திங்கள், 2 ஜூன், 2014

பாகிஸ்தான் பிரதமரை மோடி அழைத்தது ஏன்?

(சார்க் நாடுகளின் பிரதிநிதிகளை தனது பதவியேற்பு விழாவிற்கு அழைத்திருக்கிறார் நரேந்திர மோடி, தேர்தல் பிரச்சார காலத்தில் அவர் அண்டை நாடுகள் குறித்து என்ன பேசினார் என்பதை நாம் அறிவோம். தேர்தல் வெற்றிக்குப் பின்னர் நடந்திருப்பது தலைகீழ் மாற்றம்தான். இந்த மாற்றத்திற்கான காரணத்தை நமக்கு அறிவிக்கிறது ‘ட்ரூத் ஆப் குஜராத்’ இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்டுரையைத் தழுவிய இந்த பதிவு)
இத்தனை ஆண்டுகாலமும், சமீபத்திய 2014-தேர்தல் பிரச்சாரம் வரையிலும் பாகிஸ்தான் மீது நஞ்சை உமிழ்ந்துவிட்டு, கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் தனது பதவியேற்பு விழாவிற்கு பாகிஸ்தான் பிரதமரை அழைத்துள்ளார் மோடி. இதன் உண்மையான நோக்கம் அமைதியின் மீதான நாட்டம்தானா? என்றால், கண்டிப்பாக இல்லை அதன் காரணம் அதானி என்பதாகத்தான் புரிந்து கொள்ள முடிகின்றது.
குஜராத்தின் கட்ச் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கும் 10000 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் பெரும்பகுதியை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய அதானி பவர் நிறுவனத்திற்கு மோடி அரசின் ஒப்புதல் வேண்டும். இந்த நிறுவனம் என்பது 8.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள அதானி குழுமத்தின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. அதானி குழுமம் என்பது தனியார் மின்சார தயாரிப்பாளர்களில் முதன்மை பட்டியலில் இருக்கின்றது (இணைப்பு) என்பதுவும் இந்த நிதியாண்டிற்குள் இந்த 10,000 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான திட்டமும் கொண்டிருக்கின்றது இங்கே குறிப்பிடத்தக்கது.
நவாஸ் ஷெரிஃப் இந்திய பிரதமரை குறிப்பிட ‘கிராமத்து பெண்’என்ற சொல்லாடலை பயன்படுத்தால் ஏற்பட்ட சர்ச்சையை ஒட்டி ‘நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம்’ என்றும் ‘சகித்துக் கொள்ள முடியாதது’பாகிஸ்தானுக்கு எதிரான வன்மத்தை கக்கினார் மோடி. அப்போது பொழுது மோடியின் பாட்டுக்கு ஒத்தூதும் வேலையை செய்து வந்தன மைய ஊடங்கள். மோடி இந்த ‘அவமானத்தை பற்றி’ குறிப்பிடும் பொழுது “இந்திய பிரதமரை அவமானப் படுத்தும் விதமாக அந்த பேச்சு எழுந்த பொழுது, இந்த ஊடகவியலாளர்கள் நவாஸ் வழங்கிய இனிப்பை உண்டுக் கொண்டிருந்திருக்கின்றனர். இவர்கள் கண்டிப்பாக என் தேசத்து மக்களுக்கு பதிலளிக்க கடமைப்பட்டவர்கள். அவர்கள் அந்த இனிப்புகளை உதைத்து தள்ளியிருக்க வேண்டும்.“ என்றெல்லாம் கறாராக பேசினார்.
இந்தியாவின் உலக மகா அரசியல் ஆய்வாளரும், கூச்சலின் நாயகருமான ‘அர்னாப் கோஸ்வாமி’, நரேந்திர மோடியின் பாகிஸ்தான் பற்றிய நிலைப்பாட்டை ஆய்வு செய்திருக்கின்றார். அந்த ஆய்வு மகாக்கடலின் ஒரு துளி இதோ,
“ பாகிஸ்தானை பொறுத்தவரையில் மோடி மிகவும் தெளிவாக இருக்கின்றார். தீவிரவாதம் தொடர்ந்தால் கண்டிப்பாக பாகிஸ்தானோடு உரையாடல் என்பதே இருக்காது என்று பதிவு செய்யப்பட்ட காணொளியில் உறுதியாக தெரிவித்திருக்கின்றார். கடந்த காலங்களில், அவர் மிதவாத நடுவழியை தேர்ந்தெடுப்பாரென்றும், தனது அணுகுமுறையில் மென்மையை கைகொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தன்னுடைய அணுகுமுறையை மிகத்தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். ஏற்கனவே சொன்னது போல பதிவு செய்யப்பட்ட காணொளியில் கூறியுள்ளதால, வழக்கமான ஐ.மு.கூவின் நிலைப்பாட்டிலிருந்து பெரிய அளவில் வேறுபடும் என்பது உறுதியானது.”
இந்திய இராணுவ வீரர்களை கழுத்தறுத்தவர்களோடு உரையாடல்களை நடத்துவதை குறித்து அர்னாப் கோஸ்வாமி எடுத்த நேர்காணலில், “ துப்பாக்கி, குண்டுகளின் சத்தத்தில் பேச்சுவார்த்தை செவிகளுக்கு கேட்குமா?”இப்படியெல்லாம் பஞ்ச் டயலாக் அடித்த மோடி, பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைக்கப் போகின்ற சூழலில், அவருடைய ‘இரும்புக்கரத்தை’ காயலாங்கடையில் போட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் தொடர்பான நிலைப்பாட்டில் திடீர் மாற்றத்திற்கான காரணத்தை ஊரெங்கும் ஜனநாயகத்தை பேசித் திரியும் ஊடகங்களால் சுதந்திரமாக பேச இயலவில்லை. காரணம் பெரிதாய் ஒன்றும் இருக்காது ‘அப் கி பார், மோடி சர்க்கார்’ என்பதாகத்தான் அது இருக்கும்.
இன்று அந்த ஊடகங்கள் பழைய அவருடைய பஞ்ச் டயலாக்குகளின் இன்றைய நிலை குறித்தெல்லாம் பேசாமல், நவாஸ் ஷெரிபை அழைக்கும் அழைப்பிதழுக்கு பிழை திருத்தம் செய்வதிலும், டிசைன் செய்வதிலும் மும்முரமாக இருக்கின்றார்களோ என்னவோ? இந்த டிசைன் செய்வதினூடாக, மோடியின் முடிவெடுக்கும் ‘ஆண்மையான’பாணிக்கும் பங்கம் வராத வண்ணம், பிராந்திய நல்லிணக்கத்திற்கான ‘ஆண்மையான’ முடிவு என்று காவி கலரை வீசி ஹோலி விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
அதானி குழுமத்தை பொறுத்தவரையில் மேற்சொன்ன கட்ச் திட்டத்தை பற்றி ஐ.மு.கூ-2 அரசிடம் முன்மொழிவுகளை வைத்தனர். பெரிய முன்னேற்றம் ஏதும் ஏற்படாததால், ‘பெரும்பான்மை’ பலம் பெற்று ஆட்சிக்கு வந்திருக்கும் தே.ஜ.கூ அரசாலாவது அந்த திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்கும் என்று தொழுது காத்து கிடக்கிறது அந்த குழுமம். 3300 மெகாவாட் மின்சார உற்பத்தி திறனை அடுத்த ஐந்தாண்டுக்குள் 10,000 மெகாவாட்டுக்கு முன்னேற்றும் திட்டமும், அதை பாகிஸ்தானுக்கு விற்கும் திட்டமும் இணைந்தே இருக்கின்றன.
தகவல்களின்படி, தொடக்கமாக 13000 கோடி ரூபாய் முதலீட்டை கோரும் இத்திட்டத்தை 10,000 மெகாவாட் அளவுக்கு முன்னேற்றுவதற்கு 40,000 கோடி ரூபாய் தேவைப்படுகின்றது. இத்திட்டம் கட்ச் மின் உற்பத்தி நிறுவன கழகம் என்னும் அதானி குழுமத்தின் துணை நிறுவனம் சார்பாக நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது. மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்வு ஆகிய பொறுப்பை இந்நிறுவனமே மேற்கொள்ளும். இதற்காக கட்ச் பகுதியில் பத்ரேஸ்வர் என்னும் இடத்தில் நிலத்தை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த திட்டத்திற்கு தம் ஆட்சேபனையை தெரிவித்திருப்பதோடு, தங்களுடைய வாழ்வாதாரமும், வாழ்விடமும் பாதிக்கப்படும் என்று மீனவர்களும், உப்பள ஊழியர்களும் குஜராத் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மக்கள் தொடர் கடிதங்களும், மனுக்களும் எழுதியிருக்கின்றனர். (தமிழக மீனவர்களை மோடி பாதுகாப்பார் என்ற பிரச்சாரம் எத்தனை பிம்மையானது என்பதை இந்தப் பின்னணியில் பார்க்கும்போது புரியும்) ஊதிப் பெருக்கப்படும் உலக நாயகன் மோடி ஏழை மக்கள் சார்பாக நிலைப்பாடு எதையும் எடுக்கவில்லை. அவரது பார்வையில் ஏழைகள் என்பவர்களே அதானியும், அம்பானியும் தானே.
ஏழைகளுக்கான அரசு, ஏழைகளின் அரசு என்றெல்லாம் நாடாளுமன்ற வளாகத்தில் கண்ணீர் விட்டு அழும் மோடியின் நண்பரான அதானியின் குழுமத்தின் நிகர லாபம் 2529 கோடிகள்(மார்ச் 31ல் முடிந்த நான்காவது காலாண்டு) , அதற்கு முந்தைய ஆண்டில் 585.52 கோடி ரூபாய் நட்டம் என்பது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால், மோடியின் குஜராத் அரசு இப்படியான ஏழைகளுக்குத்தான் உதவி செய்யும் என்பது கடந்த கால வரலாற்றை கொஞ்சம் அடிப்படை அறிவோடு கற்பவர் அறிந்து கொள்ளக் கூடிய எளிய உண்மையாகும்.
மக்களை தன் பக்கம் வைத்துக் கொள்ள மோடி வகையறாக்கள் கைகொள்வது சொல்வீச்சுதான். அதுவும் மக்களை தங்கள் அன்றாட அடிப்படை பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பி ‘கோவில் கட்டுறேன், கூடாரம் கட்டுறேன்’ என்று சிறுபான்மை மக்களை கை காண்பித்து அவர்களோடு குடுமி பிடி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது, எவ்வித தடையும், எதிர்ப்பும் இல்லாமல் நாட்டை கூறுபோட்டு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு விற்று, அவை நம்மை கொள்ளையடிக்கும் படி சேவை செய்து தன்னுடைய பிறவிக்கடனை இந்த காவிப்படைகளின் அடியாள் செவ்வனே செய்து முடிப்பார். இதற்கு வலு சேர்க்கும் விதமாக, மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு செப்டம்பர் 13,2013 க்கு பிறகு 6 பில்லியன் டாலரை தன்னுடைய வளத்தில் சேர்த்துக் கொண்டார் என்று ப்ளூமெர்க் பத்திரிக்கை சொன்னதில் வியப்பேதுமில்லை. அம்பானியால் மட்டும்தான் இது சாத்தியமாயிற்றா என்றால், மோடியின் ‘ஏழை’ நண்பன் அதானியும் இது போன்ற சாதனையை செய்திருக்கின்றார். அதாவது, செப்டம்பர் 13 இல் 1.9 பில்லியன் டாலராக இருந்த அவரது சொத்து மதிப்பு, 7.6 பில்லியன் டாலராக, ஏறக்குறைய 4 மடங்காக உயர்த்தியிருக்கின்றார்.
எப்படியென்று யாரும் கேக்காதீர்கள், கடின உழைப்பு என்று வியாக்யானம் செய்வார்கள் … மக்களுக்கு தேசபக்தி போதையேற்றி, பாகிஸ்தான் எதிரி நாடு, இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்று பஞ்ச் டயலாக் பேசும் இவர்கள், தன்னை வழிநடத்தும் முதலாளிகளுக்கு சேவகம் செய்ய தேசம் கடந்து வாசல் திறந்துவிடுவதையும், தேசபக்தி என்பது மக்களை ஏய்க்கும் முதன்மை கருவியாக இருப்பதையும் இந்தச் சூழலில் அன்பர்களும், நண்பர்களும் புரிந்து கொள்ள வேண்டுமென்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம். மோடி வகையறாக்கள் ஆளும்வரை முதலாளிக்கான நல்ல நாள் வந்துவிட்டது என்று அந்த ஆளும் வர்க்க கும்பல் நம்பத்தான் செய்யும். ஆனால், நமக்கான நல்ல நாள் வர நாம்தான் கடுமையாக உழைத்தாக வேண்டும். இந்த முதலாளிகளின் ஆட்சியை வீழ்த்தியே ஆக வேண்டும்.
——
நன்றி: ட்ரூத் ஆஃப் குஜராத் இணையம்.

கருத்துகள் இல்லை: