திங்கள், 5 ஜனவரி, 2015

கூலிக்கு மாரடிக்கிறவனுக்கு எதுக்கு சுயமரியாதை - லிபரல்வாதிகள்


வேலையிலிருக்கும் தொழிலாளர்கள் இடம் மாறுகிறார்களே, முதலாளிக்கு மட்டும் பணி நீக்கம் செய்வதற்கு உரிமை இல்லையா? என்று லிபரல்கள் என்று கூறிக்கொள்ளும் தாராளவாதிகள் எப்போதும் போல முதலாளிகளுக்கு ஆதரவாகவே பேசுகிறார்கள். கொஞ்சம் நெருக்கி கேட்டால் நாங்கள் முதலாளிகளுக்கு ஆதரவானவர்கள் இல்லை, இந்தியாவில் இருப்பது க்ரோனி கேபிடலிசம்’ என்று கூறி தென்கொரியா, ஜப்பான் என்று கதை விடுகிறார்கள். அங்கும் அமெரிக்காவின் ஆதிக்கம் இருக்கிறதே என்று கேட்டால், பல்வேறு இணைப்புகளை தேடியெடுத்து அள்ளி வீசிச்செல்கிறார்கள்..

வேலையிலிருந்து தொழிலாளர்கள் வேறு வேலைக்கு செல்வது  ஏன்? கூலிக்காகத்தானே வேறு வேலைக்கு செல்கிறார்கள். கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் முதலாளிகள், உற்பத்தியிலிருந்து கிடைக்கும் லாபத்தை பெருவாரியாக சுருட்டிக் கொள்வது  ஏன்  என்ற கேள்வியை  ஏன் இவர்கள் கேட்பதில்லை. 2 பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான ஊதியத்தில் 4 பொருட்களை முதலாளிகள் ஊழியர்களிடமிருந்து உற்பத்தி செய்து கொள்வது  ஏன் போன்ற அறம் சார்ந்த எந்த கேள்வியையும் கேட்காமல்…தொழிலாளர்களிடம் வந்து அற போதனை செய்வது ஏன்?

இதிலே நுட்பமாக ஒரு கேள்வியை முன்வைக்கிறார்கள். ”ஒரு தொழில் முனைபவர் தொழில் தொடங்கி லாபம் பார்க்கும் முன்னரே, அவருடைய தொழிலகத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் கூலி பெறுகிறார்களே?” ஒரு தொழில் முனைபவர் லாபம் பார்க்கும் நோக்கத்தில்தான் ஒரு தொழிலை செய்கிறார், லாபத்தை பகிர்ந்து கொள்ளப் போவதில்லை என்ற அடிப்படையில் பிறரின் உழைப்பை, கூலிக்கு மீறி உறிஞ்சும் போது, தொழிலாளர்கள் கூலியை பெறுவதே அறத்திற்கு மீறியதாகுமா?

அதோடு, தொழில் முனையும் ஒருவர்  எங்கிருந்து அந்த மூலதனத்தை திரட்டினார். அது அறத்திற்கு உட்பட்டதுதானா? என்ற கேள்விகளெல்லாம் நாம் இவர்களிடம் கேட்டால் பதிலேயிராது..

டி.சி.எஸ் என்னும் நிறுவனம் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளின் தொழிலாளிகளின் வயிற்றில் அடித்து கிடைக்கும் வேலையைத்தான் இங்கு கல்வி சந்தை உற்பத்தி செய்யும் அடிமைகளின் வழி குறைந்த கூலிக்கு செய்து கொள்கிறார்கள் என்பது தெரிந்திருந்தும், டி.சி.எஸிடம்  ஏன் அறம் பேசுவதில்லை?

இவர்கள் அறமே பேசுவதில்லையா என்ற கேள்வி வரலாம்..சில நேரம் பேசுவார்கள்தான்.. கேவலமான, முட்டாள்தனமான விவசாய கொள்கையின் வழி மக்களை விரட்டியடிக்கும் போது, அந்த விவசாய கொள்கைகளை குறித்து கேள்வி கேட்காமல், விவசாயிகளுக்கு ஆதரவாக நில்லாமல், குறைந்த கூலிக்கு பிற மாநில நகர்புறங்களில் கொத்தடிமையாக பணி புரியும் போது, எவ்வளவு வேலை வாய்ப்பு உருவாகியிருக்கிறது என்று புளங்காகிதமடைவார்கள்.

கிராமத்தின் நிலவுடமை கட்டமைப்பிலிருந்து இந்த கூலிகளுக்கு விடுதலை வழங்கியது இந்த முதலாளித்துவம்தானே என்று நியாயம் போல ஒன்றை பேசுவார்கள்….அன்றிலிருந்து இன்றுவரை நிலவுடமை நிலவுகிறதே? அதற்கெதிராக இந்த தாராளவாதிகள் என்ன செய்தார்கள் என்ற கேள்வியை நீங்கள் எழுப்பினீர்கள் என்றால்…ஒரு பதிலும் இராது… தற்பொழுதும் நிலவுடமை ஆதிக்கம் செலுத்தும் மேற்கு மாவட்டங்களுக்கு சென்று அமைப்பு கட்டி போராடுவார்களா என்றால் அதுவும் கிடையாது….ஆனால், ஒரு தீர்வு சொல்வார்கள்.. ஏன் கிராமத்தில் இருக்கிறார்கள்…கிராமத்தில் அடிமையாக இருப்பதற்கு மாறாக, நகரத்தில் அடிமையாக இருந்துவிட்டு போகலாமே? ஒப்பீட்டளவில் நகரத்தில் அடிமைத்தனம் குறைவே என்று அடிமையாக இருப்பதற்கு இலவச பயிற்சி வழங்குவதில் முன்னணியில் நிற்பார்கள்?

உரிமையை பெறுவதில் முன்னணியில் நில்லாதவரை, இதுபோன்ற தாராளவாதிகள் தாராளமாக ஆலோசனை வழங்கிக் கொண்டே, நம்மை அடிமைப்படுத்திவிடுவார்கள்...எச்சரிக்கை!!!

கருத்துகள் இல்லை: