“செந்தமிழை; செந்தமிழர் நாட்டைச் சிறை மீட்க
நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று
குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே.”
“பொதுவுடமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம்
புனித மோடதை எங்கள் உயிரென்று காப்போம்
உடலைக் கசக்கி உதிர்த்த வேர்வையின்
ஒவ்வொரு துளியிலும் கண்டேன்
இவ்வுலக உழைப்பவர்க்கு உரியதென்பதையே.”
“கைத்திறனும், வாய்த்திறனும் கொண்ட பேர்கள்
கண்மூடி மக்களது நிலத்தை யெல்லாம்
கொத்திக் கொண்டு ஏப்பம் விட்டு வந்ததாலே
கூலி மக்கள் அதிகரித்தார், என்ன செய்வேன்
பொத்தல் இலைக் கலமானார் ஏழை மக்கள்
புனல் நிறைந்த தொட்டியைப் போல் ஆனார் செல்வர்.”
“இந்த நிலை இருப்பதனால் உலகப்பா நீ
புதுக்கணக்கு போட்டுவிடு; பொருளையெல்லாம்
பொதுவாக எல்லோர்க்கும் குத்தகை செய்.”
“பஞ்சமோ பஞ்சம் என்றே – நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்தே
துஞ்சி மடிகின்றாரே – இவர்
துயர்களை தீர்க்க ஒர் வழியில்லை - அந்தோ
நெஞ்சு பொறுக்குதில்லையே.”
“ஆடுகிறாய் உலகப்பா யோசித்துப்பார்
ஆர்ப்பாட்டக்காரர் இதை ஒப்பாரப்பா
தேடப்பா ஒரு வழியை என்று சொன்னேன்.”
“ஓடப்பாயிருக்கும் ஏழையப்பர்
உதையப் பராகிவிடில் ஓர் நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆகிடுவர் உணரப்பா நீ”
“சதுர் வர்ணம் வேதன் பெற்றால்
சாற்றும் பஞ்சமர் தம்மை
எது பெற்று போட்டதடி - சகியே
எது பெற்று போட்டதடி?”
“ஊரிற் புகாத மக்கள்
உண்டென்னும் மூடர் – இந்த
பாருக்குள் நாமேயடி – சகியே
பாருக்குள் நாமேயடி”
“குக்கலும் காகமும் கோயிலிற் போவதில்
கொஞ்சமும் தீட்டில்லையோ? – நாட்டு
மக்களில் சிலர் மாத்திரம் – அந்த வகையில்
கூட்டில்லையோ?”