எந்த விஷயத்துக்கும் கொள்கைகளுடன் அனுபவ ஞானமும் இருந்தால்தான் அதை மனிதத்தன்மை என்று சொல்லலாமே ஒழிய, மற்றபடி அனுபவ சாத்தியத்துக்கு இணங்காத கொள்கைகள் எதுவானாலும் அதைப் புஸ்தகப் பூச்சி என்றுதான் சொல்ல வேண்டும்; அல்லது வெறும் அபிப்பிராயத்துக்கு மாத்திரம் பெறுமானவர்களே ஒழிய, காரியத்திற்குப் பெறுமானவர்கள் அல்ல என்று சொல்ல வேண்டும்.
வெளிப்படையாய் நாம் பேசுவதானால், அம்பேத்கரும், அவரைப் பின்பற்றுவோரும் நாஸ்திகர்களாவதற்கும், மதமில்லாதவர்கள் ஆவதற்கும் இஷ்டமில்லாமல், அவர்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்காக முகமதியராகி விடலாம் என்று அவர்கள் கருதினால், அதில் நமக்கு இருக்கும் ஆட்சேபனை என்ன என்று கேட்கின்றோம்.
முகமதிய மதத்தில் பல கெடுதிகள் இருக்கலாம்; கோஷம் இருக்கலாம்; கடவுள் இருக்கலாம்; மூடநம்பிக்கை இருக்கலாம்; மதச் சின்னம், மதச் சடங்கு இருக்கலாம்; சமதர்மமில்லாமலும் இருக்கலாம். இதெல்லாம் யாருக்குக் கூடாது? சுயமரியாதைக்காரருக்கு கூடாததாய் இருக்கலாம். மற்றும் பெண்ணுரிமை மாத்திரம் பேணுவோருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; மூடநம்பிக்கை அனுஷ்டிக்காதவர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; மதவேஷமும் பயனற்ற சடங்கும் வேண்டாதவருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; நாஸ்திகர்களுக்கும், பகுத்தறிவுவாதிகளுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; சமதர்மவாதிகளுக்கும், பொதுவுடைமைக்காரர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்.
ஆனால், தீயர்கள், பறையர்கள், புலையர்கள், நாயாடிகள் என்று அழைக்கப்படுகின்ற ஒதுக்கப்பட்டிருக்கின்ற, தாழ்த்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு, நாயிலும், மலத்திலும், புழுத்த விஷக்கிருமிகளிலும் கேவலமாக மதிக்கப்பட்டு வருகிற மக்களிடம் தங்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிந்தால் போதும் என்று கருதிக்கொண்டிருக்கும் மக்களிடம் நமக்கு வேலை உண்டா இல்லையா என்று கேட்கின்றோம்.
ஏனெனில், அவன் கிறிஸ்தவனாகி, கிறிஸ்தவப் பறையன், கிறிஸ்தவச் சக்கிலி, கிறிஸ்தவ பிள்ளை, கிறிஸ்தவ நாய்க்கன் என்று தீண்டாதவனாகவே இருப்பதைவிட, பறத்துலுக்கன் என்றோ, சக்கிலிய முகமதியன் என்றோ, தீய முஸ்லிம் என்றோ அழைக்க இடமில்லாமலும் அழைக்கப்படாமலும் இருக்கும்படியான நிலையிலும் மற்றசமூகக்காரர்களோ மதக்காரர்களோ அவ்வளவு சுலபமாக இழிவுபடுத்தவோ, கொடுமையாய் நடத்தவோ முடியாத சுயமரியாதை அனுபவமும் உள்ள நிலையிலும் இருக்கும் ஒரு மதத்திற்கு, "எப்படியாவது தீண்டாமையை ஒழித்துக் கொள்ள வேண்டும்'' என்கின்றவன் போனால், இதில் சுயமரியாதைக்காரனுக்கு என்ன நஷ்டம் என்று கேட்கின்றோம். அன்றியும், "சரி, எப்படியாவது சீக்கிரத்தில் தீண்டாமையை ஒழித்துக் கொள்'' என்று சொல்வதிலும் என்ன தப்பு என்றும் கேட்கின்றோம்.
நமக்குக் கடிதம் எழுதின நண்பர், "இந்து மதத்தில் தீண்டாமை இருக்கிறது; இஸ்லாம் மதத்தில் பார்க்காமை இருக்கிறது; பெண்களுக்கு உறை போட்டு மூடிவைத்து இருக்கிறார்கள்'' என்று எழுதி இருக்கிறார். அது (உறை போட்டு வைத்திருப்பது) உண்மை என்றும், தவறானது என்றுமே வைத்துக் கொள்ளுவோம். இது, பெண்ணுரிமை பேணுவோர்கள் கவனிக்க வேண்டிய காரியமே ஒழிய, தீண்டாமை விலக்கு மாத்திரம் வேண்டும் என்று கருதுகின்றவர்கள் யோசிக்க வேண்டிய காரியம் அல்ல என்பது நமது அபிப்பிராயம்.
இந்து மதம் சீர்திருத்தம் அடைந்து வருகிறது என்றும், தீண்டாமை ஒழிக்கப்பட்டு வருகிறது என்றும், சில மூடர்களும், சூழ்ச்சிக்காரர்களும் சொல்லுகிறார்கள். அதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்து மதம் சீர்திருத்தமடைந்து வரவில்லை; இந்து மதம் ஒழிந்து வருகின்றது என்றுதான் சொல்லுவோம். இந்து மதத்தில் சீர்திருத்தத்திற்கு இடமில்லை; அதைச் சீர்திருத்தம் செய்ய யாருக்கும் அதிகாரமும் இல்லை. இந்து மத ஆதாரங்கள் என்பவை அம்மத வேதம், சாஸ்திரம், புராணம் என்று சொல்லப்படுபவைகளைப் பொறுத்ததே ஒழிய, சாமிகள் என்றும், மகாத்மாக்கள் என்றும், தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொள்ளும் சில விளம்பரப் பிரியர்களைப் பொறுத்தது அல்ல.
இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு அனுகூலம் செய்ய, சில தீவிர சுயமரியாதைக்காரர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளுகின்றவர்கள், அம்பேத்கர் வேறு மதத்துக்குப் போவதை அனுமதிக்கக் கூடாது என்றால் அது நியாயமாகுமா? அல்லது ஒன்றும் பேசாமல் சும்மா இரு என்பதுதான் நியாயமாகுமா? ஆதலால், அம்பேத்கருடைய முடிவை நாம் மனமார ஆதரிப்பதுடன், அம்முடிவுப்படி சரியான செயலுக்கு நம்மாலான உதவியளிக்க வேண்டியதும் ஒவ்வொரு சுயமரியாதைக்காரருடையவும் கடமையாகும் என்பது நமது அபிப்பிராயம்.(17.11.1935 "குடி அரசு' இதழில் எழுதிய தலையங்கம்)
நன்றி : கீற்று