ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010
நீங்கள் வணங்குவது அறியாமையைத்தானே - அம்பேத்கர்
நம்முடைய மக்களின் எத்தனை தலைமுறைகள் இப்படி இந்த ஆலயப் படிக்கட்டுகளில் தம் நெற்றியை தேய்த்து தேய்த்து, தேய்ந்து போயின. எந்த காலத்திலாவது இந்தக் கடவுள் உங்களுக்குக் அனுதாபம் காட்டியதுண்டா? அதன் மூலம் என்ன பெரிய பலன் கிட்டியுள்ளது? தலைமுறை தலைமுறையாக இந்தக் கிராமத்தின் குப்பைகளைக் கூட்டியதற்கு இந்தக் கடவுள் உங்களுக்கு கொடுத்ததென்ன? செத்த மாட்டைத் தானே, நீங்கள் வணங்குவது கடவுளை அல்ல, உங்கள் அறியாமையைத்தானே…. – அம்பேத்கர்
வியாழன், 29 அக்டோபர், 2009
செவ்வாய், 27 அக்டோபர், 2009
வெள்ளி, 11 செப்டம்பர், 2009
அருந்ததியர் இனத்தில் பிறந்தது பாவமா?-பட்டதாரி வாலிபரின் பரிதாப நிலை
சாதி ஒழிக்கப்படும் வரை............தாழ்த்தப்ப்ட்ட தமிழ்ச் சகோதரர்கள் இப்படித்தான் பாதிக்கப்படுவார்கள்
மதுரையை அடுத்த நாகமலை புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள கிராமம் வடிவேல்கரை. இந்த பஞ்சாயத்துக்குத்தான் மத்திய அரசு சமீபத்தில் ‘நிர்மல் புரஸ்கார்’ விருது வழங்கியிருக்கிறது. அந்த விருது கிடைக்கக் காரணமாக இருந்தவர் அம்மாசி. இவர்தான் அந்த ஊருக்குத் துப்புரவுப் பணியாளர். குப்பைகளை இவர் கூட்டி, பெருக்கியதால் சுத்தமான கிராமம் என்ற பெருமை கிடைத்தது. அதற்கு நிர்மல் புரஸ்கார் விருதும் கிடைத்தது.
வடிவேல்கரையில் பிள்ளைமார், கள்ளர் சமூகத்தினர்தான் அதிகம். அங்கு அருந்ததியர் இன மக்கள் எழுபத்தைந்து குடும்பங்கள்தான் வசிக்கின்றன. அருந்ததியர் மக்களில் யாரும் படிக்காத நிலையில் தப்பித் தவறி துப்புரவுப் பணியாளரான அம்மாசி, தன் மகன் முருகனை லிட்டில் டிரஸ்ட் உதவியோடு எம்.காம். படிக்க வைத்தார். தற்போது தனியார் கல்லூரியில் பி.எட். படித்துக்கொண்டிருக்கும் முருகன்தான் இப்போது இந்தக் கிராமத்தின் ஹாட்டான டாபிக். முருகனை படிக்க விடக் கூடாது என்று ஊரே கூடி, அவரது படிப்புக்கு மூடு விழா காண திட்டமிட்டிருக்கிறது என்று மற்ற சாதி மக்கள் மீது குற்றஞ்சாட்டுகின்றனர் அருந்ததியர் இன மக்கள். இந்த நிலையில் முருகன் தாக்குதலுக்கு உள்ளானார் என்ற செய்தியும் கிடைத்தது. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தலையில் பதிமூன்று தையல்களோடு தரையில் படுத்திருந்த முருகனை சந்திக்க முடிந்தது. ஆறுதல் கூறிவிட்டு பேசத்தொடங்கினோம். ஈனஸ்வரத்தில் முருகனின் குரல் ஒலிக்கத் தொடங்கியது.
“ஊர்ல எங்க அருந்ததியர் சமூகத்தில் நான் மட்டும்தான் எம்.காம். படித்து முடித்து, பி.எட். படிச்சுக்கிட்டு இருக்கேன். நான் ப்ளஸ் டூ படிக்கும் போதே முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் ராமநாதன், ‘உனக்கு வேலை போட்டு தர்றேன் படிப்பை நிறுத்திரு’ன்னு சொன்னாரு. நான் கேட்கலை. காலையில வீடு வீடா நியூஸ் பேப்பர் போடுவேன். அதுக்கப்புறம்தான் காலேஜுக்குப் போவேன். இரவு எங்க பிள்ளைகளுக்கு டியூஷன் எடுப்பேன். இதுதான் மற்ற சாதிக்காரர்களுக்குப் பிடிக்கலை.
நாங்க, எங்க காலனி வீட்டுக்குப் போகணும்னா ஒண்ணு கம்மாய்கரை வழியா வரணும். இல்லாட்டி ஊர் மந்தை வழியா வரணும். இப்ப ரிங்ரோடு போடுறதுனால கண்மாய்க் கரை வழி அடைபட்டுப் போச்சு. ஊர் மந்தை வழியாத்தான் வரணும். அப்படித்தான் நான், ஆகஸ்ட் 13-ம் தேதியன்னிக்கு எங்க வீட்டுக்கு மந்தை வழியா சைக்கிள்ல போனேன். மந்தையில் கூடி நின்ற மற்ற சாதிப் பசங்க என்னை வழிமறிச்சு, ‘உனக்கு எத்தனை தடவை சொல்லுறதுடா. இறங்கி உருட்டிக்கிட்டு போ’னு சொல்லி, தள்ளி விட்டதோட, ‘படிச்சத் திமிறான்னு சொல்லி’ கடக்கால் கட்டுறதுக்குப் பயன்படும் கட்டுக்கல்லை தூக்கி ஆனந்த்ங்கிற பையன் என் தலையில போட்டுட்டான்.
மண்டை உடைஞ்சு ரத்தம் ஆறு மாதிரி ஓடுது. ஊரே நின்னு வேடிக்கை பாத்துச்சு. என்னன்னு கேட்க நாதியில்ல. ரத்தம் வழிஞ்சி ஓடுறதைப் பார்த்து பயந்துபோன ஆனந்த், சிலம்பரசன், லட்சுமணன் மூணு பேரும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனாங்க. நானும் எங்க அப்பாவும் அடிச்சோம்னு சொல்லி அவனுங்களே ரத்த காயத்தை ஏற்படுத்திக்கிட்டு போய் புகார் கொடுத்தாங்க. சம்பவம் நடந்து நான்கு மணி நேரம் கழிச்சுத்தான் எனக்கே சுயநினைவு வந்தது. அதன் பிறகுதான் போலீஸ்ல புகார் கொடுத்தேன்.
நாகமலை புதுக்கோட்டை போலீஸ் என் மேலேயும் எங்க அப்பா மேலேயும் கொலை முயற்சி வழக்கு பதிவு பண்ணிட்டதாச் சொல்றாங்க. என்னையும் அப்பாவையும் கைது பண்ணச் சொல்லி சில அரசியல் கட்சிகள் பிரஷர் கொடுக்கறதாவும் சொல்றாங்க.
சுதந்திர இந்தியாவில் நான் தலித் என்பதற்காக கஷ்டங்களை அனுபவிக்கிறேன். எப்படியாவது என்னை படிக்க விடக்கூடாது என்பது தான் அந்த மக்களோட எண்ணம். நான் டியூஷன் எடுத்து எங்க காலனியில் இப்பத்தான் அஞ்சு பேர் பத்தாவது படிக்கிறாங்க. நாங்க இன்னமும் செருப்புப் போட்டுக்கிட்டு ஊருக்குள்ள போகக் கூடாது. சைக்கிள் ஓட்டிக்கிட்டு போகக் கூடாது. டீக்கடையில் இரட்டை டம்ளர் இருக்கு. தமிழ்நாட்டில் சாதி என்ற ஆயுதத்தால், தமிழனுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்டால், மற்ற நாடுகளில் மட்டும் தமிழனுக்கு உரிமை வேண்டும் என்றால் எப்படி கிடைக்கும்?” என்று அழுதுகொண்டே கேட்டார் முருகன். முருகனின் அருகில் இருந்த பாண்டி ரொம்பவே ஆவேசப்பட்டார். “முருகனை அடிச்ச அடுத்த நாள் காலையில் 8.10 மணிக்கு பஸ் வந்தது. அதுலதான் வேலைக்குப் போறவுங்க, பள்ளிக்கூடம் போறவுங்க எல்லாம் போவோம். எங்க மக்கள் எல்லாத்தையும் கீழே இறக்கி விட்டுட்டு மற்ற சாதிக்காரங்க மட்டும் பஸ்ல போனாங்க. நாங்க மூணு கிலோமீட்டர் நடந்து போயி நாகமலை புதுக்கோட்டைக்குச் சென்று பிறகு பஸ் பிடிச்சுப் போனோம்.
எங்க உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்ல. காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் சரியானபடி நடவடிக்கை எடுக்கலைன்னா ஊரை காலி செஞ்சு, முதல்வர் வீடு முன்னாடி எங்களுக்குச் சுதந்திரம் வேணும்னு போராட்டம் நடத்தப் போறோம்” என்றார் பாண்டி படபடப்போடு.
லிட்டில் டிரஸ்டின் மேனேஜிங் டிரஸ்டி பர்வதாவர்த்தினி நம்மிடம், “அருந்ததியர் சமூகம் படிக்கக் கூடாது என்பதுதான் வடிவேல்கரை ஊர் மக்களின் நோக்கம். முருகன் படிப்பை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும். அவனும் நம்ம ஊர் வேலைக்காரனாக இருக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். ஊர் மந்தை வழியாக சைக்கிளில் சென்ற முருகன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அப்பதான் மற்ற அருந்ததியர் இன மக்களுக்கும் பயம் வரும்னு இப்படிச் செய்யறாங்க. இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் இப்படியொரு கொடுமை நடக்குது. அரசாங்கம் என்ன செய்யப் போகிறது. ஆதிக்கச் சாதியினர் ஊர்ல தலைகட்டு வரி போட்டு இந்த கேஸ்ல, அருந்ததியினர் ஜெயிக்கக் கூடாதுன்னு ஒன்றரை லட்ச ரூபாய் வரை பணம் திரட்டியிருக்காங்க.
ஊர் மந்தையில் வைத்து இவ்வளவு பெரிய கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், ‘போலீஸார் அவர்களுக்குள் குடும்பச் சண்டை’ என்று சொல்லுகிறார்கள். ஒரு தனி மனிதனோட அடிப்படை உரிமைகள் அனைத்தும் அந்த ஊரில் முற்றிலும் மறுக்கப்படுகிறது என்பது தான் உண்மை” என்கிறார் அந்தச் சமூக சேவகி.
வடிவேல்கரை பஞ்சாயத்துத் தலைவர் ஆறுமுகத்திடம் பேசினோம். “நாங்க யாரையும் சைக்கிள்ல போகக்கூடாது, செருப்புப் போடக் கூடாதுன்னு சொன்னதே கிடையாது. எங்க ஊர் அமைதியான ஊர். நாங்க சாதி வேற்றுமையில்லாம தாயா பிள்ளையாத்தான் ஒற்றுமையா இருக்கோம். முருகன் குடும்பம்தான் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தை வியாபார நோக்கத்தோட பயன்படுத்துறாங்க. எப்பப் பார்த்தாலும் எங்களை மிரட்டுறதுதான் அவங்களுக்குத் தொழில். இதுவரைக்கும் நாலு பி.சி.ஆர். கேஸ் கொடுத்து, முதல் கேஸ்ல நிவாரணம் பணம் வாங்கியிருக்கு அந்தக் குடும்பம். எந்தப் பிரச்னையும் வந்துடக் கூடாதுன்னுதான் கலெக்டர்கிட்டே சொல்லி ‘அமைதி’கமிட்டி போடச் சொல்லியிருக்கேன். தனிப்பட்ட பிரச்னையை சாதிப் பிரச்னையாக மாற்றப் பார்க்கிறார்கள். யாரு தப்பு செஞ்சாலும் தப்பு, தப்புதான். ரெண்டு பேரும் தனிப்பட்ட பிரச்னைக்கு மல்லுக்கட்டி புரண்டிருக்கானுங்க. போலீஸ் நேரடியாக வந்து விசாரணை பண்ணிட்டு போயிருக்காங்க” என விளக்கம் கொடுத்தார் ஆறுமுகம்.
http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=519&rid=26
திங்கள், 13 ஜூலை, 2009
எழுதப்படாத சரித்திரம்-தமிழ் இலக்கியமும் தமிழர் இலக்கியமும்!
அம்பேத்கரைச் சந்திக்க விரும்பினார் காந்தி.
காந்தி அந்தக் காலகட்டத்தில் (1931) உருவாகிக் கொண்டிருக்கும் தலைவராக இருந்தார். இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தில் ஆகப்பெரும் தலைவராக காந்தியை உருவாக்கும் அரிய முயற்சியில் காங்கிரஸின் ஒரு பிரிவினர் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் அது. காங்கிரஸ் கட்சியைத் தோற்றுவித்த முதல் தலைமுறைத் தலைவர்கள் ஒன்று காலமாகி இருந்தார்கள். அல்லது சிறையில் இருந்தார்கள். அல்லது ஒதுக்கப்பட்டு இருந்தார்கள். காந்தி தன்னை ஓர் அரசியல்-வாதி என்னும் நிலையிலிருந்து ஞானி நிலைக்கு அல்லது ஒரு மகாத்மாவின் நிலைக்கு உயர்த்திக் கொள்ள படாதபாடு பட்டுக் கொண்டிருந்த நேரம். அவர் தலைக்குப் பின்னால் ஒரு சக்கரம் சுற்றுகிறது என்றும், அது ஞான ஒளி என்றும் காங்கிரஸ் கட்சியில் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட முக்கால் கிழடுகள் கட்டமைத்துக் கொண்டிருந்தார்கள். காந்தியார் மற்றும் காங்கிரஸ் ஆளுகைக்குள் அன்றைய பெரும் முதலாளிகளும், பிரபுக்களும், இந்துச் சனாதானிகளும், மேல் சாதி ஆட்களும் திரண்டிருந்-தார்கள். சுதந்திரப் போராட்ட எழுச்சியை முன்வைத்து பெரும் மக்கள் கூட்டத்தை அவ்வப்போது அவர்கள் திரட்டிக் கொண்டும் இருந்தார்கள்.
சாமியார்கள், சாமியார்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு இந்த நாட்டில் எப்போதுமே ஒரு கவர்ச்சி இருந்தே வந்திருக்கிறது. காவியும், கோவணமும் ஞானத்தின் புற வடிவமாகத் தப்பாகப் புரிந்து கொள்ளப்பட்ட சமூகத்தைக் கொண்ட நாடு இது. பட்டினியை உண்ணாவிரதம் என்று மகிமைப்படுத்தி மக்களைக் கவர முடியும். காந்தி, பட்டினியை ஒரு போராட்ட வடிவமாகக் கட்டமைத்தார். இந்தியா-வில், அன்றும் இன்றும் முப்பது சத மக்கள் ‘உண்ணாவிரதம்’ இருந்த ‘வறுமை’, ஒரு வகையில் மகிமைப்படுத்தப்பட்டது இதன் மூலம். அப்புறம், குறைந்த ஆடை மரியாதைக்குரியதாக, துறவின் இலக்கணமாக, தியாகத்தின் வெளி அடையாளமாகவும் கருதப்பட்டதன் காரணமாக காந்தி அரையாடை மட்டும் அணியத் தொடங்கினார். ஆக, அரசியல், அரசியல் உலகுக்குப் பொருந்தாத, கவர்ச்சிக்கும், வேஷத்துக்கும், நடிப்புக்கும் ஆன உலகமாக காந்தியாரால் புனையப்-பட்டது.
இந்திய அரசியலின் முதல் வீழ்ச்சி இங்கேதான் தொடங்குகிறது.
வறுமையை விரட்டுதல், ஒழித்தல், பசி இல்லாத சமுதாயம் அமைத்தல் என்னும் அடிப்படை அரசியலை முன் நிறுத்தும் போராட்டத்துக்கு முரணாக அவைகளையே ஓர் அலங்காரமாக மாற்றியமைத்த காந்தியம், காந்திய அரசியலை அம்பலப்படுத்திய முதல் மனிதராக அம்பேத்கர் அரசியல் உலகில் தோற்றம் தந்தார். தாழ்த்தப்பட்ட மக்கள், அவரைத் தம் தலைவராக ஏற்றுக் கொண்டார்கள்.
அம்பேத்கரைச் சந்திக்க ஆசைப்பட்டார் காந்தி.
இதன் அர்த்தம், இருவேறு உலகங்கள் சந்திப்புக்குத் தயாராயின என்பதாகும். காந்தி சார்ந்த உலகம், இந்து மதத்து வன்கொடுமைகளை உள்ளடக்கிய, வர்ணாசிரமம் என்கிற உயர்வு தாழ்வு கற்பிதத்தை ஏற்றுச் செயல்படுத்துகிற ஆதிக்கச் சக்திகளின் உலகம். வெளிப்படையாகச் சொன்னால், ஆதிக்கச் சாதிகளைத் தம் மடியில் வைத்துப் பாதுகாக்கிற தலைமைச் சக்தியாக காந்தியார் இருந்தார். அதற்கு எதிராகத் தாழ்த்தப்பட்ட, சமூக மையங்களிலிருந்து விளிம்புக்குத் தள்ளப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட, பொருளாதாரம், வேலை வாய்ப்புகள் மறுக்கப்-பட்ட, சகல சமூக ஆக்கத்துக்கும் உருவாக்கத்-துக்கும் காரணமாக இருந்து, ஆனால், அவற்றின் எந்தப் பயனையும் அனுபவியாத ஏமாற்றப்பட்ட உலகத்தின் தலைவராக அம்பேத்கர் இருந்தார்.
இந்த இரு மனிதர்களும் சந்திக்-கிறார்கள். காந்திதான், அம்பேத்கரைச் சந்திக்க முதலில் அழைப்பு விடுத்தார். மிகக் கடுமையான காய்ச்சலில் இருந்த அம்பேத்கர் 1931 ஆகஸ்ட் 14 அன்று பம்பாயில் காந்தியைச் சந்திக்கிறார். காந்தி இப்படி பேச்சைத் தொடங்கினார்.
1. நீங்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே, தீண்டாதவர்கள் பிரச்னை பற்றியும் சிந்தித்து வருகிறேன். அவர்களின் குறையைப் போக்க உழைக்கிறேன்.
2. காங்கிரஸ் கட்சியின் செயல் திட்டங்களிலும் தீண்டாமை ஒழிப்பு இருக்கிறது.
3. தீண்டப்படாதவர் முன்னேற்றத்துக்கு காங்கிரஸ் இருபது லட்சம் ரூபாய் செலவிட்டிருக்கிறது.
4. ஆக, என்னை ஏன் நீங்கள் எதிர்க்கிறீர்கள்? என்னைத் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராக ஏற்பதில் உங்களுக்கு என்ன தடை?
காந்தி சொன்னவற்றை அம்பேத்கர், அவருக்கே உரிய மேதைமையோடும், தர்க்க அழகுகளோடும் மறுத்து, கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் பேசினார்.
1. வயதானவர்கள் தங்கள் வயதை முன்னிலைப்படுத்திப் பேசுவது இயற்கைதான். (அறிவின் பலத்தை நம்பாமல், வயதில் முதுமையை நம்புகிற-வர்களின் பலவீனங்களில் இதுவும் ஒன்று.)
2. தீண்டாமையை, காங்கிரஸ் ஒரு பிரச்னையாக எடுத்துக் கொள்கிறதே தவிர, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து எதையும் செய்வதில்லை.
3. தீண்டாமைக்கு எதிராக நீங்கள் இருபது லட்ச ரூபாய் செலவிட்டது இப்போதுதான் எனக்குத் தெரிகிறது. அதனால் என்ன பலன்? இவ்வளவு பணம் எனக்குக் கிடைத்திருந்தால், என்னுடைய மக்களின் பொருளாதார, சமூக முன்னேற்றத்தில் ஆச்சரியப்-படும்படியான மேம்பாட்டுப் பணிகளைச் செய்திருப்பேன்.
4. காங்கிரஸ் தீண்டாமையில் உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்கிறது என்பது உண்மை-யானால், தீண்டாமை ஒழிப்பில் உறுதியும் அக்கறையும் உள்ளவர்களே காங்கிரஸில் உறுப்பினர்-களாகலாம் என்று விதி செய்வீர்களா? தீண்டத்தகாத ஆணையோ, பெண்ணையோ வீட்டு வேலைக்கு எடுத்துக் கொள்வது; தீண்டாமைக்குள்ளான மாணவரை எடுத்து வளர்ப்பது; குறைந்தது வாரத்துக்கு ஒரு நாளாவது, தீண்டாதவரோடு சேர்ந்து உணவு உண்பது போன்ற விதிகளை வகுத்து, இவைகளைப் பின்பற்றுபவர்களே காங்கிரஸில் உறுப்பினர் ஆகலாம் என்று விதி வகுத்தீர்களா?
5. ஆங்கிலேயர்களிடம் மனமாற்றம் ஏற்பட-வில்லை என்கிறீர்கள். எங்கள் விஷயத்தில் இந்துக்கள் மனமாற்றம் பெற்றார்களா?
தொடர்ந்து அம்பேத்கர், வெடிகுண்டுகளுக்கு நிகரான வார்த்தைகளை, எவரும் உரைக்காத உண்மைகளை இப்போது சொல்கிறார்.
“...இது என் தாய்நாடு அல்ல. எந்தத் தீண்டாமைக்குள்ளான மனிதனிடம் துளி சுயமரியாதையும் மனிதாபிமானமும் உள்ளதோ, அவன், ‘இது எனது நாடு’ என்று சொல்லமாட்டான். இந்த நாட்டில் நாய் பூனைக்குக் கிடைத்துள்ள இடம் கூட அவனுக்குக் கிடைக்கவில்லை...”
அம்பேத்கரின் இந்தக் கடைசி வாக்கியத்-திலிருந்துதான் இந்தக் கட்டுரை தொடங்குகிறது. நாய்க்கும் பூனைக்கும் உள்ள இடம்கூட, மனிதனுக்கு - அவன் அல்லது அவள் தாழ்த்தப்பட்டவராக இருந்தால் - இங்கு இல்லை என்பதன் அடிப்படை வேர் அல்லது வித்து எங்கிருக்கிறது என்பதைப் பல நூறு வரலாற்று, இலக்கிய ஆதாரங்களின் ஊடாக நாம் காண இருக்கிறோம்.
ஒரு மனிதனை இவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன் என்று கூறக் காரணமாக எது இருக்கிறது? சாதியும், மதமும் எதன் ஆதாரத்திலிருந்து பிறந்து, ஜனத்திரளின் பெரும்பகுதியைத் தாழ்த்தப்பட்டவராகவும், மிகப் பிற்படுத்தப்பட்டவராகவும் அழுத்தி வைத்தது என்பதை ஆராய்வது மனித சரித்திரத்தை ஆராய்வது என்பதாகும்.
தமிழ் மொழியின் மிகப் பழைய இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள் என்று சொல்லப்படுகிறது. சங்கம் என்பது தமிழ்க் கவிஞர்களின் அமைப்பு. இச்சங்கங்களின் காலம், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. சரியாகச் சொன்னால் கிறித்து பிறப்பதற்கு முன்னால் ஐந்நூறு ஆண்டுகளும், பின்னால் ஐந்நூறு ஆண்டுகளும். அதாவது 500 ஆண்டுகள் முதல் ஆயிரம் ஆண்டுகளுக்குள் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பே, சங்க இலக்கியங்கள் எனும் தமிழ் மொழியின் பழைய இலக்கியங்கள்.
தமிழர்களின் பண்பாட்டை, வாழ்க்கையை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிகத்தைச் சொல்லும் இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் என்று பெருமையாகத் தமிழகத் தலைவர்கள் முதல் தமிழாசிரியர்கள் வரை, எல்லோருமே முழங்கித் திரிவதை நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.
உண்மை என்னவென்றால், இந்தச் சங்க இலக்கியங்கள் அல்லது ஆகப் பழைய தமிழ் இலக்கியங்கள், தமிழர் இலக்கியங்களா என்றால் இல்லை. இது மேட்டுக்குடி மக்களின், இன்றைய அரசியல் வார்த்தைகளில் சொல்லப்போனால், இவை மேல் சாதி இலக்கியங்கள். ஆதிக்கச் சாதியர்களின் காதல் விவகாரங்களைப் போற்றிப் பாடப்பட்டவை.
தமிழகத்தின் நிலம் நான்கு வகையாகவும், பிறகு ஐந்து வகையாகவும் பிரிக்கப்பட்டது.
மலையும் மலையைச் சுற்றியுள்ள இடமும் குறிஞ்சி என்றழைக்கப்பட்டது. மலைகளில் மலரும் பூக்களில், குறிஞ்சிப் பூ சிறப்பானது என்று அக்கால மக்களால் கருதப்பட்டு, குறிஞ்சி மலரும் இடம் குறிஞ்சி நிலம் என்று பெயர் சூட்டப்பட்டது.
காட்டுப் பகுதிகள், புல் பூமிகள்‘முல்லை’ எனப்பட்டது. முல்லைப் பூக்களால் பெற்ற பெயர் இது.
வயல் நிலங்களும், அதைச் சுற்றி இருக்கும் பூமி மருதம் எனப்பட்டது. மருத மரங்களைக் குறிக்கும் நிலம் இது.
கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல் எனப்பட்டது. நெய்தல் பூக்கள் இந்நிலத்தின் சிறப்பு.
வறண்ட, நன்செய்க்குப் பயன்படாத நிலம் பாலை. பாலையும் ஒருவகைத் தாவரத்தால் பெற்ற பெயரே ஆகும்.
இந்த ஐந்து வகை நிலங்களிலும் இருந்த மேட்டுக்-குடி மக்கள் - தலைவர்களும் தலைவிகளும் - கொண்ட காதல் சமாசாரங்களைச் சொல்லும் காதல் தொடர்பான பாடல்களே சங்க இலக்கியத்தில் பெரும்பான்மை-யாகும். இவைகளை ‘அக இலக்கியம்’ என்பார்கள்.
மேட்டுக்குடி மக்களின்காதல்தான் காதலா? உழைக்கும் மக்கள், பிற்பட்ட, சமூகத்தின் தாழ்நிலையில் இருந்த மக்களின் காதல் வாழ்க்கையைத் தமிழ் இலக்கியங்கள் சொல்லியதா என்றால் இல்லை.
‘தாழ்ந்தவர்களுக்கு’க் காதல் வரக்கூடும். அதை மரியாதைக்குரியதாகக் கருதி, பாடல் செய்யக்கூடாது என்பது இலக்கணம். இப்போது சொல்லுங்கள் - தமிழ் இலக்கியம் தமிழர் இலக்கியம்தானா?
-ஆராய்வோம்
பிரபஞ்சன்
தமிழக அரசியல் 16.07.2009