வியாழன், 4 மார்ச், 2010
நாங்கதாண்டா சாமி(யார்?) அகம் பிரம்மாஷ்மி - மகிழ்நன்.பா
நித்யானந்தா, கல்கி, தேவநாதன், புவனேஷ்வரி இந்த பெயர்களை படித்தால் என்ன நினைவுக்கு வருகிறது? நானேதும் தவறாக எழுதத்தொடங்கி கவனக்குறைவின் காரணமாக புவனேசுவரியை இந்த கோஷ்டிகளோடு இணைத்துவிடவில்லை. ஆங்கில வழி பள்ளிக்கூடங்களில் Odd Man Out என்ற வகையில் கேள்விகள் வரும். அதில் குறிப்பிட்ட பண்பின்படி விதிவிலக்கானதை தனியே பிரித்து, பதிலாக எழுத வேண்டும். மேலுள்ள வரிசையில் புவனேசுவரி பெண் என்பதை தாண்டி எந்த வேறுபாடு புனித(?), புதிர் கசுமாலங்களுக்கு இல்லை.
பாலியல் வேட்கை என்பது அனைவருக்கும் பொதுவானது. சொல்லிதர வேண்டிய கலை இல்லை மன்மதகலை. ஆனால், இதையெல்லாம கடந்தவர்கள் போல தங்களை சமூகத்தில் அடையாளப்படுத்திக் கொண்டு, மக்களுக்கு அறிவுரைகள் வழங்கி நலவழிப்படுத்த வந்த தூதர்கள் போல சமூகத்தில் நற்பெயரை சம்பாதித்துக் கொண்டு, அதே நற்பெயரை அரசியல் செல்வாக்குக்கும் பயன்படுத்திக் கொண்டு, சிறிது சிறிதாக கருப்பணத்தை பதுக்குவதில் தொடங்கி, அரசியல் நகர்வுகள், தரகு வேலைகள் என விரிவடைந்து, பண புழக்கம் அதிகமானது தனக்குத்தானே போட்டுக் கொண்டு காவி வேடத்தை கலைந்து சினிமா நடிகைகளை தங்கள் வேட்கை தீர்க்க பயன்படுத்திக் கொள்வது(சினிமா காவி கோஷ்டிகளையும் கெடுத்து விடுகிறதே :)). மக்களும் இவர்களை நம்பி கோடி கோடியாய் பணத்தை கொட்ட, இவர்கள் இப்படி கொட்டமடித்துக் கொண்டிருக்கின்றனர். நம் மக்களும் ஒன்றும் முட்டாள்களல்லர், அகப்பட்டவனை நம்பி போவதற்கு, இனி அகப்படப்போகிறவனிடம் போய்தான் ஏமாறுகின்றனர்.
புவனேசுவரியின் செய்தியில் புவனேசுவரி மட்டும்தான் ஒழுக்க கேடானவர் போலும், மற்ற நடிகர், நடிகைகள் ஒழுக்கமானவர்கள் போலவும் சில சினிமா நடிகர்களின் நாடக காட்சிகள் ஊடகங்கள் வாயிலாகவே, ஊடகத்திற்கு எதிராக அரங்கேறின. மக்களின் ஆழ்மன வேட்கைகளை தூண்டுவிடும்படியாக திரையில் நடித்து சாமியார்களிடமும், தொழிலதிபர்களிடமும் தஞ்சமடையும் சில(?) நடிகைகள், அதை தெரிந்த நடிகர்கள் இன்று ரஞ்சிதாவுக்கு ஆதரவாக போராட வருவார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
திரை உலகில் இருக்கும் சங்கங்களாவது ஏதாவது எதிர்ப்பை பதிவு செய்யுமா? சாமியார்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவார்களா என்றால் கண்டிப்பாக ஏதும் நடக்காது, இவர்கள் திரையில் செய்வது அந்த சாமியார்கள் திரைமறைவில் செய்கின்றனர். சில நேரங்களில் வெளிப்பட்டு விடுகிறது. திரைத்துறையில் இருந்து ஒரு கவலை வருமானால் அது அந்த ஒளிப்பட காட்சியில் குறைந்த லைட்டிங், கேமரா ஆங்கிள் போன்றவற்றை குறித்து மட்டும்தான் இருக்கும்.
யாருமே இல்லாத கடையில் டீ ஆற்றுவது போல, யாருமே இந்து மதத்தை கிழித்து தொங்க விடுவதற்கு முன் தாங்களே தங்கள் சாமியார் நிறுவனங்களும் ஒன்றான நித்தியானந்தாவுக்கு எதிராக போராட தொடங்கியிருக்கிறார்கள் இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகள். நித்தியானந்தாவின் படங்களை எரிப்பது, அலுவலகங்கள் சூறையாடப்படுவது போன்ற நடவடிக்கைகள் உண்மையிலேயே ஒரு முரண்தான். வேறு யாரும் தாக்கும் முன்னரே தங்களை தாங்களே அடித்துக் கொண்டால் அடியின் வலி குறைவாக இருக்கும் என்ற எண்ணமோ என்னவோ? இதில் இவர்களது வேடிக்கையான கோரிக்கை என்னவென்றால்
" நித்தியானந்தா குற்றமற்றவர் என்று குற்றமற்றவர் என்று நிருபித்த பின் சமூகத்தில் நடமாட வேண்டுமாம்."
அப்படி என்ன தவறிழைத்து விட்டார் நித்தி(செல்லமா கூப்பிடலாமேன்னுதான்) கிருட்டிணன் கோபிகளோடு(அடுத்தவர் மனைவிகளோடு) செய்யாத லீலைகளா, இந்திரன் செய்யாத சேட்டையா? புராணங்கள் சொல்லாத முறையற்ற கலவியா? இந்த நிலைகளையெல்லாம் இவர் என்ன கடந்தாவிட்டார்....இன்னும் சொல்லப்போனால் இப்பதானே முதல் வகுப்பில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். பரமானந்த நிலையை அடைய விரும்புவரை பிரேமானந்தா போன இடத்திற்கு அனுப்ப பார்க்கிறார்களே என்ன கொடுமை சார் இது?
நித்தியானந்தாவுக்கு எதிராக போராடும் இந்து அமைப்புகள் முதலில் நம்பகமான சாமியார்கள் பட்டியலை வெளியிடடட்டும். தயாரா? ஆனால், அதன் பிறகு தவறு நடந்தால் சங்கங்களை கலைத்துவிட்டு ஊர்போய் சேர்ந்து வேலைவெட்டியை பார்க்கட்டும்.
அடுத்து நாம் பார்க்கபோற படம் கல்கி.............
தேவநாதன், நித்தி படங்களின் விமர்சனங்களே இதற்கு அப்படியே ஒத்துப்போவதால் மேற்கொண்டு அதையே எழுதி கிறுக்கி உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டுமா? என்ன....
அடுத்து நாம் கவனிக்க வேண்டியது செய்தித்தாள் மற்றும் காட்சி ஊடகங்கள், ஈழப்பிரச்சினையில் வாய்மூடி மௌனமாய் இந்திய அதிகார வர்க்கத்தின் கூட்டு திருடர்களாய் இருந்துவிட்டு, சமூகத்தில் மிக முக்கிய பிரச்சினைப்போல் நம் வரவேற்பறைக்குள் நுழைந்து ஆபாச படத்தை ஓட்டுகின்றன. சதைகளை நம்பியே கதையை ஓட்டி கொண்டிருக்கும் இந்த ஊடகங்களுக்கு கண்டிப்பாக இந்த சாமியார்களை குறித்த புனித பிம்பத்தை உடைப்பது என்ற நேர்மையான நோக்கம் மட்டும் இருக்காது, எல்லாம் TRP ரேட்டிங் செய்ற மாயம். காலையில் இவர்கள் தங்கள் நிகழ்ச்சிகளை ஓட்டுவதே இந்தமாதிரி அண்டைக்காக்க கொண்டைக்கார சாமியார்களை வைத்துதானே. (தேவநாதனுக்கு இவ்வளவு ஃபோகஸ் இல்லை, கவனிக்கவும்).
ஆக, மதம் என்னும் மக்களை சுரண்டும் நிறுவன அமைப்பு, அதன் தரகர்களாக செயல்படும் நித்தியானந்தா போன்ற சாமியார்கள், மக்களின் நிம்மதியான வாழ்வை கெடுக்கும் அடிப்படைவாத அமைப்புகள், இவர்களுக்கு துணைபோகும் ஊடகங்கள் என நம் சமூகத்தை சீரழிக்கும் கருவிகளிலிருந்து தற்காத்து பண்பட்ட வாழ்வு வாழ்வதே சிறந்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)