திங்கள், 2 ஜூன், 2014

மீனவர்களுக்கானதா பாஜக அரசாங்கம்?

இலங்கையிடம் வலுவாகப் பேசி தமிழர்களின் உரிமைகளை உறுதி செய்வோம் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக தலைவர்கள் பேசினார்கள். இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், மீனவர் நலன்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறதா? என்று கேட்டால், மீனவர்களே அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஏன் இப்படி நடக்கிறது?
உண்மையில், பாஜகவின் அணுகுமுறை, காங்கிரஸ் ஆட்சியாளர்களிடமிருந்து வேறுபட்டது அல்ல. பாஜகவின் கடந்த ஆட்சிக் காலத்தில் மீனவர்கள் கொல்லப்பட்ட போது, “வழி தெரியாமல் சென்றுவிடும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடலோர காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என்று இலங்கை கடற்படையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்” என்றுதான் அவர்கள் கூறி வந்தனர்.
ஒரு எடுத்துக்காட்டுக்கு, அன்று ஆட்சியிலிருந்த கருணாநிதி நவம்பர் 28,2000 தேதியிட்ட கடிதம் ஒன்றை பார்க்கலாம். தே.ஜ.கூட்டணி சார்பாக அன்று பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு மீனவர் படுகொலையை தடுத்த நிறுத்த வேண்டுமென்று அவர் கடிதம் எழுதினார். அதற்கு டிசம்பர் 22, 2000 தேதியிட்டு எழுதிய பதில் கடிதத்தில் வாஜ்பாயும் இனி மீனவர் படுகொலை நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறினார். ஆனால், நடந்தது என்ன?
வாக்குறுதி அளிக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து வாரம் கடக்கவில்லை, 2 மீனவர்கள் ஜனவரி 29, 2001 அன்று 2 மீனவர்கள் கொல்லப்பட்டனர். (இணைப்பு)
அதோடு மட்டுமல்ல, பாஜக ஆட்சிகாலத்திலும் மீனவர்கள் கொல்லப்பட்டனர். பாஜகவும் கண்டிப்பதாக சொல்லிக் கொண்டே இருந்தது. 2014 தேர்தலின்போது, கீழ்க்காணும் பட்டியலை மறைத்தபடியே பிரச்சாரம் செய்தனர், பாஜக அணியினர்.
8.12.1999 அன்று RMS 1512 என்ற படகில் சென்ற வழிவிட்டான்,
19.02.1999 அன்று RMS 600 என்ற படகில் சென்ற செல்வபாண்டியன்,
10.05.2000 அன்று RMS1126 என்ற படகில் சென்ற முனீஸ்வரன்,
19.06.2001 அன்று TU 328 என்ற படகில் சென்ற பாபு,
16.02.2001 அன்று RMS 583 என்ற படகில் சென்ற் முருகன்,
03.08.2001 அன்று RMS 1654 என்ற படகில் சென்ற சரவணன், கோட்டை, முனீஸ்வரன்,
18.10.2003 அன்று RMS 229/MB என்ற படகில் சென்ற பிரபு,
09.09.2004 அன்று RMS 401 என்ற படகில் சென்ற நாகநாதன் உள்ளிட்ட பல மீனவர்கள் இலங்கை கடற்படையால சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நாம் பட்டியலைக் காட்டில் வாதிட்டால், “ஏதோ சில கொலைகள் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் நடந்ததுதான். ஆனால், தற்போது, வந்திருக்கின்ற பிரதமர் மிகவும் ‘ஆண்மையான’ பிரதமர். ஆகவே, இலங்கை பயப்படும், சீனா அஞ்சும் என்று சவடால் அடிக்கின்றனர்.
உண்மை வெகுதூரத்தில் இல்லை. தற்போது பிராதமராக உள்ள, குஜராத் மாநில முன்னாள் முதல்வர் மோடியால் தன் சொந்த மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் படுகொலையை தடுக்க முடிந்ததில்லை.
ஜனவரி 27,2014 அன்று வந்த செய்தி குறிப்பின்படி,
“நடுவண் அரசுக்கும், மாநில அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தும், இந்த குறிப்பிட்ட மீன்பிடி காலத்தில் மட்டும் 150 பேர் கைது செய்யப்பட்டிருப்பதும், 32 படகுகள் முடக்கப்பட்டதும் நடந்திருக்கின்றது. இதற்கு எந்த அரசும் நிரந்த தீர்வு தரும் நடவடிக்கையை எடுக்கவில்லை” என்று மோடியிடம் கோரிக்கை வைக்கச் சென்ற குழுவில் இடம்பெற்ற பரத் மோடி என்னும் மீனவர் சங்க பிரதிநிதி கூறியிருக்கின்றார்.
மேலும், ‘ இலங்கையோடு பேச்சுவார்த்தை நடத்த முடியுமென்றால், பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை நடத்துவதில் என்ன சிக்கல். நரேந்திர மோடி அவர்கள் இந்த பிரச்சனையை நடுவண் அரசுக்கு எடுத்துக் கூறி, உரிய தீர்வை எட்ட முயற்சிக்க வேண்டும். சிறிய கால இடைவெளிக்கு பிறகு, பாகிஸ்தான் அரசு மீனவர்களை விடுவித்தாலும், படகுகளை திரும்பத் தருவதில்லை. தோராயமாக அது திரும்ப தர வேண்டிய படகுகளின் எண்ணிக்கை மட்டும் 815’என்று அவர் கோரியிருக்கின்றார். (இணைப்பு – First post)
பிப்ரவரி 27,2014 ஆம் தேதி 30 குஜராத்தி மீனவர்களை பாகிஸ்தான் கப்பற்படை கைது செய்திருக்கின்றது. பாகிஸ்தானை பொறுத்தவரையில் 240 குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் சிறையிலிருப்பதாக செய்திகள் சொல்கின்றன. (இணைப்பு – Times of India)
அதில் நவாஸ் ஷெரீபின் வருகையை ஒட்டி 150 மீனவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்தது.
14 அக்டோபர், 2013 அன்று பாகிஸ்தான் Marine ஒரு மீனவனை சுட்டுக் கொன்றிருக்கின்றது. இதுவரைக்கும் பாகிஸ்தானிய சிறைகளில் 14 மீனவர்கள் மரணித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. (இணைப்பு – Times of India)
மோடியினுடைய ஆட்சி இருக்கும் பொழுதே, அவரது மாநிலத்தின் மீனவர்களை பாகிஸ்தான் இராணுவம் சுட்டுக் கொள்வதும், கைது செய்வதும் தொடர்கதையாகத்தான் இருந்தது, இப்போதும் தொடர்கிறது.
ஆனால் தனது பதவியேற்பு விழாவுக்கு நவாஷ் ஷெரிப்பை அழைத்த மோடி இதுகுறித்து பேசியதாக செய்திகள் இல்லை. மாறாக, இந்திய வர்த்தக நிறுவனங்களில் நலன்களை மையப்படுத்தியும், தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாகவுமே பேசியிருக்கிறார்.

ஆட்சி மாறினாலும், மாநிலங்கள் மாறினாலும் மீனவர்களின் நிலை நாடுமுழுவதும் ஒரே மாதிரிதான் இருக்கின்றது. ஆட்சியாளர்களும், மீனவர்களின் அவல நிலையை மாற்றும் அக்கறை இல்லை.
நம்மிடம் இருக்கும் ஒரே வழி, மக்கள் நலன்களை மையப்படுத்திய உறவை அண்டை நாடுகளோடு பராமறிக்கும் அரசுகள்தான். அப்படிப்பட்ட அரசை ஏற்படுத்த, எந்த அவதாரமும் மண்ணில் பிறப்பெடுக்காது. நமக்கான அரசை நோக்கிய பயணத்தை நாமே நடத்தி முடிக்க வேண்டும். நாளை நமதே, நாளை உழைக்கும் மக்களாகிய நம்முடையதே!.

நன்றி : மாற்று

பாகிஸ்தான் பிரதமரை மோடி அழைத்தது ஏன்?

(சார்க் நாடுகளின் பிரதிநிதிகளை தனது பதவியேற்பு விழாவிற்கு அழைத்திருக்கிறார் நரேந்திர மோடி, தேர்தல் பிரச்சார காலத்தில் அவர் அண்டை நாடுகள் குறித்து என்ன பேசினார் என்பதை நாம் அறிவோம். தேர்தல் வெற்றிக்குப் பின்னர் நடந்திருப்பது தலைகீழ் மாற்றம்தான். இந்த மாற்றத்திற்கான காரணத்தை நமக்கு அறிவிக்கிறது ‘ட்ரூத் ஆப் குஜராத்’ இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்டுரையைத் தழுவிய இந்த பதிவு)
இத்தனை ஆண்டுகாலமும், சமீபத்திய 2014-தேர்தல் பிரச்சாரம் வரையிலும் பாகிஸ்தான் மீது நஞ்சை உமிழ்ந்துவிட்டு, கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் தனது பதவியேற்பு விழாவிற்கு பாகிஸ்தான் பிரதமரை அழைத்துள்ளார் மோடி. இதன் உண்மையான நோக்கம் அமைதியின் மீதான நாட்டம்தானா? என்றால், கண்டிப்பாக இல்லை அதன் காரணம் அதானி என்பதாகத்தான் புரிந்து கொள்ள முடிகின்றது.
குஜராத்தின் கட்ச் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கும் 10000 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் பெரும்பகுதியை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய அதானி பவர் நிறுவனத்திற்கு மோடி அரசின் ஒப்புதல் வேண்டும். இந்த நிறுவனம் என்பது 8.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள அதானி குழுமத்தின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. அதானி குழுமம் என்பது தனியார் மின்சார தயாரிப்பாளர்களில் முதன்மை பட்டியலில் இருக்கின்றது (இணைப்பு) என்பதுவும் இந்த நிதியாண்டிற்குள் இந்த 10,000 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான திட்டமும் கொண்டிருக்கின்றது இங்கே குறிப்பிடத்தக்கது.
நவாஸ் ஷெரிஃப் இந்திய பிரதமரை குறிப்பிட ‘கிராமத்து பெண்’என்ற சொல்லாடலை பயன்படுத்தால் ஏற்பட்ட சர்ச்சையை ஒட்டி ‘நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம்’ என்றும் ‘சகித்துக் கொள்ள முடியாதது’பாகிஸ்தானுக்கு எதிரான வன்மத்தை கக்கினார் மோடி. அப்போது பொழுது மோடியின் பாட்டுக்கு ஒத்தூதும் வேலையை செய்து வந்தன மைய ஊடங்கள். மோடி இந்த ‘அவமானத்தை பற்றி’ குறிப்பிடும் பொழுது “இந்திய பிரதமரை அவமானப் படுத்தும் விதமாக அந்த பேச்சு எழுந்த பொழுது, இந்த ஊடகவியலாளர்கள் நவாஸ் வழங்கிய இனிப்பை உண்டுக் கொண்டிருந்திருக்கின்றனர். இவர்கள் கண்டிப்பாக என் தேசத்து மக்களுக்கு பதிலளிக்க கடமைப்பட்டவர்கள். அவர்கள் அந்த இனிப்புகளை உதைத்து தள்ளியிருக்க வேண்டும்.“ என்றெல்லாம் கறாராக பேசினார்.
இந்தியாவின் உலக மகா அரசியல் ஆய்வாளரும், கூச்சலின் நாயகருமான ‘அர்னாப் கோஸ்வாமி’, நரேந்திர மோடியின் பாகிஸ்தான் பற்றிய நிலைப்பாட்டை ஆய்வு செய்திருக்கின்றார். அந்த ஆய்வு மகாக்கடலின் ஒரு துளி இதோ,
“ பாகிஸ்தானை பொறுத்தவரையில் மோடி மிகவும் தெளிவாக இருக்கின்றார். தீவிரவாதம் தொடர்ந்தால் கண்டிப்பாக பாகிஸ்தானோடு உரையாடல் என்பதே இருக்காது என்று பதிவு செய்யப்பட்ட காணொளியில் உறுதியாக தெரிவித்திருக்கின்றார். கடந்த காலங்களில், அவர் மிதவாத நடுவழியை தேர்ந்தெடுப்பாரென்றும், தனது அணுகுமுறையில் மென்மையை கைகொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தன்னுடைய அணுகுமுறையை மிகத்தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். ஏற்கனவே சொன்னது போல பதிவு செய்யப்பட்ட காணொளியில் கூறியுள்ளதால, வழக்கமான ஐ.மு.கூவின் நிலைப்பாட்டிலிருந்து பெரிய அளவில் வேறுபடும் என்பது உறுதியானது.”
இந்திய இராணுவ வீரர்களை கழுத்தறுத்தவர்களோடு உரையாடல்களை நடத்துவதை குறித்து அர்னாப் கோஸ்வாமி எடுத்த நேர்காணலில், “ துப்பாக்கி, குண்டுகளின் சத்தத்தில் பேச்சுவார்த்தை செவிகளுக்கு கேட்குமா?”இப்படியெல்லாம் பஞ்ச் டயலாக் அடித்த மோடி, பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைக்கப் போகின்ற சூழலில், அவருடைய ‘இரும்புக்கரத்தை’ காயலாங்கடையில் போட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் தொடர்பான நிலைப்பாட்டில் திடீர் மாற்றத்திற்கான காரணத்தை ஊரெங்கும் ஜனநாயகத்தை பேசித் திரியும் ஊடகங்களால் சுதந்திரமாக பேச இயலவில்லை. காரணம் பெரிதாய் ஒன்றும் இருக்காது ‘அப் கி பார், மோடி சர்க்கார்’ என்பதாகத்தான் அது இருக்கும்.
இன்று அந்த ஊடகங்கள் பழைய அவருடைய பஞ்ச் டயலாக்குகளின் இன்றைய நிலை குறித்தெல்லாம் பேசாமல், நவாஸ் ஷெரிபை அழைக்கும் அழைப்பிதழுக்கு பிழை திருத்தம் செய்வதிலும், டிசைன் செய்வதிலும் மும்முரமாக இருக்கின்றார்களோ என்னவோ? இந்த டிசைன் செய்வதினூடாக, மோடியின் முடிவெடுக்கும் ‘ஆண்மையான’பாணிக்கும் பங்கம் வராத வண்ணம், பிராந்திய நல்லிணக்கத்திற்கான ‘ஆண்மையான’ முடிவு என்று காவி கலரை வீசி ஹோலி விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
அதானி குழுமத்தை பொறுத்தவரையில் மேற்சொன்ன கட்ச் திட்டத்தை பற்றி ஐ.மு.கூ-2 அரசிடம் முன்மொழிவுகளை வைத்தனர். பெரிய முன்னேற்றம் ஏதும் ஏற்படாததால், ‘பெரும்பான்மை’ பலம் பெற்று ஆட்சிக்கு வந்திருக்கும் தே.ஜ.கூ அரசாலாவது அந்த திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்கும் என்று தொழுது காத்து கிடக்கிறது அந்த குழுமம். 3300 மெகாவாட் மின்சார உற்பத்தி திறனை அடுத்த ஐந்தாண்டுக்குள் 10,000 மெகாவாட்டுக்கு முன்னேற்றும் திட்டமும், அதை பாகிஸ்தானுக்கு விற்கும் திட்டமும் இணைந்தே இருக்கின்றன.
தகவல்களின்படி, தொடக்கமாக 13000 கோடி ரூபாய் முதலீட்டை கோரும் இத்திட்டத்தை 10,000 மெகாவாட் அளவுக்கு முன்னேற்றுவதற்கு 40,000 கோடி ரூபாய் தேவைப்படுகின்றது. இத்திட்டம் கட்ச் மின் உற்பத்தி நிறுவன கழகம் என்னும் அதானி குழுமத்தின் துணை நிறுவனம் சார்பாக நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது. மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்வு ஆகிய பொறுப்பை இந்நிறுவனமே மேற்கொள்ளும். இதற்காக கட்ச் பகுதியில் பத்ரேஸ்வர் என்னும் இடத்தில் நிலத்தை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த திட்டத்திற்கு தம் ஆட்சேபனையை தெரிவித்திருப்பதோடு, தங்களுடைய வாழ்வாதாரமும், வாழ்விடமும் பாதிக்கப்படும் என்று மீனவர்களும், உப்பள ஊழியர்களும் குஜராத் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மக்கள் தொடர் கடிதங்களும், மனுக்களும் எழுதியிருக்கின்றனர். (தமிழக மீனவர்களை மோடி பாதுகாப்பார் என்ற பிரச்சாரம் எத்தனை பிம்மையானது என்பதை இந்தப் பின்னணியில் பார்க்கும்போது புரியும்) ஊதிப் பெருக்கப்படும் உலக நாயகன் மோடி ஏழை மக்கள் சார்பாக நிலைப்பாடு எதையும் எடுக்கவில்லை. அவரது பார்வையில் ஏழைகள் என்பவர்களே அதானியும், அம்பானியும் தானே.
ஏழைகளுக்கான அரசு, ஏழைகளின் அரசு என்றெல்லாம் நாடாளுமன்ற வளாகத்தில் கண்ணீர் விட்டு அழும் மோடியின் நண்பரான அதானியின் குழுமத்தின் நிகர லாபம் 2529 கோடிகள்(மார்ச் 31ல் முடிந்த நான்காவது காலாண்டு) , அதற்கு முந்தைய ஆண்டில் 585.52 கோடி ரூபாய் நட்டம் என்பது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால், மோடியின் குஜராத் அரசு இப்படியான ஏழைகளுக்குத்தான் உதவி செய்யும் என்பது கடந்த கால வரலாற்றை கொஞ்சம் அடிப்படை அறிவோடு கற்பவர் அறிந்து கொள்ளக் கூடிய எளிய உண்மையாகும்.
மக்களை தன் பக்கம் வைத்துக் கொள்ள மோடி வகையறாக்கள் கைகொள்வது சொல்வீச்சுதான். அதுவும் மக்களை தங்கள் அன்றாட அடிப்படை பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பி ‘கோவில் கட்டுறேன், கூடாரம் கட்டுறேன்’ என்று சிறுபான்மை மக்களை கை காண்பித்து அவர்களோடு குடுமி பிடி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது, எவ்வித தடையும், எதிர்ப்பும் இல்லாமல் நாட்டை கூறுபோட்டு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு விற்று, அவை நம்மை கொள்ளையடிக்கும் படி சேவை செய்து தன்னுடைய பிறவிக்கடனை இந்த காவிப்படைகளின் அடியாள் செவ்வனே செய்து முடிப்பார். இதற்கு வலு சேர்க்கும் விதமாக, மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு செப்டம்பர் 13,2013 க்கு பிறகு 6 பில்லியன் டாலரை தன்னுடைய வளத்தில் சேர்த்துக் கொண்டார் என்று ப்ளூமெர்க் பத்திரிக்கை சொன்னதில் வியப்பேதுமில்லை. அம்பானியால் மட்டும்தான் இது சாத்தியமாயிற்றா என்றால், மோடியின் ‘ஏழை’ நண்பன் அதானியும் இது போன்ற சாதனையை செய்திருக்கின்றார். அதாவது, செப்டம்பர் 13 இல் 1.9 பில்லியன் டாலராக இருந்த அவரது சொத்து மதிப்பு, 7.6 பில்லியன் டாலராக, ஏறக்குறைய 4 மடங்காக உயர்த்தியிருக்கின்றார்.
எப்படியென்று யாரும் கேக்காதீர்கள், கடின உழைப்பு என்று வியாக்யானம் செய்வார்கள் … மக்களுக்கு தேசபக்தி போதையேற்றி, பாகிஸ்தான் எதிரி நாடு, இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்று பஞ்ச் டயலாக் பேசும் இவர்கள், தன்னை வழிநடத்தும் முதலாளிகளுக்கு சேவகம் செய்ய தேசம் கடந்து வாசல் திறந்துவிடுவதையும், தேசபக்தி என்பது மக்களை ஏய்க்கும் முதன்மை கருவியாக இருப்பதையும் இந்தச் சூழலில் அன்பர்களும், நண்பர்களும் புரிந்து கொள்ள வேண்டுமென்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம். மோடி வகையறாக்கள் ஆளும்வரை முதலாளிக்கான நல்ல நாள் வந்துவிட்டது என்று அந்த ஆளும் வர்க்க கும்பல் நம்பத்தான் செய்யும். ஆனால், நமக்கான நல்ல நாள் வர நாம்தான் கடுமையாக உழைத்தாக வேண்டும். இந்த முதலாளிகளின் ஆட்சியை வீழ்த்தியே ஆக வேண்டும்.
——
நன்றி: ட்ரூத் ஆஃப் குஜராத் இணையம்.

ஆதலால் காதல் செய்வீர் – 106 நிமிட ஆணுறை விளம்பரம் !

ஒரு படைப்பின் தேவை என்ன? என்ன மாதிரியான சமூகத்தில் அது எழுகிறது. அந்த படைப்பின்  நோக்கம் என்ன?  அதன் விளைவென்ன? என்பதை வைத்துதான் ஒரு திரைப்படத்தின் தரத்தை நாம் கணிக்க வேண்டும்.
உடன் பணி புரியும் தோழர்  அழைத்தாரென்று “ஆதலினால் காதல் செய்வீர்” என்ற தலைப்பை நம்பி, மழையில் நனைந்து கொண்டே உதயம் தியேட்டருக்கு சென்றோம். பெரும்பாலும் ஆண்-இளைஞர் கூட்டமே மேலோங்கியிருந்தது. ஆங்காங்கே இணையர்களும் அமர்ந்திருந்தனர்.
கல்லூரியில் படிக்கும் உயர் நடுத்தர வர்க்கத்தை சார்ந்த பதின் பருவத்திலிருக்கும் இளைஞர்கள் கூட்டத்தின் கல்லூரி வாழ்க்கையும், காதல் குறித்த கதையாடல்களோடு திரைப்படம் துவங்குகிறது. கல்லூரியில் இளைஞர்கள் யாருமே படிக்கவில்லை. நாயகனோட வீட்ல ட்யூசன் நடக்கிறதென அப்பப்ப காண்பிக்கிறாங்க. கல்லூரியில் பெண்களை கரெக்ட் செய்வதெப்படி என்றுதான் கல்லூரியில் காலம் கழிக்கிறார்கள் போலும், அந்த விவாதமே மேலோங்கியிருக்கிறது.
இந்த ஆழ்ந்த விவாதங்கள் மற்றும் தொடர் முயற்சியின் பலனாய் கதையின் நாயகனாக நாம் புரிந்து கொள்ள வேண்டிய அந்த ஆண் கதாப்பாத்திரத்திற்கும் காதல் வருகிறது. நடுத்தர வர்க்கத்து பெண் மேல் காதல் வருகிறது. [காதல் வர்க்கத்திற்குள்தானே வர வேண்டும், அதுதானே நியாயம் :) ]. வந்த காதலின் உள்ளடகத்தில் உள்ள காமத்தை தீர்த்துக் கொள்ள விளைகிறது. தனிமையில் வீட்டிலும், பின்னர் நண்பர்களோடு மகாபலிபுரத்திலும் தீர்த்துக் கொள்ள முனைகிறது.
பாதுகாப்பற்ற உடலுறவால் கரு உருவாகிறது. குழந்தை உருவாகுவது குறித்து தகவலேயறியாமல்தான் இன்றைய தலைமுறை வார்க்கப்படுகிறது. அப்படியான உடலுறவுகள் தவிர்க்கப்பட வேண்டும். ஆணுறைகள் பயன்படுத்தப்பட வேண்டும்.  அப்படி ஆணுறைகள் பயன்படுத்த வில்லையானால், கரு உண்டாகும், மாத விடாய் நிற்கும், வீட்டில் மாட்டிக் கொள்வீர்கள் என்று சில காட்சிகள் சொல்கின்றன. ( நாள் முழுக்க எத்தனை தடவை ஆணுறை விளம்பரத்தை போடுறானுக டிவில, ஆணுறை விளம்பரத்துக்கு ஒரு படமா?)
திருமணம் முடிக்காமல் கருவுற்றபின் அந்த பெண் படும் வேதனை, அந்த குழந்தையை பெற்றுக் கொண்டால் இந்த சமூகம் வீசப்போகும் வசவுக்கணைகள், அதன் பொருட்டு அந்த குடும்பம் சந்திக்கும் சிக்கல்கள், ஆணை பெற்றுவிட்டதாலேயே தங்களை மேலானவர்களாக கருதிக் கொள்ளும் ஆண் வீட்டார், என பல விசயங்கள் போகிற போக்கில் சொல்லிவிட்டு கடந்து செல்கிறது.
ஆனால், திரைப்படத்தின் நோக்கம் இதுவல்ல, திரைப்படம் இதைச் சொல்ல வரவில்லை என்பதை க்ளைமாக்ஸை நோக்கி நகர்த்தும் வேகத்தில் இயக்குனர் வெளிப்படுத்திவிடுகிறார். அவர் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் அல்லது சொல்ல விரும்பியது வேறாக இருந்தாலும், திரைப்படம் சொல்லி முடித்ததும், திரைப்படத்தை பார்த்த/பார்க்கப் போகும் பெரும்பாலான திரைப்பட ரசிகர்கள் புரிந்துக் கொள்ளப் போவதென்பதே கீழ்க்கண்டவைகள்தான்..
மேட்டருக்காகத்தான் காதலிக்கிறாங்க”
இந்த வயசுல என்ன காதல்”
பெத்து வளக்குற அப்பனாத்தா பேச்சை கேக்காம போனா இப்படித்தான்”
பைக் இருந்தா பொண்ணுங்க மடங்கிடுவாங்க” 
பொண்ணை பெத்த அப்பனாத்தா படுற கஷடம் புரியுதா இதுகளுக்குபடம் அதைத்தான் சொல்லியிருக்கு.”
என்ன இந்த வசனமெல்லாம் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? கடந்த ஒராண்டாக ராமதாஸ் கும்பல் சமூகத்தில் பரப்பி வரும் நச்சுக் கருத்துகளின் இன்னொரு வடிவம்தான் அவை. இதைத்தான் திரையரங்குக்கு வெளியில் மக்கள் முனகிக் கொண்டே கடந்து போனார்கள். காசு கொடுத்து உள்ளே போகின்றவர்களும் அப்படியான போதனையை கேட்டுத்தான் வெளிவரப் போகிறார்கள்.
எல்லோரையும் சுட்டவில்லையே, எல்லோரையும் அப்படி சொல்லவில்லையே என்று கடந்து போகலாம். ஆனால், இவருடைய திரைப்படத்தை எல்லோரும் பார்க்கும்படித்தானே எடுத்திருக்கிறார்.
இதை வலியுறுத்திச் சொல்ல, இயக்குனர் சுசீந்திரன், பிற இயக்குனர்களை போலவே Sentiment + இறக்க உணர்வைத்தான் கருவியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் . இந்த Sentiment-உடன் பாண்டவர் பூமியில் தங்கையை கழுத்தறுத்த ரஞ்சித் மீது வரும் Sentiment+ இரக்க உணர்வோடு போட்டு குழப்பிக் கொண்டீர்களானால் சங்கம் பொறுப்பேற்காது.
சரி, அந்த சென்டிமெண்ட் என்ன?
இப்படியான முதிர்ச்சியற்ற போலி காதலால் ஆதரவற்ற குழந்தைகள்தான் உருவாகிறார்களே? இந்த காதல் தேவைதானா? என்பதுதான் அது. குழந்தைகள் ஆதரவற்று இருப்பதற்கு காரணமென்ன? இது முதிர்ச்சியற்ற காதலாகவே இருந்தாலும், பெற்ற குழந்தையின் மீதான் பொறுப்பை ஆண்-பெண் இருபாலரும் தவிர்க்க காரணமென்ன? என்பதை இந்த திரைப்படம் அலசவேயில்லை.
ஆதரவற்ற குழந்தைகள்
இப்படியான முதிர்ச்சியற்ற காதல் ஆதரவற்ற குழந்தைகளைத்தான் பிரசவிக்கும். அந்த குழந்தைகளை குப்பைத்தொட்டியில் எறிந்துவிட்டும், அந்த ஜோடி தத்தமது வேலையை பார்க்கச் சென்றுவிடுவார்கள். இப்படியான காதலை செய்து அப்பனாத்தாவுக்கு மன உளைச்சல் கொடுப்பதற்கு பதிலாக….”(நாடக)காதலில் ஈடுபடாதீர்கள் என்று சொல்லி அழுத்தமாக குழந்தையின் அழுகையின் ஊடாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். தன் பெண்ணை ஒருவன் ஏமாற்றினான் என்பதற்காக ஒரு குடும்பம் குழந்தையை குப்பைதொட்டியில் வீசுதல் தவறு  என்று 100-ல் 10 ரசிகர்களுக்கு கூட தோன்றியிருக்காது. கோபமெல்லாம் காதலின் மீதும், காதலர்கள் மீதுமே வரும்.
இயக்குனரின் கண்ணோட்டம் எத்தனை மொன்னையானது என்பதை ஆதரவற்றோர் உருவாகுவதற்கான காரணிகளை இன்னும் கூடுதலான பொருளியல் காரணிகளுக்காக அலசினாலே தெரிய வந்துவிடும். நாம் வெகுதூரம் செல்ல வேண்டாம், இதை வாசிப்பவர்கள் இந்தியாவிற்கு விவசாயத்தில் ‘பசுமை புரட்சி’ என்னும் முதலாளிகள் செய்த மொன்னை புரட்சியின் விளைவாகவும், நீர் நிலைகளை தொழிற்சாலைகள் மாசுபடுத்தியதாலும் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு, எத்தனை கோடி விவசாயிகள் ஆதரவற்றோர்களாக, சொந்த நாட்டுக்குள் அகதிகளாக மாறியிருக்கிறார்கள் என்பது தெரியும்.
உண்மையாக, ஆதரவற்றோர்களை குறித்து படமெடுக்கும் ஆர்வமிருந்திருந்தால் இந்த விவசாயிகளை குறித்தோ, அல்லது சென்னை நகருக்கு வெளியே சமூக அனாதைகளாக புறக்கணிக்கப்பட்ட செம்மஞ்சேரியில் ‘தள்ளி’ வைக்கப்பட்டிருக்கும் மக்களை குறித்து படமெடுத்திருப்பார்.
ஆனால், அவரின் நோக்கமும், உள்ளூர இருக்கும் புரிதல் அதுவல்லவே..
( காதலை நேசிப்போர் – திருட்டி விசிடியில் கூட இந்த படத்தை பார்த்துவிடாதீர்கள்.)

நன்றி: மாற்று

பால்தாக்கரேயும், மகாராஷ்டிர தலித்துகளும் – ஆனந்த் டெல்டும்டே

teltumpte article

பால்தாக்கரேவின் மரணத்திற்கு பின்னான நிகழ்வுகள் பலரின் கோழைத்தனத்தை அம்பலப்படுத்தியது. ஊடகங்களில் சிலரால் எரிச்சலூட்டும் வகையில் அவர் மீதும், அவரின் பண்பின் மீதும் பொழியப்பட்ட புகழுரைகள் பொருத்தமற்றதாகவே இருந்தன.
‘இறந்தவர்களை பற்றி நல்லதை பேசு அல்லதை பேசாதே’ என்ற லத்தீன் பொன்பொழியின் பின்னே எல்லா நேரங்களில் ஒளிந்து கொள்வது அரசியல் நாகரிகம் என்று விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும், அது கோழைத்தனத்தையும், முதுகெலும்பின்மையையும் அம்பலப்படுத்தும் செயலேயாகும். சமூகத்திலுள்ள பிரச்சினைகள் குறித்து ஊடகங்களில்,  தாராளமாக வாரி வழங்கி அறிவுரைகளை இட்டு நிரப்பும் எவரொருவருக்கும், நவம்பர் 18 ஆம் தேதி தாக்கரேயின், அவர் ஆதரவு குண்டர்களின், மக்கள் விரோதத் தன்மை குறித்து வாய் திறந்து முனகும் துணிச்சல் கூட இல்லை. நேர்மையாக சொன்னால்,  இவர்கள் முழங்கியிருக்க வேண்டியது ஐம்பது ஆண்டுகளில் மராத்தியரல்லாத ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றதோடு அவர்களின் வாழ்க்கையை அழித்த சாதனையை குறித்துதான்.
மராத்தியர்களுக்கேனும் ஏதாவது செய்தாராயென்றால், அவர்களை குறுகிய எண்ணம் கொண்டவர்களாக மாற்றியதை தவிர எதையும் உருப்படியாக அவர் செய்ததில்லை.
தென்னிந்தியர்கள், குஜராத்தியர்கள், உத்திரபிரதேசம் – பீகாரைச் சார்ந்த வடமாநிலத்தவர்கள், வங்க தேசத்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பணத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் அவர் நடத்திய சுயநல அடையாள அரசியலால் விளைந்த கேடுகள் குறித்து வெகுசிலர் மட்டுமே தம் துணிச்சலை திரட்டி பேசினர். கூடுதலாக, அவரது நாசிச ஏதேச்சதிகார நடவடிக்கைகள் சமூகத்தில் எந்தளவு குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை குறித்தும் பேசினர். ஆனால், அவர்கள் பேச மறந்த பக்கமென்று ஒன்றும் இருந்தது.
அது, பால்தாக்கரே அம்பேத்கரிய தலித்துகள்(மகர்கள்) தொடர்பாக உள்ளூர கொண்டிருந்த  வெறுப்பு குறித்தது.
தாக்கரே தலித்துகளுக்கு ஆதரவானவர் என்ற பொய் பரப்புரையின் வழியாக ‘அவர் சாதிக்கு எதிரானவர்’ என்ற போலி பிம்பம் உருவாக்கப்பட்டது. உண்மை என்னவென்றால் சாதிய மேலாதிக்கத்தை பயன்படுத்துவதில் அவருக்கு குற்றவுணர்வே இருந்ததில்லை. தாக்கரேயின் மனதில், அம்பேத்கர் மற்றும் அவரது வழிநடப்பவர்கள் குறித்த வெறுப்பு வெகு ஆழமாக வேறூன்றியிருந்தது.
ஒட்டுண்ணியின் பிறப்பு
தாக்கரே துணிச்சல் மிக்கவர் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால், தாக்கரேவின்
bal thackarey
அரசியல் துணிச்சல் என்பது அவ்வப்போது மக்கள் எதை விரும்புகிறார்கள் என்று கண்டறிந்து விற்பனை செய்யும் சந்தை உணர்வேயன்றி, மக்கள் நலனை அடிப்படையாக கொண்டதல்ல. இப்படியான பச்சோந்தி குணம் ஒரு கார்ட்டூனிஸ்டுக்கு இயற்கை குணம் போல வாய்த்தது வியப்புக்குரியதன்று.  இப்படித்தான்  அவரது அரசியல்வாழ்க்கை தொடங்கியது.
ஒருங்கிணைந்த மகாராஷ்டிர இயக்கம்’ மக்களிடையே ஏற்படுத்திய தாக்கத்தை பயன்படுத்தி பாலசாகேப் தாக்கரேயும் அவரது சகோதரர் ஸ்ரீகாந்த தாக்கரேயும் இணைந்து 1960 ஆகஸ்டில் ‘மார்மிக்’ என்னும் மராத்தி கேலிசித்திர வார இதழை தொடங்கினர். மார்மிக்கிற்கென்று எந்த குறிப்பிட்ட சித்தாந்த பின்புலம் இல்லையென்றாலும், அது இஸ்லாமியர்களை கேலி செய்வதையும், ஜவகர்லால் நேரு மற்றும்எஸ்.ஏ.டாங்கே உள்ளிட்டவர்களை சோவியத் யூனியனுக்கு சார்பாக இருந்ததாக விமர்சிப்பதையுமே தன்னுடைய இலக்காகக் கொண்டிருந்தது.
பின்னர் அது, மகாராஷ்டிரா-கர்நாடக எல்லை பிரச்சினையில் நடுவண் அரசு நியாயமாக செயல்படவில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்ததன் மூலம் மராத்திய மக்களிடையே தம் செல்வாக்கை உயர்த்திக் கொண்டது.
உயர்ந்த தமது செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டு, காங்கிரசின் (வெளிப்படையான)  ஆதரவோடு 1966 ஆம் ஆண்டு சிவசேனை என்னும் கட்சியை தொடங்கினார். கட்சியின் வளர்ச்சிக்கு தீனிதேடி, மராத்திய பாட்டாளிகளின் வேலை வாய்ப்பை தென்னிந்தியர்கள் பிடுங்கிக் கொள்வதாக பிரச்சாரத்தை மேற்கொண்டார். இது, முதலாளிகளை நோக்கிய போராட்ட களத்திலிருந்து பாட்டாளிகளின் கவனத்தை திசைதிருப்பியது. இதனாலேயே, தொழிலதிபர்கள் மற்றும் அதிகார வர்க்கத்திடமிருந்து மிகுந்த ஆதரவு கிட்டியது.
இந்த பிரச்சாரத்தின் பலனை அறுவடை செய்ய, 30 அக்டோபரில் 1966இல் சிவசேனா தசரா பேரணி ஒன்றை ஒருங்கிணைத்தது, இதற்கு தலைமையேற்றவர் ‘ராம்ராவ் நாயக்’ என்னும் காங்கிரஸ் தலைவர். பேரணி முடிந்து திரும்பிய சிவசேனா குண்டர் படை, வழியிலிருந்ததென்னிந்தியர்களின் கடைகள் மற்றும் உணவகங்களை  அதிகார வர்க்கத்தின் முழு ஒப்புதல் மற்றும் அனுமதியோடு தாக்கி அழித்தது. இந்த தாக்குதல்கள் நடந்து ஓராண்டுகளுக்கு பின்(1967 டிசம்பரில்) சிபிஐ கட்சியின் தலைமை அலுவலகத்தையும் காங்கிரஸ் துணையோடு அடித்து நொறுக்கியது சிவசேனை கும்பல்.
அன்றைய சூழலில், பாட்டாளிகளின் வீரியமான போராட்டத்தை நசுக்க விரும்பிய காங்கிரஸின் முக்கிய பிரமுகர்களாக இருந்த வசந்த்ராவ் நாயக், வசந்த்தாதா பாட்டீல் உள்ளிட்டவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் தனிப்பட்ட குண்டர் படை போன்றே சிவசேனை செயல்பட்டது.
தம் விசுவாசத்தினை, வெளிப்படுத்துவதன் மூலம் தொழிலதிபர்களின் உள்ளத்தில் இடம்பிடிக்க அந்த குண்டர் படை செய்த கயமைத்தனம் என்னவென்றால், மக்கள் நடுவில் நன்மதிப்பை பெற்றிருந்த தொழிற்சங்க தலைவரும், தீவிர கம்யூனிசவாதியுமான கிருஷ்ண தேசாய்யை கொலை செய்தது. இந்த கொலையின் ஊடாக மக்கள் மனதில், சிவசேனா மீது ஒரு விதமான அச்சவுணர்வு உருவாகி விட்டிருந்தது. இந்த அச்சத்தை  நல்ல முதலீடாக பயன்படுத்தி தம் கொடூர நிழலை மகாராஷ்டிராவெங்கும் பரவவிட்டவர், அதை தொடர்ந்து ஐம்பதாண்டு காலம் தக்கவைத்துக் கொண்டார் .
குயுக்தியான செயல்திட்டம்
கம்யூனிச இயக்கங்களை முறியடித்துவிட்டோம் என்று இறுமாப்போடு இருந்தவர்களுக்கு மற்றொரு அச்சுறுத்தலாக வந்து சேர்ந்தது  ‘தலித் சிறுத்தைகள்’ அமைப்பு. இந்த அமைப்பு 1972 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது, அநீதியான சாதிய அமைப்பினை கடுமையாக எதிர்த்து களமாடியதோடு மட்டுமில்லாமல், காங்கிரசோடு நட்பு பாராட்டிய இந்திய குடியரசு கட்சியின் (RPI) – கொள்கைக்கு முரணான – சந்தர்ப்பவாத கூட்டணிக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்தனர்.
1974 இல் தென் – மத்திய மும்பை நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்ட சிவசேனாவின் ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளரான ‘ராம்ராவ் ஆதிக்’கை(Ramrao Adik) ஆதரித்த இந்திய குடியரசு கட்சியின் தலைவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று தலித் மக்களுக்கு சிறுத்தைகள் அறைகூவல் விடுத்திருந்தனர்.
சிறுத்தைகளின் கோரிக்கைக்கு இசைவளித்த தலித்துகளுக்கு ‘பாடம்’ கற்பிக்க வேண்டும் என்று வன்மம் கொண்ட  சிவசேனை, ஜனவரி 1974 ல் தலித்துகள் பலமான தளமாக இருந்த வர்லி பிடிடி சாலில் (Chawl – மும்பையில் பகுதிகளுக்கு இடப்படும் துணைப்பெயர்) தலித்துகளுக்கு எதிராக கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டது. இந்து தெய்வங்களை தலித் சிறுத்தைகள் இழிவுப்படுத்தியதாக காரணம் கற்பித்தது.
சிவசேனையில் தாக்குதலால் மூண்ட கலவரம் நகரின் பிறபகுதிகளுக்கும் பரவி, ஒருவாரம் வரை அது நீடித்தது. தலித் சிறுத்தைகள் அமைப்பில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டபக்வத் ஜாதவ் (Bhagvat Jadhav) மிகக் கொடூரமாக சிவசேனையால் கொலை செய்யப்பட்டார். இது அம்பேத்கரிய தலித்துகள் மற்றும் சிவசேனை இடையே வெளிப்படையான மோதல் போக்கை உருவாக்கியது. அதோடு, வியப்பூட்டும் வகையில் எஸ்.ஏ.டாங்கேவின் மகளான சிபிஐ-ன் ரோஜா அதிக் (Adhik) தோற்றார்.
ambedkar
சிறுத்தைகளிடமிருந்து தலித்துகளை அந்நியப்படுத்தும் துணிச்சல் காங்கிரசுக்கு இல்லை என்ற சூழலில் காங்கிரஸ் சிவசேனையை வாடகைக்கு வாங்கி நடத்தப்பட்ட கலவரம்தான் வர்லி கலவரம். சிவசேனையை பொறுத்தவரை வந்தவரை லாபம் என்ற அளவில்தான் இந்த கலவரத்தில் ஈடுபட்டது. எந்த காலத்திலும் இந்த அம்பேத்கரிய தலித்துகள் சிவசேனையை ஆதரிக்க மாட்டார்கள் என்பதை தெளிவாக உணர்ந்திருந்த தாக்கரே, இந்த கலவரத்தின் மூலம் தலித்துகளை பொது நீரோட்டத்திலிருந்து அந்நியப்படுத்திவிடலாம் என்ற  திட்டத்தின் அடிப்படையிலேயே காங்கிரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்திசைந்தார்.
அவர்களை இந்து மத வெறுப்பாளர்கள் என்ற முத்திரை குத்துவதன் மூலம் தலித்தல்லாதோர் மற்றும் மகரல்லாத தலித் சாதிகளையும் ஒருங்கிணைத்துவிடலாமென்று திட்டமிட்டார்.
தலித் உட்சாதி பிரிவுகளின் மீது தாக்கரே அழுத்தம் கொடுத்தும் பிரச்சாரம் செய்யும்வரை தலித்துகளை உட்சாதி பிளவுகளை வைத்து அடையாளம் காணும் போக்கு இருந்திருக்கவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது. ஆக, மக்களை சாதிரீதியாக பிளவுப்படுத்துவதில் சாதிவெறியர்களை எல்லாம் விஞ்சியவர்தான் தாக்கரே.
இந்த வகை அணுகுமுறை, அவர் எதிர்ப்பார்த்ததைவிட சாதகமான பலனையே தந்தது. தலித் உட்சாதிகளை பொறுத்தவரையிலோ, சாதி இந்துக்களின் கட்சியில் இருப்பதை குறித்து பெருமித உணர்வு கொள்ளும் போக்கு வளர்ந்தது.
தாக்கரேயின்  அம்பேத்கர் மீதான வெறுப்பு
அம்பேத்கர் மீதும், அம்பேத்கரிய தலித் மக்கள் மீதும் ஆழ்ந்த வெறுப்பை கொண்டிருந்த தாக்கரே, அம்பேத்கரை  இழிவுப்படுத்துவதற்கான வாய்ப்பை தவற விட்டதேயில்லை. 1978-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா அரசு மராட்வாடா பல்கலைக் கழகத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்டுவதற்கு முடிவெடுத்ததை தொடர்ச்சியாக எதிர்த்த ஒரே அரசியல் கட்சி சிவசனை மட்டும்தான். அத்தோடு நில்லாமல் தலித்துகளின் கோரிக்கையை, “வீட்டுல திங்க சோறில்லாதவனுகளுக்கு பல்கலைக் கழகம் கேக்குதான்னு?” என்று மிகத் தரம்தாழ்ந்து இழிவுப்படுத்தினார்.
பல்கலைக்கழகத்திற்கு ஒரு தீண்டப்படாதவரின் பெயரை இடுவது என்ற  செய்தி மராத்வாடாவை ஒட்டிய பகுதிகளில் பதட்டத்தை  உண்டுபண்ணியது. தலித்துகளும் அவர்தம் உடமைகளும் கடுமையாக தாக்கப்பட்டன. 50,000 தலித்துகள் வீடற்றவர்களாக்கப்பட்டனர். (தருமபுரி தாக்குதல் நினைவுக்கு வருதா?) இந்த கும்பலை வழிநடத்தியது காங்கிரசின் நிலவுடமை சக்திகளும், ஜனதா கட்சியின் நாஜி சித்தாந்திகளும், சிவசேனையின் ஓநாய் ஊளைகளும்தான்.
இப்படியான சூழலில்,
நாண்டேத் என்ற பகுதியைச் சார்ந்த தலித் சிறுத்தைகள் அமைப்பின் உறுப்பினர் கௌதம் வாக்மாரே தீக்குளித்தது இடதுசாரி இயக்கத்தையும், தலித்துகளையும் தெருவுக்கு இழுத்து வந்தது, தொடர் போராட்டங்களை நிகழ்த்த வைத்தது.  ஆனால், கௌதம் என்பவரை பால் தாக்கரே ‘குடிகாரன்’ என்று இழிவுப்படுத்தினார்.
மாநில அரசு இந்த பிரச்சினைக்கு புதுவகையான தீர்வை முன்வைத்தது. பல்கலைக் கழகத்தின் பாதிக்கு மட்டும் அம்பேத்கர் பெயரையும், நாண்டேத்தில் அமைக்கப்பட இருக்கும் மீதிக்கு சுவாமி ராமனந்த் தீர்த்தரின் பெயரையும் இடப் போவதாக அறிவித்தது. பெரிய விலைக்கு பிறகு கிடைத்த இந்த வெற்றிக்கான(!) இந்த சமரச சூத்திரத்தை வடிவமைத்து கொடுத்தவர் ராம்தாஸ் அதாவ்லே.
ஆனால், அம்பேத்கரின் பெயர் பல்கலைக் கழகத்தை தீட்டாக்குவதை தாக்கரேயால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பெயர் மாற்றம் குறித்த அரசின் இரண்டாவது அறிவிப்பையும் நிராகரிப்பதாக அறிவித்த சிவசேனை, மாநில அளவிலான முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்தது.
மும்பை – தானே உள்ளிட்ட பகுதிகளில் வலுவாக இருந்த சிவசேனை தனது எல்லையை விரிவுப்படுத்த கைகொண்ட செயல்திட்டத்தின் முக்கியமான அங்கம் தொடர்ந்து அம்பேத்கரிய தலித்துகளை தாக்குவது என்பதுதான்.
கலாச்சார ரீதியாக  இந்து மதத்திலிருந்து விடுபடும் திட்டங்கள் (பௌத்த மத மாற்றம்), கல்வியில் முன்னேற்றம், தம் சாதியை வெளிப்படையாக சொல்லும் துணிவு உள்ளிட்ட  செயல்பாடுகளால் கோபமுற்றிருந்த கிராமப்புற சாதி இந்துக்களின் தலித் விரோத மனநிலைக்கு சரியான தீனியாக அமைந்தது சிவசேனையின் மேற்கண்ட திட்டம்.
ஆக, இந்த தலித்விரோத மனநிலையை ஈர்த்து வாக்குகளாக்கும் தமது வேலைதிட்டத்தின் மூலம் மகாராஷ்டிராவில் இருந்து ஆட்சியை பிடித்தது சிவசேனை. ஆட்சியை பிடிப்பது அத்தனை எளிதாக இருந்ததற்கு மற்றொரு காரணம் என்னவென்றால், வேறெந்த கட்சியும் சிவசேனையை போல அத்தனை வெளிப்படையாக தலித்துகளை புறக்கணிக்கும் போக்கை கொண்டிருக்கவில்லை.
சிவசேனா மற்றொன்றிலும் எச்சரிக்கையாக வேலை செய்தது. அது என்னவென்றால், அம்பேத்கரிய தலித்துகளை புறக்கணிப்பதும், கொள்கைரீதியாக (அம்பேத்கரை) பின்பற்றாத பிற தலித் சாதிகளை ஒருங்கிணைத்து பிற்படுத்தப்பட்ட சாதி மனநிலைக்கு இட்டுச் செல்வதும்தான் .
1980 களின் நடுப்பகுதியில், அம்பேத்கரிய தலித்துகள் மீது குறிப்பாக மராத்வாடா, விதர்பா உள்ளிட்ட பகுதிகளில் தொடர் தாக்குதல்களை நிகழ்த்த தொடங்கியது சிவசேனா. (இந்த பகுதிகளில்தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள், அதிலெல்லாம் கவனம் செலுத்தாத சிவசேனா தலித் விரோத போக்கையே மக்கள் நடுவில் விதைக்க காரணமென்ன?)
1953 முதலே நில அதிகாரத்திற்கான போராட்டமென்பது தலித்துகளின் பொருளியல் போராட்டத்தின் முக்கிய அங்கமாகவே இருந்தது. அப்படியான முதல் போராட்டம் அம்பேத்கரின்  ஆலோசனையின் பேரில் மராத்வாடாவில் நடத்தப்பட்டது. பிற்காலத்தில்,  ஒரு அறவழி போராட்டம்1963 இல் வாக்மாரே தலைமையில் தேசிய அளவில் தொடங்கியது.
தலித்துகள் நிலத்தின் மீது தம் உரிமையை உறுதி செய்வதை சிவசேனை எதிர்த்தது மட்டுமில்லாமல் தலித்துகளின் தானிய கையிருப்பையும் சேதப்படுத்தி குடியிருப்புகளையும் தாக்கியது. விவசாய கூலிகளும், கடைநிலை தொழிலாளிகளுமாக சில  ஏழை தலித்துகளும் இதில் கொல்லப்பட்டனர். மகர் சாதியை சார்ந்த சகோதரர்கள் இருவர் வன்முறை கும்பலால்  11 ஆகஸ்ட், 1991 அன்று படுகொலை செய்யப்பட்டனர். இதில் தலித்துகளை அச்சுறுத்தும் விதமாக சிவசேனையினரால் கல்லால் அடித்தே கொலை செய்யப்பட்டார் அம்பாதாஸ் சாவனே.
இதன்பிறகு, சிவசேனை பாஜகவோடு கூட்டணி வைத்துக் கொண்டு  ஆட்சிக்கு வந்தவுடன் எடுத்த முதல் முடிவு என்னவாக இருந்தது தெரியுமா? தலித்துகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தியதற்காக தொடரப்பட்ட 1100 வழக்குகளை ரத்து செய்ததுதான். இதற்கு ராமதாஸ் அதாவ்லேயின் ஒப்புதலும் இருந்தது என்பதுதான் (துன்பியல்)நகைமுரண்.
அம்பேத்கரின் இந்து மதத்தின்  புதிர்கள் நூலுக்கு எதிரான தாக்கரேயின் நிலைப்பாடும், 1987-88 ல் ரமாபாய் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் அவருடைய பங்கும் பெரும்பாலும்  அனைவரும்
thanks tehelka.com (this picture used here with fare use policy)
thanks tehelka.com (this picture used here with fair use policy), Not under Creative Commons Licence
அறிந்தது என்ற வகையில் அதை குறித்து விரிவாக பேசாமல், மேற்கொண்டு தகவல்களை அலசுவோம்.
தலித் தலைமையின் சிதைவு
அம்பேத்கரையும், அம்பேத்கரிய தலித்துகளை இழிவுப்படுத்தும் பாலதாக்கரேயின் உரைகள், குடிசைவாசிகள் மீதான அவருடைய தொடர் வெறுப்பு பிரச்சாரம், பண முதலைகளுக்கான ஆதரவு போன்றவை கண்டிப்பாக அவரது தலித் வெறுப்பு நிலைப்பாடு என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.
ஆனால், தலித் அரசியல் என்பது  எந்தளவுக்கு சிதைந்து போய்விட்டதென்றால், அதற்கு இதுபோன்ற விசயங்களில் கவனம் செலுத்த நேரமேயிருப்பதில்லை. தங்களுடைய அந்தர்பல்டிகளுக்கு அம்பேத்கரின் பெயரை பயன்படுத்திக் கொண்டும், தலித்துகளை அதிகாரப்படுத்துகிறோம் என்று  கூறிக் கொண்டும், தம் சந்தர்ப்பவாதத்திற்கு பல்வேறு வகையான விளக்கங்களை அள்ளி வீசிய வண்னம் இருக்கின்றனர். இதுபோதாதென்று தலித் அரசியல்வாதிகள் சொந்த நலன்களின் பொருட்டு தங்களுக்குள் மோதிக் கொள்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆகையால, மகுடிக்கு ஆடும் பாம்பை போல  இந்த தலைவர்களை பணத்தை வீசி ஆட்டுவிப்பது அத்தனை கடினமான காரியமல்ல.
இந்திரா பிரியதர்சினி’யை குறித்து நூல் எழுதிய அந்த காலத்து வீரிய சிறுத்தையும் இதற்கு விதிவிலக்காகாமல் தாக்கரேவிடம் தஞ்சம் புகுந்ததை இதற்கு எடுத்துக் காட்டாக கொள்ளலாம்.
‘தலித் விடுதலை சேனை’யின் தானை தலைவர் நாம்தேவ் தசாலும் இதற்கு விதிவிலக்காக அமையவில்லை. இவர் மோடியின் புகழ்பாடுவதோடு மட்டுமில்லாமல், தாக்கரேயின் இறுதிச் சடங்கிற்கும் தானே சென்று ஆஜரானார். கடைசியாக, இந்த சந்தர்ப்பவாத வரிசையில் தன்னை இணைத்துக் கொண்டவர் ராம்தாஸ் அதாவலே, சிவசேனையோடு கூட்டணி அமைத்து அதற்கு ‘அறிவுப்பூர்வமான’ விளக்கங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
29 நவம்பர் அன்று தலித்துகளுக்கு விடுத்த வேண்டுகோளில் டிசம்பர் 6  அன்று அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்த வரும் தலித்துகள் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.   அம்பேத்கரை இழிவுப்படுத்துவதில் எந்த வாய்ப்பையும் விட்டு தராது தொடர்ந்து இழிவுப்படுத்தி வந்த ஒருவருக்கு மரியாதை செலுத்த தலித்துகளையே அழைத்த செயல் வெட்கங்கெட்டத்தனமானது. அதை அதாவ்லே செய்தார்.
தனது கழிசடை மொழிநடையில் தாக்கரே அம்பேத்கர் நிஜாமின் கைக்கூலி என்றும், கண்ணாடி அணிந்த பூசணிக்காய் என்றும் விமர்சித்தார். அதோடு மட்டுமா? ‘சக்பால்’என்ற பெயரிலிருந்து எப்படி ‘அம்பேத்கர்’ ஆனார் என்பதை விளக்குகிறேன் பேர்வழி என்று பீமாபாயின் (அம்பேத்கரின் தாய்) நடத்தையின் மீது வக்கிர புத்தியோடு சந்தேகம் எழுப்பியதோடு மட்டுமில்லாமல், பாப்ரி மஸ்ஜித் இடிப்பை ‘மானவ் முக்தி தின்’ (மானுட விடுதலை நாள்) என்ற பெயரில் டிசம்பர 6 இல் ஒரு கொண்டாட்டமாக உருவாக்க முனைந்த, அதாவ்லேயை ஒட்டுண்ணி என்று விமர்சித்த ஆனந்த டிகே சிவசேனையில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். அருகில் பந்தி போட்டு தற்போது அமர்ந்திருப்பவர் ராமதாஸ் அதாவ்லே.
இதில் வெட்கம் வேண்டாமா? என்று கேட்காதீர்கள், அதிகாரமும், பணமும் சுயமரியாதைக்கு மேலானதாகத்தான் இந்த ஓட்டரசியல்வாதிகளுக்கு தோன்றும்.
———————————————————————————————————————————————————–
http://www.youtube.com/watch?v=yiizeJePOYo
கிருஷ்ண தேசாய் கொலை (இங்கே க்ளிக் செய்யுங்கள்)
சிவசேனையோடு இந்திய குடியரசு கட்சி கூட்டணி  (இங்கே க்ளிக் செய்யுங்கள்)
ஆங்கில மூலம் : Counter CurrentsEPW
தமிழில்: மகிழ்நன்

நன்றி: மாற்று

மோடி – ஆடுகளின் மீது அன்பைப் பொழியும் ஓநாய்!

தலித் ஆண்களை அர்ச்சகர்களாக்குவோம் என்ற மோடியின் அறிவிப்பு வரவேற்கத் தக்கதாக தோன்றினாலும்அது குஜராத்தில் கடுமையான தீண்டாமை கொடுமைக்கு உள்ளாகும் வால்மீகி சமூகத்தின் உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பும் மோசடி தவிர வேறென்றும் இல்லைதலித் மக்கள் வரலாற்று ரீதியாக சந்தித்து வரும் கொடுமைகள் குறித்து மோடி இதுவரை பேசியதேயில்லை என்று கூறலாம்.  ஆக,  இது தலைப்பு செய்திகளில் இடம்பெறும் உள்நோக்கம் கொண்ட  பச்சை இரட்டை வேடமன்றி வேறில்லை.
ஒளிரும் குஜராத் குறித்து தொடர்ந்து ஊடகங்கள் நிரம்ப பேசிவிட்டனஇது ஊடகங்கள் மறைத்து வைத்த அசிங்கத்தை அம்பலப்படுத்த வேண்டிய தருணம்தலித் இளைஞர்களுக்கு  அர்ச்சகர் பயிற்சி அளிக்கும் புரட்சியை செய்ய கிளம்பியுள்ள(!) இந்து இதயங்களின் சாம்ராட்’ மோ()டியை அம்பலப்படுத்த வேண்டிய தேவையின் பொருட்டே இந்தக் கட்டுரை.
இந்தக் குறிப்பிட்ட திட்டத்திற்காக மோடியின் அரசு ஒதுக்கியுள்ள தொகை 22.50 லட்சம்.  பெருமுதலாளிடாட்டாவின் நானோ கார் தொழிற்சாலைக்கு மோடியின் அரசு பிப்ரவரி மாதம் வழங்க ஒப்புக் கொண்டிருக்கும் கடன் தொகை ரூ.545 கோடிமுதலாளிகளுக்காக கோடிகளை ஒதுக்க முடிந்த மோடிக்கு,தலித் மக்களின் சுயமரியாதைக்கான திட்டமென்று பீற்றிக் கொள்ளும் திட்டத்திற்கு சில லட்சங்களை மட்டும் ஒதுக்கியிருப்பதே மோடியின்  அக்கறையின் லட்சணத்தை புரிந்து கொள்ள போதுமானது.
இந்த திட்டத்தின்  கீழ் பயிற்சி பெறுகின்ற மாணவர்களுக்கு சமஸ்கிருத அறிவு ஊட்டப்படுவதன் மூலமாக அவர்கள் சுயமாக பூஜைபுனஸ்காரங்களில் ஈடுபட இயலும்.  இதற்கான பயிற்சி சோம்நாத் சமஸ்கிருத வித்யா பீடத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுஇது உண்மையிலேயேசமூக சமத்துவத்திற்கான முன்னெடுப்பா அல்லது இந்து சமூகம் செய்யும் கொடுமைகளிலிருந்து விடுபடஇந்து மதத்தை விட்டு வால்மிகி சமூகம் வெளியேறிவிடாமல் தடுக்கும் கயமைத்தனமா? (சுய விருப்பத்தோடு மதமாறும் உரிமையை தடுக்க பாஜக கும்பல் தீட்டியுள்ள திட்டமென்று இதை புரிந்து கொள்ளலாமா?)
மோடிக்கு ஜால்ரா தட்டும் காவி ஆதரவாளர்கள் மோடியை புரட்சியாளராகவும்சீர்திருத்தவாதியாகவும் விளம்பரப்படுத்துகிறார்கள்சிலரோ,  அவர் பிற்படுத்தப்பட்டவர் ஆகையால்தலித் மக்களையும் பிற்படுத்தப்பட்டவர்களையும் சுயமரியாதையோடு இந்து சமூகத்தில் வாழ வைக்கும் முயற்சி என்று புகழ்கிறார்கள்வால்மீகி சமூகத்தினிரிடையே ஒரு கூட்டத்தில் பேசும் பொழுது, “நீங்கள் ‘நகரத்தின் அர்ச்சகர்கள்’நகரத்தை சுத்தப்படுத்தும் நீங்கள் அர்ச்சகர்களை விட உயர்ந்தவர்கள்” என்றார் மோடி.அவருடைய சொற்கள் கேட்க  இனிப்பாகத்தான் இருக்கின்றது. (ஆனால்மலமள்ளும் தொழிலாளர்கள் அதே கையோடு தேனை தொட்டு சாப்பிட முடியுமா என்ன?).  இதுபோன்ற கரிசனங்களின் போர்வையில் மோடி சாதிக்க விரும்புவது என்னஅதை புரிந்து கொள்ளசமீபத்தில் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் சிக்கிய ஆசாராம் பாபுவோடு கலந்து கொண்ட ‘சபரி மேளா’வில் மோடி பேசியதை நினைவில் கொள்ளுதல் சிறந்ததாக இருக்கும்.
பழங்குடியினர்களுக்கு மருத்துவ உதவிகளையும்உணவையும் வழங்கி வேறு மதத்திற்கு மாற்றுவதை இனி சகித்துக் கொள்ள முடியாதுஇது சொந்த மதத்திற்கு திரும்பும் காலம் வந்துவிட்டது.” (இணைப்பு)
எது சொந்த மதம்அப்படி இவர்கள் சொல்லும் சொந்த மதத்திற்கு திரும்பினால் என்ன சுயமரியாதை இருக்கும்.என்ன சாதியில் சேர்த்துக் கொள்வார்கள்இந்து மதத்திற்கு மாறுவதால் என்ன பொருளியல்,வாழ்வியல் முன்னேற்றம் நிகழ்ந்துவிடப் போகின்றதுஇவர் மதம் மாறுவதை  சாப்பாட்டுக்காக மதம் மாறுபவர்கள் என்று இழிவுப்படுத்துவதற்குஇவர் யார் மதம் மாறுவதை சகித்துக் கொள்ளாமல் இருக்க,இவருக்கும் நமக்கும் என்ன தொடர்புகொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால்
எங்கள் அடிமைகள் மதம் மாறிய ஒரே காரணத்தினால் எப்படி சுயமரியாதை கோரலாம்எங்கள் அடிமைகளை நாங்கள் இழக்க தயாராக இல்லை.’ என்னும் வக்கிரம் தவிர வேறென்ன வெங்காயமிருக்கின்றது இந்த உரையில்இதையொட்டிஇந்த தலித் அர்ச்சகர் திட்டத்தை பரிசீலித்தால் தலித்துகள் இந்து மத சங்கிலிக்குள் பிணைத்து வைக்கும் திட்டத்தை புரிந்து கொள்ளும் எளிதாகும்.புரிதலை இன்னும் எளிதாக்க இன்னும் சில தகவல்களை சரி பார்ப்போம்.
இந்தியாவை வல்லரசாக்குவோம்சமத்துவம் படைப்போம் மேடை போட்டு விளம்பரம் பேசும் மோடியின் குஜராத்தில்அனைத்து சமூகத்தினரும் துப்புறவு பணியில் ஈடுபடவில்லை மாறாகஅங்கும் மனுதரும சிந்தனையின்படி தீண்டப்படாத வால்மீகி சமூகம்தான் துப்புறவு தொழிலில் ஈடுபடுகின்றது.
அகமதபாத் நகரத்தை 2031க்குள் கழிவில்லா நகரமாக மாற்றும் தொலைநோக்கு திட்டம்’என்று ஒரு அதிகாரப்பூர்வ ஆவணமொன்று வெளியிடப்பட்டதுஅந்த அறிக்கையின்படி ஒவ்வொரு மாதமும்1,10,667 மெட்ரிக் டன் திட கழிவை அகமதாபாத் நகரம் வெளியேற்றுவதாகவும்அதில் 1,08,454 மெட்ரிக் டன் அளவுக்கு மனிதர்களே அள்ளுகின்றனர்ஆனால்எங்கேயும் துப்புறவு தொழிலாளிகளின் பாதுகாப்பு குறித்து எங்கும் தெரிவிக்கப்படவில்லை.
Dalit woman in manual scavenging
Sample Image: Dalit woman in manual scavenging
1992 ஆம் ஆண்டு குஜராத் அரசு மனித கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை ஒழித்து விட்டதாக அறிவித்தது. 2001 ஆம் ஆண்டுதான் மோடி குஜராத்தில் ஆட்சிக்கு வந்தார். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 2500வீடுகளில் மனிதர்களே கையால் மலம் அள்ளும் அவலம் தொடர்வதாக தெரிவிக்கின்றதுமானவ் கரிமா என்னும் ஒரு அமைப்பு நடத்திய ஆய்வின்படி அகமதாபாத் நகரத்தில் மட்டும், 126 இடங்களில் மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலம் தொடர்வதையும், 188உலர் கழிப்பிடங்கள் உள்ளதாக அம்பலப்படுத்தியது அதை குறித்துதேசிய மனித உரிமை ஆணையத்திற்கு ஒரு மனுவை கையளித்ததுஇந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மோடியின் தலைமையிலான அரசு 1993 ஆண்டு சட்டத்தை எங்கள் அரசு முழுமையாக நடைமுறைப்படுத்துகின்றது என்றும்அதன் படி மனித கழிவை மனிதனே அள்ளும் நிலை குஜராத்தில் இல்லையென்றது. (இணைப்பு)
மோடி மாயையை விலக்கி மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் ஏராளம் உண்டுநடுநிலை ஊடகங்கள் கண்ணை மறைக்கும் காவிப்புழுதியை கிளப்பி நம்மை ஏய்க்க பார்க்கின்றனஇந்தியாவை காப்பாற்ற வந்த அவதாரம் போன்று பிரச்சாரம் செய்யும்  மோடி ஆட்சி செய்யும் குஜராத்தில் 64 லட்சம் வீடுகளுக்கு கழிவுகளை வெளியேற்றும் சாக்கடை வசதிகள் இல்லை, 52 லட்சம் வீடுகளுக்கு கழிவறைகள் இல்லை(கேரளாவில் 71% வீடுகளுக்கு கழிவறை வசதிகள் இருப்பதும்பிற மாநிலங்கள் குஜராத்தைவிட முன்னேறியிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.) கழிவறை வசதிகள் கூட உருப்படியாக இல்லையென்றால்என்ன பொருள்? மோடி ஆட்சி செய்யும் குஜராத்தில் மக்கள் வெட்ட வெளியில் ‘கக்கா’ போகின்றார்கள் என்பதுதானேஆனால்இதை சரிசெய்யும் நோக்கமெல்லாம் இல்லாத மோடிக்கு இருப்பதெல்லாம் காவி திமிர்தான்அதற்கு உதாரணம் கீழ்க்கண்ட உளறல்
karmayog 2
கர்மயோக் புத்தக அட்டை
ஒரு சமூகம் தன் பெண்களை பொதுவில் செல்லும் போது புர்கா அணியச் சொல்கின்றதுஆனால்அதே பெண்கள் காலைக் கடனை கழிக்க காடுகளுக்குத் தான் செல்ல வேண்டியிருக்கின்றது.” (இணைப்பு)
மேற்கண்ட உளறலில் இஸ்லாமிய சமூகத்தை இழிவுப்படுத்தும் மோடி தலித் மக்களை துப்புறவு தொழில் தள்ளிய பார்ப்பனியத்திற்கு எப்படி விளக்கு பிடிக்கின்றார் தெரியுமா?
தலித் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களுக்காக மட்டும் துப்புறவு பணிகளை செய்து வருகின்றார்கள் என்று நான் நம்பவில்லைஅதுவாழ்வாதாரத்திற்கானதாக இருந்திருந்தால் தலைமுறைதலைமுறையாக அதே தொழிலை செய்து வந்திருக்க மாட்டார்கள்ஒரு குறிப்பிட்ட காலக்கட்ட்டத்திற்கு பிறகு யாராவது ஒருவருக்கு திடீர் அறிவொளி வந்துநாம் செய்யும் தொழில் ஒட்டுமொத்த சமூகம் மற்றும் கடவுளின் மகிழ்ச்சிக்கானதுஆகையால்கடவுளால் அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த தொழிலைபல நூற்றாண்டுகளாக ஒரு ஆன்மீக பணியாகவே செய்து வருகின்றார்கள்அதனால்தான்தலைமுறை தாண்டியும் அவர்கள் மட்டும் செய்யும் தொழிலாகவே நீடிக்கின்றதுஎனவேவேறுவழியில்லாமல்வேறு தொழிலில்லாமல் இந்த தொழிலை மேற்கொண்டார்கள் என்பது நம்புவதற்குரியதாக இல்லை.”
karmayog(கர்மயோக் நூலின் 48-49 ஆவது பக்கத்தில்(இணைப்பு)
என்ன திமிர் பார்த்தீர்களாகழிவறை கட்ட வக்கில்லாதவ ஒருவர்தன் ஆளுகைக்குட்பட்ட பெண்களை இழிவுப்படுத்தும் முறையை பார்த்தீர்களாதலித் மக்களின் வலியை ஏதோ அவர்கள் வாங்கி வந்த வரம் போல திரிக்கும் கயமைத்தனத்தையும் பாருங்கள்கேட்டால் சிறந்த நிர்வாகியென்று மோடியின் தமிழ்நாட்டு தரகர் ‘தமிழருவி மணியன்’ ஊரெங்கும் கூவிக் கொண்டு திரிகிறார்இந்த மோடிதான் ஒளிரும் குஜராத்தை உருவாக்கியிருக்கிறாம்.
அதையெல்லாம் விடுங்கப்பா என்ன இருந்தாலும்இந்த அர்ச்சகர் திட்டம் வரவேற்கத் தக்கதுதானே என்று சிலர் இன்னும் மோடியின் காவிக் கொடிக்கு கையசைத்துக் கொண்டிருக்கலாம்வால்மீகி சமூகத்தை அர்ச்சகராக்கும் திட்டத்தை அமுல்படுத்தும் மோடிக்கு அந்த சமூகத்தின் மீது எந்த பெரிய அக்கறையுமில்லை என்று புரிந்து கொள்ள மேலும் சில தரவுகளையும் நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்.
  1. நவ்ஷ்ர்ஜன் என்னும் அமைப்பு 2010 ஆம் ஆண்டு 1589 கிராமங்களை ஆய்வு செய்ததுஅவற்றில் 98%கிராமங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுகின்றது.
  2. நாட்டை தூய்மைப்படுத்தும் அர்ச்சகர்கள் என்று மேடையில் புகழும் மோடியின் அரசின் கீழ் துப்புறவு தொழிலாளர்களுக்கு அரசு வேலை கூட கிடையாது பெரும்பாலானவர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள்தான்ஊதியமோ மாதம் நாளைக்கு 50-100 ரூபாய்தான் கொடுக்கிறாங்க.(இணைப்பு)
  3. முடிவெட்டுவதற்கு கூட சாதி பார்க்கும் குஜராத்தின் சாதி இந்துக்கள் கொடுக்கும் மன உளைச்சல் தாளாமல் 200 குடும்பங்கள் பௌத்தத்திற்கு மாறியிருக்கின்றார்கள். (இணைப்பு)
  4. தலித் குழந்தைகள் துப்புறவு வேலை செய்ய பணிக்கப்படுகின்றார்கள். (இணைப்பு)
  5. ஒரு தலித் மைனர் பெண் வன்புணர்ச்சிக்குள்ளானதை கண்டித்து தலித் மக்கள் ஆர்பாட்டம் நடத்தினால் காவல்துறை லத்தி சார்ஜ் செய்கின்றது. (இணைப்பு.1இணைப்பு.2)
  6. ஒரு தலித் குடும்பத்தை ஊரை விட்டு காலி செய்ய சொல்லிய ஆதிக்க சாதி பஞ்சாயத்து. (இணைப்பு)
  7. குஜராத் மற்றும் ராஜஸ்தானில் செய்யப்பட்ட ஆய்வு, 90 விழுக்காடு தலித் குழந்தைகள் மருத்துவத்தின் போதும், 80 விழுக்காடு தலித் குழந்தைகள் ரத்த பரிசோதனை போன்ற மருத்துவ பரிசோதனைகளின் போதும் பாகுபாடுகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர்என்று தெரிவிக்கின்றது.
  8. 2010 ஆம் ஆண்டு யுனிசெப் நிறுவனம் நடத்திய ஆய்வில் 1298 தடவை மருந்து வழங்கப்பட்ட குழந்தைகள், 1181 தடவை பாகுபாடுகளுக்கு உள்ளாகியிருக்கின்றார்கள். 10 இல் தடவை தலித் குழந்தைகள் பாகுபாடுகளுக்கு உள்ளாகின்றார்கள் என்றும் தெரிவிக்கின்றது. (இணைப்பு)
  9. தலித் மக்களுக்கு மோடியின் குஜராத்தின் குடிக்க தண்ணீர் இல்லைஇது குறித்து குரல் கொடுத்தால் மேல்சாதி மக்களின் முதல்வரான மோடிக்கு களங்கம் ஏற்பட்டுவிடும்இதன் காரணமாக எங்களை அவர்கள் தாக்கக் கூடும் என்பதால் மவுனம் காத்ததாக சொல்கிறார்கள். (இணைப்பு)
இன்னும் அச்சில் ஏறாதஇங்கே பட்டியலிடப்படாதபொதுவெளிக்கு வராத கொடுமைகள் ஏராளம் குஜராத்தில் உண்டுஒவ்வொரு சாதியும்ஒரு தேசமாக இருக்கின்றதென்றார் அண்ணல் அம்பேத்கர்.அதற்கு குஜராத்தொன்றும் விதிவிலக்கல்லஇந்த கோரமான உண்மையை மறைக்கத்தான் இந்து முஸ்லீம் கலவரமும்இந்து ஒற்றுமையை இந்துத்வ கும்பலால் கோரப்படுகின்றது.
எப்பொழுதெல்லாம் தலித் மக்களோபிற்படுத்தப்பட்டவர்களோ தமது உரிமைக்காக போராட தொடங்குகின்றார்களோ அப்பொழுதெல்லாம் ஒரு மதக்கலவரத்தை ஏற்படுத்தி தம் உரிமைகள் மீதான கவனத்திலிருந்து ஒடுக்கப்பட்டவர்களை திசை திருப்பிஇஸ்லாமியர்களை பொது எதிரியாக்கி தம் சகோதரர்களை வெட்டி சாய்க்க செய்துவாக்கு சேகரித்துக் கொள்ளும் இந்துத்வ கும்பல். (.காமண்டல் கமிசன் அறிக்கைக்கு பின்பாக பாபர் மசூதி இடிக்கப்பட்டதும்இந்து முஸ்லீம் கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டதும்).
தலித் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் கார்ப்பரேட்டுகளாலும்காவித் தீவிரவாத கும்பலாலும் ஊதிப்பெருக்கப்படும் மோடியின் பலூனில் ஊசியை ஏற்றி அதை உடைக்கும் கூடுதல் பொறுப்பு தலித் மக்களுக்கு இருக்கின்றது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை 25% தலித் மக்கள் மற்றும் பழங்குடியினர்களின் என்ணிக்கை இருப்பதாக தெரிவிக்கின்றதுதெகல்காவின் கட்டுரையின் படி இதுவரை 12% தலித்துகளின் வாக்குகளை பாஜக மட்டுமே பெற்றிருகின்றது. (இணைப்புஅது மட்டுமில்லாமல் 189 தொகுதிகளில் வெற்றி வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் ஆற்றல் முஸ்லிம்களுக்கு இருக்கின்றது என்றும் தெகல்காவின் ஆய்வு தெரிவிக்கிறது. (இணைப்பு) இந்த வாக்குகள் மதவாத, மக்கள் விரோத கும்பலுக்கு கிடைக்காமல் செய்வதோடுஇதர ஜனநாயக சக்திகளோடு இணைந்து பாஜக கும்பலை மண்ணை கவ்வ வைப்பது நமது கடமைஇணைந்து பணியாற்றுவோம்சோர்வடையாமல் சிந்தித்து பணி புரிந்தால் இது வெகு எளிதான வேலையே.

நன்றி :மாற்று