தலித் ஆண்களை அர்ச்சகர்களாக்குவோம் என்ற மோடியின் அறிவிப்பு வரவேற்கத் தக்கதாக தோன்றினாலும், அது குஜராத்தில் கடுமையான தீண்டாமை கொடுமைக்கு உள்ளாகும் வால்மீகி சமூகத்தின் உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பும் மோசடி தவிர வேறென்றும் இல்லை. தலித் மக்கள் வரலாற்று ரீதியாக சந்தித்து வரும் கொடுமைகள் குறித்து மோடி இதுவரை பேசியதேயில்லை என்று கூறலாம். ஆக, இது தலைப்பு செய்திகளில் இடம்பெறும் உள்நோக்கம் கொண்ட பச்சை இரட்டை வேடமன்றி வேறில்லை.
ஒளிரும் குஜராத் குறித்து தொடர்ந்து ஊடகங்கள் நிரம்ப பேசிவிட்டன. இது ஊடகங்கள் மறைத்து வைத்த அசிங்கத்தை அம்பலப்படுத்த வேண்டிய தருணம். தலித் இளைஞர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்கும் புரட்சியை செய்ய கிளம்பியுள்ள(!) ‘இந்து இதயங்களின் சாம்ராட்’ மோ(ச)டியை அம்பலப்படுத்த வேண்டிய தேவையின் பொருட்டே இந்தக் கட்டுரை.
இந்தக் குறிப்பிட்ட திட்டத்திற்காக மோடியின் அரசு ஒதுக்கியுள்ள தொகை 22.50 லட்சம். பெருமுதலாளிடாட்டாவின் நானோ கார் தொழிற்சாலைக்கு மோடியின் அரசு பிப்ரவரி மாதம் வழங்க ஒப்புக் கொண்டிருக்கும் கடன் தொகை ரூ.545 கோடி. முதலாளிகளுக்காக கோடிகளை ஒதுக்க முடிந்த மோடிக்கு,தலித் மக்களின் சுயமரியாதைக்கான திட்டமென்று பீற்றிக் கொள்ளும் திட்டத்திற்கு சில லட்சங்களை மட்டும் ஒதுக்கியிருப்பதே மோடியின் அக்கறையின் லட்சணத்தை புரிந்து கொள்ள போதுமானது.
இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுகின்ற மாணவர்களுக்கு சமஸ்கிருத அறிவு ஊட்டப்படுவதன் மூலமாக அவர்கள் சுயமாக பூஜை, புனஸ்காரங்களில் ஈடுபட இயலும். இதற்கான பயிற்சி சோம்நாத் சமஸ்கிருத வித்யா பீடத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே, சமூக சமத்துவத்திற்கான முன்னெடுப்பா அல்லது இந்து சமூகம் செய்யும் கொடுமைகளிலிருந்து விடுபட, இந்து மதத்தை விட்டு வால்மிகி சமூகம் வெளியேறிவிடாமல் தடுக்கும் கயமைத்தனமா? (சுய விருப்பத்தோடு மதமாறும் உரிமையை தடுக்க பாஜக கும்பல் தீட்டியுள்ள திட்டமென்று இதை புரிந்து கொள்ளலாமா?)
மோடிக்கு ஜால்ரா தட்டும் காவி ஆதரவாளர்கள் மோடியை புரட்சியாளராகவும், சீர்திருத்தவாதியாகவும் விளம்பரப்படுத்துகிறார்கள். சிலரோ, அவர் பிற்படுத்தப்பட்டவர் ஆகையால், தலித் மக்களையும் பிற்படுத்தப்பட்டவர்களையும் சுயமரியாதையோடு இந்து சமூகத்தில் வாழ வைக்கும் முயற்சி என்று புகழ்கிறார்கள். வால்மீகி சமூகத்தினிரிடையே ஒரு கூட்டத்தில் பேசும் பொழுது, “நீங்கள் ‘நகரத்தின் அர்ச்சகர்கள்’, நகரத்தை சுத்தப்படுத்தும் நீங்கள் அர்ச்சகர்களை விட உயர்ந்தவர்கள்” என்றார் மோடி.அவருடைய சொற்கள் கேட்க இனிப்பாகத்தான் இருக்கின்றது. (ஆனால், மலமள்ளும் தொழிலாளர்கள் அதே கையோடு தேனை தொட்டு சாப்பிட முடியுமா என்ன?). இதுபோன்ற கரிசனங்களின் போர்வையில் மோடி சாதிக்க விரும்புவது என்ன? அதை புரிந்து கொள்ள, சமீபத்தில் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் சிக்கிய ஆசாராம் பாபுவோடு கலந்து கொண்ட ‘சபரி மேளா’வில் மோடி பேசியதை நினைவில் கொள்ளுதல் சிறந்ததாக இருக்கும்.
“பழங்குடியினர்களுக்கு மருத்துவ உதவிகளையும், உணவையும் வழங்கி வேறு மதத்திற்கு மாற்றுவதை இனி சகித்துக் கொள்ள முடியாது. இது சொந்த மதத்திற்கு திரும்பும் காலம் வந்துவிட்டது.” (இணைப்பு)
எது சொந்த மதம்? அப்படி இவர்கள் சொல்லும் சொந்த மதத்திற்கு திரும்பினால் என்ன சுயமரியாதை இருக்கும்.என்ன சாதியில் சேர்த்துக் கொள்வார்கள்? இந்து மதத்திற்கு மாறுவதால் என்ன பொருளியல்,வாழ்வியல் முன்னேற்றம் நிகழ்ந்துவிடப் போகின்றது. இவர் மதம் மாறுவதை சாப்பாட்டுக்காக மதம் மாறுபவர்கள் என்று இழிவுப்படுத்துவதற்கு? இவர் யார் மதம் மாறுவதை சகித்துக் கொள்ளாமல் இருக்க,இவருக்கும் நமக்கும் என்ன தொடர்பு? கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால்
‘எங்கள் அடிமைகள் மதம் மாறிய ஒரே காரணத்தினால் எப்படி சுயமரியாதை கோரலாம், எங்கள் அடிமைகளை நாங்கள் இழக்க தயாராக இல்லை.’ என்னும் வக்கிரம் தவிர வேறென்ன வெங்காயமிருக்கின்றது இந்த உரையில்…இதையொட்டி, இந்த தலித் அர்ச்சகர் திட்டத்தை பரிசீலித்தால் தலித்துகள் இந்து மத சங்கிலிக்குள் பிணைத்து வைக்கும் திட்டத்தை புரிந்து கொள்ளும் எளிதாகும்.புரிதலை இன்னும் எளிதாக்க இன்னும் சில தகவல்களை சரி பார்ப்போம்.
இந்தியாவை வல்லரசாக்குவோம், சமத்துவம் படைப்போம் மேடை போட்டு விளம்பரம் பேசும் மோடியின் குஜராத்தில், அனைத்து சமூகத்தினரும் துப்புறவு பணியில் ஈடுபடவில்லை மாறாக, அங்கும் மனுதரும சிந்தனையின்படி தீண்டப்படாத வால்மீகி சமூகம்தான் துப்புறவு தொழிலில் ஈடுபடுகின்றது.
‘அகமதபாத் நகரத்தை 2031க்குள் கழிவில்லா நகரமாக மாற்றும் தொலைநோக்கு திட்டம்’என்று ஒரு அதிகாரப்பூர்வ ஆவணமொன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையின்படி ஒவ்வொரு மாதமும்1,10,667 மெட்ரிக் டன் திட கழிவை அகமதாபாத் நகரம் வெளியேற்றுவதாகவும், அதில் 1,08,454 மெட்ரிக் டன் அளவுக்கு மனிதர்களே அள்ளுகின்றனர். ஆனால், எங்கேயும் துப்புறவு தொழிலாளிகளின் பாதுகாப்பு குறித்து எங்கும் தெரிவிக்கப்படவில்லை.
1992 ஆம் ஆண்டு குஜராத் அரசு மனித கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை ஒழித்து விட்டதாக அறிவித்தது. 2001 ஆம் ஆண்டுதான் மோடி குஜராத்தில் ஆட்சிக்கு வந்தார். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 2500வீடுகளில் மனிதர்களே கையால் மலம் அள்ளும் அவலம் தொடர்வதாக தெரிவிக்கின்றது. மானவ் கரிமா என்னும் ஒரு அமைப்பு நடத்திய ஆய்வின்படி அகமதாபாத் நகரத்தில் மட்டும், 126 இடங்களில் மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலம் தொடர்வதையும், 188உலர் கழிப்பிடங்கள் உள்ளதாக அம்பலப்படுத்தியது . அதை குறித்து, தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு ஒரு மனுவை கையளித்தது. இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மோடியின் தலைமையிலான அரசு 1993 ஆண்டு சட்டத்தை எங்கள் அரசு முழுமையாக நடைமுறைப்படுத்துகின்றது என்றும், அதன் படி மனித கழிவை மனிதனே அள்ளும் நிலை குஜராத்தில் இல்லையென்றது. (இணைப்பு)
மோடி மாயையை விலக்கி மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் ஏராளம் உண்டு. நடுநிலை ஊடகங்கள் கண்ணை மறைக்கும் காவிப்புழுதியை கிளப்பி நம்மை ஏய்க்க பார்க்கின்றன. இந்தியாவை காப்பாற்ற வந்த அவதாரம் போன்று பிரச்சாரம் செய்யும் மோடி ஆட்சி செய்யும் குஜராத்தில் 64 லட்சம் வீடுகளுக்கு கழிவுகளை வெளியேற்றும் சாக்கடை வசதிகள் இல்லை, 52 லட்சம் வீடுகளுக்கு கழிவறைகள் இல்லை. (கேரளாவில் 71% வீடுகளுக்கு கழிவறை வசதிகள் இருப்பதும், பிற மாநிலங்கள் குஜராத்தைவிட முன்னேறியிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.) கழிவறை வசதிகள் கூட உருப்படியாக இல்லையென்றால், என்ன பொருள்? மோடி ஆட்சி செய்யும் குஜராத்தில் மக்கள் வெட்ட வெளியில் ‘கக்கா’ போகின்றார்கள் என்பதுதானே. ஆனால், இதை சரிசெய்யும் நோக்கமெல்லாம் இல்லாத மோடிக்கு இருப்பதெல்லாம் காவி திமிர்தான். அதற்கு உதாரணம் கீழ்க்கண்ட உளறல்
“ஒரு சமூகம் தன் பெண்களை பொதுவில் செல்லும் போது புர்கா அணியச் சொல்கின்றது. ஆனால், அதே பெண்கள் காலைக் கடனை கழிக்க காடுகளுக்குத் தான் செல்ல வேண்டியிருக்கின்றது.” (இணைப்பு)
மேற்கண்ட உளறலில் இஸ்லாமிய சமூகத்தை இழிவுப்படுத்தும் மோடி தலித் மக்களை துப்புறவு தொழில் தள்ளிய பார்ப்பனியத்திற்கு எப்படி விளக்கு பிடிக்கின்றார் தெரியுமா?
“தலித் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களுக்காக மட்டும் துப்புறவு பணிகளை செய்து வருகின்றார்கள் என்று நான் நம்பவில்லை. அது, வாழ்வாதாரத்திற்கானதாக இருந்திருந்தால் தலைமுறை, தலைமுறையாக அதே தொழிலை செய்து வந்திருக்க மாட்டார்கள். ஒரு குறிப்பிட்ட காலக்கட்ட்டத்திற்கு பிறகு யாராவது ஒருவருக்கு திடீர் அறிவொளி வந்து, நாம் செய்யும் தொழில் ஒட்டுமொத்த சமூகம் மற்றும் கடவுளின் மகிழ்ச்சிக்கானது. ஆகையால், கடவுளால் அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த தொழிலை, பல நூற்றாண்டுகளாக ஒரு ஆன்மீக பணியாகவே செய்து வருகின்றார்கள். அதனால்தான், தலைமுறை தாண்டியும் அவர்கள் மட்டும் செய்யும் தொழிலாகவே நீடிக்கின்றது. எனவே, வேறுவழியில்லாமல், வேறு தொழிலில்லாமல் இந்த தொழிலை மேற்கொண்டார்கள் என்பது நம்புவதற்குரியதாக இல்லை.”
என்ன திமிர் பார்த்தீர்களா? கழிவறை கட்ட வக்கில்லாதவ ஒருவர், தன் ஆளுகைக்குட்பட்ட பெண்களை இழிவுப்படுத்தும் முறையை பார்த்தீர்களா? தலித் மக்களின் வலியை ஏதோ அவர்கள் வாங்கி வந்த வரம் போல திரிக்கும் கயமைத்தனத்தையும் பாருங்கள். கேட்டால் சிறந்த நிர்வாகியென்று மோடியின் தமிழ்நாட்டு தரகர் ‘தமிழருவி மணியன்’ ஊரெங்கும் கூவிக் கொண்டு திரிகிறார். இந்த மோடிதான் ஒளிரும் குஜராத்தை உருவாக்கியிருக்கிறாம்.
அதையெல்லாம் விடுங்கப்பா என்ன இருந்தாலும், இந்த அர்ச்சகர் திட்டம் வரவேற்கத் –தக்கதுதானே என்று சிலர் இன்னும் மோடியின் காவிக் கொடிக்கு கையசைத்துக் கொண்டிருக்கலாம். வால்மீகி சமூகத்தை அர்ச்சகராக்கும் திட்டத்தை அமுல்படுத்தும் மோடிக்கு அந்த சமூகத்தின் மீது எந்த பெரிய அக்கறையுமில்லை என்று புரிந்து கொள்ள மேலும் சில தரவுகளையும் நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்.
- நவ்ஷ்ர்ஜன் என்னும் அமைப்பு 2010 ஆம் ஆண்டு 1589 கிராமங்களை ஆய்வு செய்தது, அவற்றில் 98%கிராமங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுகின்றது.
- நாட்டை தூய்மைப்படுத்தும் அர்ச்சகர்கள் என்று மேடையில் புகழும் மோடியின் அரசின் கீழ் துப்புறவு தொழிலாளர்களுக்கு அரசு வேலை கூட கிடையாது பெரும்பாலானவர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள்தான். ஊதியமோ மாதம் நாளைக்கு 50-100 ரூபாய்தான் கொடுக்கிறாங்க.(இணைப்பு)
- முடிவெட்டுவதற்கு கூட சாதி பார்க்கும் குஜராத்தின் சாதி இந்துக்கள் கொடுக்கும் மன உளைச்சல் தாளாமல் 200 குடும்பங்கள் பௌத்தத்திற்கு மாறியிருக்கின்றார்கள். (இணைப்பு)
- தலித் குழந்தைகள் துப்புறவு வேலை செய்ய பணிக்கப்படுகின்றார்கள். (இணைப்பு)
- ஒரு தலித் மைனர் பெண் வன்புணர்ச்சிக்குள்ளானதை கண்டித்து தலித் மக்கள் ஆர்பாட்டம் நடத்தினால் காவல்துறை லத்தி சார்ஜ் செய்கின்றது. (இணைப்பு.1, இணைப்பு.2)
- ஒரு தலித் குடும்பத்தை ஊரை விட்டு காலி செய்ய சொல்லிய ஆதிக்க சாதி பஞ்சாயத்து. (இணைப்பு)
- குஜராத் மற்றும் ராஜஸ்தானில் செய்யப்பட்ட ஆய்வு, 90 விழுக்காடு தலித் குழந்தைகள் மருத்துவத்தின் போதும், 80 விழுக்காடு தலித் குழந்தைகள் ரத்த பரிசோதனை போன்ற மருத்துவ பரிசோதனைகளின் போதும் பாகுபாடுகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர், என்று தெரிவிக்கின்றது.
- 2010 ஆம் ஆண்டு யுனிசெப் நிறுவனம் நடத்திய ஆய்வில் 1298 தடவை மருந்து வழங்கப்பட்ட குழந்தைகள், 1181 தடவை பாகுபாடுகளுக்கு உள்ளாகியிருக்கின்றார்கள். 10 இல் 6 தடவை தலித் குழந்தைகள் பாகுபாடுகளுக்கு உள்ளாகின்றார்கள் என்றும் தெரிவிக்கின்றது. (இணைப்பு)
- தலித் மக்களுக்கு மோடியின் குஜராத்தின் குடிக்க தண்ணீர் இல்லை. இது குறித்து குரல் கொடுத்தால் மேல்சாதி மக்களின் முதல்வரான மோடிக்கு களங்கம் ஏற்பட்டுவிடும், இதன் காரணமாக எங்களை அவர்கள் தாக்கக் கூடும் என்பதால் மவுனம் காத்ததாக சொல்கிறார்கள். (இணைப்பு)
இன்னும் அச்சில் ஏறாத, இங்கே பட்டியலிடப்படாத, பொதுவெளிக்கு வராத கொடுமைகள் ஏராளம் குஜராத்தில் உண்டு. ஒவ்வொரு சாதியும், ஒரு தேசமாக இருக்கின்றதென்றார் அண்ணல் அம்பேத்கர்.அதற்கு குஜராத்தொன்றும் விதிவிலக்கல்ல. இந்த கோரமான உண்மையை மறைக்கத்தான் இந்து முஸ்லீம் கலவரமும், இந்து ஒற்றுமையை இந்துத்வ கும்பலால் கோரப்படுகின்றது.
எப்பொழுதெல்லாம் தலித் மக்களோ, பிற்படுத்தப்பட்டவர்களோ தமது உரிமைக்காக போராட தொடங்குகின்றார்களோ அப்பொழுதெல்லாம் ஒரு மதக்கலவரத்தை ஏற்படுத்தி தம் உரிமைகள் மீதான கவனத்திலிருந்து ஒடுக்கப்பட்டவர்களை திசை திருப்பி, இஸ்லாமியர்களை பொது எதிரியாக்கி தம் சகோதரர்களை வெட்டி சாய்க்க செய்து, வாக்கு சேகரித்துக் கொள்ளும் இந்துத்வ கும்பல். (எ.கா: மண்டல் கமிசன் அறிக்கைக்கு பின்பாக பாபர் மசூதி இடிக்கப்பட்டதும், இந்து முஸ்லீம் கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டதும்).
தலித் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் . கார்ப்பரேட்டுகளாலும், காவித் தீவிரவாத கும்பலாலும் ஊதிப்பெருக்கப்படும் மோடியின் பலூனில் ஊசியை ஏற்றி அதை உடைக்கும் கூடுதல் பொறுப்பு தலித் மக்களுக்கு இருக்கின்றது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை 25% தலித் மக்கள் மற்றும் பழங்குடியினர்களின் என்ணிக்கை இருப்பதாக தெரிவிக்கின்றது. தெகல்காவின் கட்டுரையின் படி இதுவரை 12% தலித்துகளின் வாக்குகளை பாஜக மட்டுமே பெற்றிருகின்றது. (இணைப்பு) அது மட்டுமில்லாமல் 189 தொகுதிகளில் வெற்றி வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் ஆற்றல் முஸ்லிம்களுக்கு இருக்கின்றது என்றும் தெகல்காவின் ஆய்வு தெரிவிக்கிறது. (இணைப்பு) இந்த வாக்குகள் மதவாத, மக்கள் விரோத கும்பலுக்கு கிடைக்காமல் செய்வதோடு, இதர ஜனநாயக சக்திகளோடு இணைந்து பாஜக கும்பலை மண்ணை கவ்வ வைப்பது நமது கடமை. இணைந்து பணியாற்றுவோம். சோர்வடையாமல் சிந்தித்து பணி புரிந்தால் இது வெகு எளிதான வேலையே.
நன்றி :மாற்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக