நாட்டுக்கும் வேண்டாம்.
- ஆகஸ்டு 1, 1945 'குடி-அரசு ' இதழில் தந்தை பெரியார் அவர்கள் 'சித்திர புத்திரன் ' என்ற புனை பெயரில் எழுதிய கட்டுரை.
மகாபாரதம் பொய்யே
மஹாபாரதம்
அரசாளும் குடும்பத்திற்குள் நடந்த ஒரு சண்டை.அரசாளுபவர்கள் சண்டையிட்டால் மாளுவது சாதாரண மக்கள். போர் யாருக்கும் நல்லது அல்ல. முடிந்தால் போரை தவிர்ப்பது தான் வீரம். வாய்மையே வெல்லும். வாய்மையை வெல்ல வைக்க சில பொய்கள் அவசியமாகிறது. ஆனால் அப்படி சொல்லப்படாத பொய்களினால் வாய்மையே தோற்கவேண்டி நிலை வந்தால் அது ஆபத்து.
பாண்டவர்கள்
தாய் சொல்லை தட்டாதவர்கள்சகோதரத்துவத்திற்கு மதிப்பு கொடுத்தவர்கள்சூதாட்டம் எனும் தவறு செய்ததால் நாட்டை இழந்தவர்கள். அதனால் பல கஷ்டமும் பட்டவர்கள்.
கௌரவர்கள்
சொன்ன வார்த்தையை காப்பாற்றாதவர்கள்.தந்தை சொல்லையும் தாய் சொல்லையும் மீறியவர்கள்சூழ்ச்சியினால் நேர்மையை வெல்ல நினைத்தவர்கள்.பல நேர்மையற்ற காரியத்தை செய்தவர்கள்ஒரு பெண்ணை அவமானப்படுத்தியவர்கள்.
திரெளபதி
மிகவும் காராசாரமாக இணையத்தில் விவாதிக்கப்படும் ஒரு பாத்திரம். அவள் விலைமாதா - இல்லை. காசுக்கு உறவு கொண்டால் தான் ஒரு பெண் விலைமாதாகிறாள்.அவள் கள்ள உறவு கொண்டவளா - இல்லை. கணவனுக்கு அறியாமல் இன்னொரு ஆண்மகனுடன் உறவு கொண்டால் தான் அது கள்ள உறவு. இங்கு அவள் அந்த ஐவரையும் மணந்தாள். ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருடன் உறவு கொள்ளவில்லை. ஒரு பெண் 5 பேரை மணப்பதா - ஒரு ஆண் 5 பெண்களை மணக்கும் போது ஒரு பெண்ணும் 5 பேரை மணக்கலாம். சமத்துவும் என்று பார்த்தால் அந்த காலத்திலேயே. ஒரு பெண் பல பேரை மணப்பதா - மீண்டும் நாம் கதை பல்லாயிரம் வருடங்களுக்கு முன் நடந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்த காலகட்டம் சமூக கட்டமைப்பு அப்படி மணப்பதில் ஏதாவது கட்டுபாடு இருந்து அவள் அந்த கட்டுப்பாட்டை உடைத்தாளா என்று. அப்படி இல்லை. கதைப்படி.
அர்ஜூனன்
கிருட்டிணரிடம் அறிவுரைகள் கேட்கிறார். அதுவே பிறகு பகவத் கீதையாகிறது. அதில் ஒரு மனிதனின் கடமைகளையே விளக்கியுள்ளனர் கிருட்டிணன் வாயிலாக.
பொய் புரட்டு செய்கிறான் பாண்டவர்களை ஜெயிக்க வைக்க
ஒரு வேளை நேர்மையான யுத்தம் பாண்டவர்கள் பூண்டிருந்தால் துரியோதனனின் சூழ்ச்சி வென்று மஹாபாரதத்தையே மாற்றி எழுதியிருப்பான். அதற்காக நேர்மை வெல்ல பொய்மையும் சில நேரம் ஆயுதமாக எடுக்க வேண்டும் என்று பல counter-attacks களை கிருட்டிணர் செய்வதாக கதை.
கர்ணன்
நட்பில் சிறந்தவன். தானத்தில் சிறந்தவன். தானம் கொடுப்பவர்கள் இன்றும் கூட நீ என்ன கர்ணனா என்று சொல்லும் அளவிற்கு காலங்கள் கடந்து மனதில் நின்றவன். தான் பாண்டவர்களுக்கு மூத்தவன் என்று அறிந்தும் பாண்டவர்கள் பக்கம் சேராமல் தன் நண்பனுடன் நின்றவன். இன்று யாராவது நம்மிடம் வந்து நீதான் நிஜமாகவே அம்பானியின் பிள்ளை என்று சொன்னால் நாம் ஓடிப்போய்விடுவோம். நட்புக்கு இலக்கணம் இங்கிருந்து கற்கலாம்.
துரியோதனன்
அவன் கர்ணனை பயன்படுத்தியிருந்தாலும் அவனுக்கு உரிய மரியாதை பெற்றுத் தந்தவன். தன் நண்பனுக்கு தன் மனைவிக்கும் உள்ள நட்பை சந்தேகப்படாமல் இருவர் மீதும் அளிவில்லா நம்பிக்கை கொண்டவன். நண்பனின் மனைவியை எவ்வாறு நடத்த வேண்டும் எனும் பாடம்.
பீஷ்மர்
அதர்மத்தின் பக்கம் இருந்தாலும் நாட்டை காப்பது தன் கடமை என்று துரியோதனின் பக்கமாக நின்று போர் புரிகிறார். தேசப்பற்றுக்கு உதாரணம்.
திருதிராஷ்டிரன்
கண்ணில்லாதவர். மகன் மீது அளிவிலா பாசம் கொண்டவர். தான் அடையாத ராஜ்ஜியத்தை எப்படியாவது தன் மகன் அடைய வேண்டும் என்று ஆசை கொண்டவர். நடப்பது தவறுகள் என்றிருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டே காதையும் மூடிக் கொண்டவர். இவர் ஒரு துணைபாத்திரம் தான். ஒரு Helpless character depicted nicely. இவர் மனைவி தன் கணவன் பார்க்காத உலகை தானும் பார்க்க மாட்டேன் என்று கண்ணை மூடிக் கொண்டவள். கணவன் மேல் வைத்திருக்கும் பாசத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு. நல்ல பட்டிமன்ற தலைப்பு. கண்களை கட்டிக் கொள்ளாமல் தன் கணவனுக்கு சேவை செய்வது தானே நியாயம் என்பார்கள் சிலர்.
குந்தி
தவறாக குழந்தை பெற்றவள். அந்த தவறுக்காக கடைசி வரையில் வாடுகிறாள். கணவனை இழக்கிறாள். பிறகு பிள்ளைகளுடன் அவதிப்படுகிறாள்.
யுத்தம்
யுத்தம் குருக்ஷேத்திரத்தில் நடப்பதாக கதை. மேலும் பல துணை கதைகள் நீதி நேர்மை வாய்மை இவற்றை அறிவுறுத்துவதாகவே உள்ளன.
ஆனால் இவை யாவும் பொய்யே, மகாபாரதம் என்பது பொய்யே, மகாபொய்யேயன்றி வேறொன்றுமில்லை
மகாபாரதம் என்றொரு மெகாபொய் மகாபாரதம் உண்மையாக நடந்த வரலாறு என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் கிடைத்து உள்ளதாக உ.பி. அரசு தெரிவித்துள்ளது. பாக்பத் - பர்னாவா இடையேயான 60 கி.மீ. தூரம் இப்போது மகாபாரத காலத்தை நினைவூட்டும் வகையில் இருந்து வரு வதைக் கண்கூடாகக் காணலாம். இருபுறம் திறந்த நிலையில் இப்போதும் நீண்ட குகை மகாபாரதம் கதையல்ல; நிஜம் என்பதை விளக்குவதாக இருக்கிறது. ஆதாரம் கிடைத்தனவாம்! 12.6.2005 நாளிட்ட 'தினமலர்' - நாளிதழில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. "மகாபாரதம் கற்பனையல்ல; வரலாறு. ஆதாரங்களுடன் உ.பி. அரசு உறுதி இவ்வாறு உ.பி . அமைச்சர் கோகல் ஹமீத் கூறியுள்ளார். இதுதான் 'தினமலர்' செய்தியின் சில பகுதிகள். முதன்முதலாகப் பார்த்தபோது. இப்பொழுது, நாம் மகாபாரதம் கற்பனைக் கதையா? வரலாறா? என்பதுபற்றி ஆய்வு முறையில் அலச இருக்கிறோம். இந்த மகாபாரதமானது முதலில் அஸ்வலாயனா என்பவரின் 'கிருஹ்ய சூத்ரம்' என்னும் நூலிலும், பாணினியின் 'அஷ்டத்யாயி' என்னும் நூலிலும் குறிக்கப்பட்டுள்ளது. முழுமையாக, மகாபாரதம் என்ற பெயரானது, முதல் தடவையாக குப்தர் காலக் கல்வெட்டில் தான் பொறிக்கப்பட்டுள்ளது. கண்ணன் இறந்த காலம்: மகாபாரதப் போர், துவாபர யுகத்தின் இறுதியிலும், கலியுகத்தின் தொடக்கத்திலும் நடந்ததாகக் கூறி, இந்நிகழ்வு 5000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்று பழம்பெருமை பேசப்பட்டு வருகிறது. இவ்வாறு, மகாபாரதம் : ஆதிபர்வம் :அத்தியாயம் - 2; சுலோகம் 10 கூறுகிறது.இந்தக் கலியுகம் எப்பொழுது தொடங்கியது? கண்ணன் இறந்த அந்த நாளில்!கண்ணன் இறந்தது எப்பொழுது? மகாபாரதப் போர் முடிந்து, 36 ஆண்டுகளுக்குப் பின் கண்ணன் மடிந்தான். இவ்வாறு ஸ்ரீமத் மகாபாகவதம்: முதல் °கந்தம்:அத்தியாயம் - 15, சுலோகம் - 36 கூறுகிறது.கலிகாலப் பிறப்பு:கலியுகம் தொடங்கி இப்பொழுது எத்தனை ஆண்டுகள் ஆகின்றன?ஏதாவது ஒரு பஞ்சாங்கத்தை எடுத்துப்புரட்டி பார்த்தால் கலியுகம் தொடங்கி 5107 ஆண்டுகள் ஆகின் றன எனத் தெரிந்து கொள்கின்றன. இந்த 5107-லிருந்து 36 ஆண்டுகளைக் கழித்தால் வருவது 5071. ஆக, இதிலிருந்து 5071 ஆண்டு களுக்கு முன் மகாபாரதப் போர் நிகழ்ந்தது என்பதாகப் பாகவதம் பகர்கிறது.ஆனால், மகாபாரதக் கணக்குப்படி கண்ணன் உயிருடன் இருந்து மகாபாரதப் போரில் அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாய் அதாவது பார்த்த சாரதியாய் இருந்தபோது கலியுகம் பிறந்து விட்டது என்கிறது மகாபாரதம். இரண்டில் எது சரி? எது சரி அன்று? அந்த வியாசருக்குத்தான் வெளிச்சம்! வேறுபாடு வரலாமா? மகாபாரத நூலையும், பாகவதம் உள்ளிட்ட 18 புராணங்களையும் பாடியவர் இந்தப் பராசரப் புத்திரர் வியாசர்தானே?ஒருவரே, தாம் எழுதிய இரண்டு நூல்களிலும் கணக்கில் வித்தியாசம் வரும்படி எழுதலாமா? வேதம் வகுத்த வியாச முனிவருக்கு கணக்கில் கலக்கமான அறிவா? தப்புக்கணக்கு போடுபவர் வேத வியாசர் என்று அழைக்கப்படும் தகுதியுடையவர் ஆவாரா?ஒத்த கருத்து உண்டா?மகாபாரதப் போர் ஸ்ரீமத் மகாபாகவதப்படி கி.மு. 3007 வாக்கில் நிகழ்ந்தது. அது இருக்கட்டும், இந்தக் கலியுகம் தோன்றியது எப்போது என்பது பற்றிய செய்தியிலிருந்து வடமொழி அறிவாளர் களிடை ஒத்தக் கருத்து உண்டா? "கி.மு. 3102 பிப்ரவரி 18 ஆம் நாள் வெள்ளிக்கிழமை கலியுகம் தோன்றியது" என்கிறார். கி.பி. 476இல் பிறந்த ஆரியப்பட்டர் என்கிற வானியலார்."கலியுகம் கி.மு. 2449 ஆம் ஆண்டில்தான் தொடங்குகிறது" - என்கிறார் வராகமிஹிரர் என்னும் மற்றொரு வானியலார். ஆக, மகாபாரதம் - கலியுகம் பற்றி இத்துணை குளறுபடி இருக்கையில் மகாபாரதம் வரலாறு என்பது பொருந்துமா?என்ன கணக்கு, இந்தக் கணக்கு?குருச்சேத்திரத்தில் நிகழ்ந்த மகாபாரதப் போரில் கவுரவரின் 11 அக்ரோணி சேனையும் பாண்டவரின் 7 அக்ரோணி சேனையும் ஆக மொத்தம் 18 அக் ரோணி சேனை ஈடுபட்டதாக மகாபாரதம் கூறுகிறது. ஓர் அக்ரோணி படை என்பது,21870 தேர்கள்;21870 யானைகள்;65610 குதிரைகள்;109350 காலாட்படைகள்அடங்கியது ஆகும்.18 அக்ரோணி சேனைகள் என்றால்,21870 ஒ 18 = 393660 தேர்கள் (ரத)21870 ஒ 18 = 393660 யானைகள் (கஜ) 65610 ஒ 18 = 1180980 குதிரைகள் (துரக)109350 ஒ 18 = 1978300 காலாட்கள் (பதாதிகள்) அடங்கியது என்பதாகிறது,தேர் ஒன்றுக்கு 1 வீரர் என்ற முறையில் பார்த்தால் 3,93,660 தேர்ப்படை வீரர்கள்; யானை ஒன்றுக்கு 1 வீரர் என்ற முறையில் பார்த்தால், 3,93,660 யானைப் படை வீரர்கள்; குதிரை ஒன்றுக்கு 1 வீரர் என்ற முறையில் பார்த்தால், 11,80,980 வீரர்கள். இத்தோடு, காலாட்படை வீரர்கள் 19,78,300 வீரர்கள்.இவற்றைக் கூட்டினால் மொத்த நாற்படை வீரர்கள் 39,46,540 எண்ணிக்கையாகிறது.போரில் பங்குபெற்ற நாற்படை வீரர்கள் ஏறத்தாழ 40 இலட்சம் பேர்; யானைகள் 4 இலட்சம்; தேர்கள் 4 இலட்சம்; குதிரைகள் 1 1/4 இலட்சம்; நம்பமுடியவில்லை, இல்லை!எந்த ஒரு நாட்டிலும் இவ்வளவு படை வீரர்கள், யானை, தேர், குதிரைகள் நிறுத்தி வைக்க இவ்வளவு பெரிய மைதானம் இருக்க வாய்ப்பு உண்டா? அவற்றை மோதுமான இடைவெளியில் அணி வகுத்து நிறுத்த இடம் இருக்க முடியுமா?நிறுத்தி, அணிவகுத்து நிற்கவே இடமிராது என்றால் அப்படையினர் அங்கும் இங்கும் பாய்ந்து திரிந்து ஓடிப் போரிட அத்தனை பெரிய போர்த்திடல் இருக்க வேண்டுமே? அதற்கு வாய்ப்பு உண்டா? இல்லையே! இத்துணை எண்ணிக்கை நம்பும்படியாக இல்லை; இல்லை; இல்லவே இல்லை!!எல்லாம் ஒரே 'கப்ஸா' ஆகவல்லவா இருக்கிறது?இவ்வெண்ணிக்கை, உண்மையாக இருக்க வேண்டும் எனில், படைவீரர்களுக்கும், மொத்த மக்கள் தொகைக்கும் இயல்பான விகிதாசாரப்படி மக்கள் தொகை 20 கோடியாக இருக்கவேண்டும். இது எவ்வகையிலும் சாத்தியமே இல்லை! எல்லாம் இல்லை மயம்!மகாபாரதம் பற்றி, வரலாற்று அறிஞர் பெருமகன், டி.டி. கோசாம்பி முதலியோர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளனர்.அவற்றுள் சிலவற்றைக் கீழே காண்போம்.1. கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரையிலான எந்த இலக்கியத்திலும் மகாபாரதம், மகாபாரத யுத்தம் பற்றிய செய்திகளே இல்லை! 2. மகாபாரத யுத்தம் எப்போது நடந்தது? என எவராலும் வரையறுத்துக் கூறப்படவில்லை!3. இன்றைய அஸ்ஸாம் என்று கருதப்படுகிற மகாபாரத 'பிரஜியோதிஷா' மன்னனைப் பற்றி அஸ்ஸாமிய இலக்கியம், வரலாறு எவற்றிலும் எந்தக் குறிப்புகளும் இல்லை !4. போரில் கலந்துகொண்ட படைவீரர்கள் எண்ணிக்கை நம்பவே முடியாத கற்பனையாகும்.5. எல்லாவற்றிற்கும் மேலாக, யுத்தத்தில் பயன்படுத்தப் பட்டதாகக் கூறப்படும் பல ஆயுதங்களைச் செய்வதற்கு, பெருவாரியான இரும்பு தேவைப்பட்டிருக்கும். ஆனால், மகாபாரதம் நடந்ததாகச் சொல்லப்படும் காலத்தில் இரும்பு அரிதாகவே இருந்திருக்கிறது.(உலகின் இரும்புக் காலம் என்பது, 3300 ஆண்டுகளுக்கு முன், அதாவது கி.மு. 1300 ஆண்டுகளுக்கு முன்). இந்தக் காலகட்டத்தில்தான் இரும்பை உலகில் மனிதன் இனம் மிகுதியாகக் கையாளத் தொடங்கியது என்பது மனித இன வரலாற்றுச் செய்தி. மகாபாரத காலம் எனக் கூறப்படுவதோ கி.மு. 3000 வாக்கில் - (ஆதாரம்: 'சண்டே', 5-11, ஜூன் 1988) வரலாற்று அடிப்படையற்றது:வரலாற்று ஆய்வு அறிவாளர்களின் கருத்து இவ்வண்ணம் இருக்க, உத்திரபிரதேச அமைச்சர் பெருமகன் மான்புமிகு ஹமீத் பாக்பத் - பர்னாவா இடையேயான 60 கி.மீ. தூரம் இப்போதும் மகாபாரத காலத்தை நினைவூட்டுவதாக இருந்து வருவதாக எதன் அடிப்படையில் இயம்புகிறார்? தலைமுறை தலைமுறையாக:ஏதோ ஒரு சமயம் குருச்சேத்திரம் எனப்படும் பகுதியில், பாண்டவர் என்பவர்களுக்கும் கவுரவர் என்பவர் களுக்கும் இடையே பங்காளிச் சண்டை என்று சிறிய அளவில் நிகழ்ந்திருக்கலாம். இம்மாதிரியான சண்டை எங்கும் நடப்பது தான்! இயல்பானதுதான்! ஆனால், ஒவ்வொரு தலை முறையினரும், இந்தச் சண்டை நிகழ்ச்சியை அடுத்த தலைமுறையினருக்கு விவரிக்கும்போது பல, புதிய, புதிய தகவல்களைக் காலப் போக்கில் கற்பனை வளம் மிளிர சேர்த்திருக்கின்றனர். வளர்த்த கலை மறந்துவிட்டாய் ஏனடா, கண்ணா?"முதன் முதலாக, வியாசர் எழுதிய மகாபாரதக் காவி யத்தில் 8000 செய்யுள்களே இருந்தன. இதற்கு 'ஜெய பாரதம்' எனப் பெயர்! இதுவே, காலப்போக்கில், 24 ஆயிரம் செய்யுள் களையும், பின்னர், 1 லட்சம் செய்யுள்களையும் கொண்ட 'மகாபாரதம்' ஆக வளர்ந்துவிட்டது. உண்மை ஒருநாள் வெளியானால்?இதுவரை, ஜெயபாரதம் நமக்குக் கிடைக்கவில்லை! அதைப் படித்தால், ஒருவேளை பாரதக் கதையின் உண்மை உருவத்தை நாம் தெரிந்து கொள்ள வழியிருக்கிறது?" என்கிறார், குருச்சேத்திரப் பல்கலைக் கழகத்துத் தொல் பொருள் ஆய்வுத் துறைப் பேராசிரியர் டாக்டர் உதய்வீர் சிங் அவர்கள். இவர், மகாபாரத ஆய்வுப் பணியில் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருபவர். கேள்வி (கேலி)க் குறி:"40 இலட்சம் பேர் கொண்ட பெரிய படைகள் இந்தக் குறுகிய இடத்தில் போரில் எப்படிப் பங்கு கொண்டன? என்பது கேள்விக் குறியான விஷயமாக இருக்கிறது!இத்தனை பெரிய எண்ணிக்கை, கவியின் கற்பனை யாக இருக்கலாம்" - என்று குறிப்பிட்டுள்ளார் டாக்டர் உதயவீர்சிங். ஒன்றும் காணவில்லை!அவர் மேலும் கூறுகிறார்: "குருச் சேத்திரத்திலிருந்து, சுற்றிலும் மேட்டுப் பகுதிகள் இருக்கின்றன.இங்கிருந்து 2 கல் தொலைவில் அஸ்திபூர் என்று ஓர் இடம் இருக்கிறது. இங்குதான், பாரதப் போரில் உயிரிழந்த போர்வீரர்களின் உடல்கள் எரிக்கப் பட்டன - என்பது அய்தீகம். இப்போது, இந்த அஸ்திபூருக்குப் போனால் ஒரு அஸ்திக்குன்றைக் கூட (எலும்புச் சாம்பல் மேடு)ப் பார்க்க முடியாது" - (தகவல்: நூல் - 'கண்ணனைத் தேடி' - டி.கே.வி. இராஜன்)எதுவும் கிடைக்கவில்லையே?"மகாபாரதத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் அரசர்களின் கல் வெட்டுகளோ, செப்பேடுகளோ, காசுகளோ இதுவரை எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை!" - என்கிறார், மய்ய அரசுத் தொல் பொருள் துறையின் மேனாள் டைரக்டர் ஜெனரல் பேராசிரியர் பி.பி. வால் அவர்கள். பானை ஓடும், பாரத காலமும்:தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்த ஆதாரங் களை வைத்துக் கொண்டு பார்க்கும் போது, அஸ்தினா புரத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பானை ஓட்டின் காலம் கி.மு. 1100 எனக் கணக்கிடப் பட்டுள்ளது. எனவே, இப்பானை பாரத காலத்தைச் சேர்ந்ததில்லை என்று தெரிய வந்துள்ளது. மகாபாரத காலம் கி.மு. 3000 வாக்கில் - என்பது முன்னர்க் குறிப்பிட்டுள்ளோம். ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே!மகாபாரதக் கதை நிகழ்வு பற்றிய எந்தத் தடயங்களும் உ.பி. அமைச்சர் கூறும், குருச்சேத்திரப் பகுதியில் அதாவது புதுடில்லியிலி ருந்து 150 கி.மீ. வடமேற்கில் கிடைக்கவில்லை! இந்நிலையில், உ.பி. அமைச்சர் ஹமீத் அவர்கள் எதை ஆதாரமாக வைத்துக் கொண்டு பாக்பத் - பர்னாலா இடையிலான 60 கி.மீ. தூரம் மகா பாரத காலத்தினை நினைவூட்டுவதாக, ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! - என்று கூறுகிறார் என்பது நமக்குத் தெரியவில்லை!உங்கள் விருப்பம்! "நீண்ட குகை அப்பகுதியில் இருப்பதால் மகா பாரதம் நிஜம்" என்கிறார் அமைச்சர். அது, மெய்ப் பிக்கப்பட வேண்டாமா? மெய்ப்பிக்கப்பட்டதா? அந்தக் குகை, கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஏதேனும் வரலாற்று அறிவியல் ஆய்வு கூறியுள்ளதா? ஒரு பகுதியில், குகை ஒன்று இருப்பதாலேயே, 'பார், பார்! அது மகாபாரத காலக் குகை!' என்று எப்படிக் கூறலாம்? வெறும் கற்பனை, யூகத்தை, தன் விருப்பத்தை உண்மை - என்று அவர் எப்படிக் கூறலாம்? இது என்ன 'உங்கள் விருப்பமா'?கற்பனையின் விற்பனை!வரலாற்று ஆய்வு முடிபுகளிலிருந்து மகாபாரதம் 'நிஜம்' அல்ல; வரலாறு அன்று; கற்பனைக் கதை என்றுதான் கூறமுடியும். கற்பனையை வரலாறு என்று விற்பனை செய்யலாமா? இது தகுமா? முறையா? சரியா? காரணம் புரிகிறதா?"இந்துத்வா என்ற பெயரில் உ.பி.யிலும், மத்தியி லும் ஆட்சி நடத்திய தே.ஜ. அரசு செய்யாத இந்த முயற்சியை சமாஜ் வாடி அரசு செய்ய முன் வந்துள் ளது குறிப்பிடத்தக்கது" - என்று 'தினமலர்'க்காரர் புல்லரித்துப் போய் எழுதுகிறாரே? என் செய்ய? நமது சமுதாயம் ஏன், பிற்படுத்தப்பட்டு தாழ்த்தப் பட்டுப் போய்க் கிடக்கிறது? என்பதற்கு சமாஜ்வாடிக் கட்சி அரசின் செயல்பாடு உலகுக்குத் தெரிவித்து நிற்கிறதே? இப்படிச் 'சூத்திர' அரசு இந்துத்வாவுக்கு வெண்சாமரம் வீசலாமா? இதைக் கண்டு நாம் வெட்கப்படுகிறோம்! வேதனைப்படுகிறோம்! வேறு என்ன செய்ய? -
நன்றி: yarl.com