தமிழன் என்பவன் யார்? என்றால்
* கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடியின் வழித்தோன்றல்
* உலக மொழிகளிலேயே தற்போது வழக்கில் உள்ள மொழிகளுள் தொன்மையான மொழிக்கு இன்றைய உரிமையாளன்.
* உலகுக்கே பொதுமறைத் தந்த வள்ளுவனுக்கு உறவுக்காரன்.
இப்படி பல பெருமைகளுக்கு உரிமைக்காரன், இதில் இன்றைய நிலையை குறிப்புக்கு சேர்த்து கொள்வோமா என்றால் ..
* பதவி வெறிப்பிடித்த அரசியல் ஓநாய்களுக்கு உறவுக்காரன்.
* தம் உறவையே, சாதியின் பெயரால் தீண்டத்தகாதவனாக்கும் கொடுமைக்காரன்.
* மதத்தின் பெயரால் பிரிந்து கிடக்கும் இளித்தவாயன்.
* நல்லதொரு தலைவனை தேர்ந்தெடுக்க திறமையற்ற/திராணியற்ற கூட்டத்தின் உறுப்பினன்.
* எதிரிக்காக போடும் எலும்புக்காகசேலைக்குள்ளும்/ கோவணத்துக்குள்ளும் ஒழிந்து காவல் கிடக்கும் நாய் போன்றவன்.
* தம் இனம் அழிக்கப்படுகிறதே என்ற கவலையுள்ள அக்கறையோடு வீட்டில் மட்டும் பேசிக்கொள்ளும் பெருங்கூட்டத்தில் ஒருவன்.
* உரிமைக்கு போராடும் இயக்கங்களை கேலி செய்யும் ஈனப்பிறவிகளில் ஒருவன்.
எனப்பெருமைகளை ஆவலோடும் , சிறுமைகளை வருத்தததோடும் பேசிக்கொண்டாலும்,எனது குருதிப்பாசம் தமிழன் அழிவை பார்த்து வருந்தத்தான் செய்கிறது.எனக்கு நாட்டுப்பற்றோ, மொழிப்பற்றோ கிடையாது, மானுடப்பற்று மட்டுமே உண்டு. தமிழின அழிவு அவன் பேசும் மொழியின் பொருட்டுதான் நிகழ்கிறது, இனப்பகையின் வஞ்சகத்தால்தான் நிகழ்கிறது, அவன் பேசும் மொழியும் நான் பேசும் மொழியும் ஒன்று, தமிழை தாய் மொழியாகக் கொண்டு வளர்ந்த என்னை போன்ற மனிதன் நாளும் சாவின் விளிம்பில் போராடிக் கொண்டிருக்கிறான்,என்பதை நினைக்கும் போதுதான் வருத்தம் கோபமாக வழிந்தோடுகிறது. சில நேரங்களில் பதிவுகளாக, சொற்களாக வெளிப்படுகிறது. ஏன்? உன் இனத்திற்காக உயிரை துச்சமென மதித்து களத்தில் இறங்கி போராட வேண்டியதுதானே,என்று கூட சிலர் கேட்கலாம், ஆனால், இங்கு உயிர் விட்டாலும் மானுடபற்று/இனப்பற்று கொழுந்துவிட்டு எரியுமா?
மிகப்பெரும்பான்மையான சாத்தியக்கூறுகள் என் மானுடப்பற்றோடு கூடிய இந்த இனஎழுச்சி வேட்கை என் சிதைத் தீயிலேயே எரிந்து விடும் என்ற அச்சத்தையே ஏற்படுத்துகிறது.
தமிழனின் இக்கால இந்த இக்கட்டான சூழலில் தமிழன் திராணியோடும், தமக்கு இந்த நாட்டில் இழைக்கப்படும் துரோகங்களையும் கண்டு பெருங்கோபத்தோடும் பொங்கியெழாமல் செய்தவன் யார்? என்று கேள்விகள் கேட்டு மற்றவனை கைநீட்டினாலும், தமிழர்களே உங்களை ஒருமுறை சுய ஆய்வு செய்து கொள்ளுங்கள். நீங்கள் தானே அந்த ஒற்றுமை சீர்குலைவுக்கு காரணம்? நாங்கள் எப்படி காரணம் என்று நீங்கள் வியக்க மாட்டீர்கள் என்றே கருதுகிறேன்.
சிங்களன் தமிழனை கொல்லுகிறான் அது இனப்பகை, இனவெறி என்று நாம் வகுத்து அவனை விமர்சித்து எதிர்த்தாலும், தோழர்களே எத்தனை ஆண்டுகளாக அறிவே இல்லாமல் உங்கள் சகோதரர்களை சேரியில் தள்ளி ஒதுக்கி அவர்களை தீண்டத்தகாதவர்களாய் மனிதனிலும் கீழாய் நடத்தினீர்கள். காலம், காலமாக அடிமைப்பட்டவனுக்குதான் விடுதலையின் பெருமைத்தெரியும், அதேரீதியில் அங்கே இலங்கையில் வாழும் தமிழனுக்கு ஆதரவு தெரிவிக்க அவனுக்கு மட்டும்தானே உரிமையுண்டு, உங்களுக்கு (தங்கள் மேல் சாதியாக கருதிக் கொள்பவர்களுக்கு) , காலம் காலமாக அடிமைப்படுத்தியர்களுக்கு என்ன தகுதியிருக்கிறது.
இந்த விமர்சனம் நீங்கள் ஏன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறீர்கள்?என்ற தொனியில் எழுந்ததல்ல,
“ நீங்கள் ஏன் முழுமையான மனிதனாக இல்லை. நீங்கள் மனித பண்புகளோடு/ அன்புள்ளத்தோடு இருந்தால், நீங்கள் தமிழனாக இல்லாவிட்டால் கூட மன்னித்துவிடலாம். ஆனால், சக மனிதனின் துயரத்தை கண்டு இரங்கும் மனிதனாக இல்லாமல், சக மனிதனை துனுபுறுத்தும் ஒரு மனித உருவில் திரியும் விலங்காக இருந்தால் மன்னிக்க இயலாது” என்பதை தெரிவிக்கத்தான்.
தன்னோடு வாழும் மனிதனை துன்புறுத்திக் கொண்டே, தொலைவில் வாழும் மனிதனின் துன்பத்திற்காக வாடுவது, ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவது போல்தானே உள்ளது.
ஒரு எடுத்துக்காட்டு இப்படி வைத்துக் கொள்வோம், அங்குள்ள அனைத்து தமிழர்களையும் தமிழகத்தில் குடியமர்த்தி விடுவோம், நீங்கள் (சாதி பின்னால் திரியும்) அத்தனை பேரும் அவர்களிடம் சாதி பாகுபாடு இல்லாமல் திருமண வைத்துக் கொள்ளத்தயாரா? இந்த கேள்விக்கு பெரும்பான்மையான தன்னை தமிழனாக அடையாளப்படுத்திக் கொள்ளும் பலரிடமும் கள்ள-அமைதியே பதிலாக வரும். இது இன்றைய உண்மை நிலை மிகவும் வருத்தத்தோடு, உரத்து சொல்ல கூடியதுதான். ஆகவே, தமிழர்களே தயவு கூர்ந்து திருந்துங்கள், இன்றில்லையேல் என்று திருந்த போகிறீர்கள்.
இவ்வளவும் விமர்சிக்கும் நான் ஒரு தமிழனாக இருக்கிறேனா? மனிதனாக இருக்கிறேனா?என்றெல்லாம் உங்கள் உள்ளத்தில் கேட்கும் கேள்வி என் காதில் விழத்தான் செய்கிறது. அப்படி ஒரு கேள்வி எழுமானால் அதற்குமுன் உங்களை மனிதர்களாக இந்த சமூகத்தில் நிறுவிவிட்டு உங்கள் கேள்வியை வெளியிடவும். அதற்குமுன் அந்த கேள்வி கேட்க அவசரப்பட்டால், “ அவன் மட்டும் மலம் தின்னலாமா? நான் தின்னக்கூடாதா ” என்ற கேள்வியைப் போல் ஆகிவிடும்.
உனக்கு ஈழத்தமிழன் குறித்த கவலையில்லையா ? என்று கேட்பீர்களானால், கண்டிப்பாக இருக்கிறது, உள்ளம் பதைபதைத்துக் கொண்டு, வருத்தத்தில் துடித்துக் கொண்டு இருக்கிறது,
ஈழத்தமிழனின் சாவின் விளிம்பில் இருக்கிறானே? ஆனால், இங்கு தேர்தல் ஓட்டுகளுக்காக, சாதிக்காக, மதத்திற்காக அடித்து கொண்டு சாகிறார்களே.... என்ற ஆதங்கத்தோடு இவ்வளவையும் கொட்டி தீர்த்திருக்கிறேன்.
தயவு கூர்ந்து உடனடி தன்னாய்வை மேற்கொள்ளுங்கள், இல்லையென்றால் அழிய வேண்டியது ஈழத்தமிழனல்ல, முதலில் பெரும் மக்கள் தொகை கொண்ட தாயகத்தமிழன்தான்.
சாதியின் பின்னால் ஒழித்து வைத்துக் கொண்டு தமிழர்கள் போல் நாடகமாடும் நீங்கள் மனிதத்தின் பொருட்டு உறுதியாக அழிக்கப்பட வேண்டியவர்கள்.......................