பணக்கார, நடுத்தர,ஏழை என எல்லோர் வீட்டிலும் நாயை வளர்க்கும் பட்சத்தில், நாய் மீது அன்பை பொழிவர், கொஞ்சம் நாய் மீது அன்பு கூடிவிட்டாலோ தாங்கள் சாப்பிடும் தட்டிலேகூட உணவு வழங்க தயங்க மாட்டார்கள் நம் மனிதர்கள்(இதில் தமிழர்களும் அடங்குவர்கள்தானே!), இவ்வளவு ஏன் தங்கள் படுக்கையிலே கூட உறங்க கூட நாயை அனுமதித்து விடுவர். ஆனால், நாய்க்கு பெண் வழங்கமாட்டார்கள், வழங்க முடியாது ஏனென்றால் அது இயற்கைக்கு முரணானது. நாய் மனித இனமல்ல.
இதையே சாதிக்குள் திருமணம் செய்து கொள்ளும், சாதிக்குள் மட்டும்தான் பெண் எடுப்பேன்/கொடுப்பேன் என்ற கொள்கை கொண்ட (ஈன)மனித தமிழர்கள் இன்னொரு சாதிக்காரனை நாயைவிட உயர்வாக என்ன நடத்திவிடுகிறான்?
இன்றைய தொலை-தொடர்பு/தொழில்நுட்ப உலகத்தில் தொடர்பு பெருகி விட்ட காரணத்தினாலும், நாகரீகம் என்ற போர்வையில் பேச வேண்டியிருக்கிறதே என்ற எண்ணத்திலும் வேற்று சாதி மனிதனோடு தொடர்பு ஏற்படும், நட்பு உருவாகும், வீட்டிற்கு அழைத்து செல்ல நேரிடும், உணவளிக்க நேரிடும், ஆனால், பெண் கொடுக்க மாட்டான், உறவு ஏற்படுத்தி கொள்ள மாட்டான், ஏனென்றால் அவன் வேறு சாதியாம்!
ஒரு சாதிக்காரன் இன்னோர் சாதிக்காரனை நாய் போல நடத்துகிறான், மற்றொருவன் இவனை நாய் போல எண்ணுகிறான். இதுதானே சங்கம் வைத்து சாதி வளர்க்கும் தமிழனின் நிலை.
இது நாய் பிழைப்பு அல்லாமல் வேறென்ன?