வெள்ளி, 26 டிசம்பர், 2008

அன்புத்தோழர்களே! உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்

அன்புத்தோழர்களே!

நம் சமூகம் கருத்து பஞ்சத்தால் மதவெறி, சாதிவெறி பாசிசத்துக்கு உள்ளாகும் கொடூர நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. கருத்தை பரவலாக்கும் மாபெரும் சக்தியாக இன்றைய நிலையில் இணையதளம் வாயிலாக கணிணியும், ஊடகமும் முக்கிய பங்கு வகிக்கின்றன.  அவை பார்ப்பன பரதேசிகளிடமும், அவர்தம் அடிவருடிகளிடமும் உள்ளன.

இந்த ஊடகங்களை நாம் கைப்பற்றாமல் இருப்பது நம்மவர்கள் செய்த மாபெரும் பிழையல்ல, குற்றம். அதை ஓரளவு விழிப்புணர்வு கொண்ட நாமாவது நம் ஆதிக்கம் இந்த ஊடகங்களில் வருமளவு ஆதிக்கம் செலுத்த வேண்டும்.

அறிவியலை முன்னிறுத்தும் நாம் இந்த அறிவியிலால் விளைந்த ஊடகங்களை நம்மைவிட வெகுவாக நம் எதிரிகள் பயன்படுத்துவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா? அறிவியலை மறுப்பவர்கள் இந்த ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள்.

நம்மிடமும் ஊடகங்கள் இருக்கின்றன், ஆனால் குறிஞ்சிப்பூ போன்று, இவைகளை மட்டும் வைத்துக் கொண்டு நாம் ஒன்றும் பெரிதாக சாதித்து விட முடியாது. நம் ஊடகங்கள் பரவ வேண்டும்.

பெரியாருடைய காலம் போலல்லாமல் பொதுக்கூட்டமும், உரைவீச்சும் மட்டுமே இன்றைய நிலையில் கருத்து பரவலுக்கு முக்கிய பங்கு வகிக்கலாம் என்று கருதினோமானால், அது நாம் செய்யும் பெரும் பிழையாகிவிடும். பார்ப்பன பண்டார ஊடகங்கள் நீண்ட நாட்களாக நமக்கு எதிரான வேலைகளை செய்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன. நாமோ இன்றும் பொதுக்கூட்டங்களையும், துண்டு பிரசுரங்களை மட்டும் பெரிதாக நம்புகிறோம்.

 

நாம் செய்ய வேண்டியது

முதலில் ஒரு குழு உருவாக்கி, (அந்த குழு ஒரு கிராமத்திற்கோ, மாவட்டத்திற்கோ, மாநிலத்திற்கோ, நாட்டிற்கோ உட்பட்டதாகவோ இல்லாமல்) மின்னஞ்சல் முகவரிகளை சேகரித்து, நாம் வாசிக்கும் செய்திகளை பரப்புவோம்.

 அதோடு நில்லாமல்,

ஒவ்வொரு தோழரும் மாதம் ஒருமுறை தாம் அனுப்பிய செய்திகள் எத்தனை தனிநபர்களை சென்றடைந்தது,என்பதை குறித்துக் கொண்டால் நம்முடைய இந்த முயற்சி எந்தளவு வெற்றிகனியை ஈட்டும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

 

 நாம் பகிர்ந்து கொள்ள வேண்டியவை

1) துண்டு பிரசுரங்களை 2) படக்காட்சிகளாக நம் கருத்துக்கு வலு சேர்ப்பவைகளை 3) குறுந்தகடுகளாக வெளிவரும் ஒளிவீச்சினை 4)  மின்னஞ்சல் முகவரிகளை 5) தொடர்பு எண்களை 6) தம் இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களை கண்டிப்பாக ஒளி/ஒலிப்பதிவு செய்து குறுந்தகடுகளை

 என முடிந்தளவு என்றில்லாமல், முழு தன்னார்வ முயற்வியோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

 இந்த பகிர்வு வளமான, சமமான சமூக பகிர்வுக்கு வித்திடும் என நம்புகிறோம், இது விதை, உரமிடுதலும், நீருற்றுதலும், மரமாக வளர்த்தெடுப்பதும் உங்கள் கடமை.

உங்கள் ஆலோசனை ஏதும் இருந்தால், 

தொடர்புக்கு,

மகிழ்நன்.

+919769137032

தாராவி, மும்பை

நம்மை பண்படுத்துவோம்! சமூகம் பண்படவே!!

விழித்தெழு இளைஞர் இயக்கம்.

புதன், 3 டிசம்பர், 2008

தீவிரவாதத்தை ஒழிக்க மதத்தை ஒழியுங்கள்


இது குறித்த சில பதிவுகள்

1) மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் - 1)

2) மும்பையை பப்பரமாக்கிய தீவிரவாதம்?

3) அயோத்தி-கோயம்புத்தூர். குஜராத்-மும்பைசோதனைச்சாலைகள்Xகுண்டு வெடிப்புகள்

4) மும்பாய் பயங்கரவாதம் அநுராதபுரப் பயங்கரவாதம் ஒரு ஒப்பீட்டுப் பார்வை

5) மும்பாயைச் சொல்லி யுத்தம் கவியுமா?

6) இந்து பயங்கரவாதம் தான், பம்பாய் தாக்குதலை (வழி)நடத்தியுள்ளது.

7) மனித படுகொலைகளைக் கண்டு ரசிப்பவர்கள் தான், பம்பாய் மரணத்தை கண்டு புலம்புகின்றனர்

8) கோர்வையற்ற எண்ணங்களாக மதத்தீவிரவாதம் !

9) பம்பாய் 'பயங்கரவாதம்" ஆளும் வர்க்கங்களால் உற்பத்தி செய்யப்பட்டது

10) ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் மதவெறிச் சக்திகளை நடமாடவிட்டால் ஆபத்து





செவ்வாய், 18 நவம்பர், 2008

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா நடத்தும் நிழல்ப் (proxy) போர்

Courtesy: நக்கீரன்

போர் நிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு வெளியிட்டு உடனடியாகப் படைகளைப் பழைய நிலைக்கு விலக்கிக்கொள்ள வேண்டும்என தமிழக சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை தமிழ்மக்கள் வரவேற்பார்கள் என்பதில் அய்யமில்லை. இது தமிழீழச் சிக்கல்பற்றி தமிழக அரசியல் கட்சிகள் தங்களுக்கும் இருக்கும் சிறு சிறு வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபட்டு, ஒரே அணியில் நிற்பதைக் காட்டுகிறது.

ஆனால் இந்தத் தீர்மானத்தை இந்திய மத்திய அரசு எவ்வளவு தூரம் கவனத்தில் எடுத்துக் கொண்டு அக்கறையோடு செயல்படும் என்பதில் பலருக்கு நியாயமான அய்யம் இருக்கிறது.

தமிழீழத்தில் வி.புலிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசினால் நடத்தப்படும் ஆக்கிரமிப்புப் போருக்கு இந்தியா ஆயுதம், பயிற்சி, தொழில்நுட்பம், கண்காணிப்பு (surveillance) புலனாய்வு (intelligence) போன்றவற்றை நல்கி வருகிறது. இனச் சிக்கலுக்கு இராணுவத் தீர்வு அல்ல அரசியல் தீர்வே தேவை எனக் கடந்த மூன்றாண்டுகளாக கிளிப்பிள்ளை போல் சொல்லிக் கொண்டிருக்கும் இந்தியா போரைத் தீவிரப்படுத்த லங்கா அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

இந்த நிலைப்பாடு ஒரு தன்முரண்பாடு (self-contradictory) ஆகும். இதன் அடிப்படையிலேயே வி.புலிகளோடு பேசுவதாக இருந்தால் அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துத் தன்முன் மண்டியிட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் பயங்கரவாதத்துக்கு (வி.புலிகளுக்கு) எதிரான போர் முழு வீச்சில் தொடரும் என்றும், லங்காவின் ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே தலைநகர் தில்லியில் இருந்தபடியே திமிரோடு மார்தட்டுகிறார்.

இப்படி அவர் மார்தட்டுவதற்கு என்ன காரணம்? அதற்கான துணிச்சல் ஒரு சுண்டக்காய் நாடான லங்காவின் ஆட்சித்தலைவருக்கு எங்கிருந்து வந்தது?

லங்கா அரசு வி. புலிகளுக்கு எதிரான போரை பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்கிறது. இந்தியாவும் அதையே சொல்கிறது. அதற்கும் அப்பால் வி.புலிகளுக்கு எதிரான போரை இந்தியாவே லங்கா ஊடாக நடத்தி வருகிறது.

இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி - ஸ்ரீலங்காவின் சிறப்புத் தூதுவர் பசில் இராசபக்சே இருவரும் தில்லியில் நடத்திய பேச்சு வார்த்தைகளை அடுத்து ஒக்தோபர் 26 ஆம் நாள் வெளியிட்ட கூட்டு செய்தி அறிக்கையில் காணப்படுகிறது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது

"இருதரப்பினாலும் வடக்கு உட்பட இலங்கைத் தீவில் சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் ஒரு அரசியல் தீர்வை நோக்கி நகரவேண்டிய அவசியம் பற்றிப் பேசப்பட்டது. இருதரப்பும் பயங்கரவாதம் (வி.புலிகள்) முன்னரைவிட உறுதியோடு முறியடிக்க வேண்டும் என்பதில் இணக்கம் கண்டன. (Both sides discussed the need to move towards a peacefully negotiated political settlement in the island including in the North. Both sides agreed that TERRORISM should be countered with resolve.)

தில்லியில் இந்தக் கூட்டறிக்கையை விட்ட பின்னரே பிரணாப் முகர்ஜி சென்னை வந்து தமிழக முதல்வர் மு.கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த பிரணாப் முகர்ஜி நான் முதல்வர் கருணாநிதி முன்வைத்த கோரிக்கைகளை (இலங்கைத் தமிழர்களுக்கெதிராக நடைபெற்று வரும் போரை நிறுத்த இந்திய மத்திய அரசு இருவார காலத்துக்குள் முன்வரவேண்டும். இந்திய அரசு ஸ்ரீலங்கா அரசுக்கு வழங்கும் ஆயுத உதவி அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தவும் தமிழ் மக்களை அழிக்கவுமே பயன்படுகிறது. எனவே இத்தகைய இராணுவ உதவிகளை மத்திய அரசு நிறுத்தி அங்கு இடம்பெறும் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும்) நிராகரித்துவிட்டதாகச் (I have overruled Chief Minister Krunanidhi) சொன்னார். முன்னதாக இந்திய நாடாளுமன்றத்திலும் ஸ்ரீலங்காவிற்கு கொடுக்கப்படும் இராணுவ ஆயுத தளபாட உதவி தொடரும் என்று அவர் பேசியிருந்தார்.

இந்திய - இலங்கை உடன்பாட்டின் கீழ் வட-கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டன. ஆனால் அந்த இணைப்பைத் துண்டித்துவிட்டு கிழக்கு மாகாணத்தில் துப்பாக்கி முனையில் மகிந்த இராசபக்சே தேர்தலை நடத்தினார். அதனை இந்தியா எதிர்க்கவில்லை. மாறாக பச்சைக்கொடி காட்டியுள்ளது.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் (1987) 13 ஆவது சட்ட திருத்தம் செய்யப்பட்டது. அந்தத் திருத்தத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி நிராகரித்தது. இப்போது அதே 13 ஆவது சட்ட திருத்தத்தின் கீழ்த்தான் இனச் சிக்கலுக்கு தீர்வு என மகிந்த இராசபக்சே கூறுகிறார். அதனை இந்தியா வரவேற்றுள்ளது.

தமிழர்களைக் கொல்லப் பயன்படும் ஆயுததளபாடங்கள் ஸ்ரீலங்காவிற்குக் கொடுக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்ற தமிழக அனைத்துக்கட்சிகளின் ஒருமனதான வேண்டுகோளை இந்திய மத்திய அரசு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவில் உயிர் வாழும் காங்கிரஸ் அரசு - நிராகரித்துள்ளது.

இவ்வாறு இனச் சிக்கலுக்கு இராணுவத் தீர்வு அல்ல அரசியல் தீர்வே தேவை என வற்புறுத்திச் சொல்லும் இந்தியா போரைத் தீவிரப்படுத்த ஸ்ரீலங்கா அரசுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கிவருகிறது. இது ஒரு தன்முரண்பாடு (self-contradictory) ஆகும்.

மகிந்த இராசபக்சே கடந்த மூன்று ஆண்டுகளாக இனச் சிக்கலுக்கு தீர்வுகாண அனைத்துக் கட்சி பிரதிநித்துவ குழு ஒன்றை உருவாக்கி ஊரையும் உலகத்தையும் ஏமாற்றி வருகிறார். இந்தக் குழுவுக்கு தமிழ்மக்களைப் பிரதிநித்துவப்படுத்தும் தமிழர் தேசிய கூட்டமைப்பு அழைக்கப்படவில்லை. இந்தக் குழு ஒற்றையாட்சியின் கீழ்த்தான் தீர்வு யோசனைகளை முன்வைக்க வேண்டும் என மகிந்த இராசபக்சே கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். 2005 ஆம் ஆண்டு ஆட்சித்தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் மகிந்த இராசபக்சேயின் கட்சியான அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணி (United Peoples Freedom Alliance (UPFA) பச்சை இனவாதக் கொள்கைகளை முன்வைத்து வெற்றிபெற்றது. வெற்றிபெற்ற மகிந்த இராசபக்சே தனது வெற்றிக்கு சிங்கள பவுத்த மக்களின் வாக்குகளே காரணம் எனவும் தனது ஆட்சி அவர்களது விருப்பப்படியே செயல்படும் என அறிவித்தார்.

இனச் சிக்கலைப் பொறுத்தளவில் அப்படியொரு சிக்கல் இருப்பதை அவர் மறுத்தார். மாறாக நாட்டில் பயங்கரவாதம் இருப்பதாகவும் அதற்கு இராணுவ தீர்வு காணப்படும் என்றும் தமிழ்மக்களைப் பொறுத்தளவில் அவர்களுக்கு ஒற்றையாட்சியின் கீழ் 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் (அதிகாரப்பரவல்) அரசியல் தீர்வு காணப்படும் என்றார். மேலும் தமிழர்களது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகிய கோரிக்கைகளை முற்றாக நிராகரித்தார். தொண்ணூறுகளில் சிங்கள அரசியல்வாதிகள் இனச் சிக்கலுக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் தீர்வு காணமுடியாது இணைந்த வடகிழக்குக்கு மாகாணங்களுக்கு இணைப்பாட்சியின் கீழ் அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும் என்ற சிந்தனையில் இருந்தார்கள். குறிப்பாக முன்னாள் ஆட்சித்தலைவர் சந்திரிகா குமாரதுங்கா அவ்வாறான கருத்தை வெளியிட்டிருந்தார்.

ஆனால் மகிந்த இராசபக்சே பதவிக்கு வந்த பின்னர் ஸ்ரீலங்கா சிங்கள பவுத்த மக்களுக்கே சொந்தமான நாடு. சிங்களவர் பெரும்பான்மை இனம் (74 விழுக்காடு) என்பதால் அவர்களே நாட்டை ஆளும் உரிமையுடையவர்கள். சிறுபான்மையான தமிழர்களும் முஸ்லிம்களும் இடையில் வந்து குடியேறியவர்கள். அவர்கள் நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைக்கக் கூடாது. கொடுப்பதை வாங்கிக்கொண்டு வாய்பொத்தி வாழ வேண்டும்என்ற சிந்தனை பவுத்த தேரர்கள், சிங்கள அரசியல்வாதிகள், சிங்கள இராணுவ தளபதிகள், பெரும்பான்மை சிங்கள அறிவுப்பிழைப்பாளர்கள் போன்றோர் இடையே காணப்படுகிறது. இது மகாவம்ச சிந்தனையும் ஆகும்.

இனச்சிக்கல் பற்றிய மகிந்த இராசபக்சேயின் சிந்தனை நாட்டின் அரசியலை அய்ம்பது ஆண்டுகள் பின்தள்ளியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் 4,000 க்கும் அதிகமான தமிழர்கள் சிங்களப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். ஒன்பது தமிழ் ஊடகவியலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.

வன்னி வான்பரப்பில் ஸ்ரீலங்கா வான்படை 6,000 க்கும் அதிகமான தடவைகள் பறந்து 50,000 க்கும் அதிகமான குண்டுகளை வீசியுள்ளது. இதனால் வீடுவாசல்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனைப் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய இராசபக்சே பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார்.

போரினால் மூன்று இலட்சம் தமிழ்மக்கள் ஏதிலிகளாக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாயிரத்துக்கும் அதிகமான தமிழ் ஆண்கள், பெண்கள் அவசர காலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஸ்ரீலஙிகாவின் சிறைச்சாலைகளில் விசாரணையின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டவர்கள்.

ஆறு இலட்சம் தமிழ்மக்கள் வாழும் யாழ்ப்பாணக் குடாநாடு ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாறியுள்ளது. உயிருக்கு அஞ்சி 200க்கும் அதிகமான தமிழர்கள் தாமாகவே சிறைச்சாலையில் அடைக்கலம் புகுந்துள்ளனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் 40,000 சிங்களப் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மீன்பிடித் தொழில் மற்றும் விவசாயம் முடக்கப்பட்டுள்ளது. மாலை 6.00 மணி தொடக்கம் காலை 6.00 மணிவரை ஊரடங்கச் சட்டம் நடைமுறையில் இருக்கிறது.கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் - 1,100 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 771 பேர் காணாமல் போனவர்கள். 334 பேர் கடத்தப்பட்ட பின்னர் காணாமல் போனவர்கள். 543 கொலைகளில் கொலையாளிகள் எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை. கொலைசெய்யப்பட்ட 308 சடலங்கள் அடையாளம் காட்டப்படவில்லை. இந்த புள்ளிவிபரங்களைத் தந்திருப்பவர் காணாமல் போனோர் பற்றி விசாரிக்க அரசினால் நியமிக்கப்பட்ட ஆட்சி ஆணையத்தின் (Presidential Commission on Disappearances) தலைவர் இளைப்பாறிய உயர் நீதிமன்ற நீதியாளர் மகாநம திலகரத்தின ஆவர். (Daily Mirror – November 13, 2008).

சிங்கள பவுத்த பேரினவாதியான மகிந்த இராசபக்சே பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் ஒரு முழு அளவிலான தமிழினப் படுகொலையை அரங்கேற்றி வருகிறது. அதனைப் பன்னாட்டு சமூகம் கண்டும் காணதது போல் இருக்கிறது.

உண்மையில் வி.புலிகளுக்குப் பயங்கரவாத வருணம் பூசி அவர்களுக்கு எதிரான போரைத் திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு இந்தியாவே நடத்துகிறது! அந்தப் போருக்கு ஸ்ரீலங்கா அரசை இந்தியா ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது! வேறுவிதமாகச் சொன்னால் இந்தியா வி. புலிகளுக்கு (பயங்கரவாதத்துக்கு) எதிராக ஒரு நிழல்ப் போரை (proxy war) நடத்துகிறது. இதன் காரணமாகவே போர் நிறுத்தம் செய்யுமாறு ஸ்ரீலங்காவை வற்புறுத்த மறுக்கிறது. ஆயுத தளபாடங்கள் வழங்குவதை நிறுத்த மறுக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் போர் நிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு வெளியிட்டு உடனடியாகப் படைகளைப் பழைய நிலைக்கு விலக்கிக்கொள்ள வேண்டும்என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒக்தோபர் 14 இல் நிறைவேற்றப்பட்ட அனைத்துக்கட்சித் தீர்மானங்களுக்கு ஏற்பட்ட கதியே இப்போது நொவெம்பர் 12 ஆம் நாள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கும் ஏற்படப் போகிறது என எதிர்பார்க்கலாம். இந்தக் கசப்பான உண்மையை தமிழக அரசியல் தலைவர்களும் மக்களும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். 

http://www.tamilcanadian.com/tamil/index.php?cat=40&id=505

திங்கள், 17 நவம்பர், 2008

சட்டக்கல்லூரியில் சாதி வெறிக்கு அடங்கமறுத்து திருப்பி அடித்த மாணவர்கள்


சட்டக்கல்லூரியில் மாணவர்கள் தாக்கப்பட்ட நிகழ்வை சன் நியூஸ் தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. அந்த நிகழ்வு எனக்குள் அதிர்வை ஏற்படுத்தி இருந்தாலும், இதற்கு என்ன காரணமாக இருக்கும் அலுவலகத்திற்கு சென்றவுடன் செய்திகளை பார்த்து எதனால் இந்த வன்முறை தூண்டப்பட்டது என்று அறிந்து கொள்ள வேண்டும்,என்ற ஆவலோடு ரயிலில் சென்று அமர்ந்தேன், என் எதிரில் ஒரு தமிழன்பர் தினகரன் நாளிதழை புரட்டிக்கொண்டிருந்தார், அதில் நான் சன் நியூஸ் தொலைக்காட்சியில் பார்த்த நிகழ்வு நிழற்படமாக வந்திருந்தது, அவரிடம் செய்தித்தாளை கேட்டு பெற்று அந்நாளிதழில் வந்திருந்த செய்தியை வாசித்தேன், அப்பொழுது மெலிதாக காரணம் பிடிப்பட்டது, இருந்தும் குழப்பம் நீடித்தது. அலுவலகத்திற்கு சென்று செய்திகளை உலா வந்தேன், குழப்பம்..........அடித்தது யார்?.......அடி வாங்கியது?..........ஏன் அடித்தார்கள்? இந்த வன்முறைக்கு தூண்டுதலாக இருந்த காரணம் என்ன?...........எந்த செய்தித்தாளும், செய்தி தொலைக்காட்சியும் வெளியிட்டனவா?.................என்பது மிகப்பெரிய ஐயம்.

 

(பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிடுவதே இந்தியாவிலேயே அதிகமான வாசகர் வட்டம் கொண்ட நாளேடு எமது, அதிகமான பார்வையாளர்களை கொண்டது எம் தொலைக்காட்சி நிறுவனம் என்று விளம்பரம் தேடுவதற்குதானேயன்றி உண்மையான சமூக அக்கறையோடு அல்ல என்பது என்  திண்ணமான எண்ணம், அது பெருமளவு உண்மையும் கூட)

 

 அதற்கு பிறகு இணையத்தில் தொடர்ச்சியாக உலா வந்தும், செய்தித்தாள்களை வாசித்தும், தொலைக்காட்சி செய்திகளை பார்த்தும் உணர்ந்த செய்தியின் வெளிப்பாடுதான் இந்த கட்டுரை

 

தேவர் ஜெயந்தி விழா நடைபெற்றதாம், அதற்கு தங்களை தேவர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் மாணவர்கள் சுவரொட்டியோ(விளம்பரமோ) அச்சிட்டிருக்கின்றனர், அதில் சட்டமேதை அம்பேதகரின் பெயரை லாவகமாக தவிர்த்திருக்கின்றன்ர், அவர்கள் ஏன் அம்பேத்கரின் பெயரை பயன்படுத்த வேண்டும்? என்ற கேள்வி எழலாம், அம்பேத்கரை தலைவராக ஏற்றுக் கொள்ளச் சொல்லி யாரையும் நாம் கட்டாயப்படுத்த தேவையில்லைதான், ஆனால், விழா நடத்தியது (அம்பேத்கர்) சட்டக் கல்லூரி  மாணவர்களாயிற்றே, அங்கு தவிர்த்ததுதான் தவறு, பல நூற்றாண்டுகளாக சேரிகளில் சாதியின் பெயரால், தீண்டாமை கொடுமையால் முடங்கி அடிமைப்பட்டு கிடந்த ஒரு இனம் இன்று படித்து முன்னேறியிருந்தாலும் இன்று இந்த நவீன சேரிக்குள் ஆதிக்க சாதி திமிர் பிடித்த சாக்கடை  கண்ணோட்டத்தை, சாதித் திமிரையும் இன்றும் சந்திக்கத்தான் வேண்டியிருக்கிறது.

 

தன்னை ஈனப்பிறவியாக பார்க்கும் இந்த சமூகத்தால் தன் தலைவன்,     மாமேதை, உலக அறிவாளிகளில் ஒருவர், சட்ட மேதை, பாரத ரத்னா என பல புகழ் பெயர் சூட்டப்பட்டும் இன்றளவும் கீழ்ச்சாதியில் பிறந்தவனாக கீழ்ச்சாதியாக பாவிக்க படுகிறானே, இழிவுபடுத்த படுகிறானே என்ற சினம் வரத்தானே செய்யும். அதுதானே நியாமும்கூட. சுயமரியாதை உணர்வு வந்த பிறகு சாதி ஆதிக்கத்திற்கு அடங்க மறுக்கத்தானே செய்யும் அவன் உணர்வுகள், திருப்பி அடிக்கத்தானே தூண்டும்.

 

அடிப்படையில், கல்லூரி வளாகத்தில் தேவர்  ஜெயந்தி கொண்டாட அனுமதியளித்தது தவறு, அதற்காகத்தான் கல்லூரி முதல்வர் மீது முதல் வழக்கு பதியப்படிருக்க வேண்டும், (ஆனால் இந்த ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகள் இதை செய்ய மாட்டார்கள் என்பது திண்ணம்) முத்துராமலிங்கம் ஒன்றும் பொதுவான தலைவரில்லை (யாருக்காவது அவர் தலைவராக இருக்க தகுதியுடையவரா? என்பது இன்னொரு கேள்வி, அவருடைய தகுதியை ஓரளவாவது தெரிந்து கொள்ள இங்கே சுட்டவும்), இன்றைய நிலையில் ஆதிக்க சாதி திமிரின் அடையாளம்தான் முத்துராமலிங்கம். அந்த சாதி வெறியனின் அடையாளத்தை முன்னிறுத்தி சட்ட மேதை அம்பேத்கரை அவமானப்படுத்தியதை அந்த மாணவர்கள் அல்ல, அரசு தட்டிக் கேட்டிருக்க வேண்டும்,

 

அரசு தட்டி கேட்க வில்லை! மாணவர்கள் தட்டி கேட்டார்கள்!!!

இதில் அவர்களை கைது செய்வதற்கு பதிலாக இன்றாவது சுயமரியாதை உணர்வு எழுந்ததே, இன்னும் வீரியத்தோடு போராடு , சாதி ஒழியும் வரை போராடு என்று தட்டியல்லவா கொடுத்திருக்க வேண்டும் இது சாதி ஒழிப்பு அரசாக இருந்திருந்தால்..................................

 

இவ்வளவு சினம் கொண்டு தாக்கும்படிக்கு தூண்டிய அந்த சாதி ஆதிக்க உணர்வுகளைதான் முதலில் அரசு தட்டி கேட்க வேண்டும், பிறகுதான் அம்மாணவர்களை நோக்கி சட்டம் பாய வேண்டும்,

 இல்லையென்றால், சட்டம் எழுதியரை இழிவுபடுத்திய மாணவர்களை தட்டி கேட்டதற்காக மாணவர்கள் கைது என்றுதான் செய்தித்தாள்கள் செய்தி வெளியிட வேண்டும், அதுதான் பொருத்தமாகவும் இருக்கும்.

 

பக்கம் பக்கமாக செய்திகளை வெளியிட்டு, நாளும் நடந்த நிகழ்வை காட்சியாக காண்பித்து பணம் சம்பாதிக்கும் ஊடகங்கள் முதலில்

1)      சமூக அக்கறை பெறட்டும்  சொல்லட்டும்,

2)      சாதி சிக்கல்களை வெளிப்படையாக அலசட்டும் பிறகு

 

பிறகு சொல்லட்டும் இது காட்டு மிராண்டித்தனமா? அல்லது மனிதத்தன்மையா? என்று.

 

##  ஈழத்தமிழனுக்கு குரல் கொடுக்கும் போலித்தமிழனே நம் அருகில் வாழும் நம் சகோதரனை சேரியில் ஒடுக்குவதை முதலில் நிறுத்து!

## ஈழத்தமிழனுக்கு தமிழனாய் குரல் கொடுக்க சாதியின் கழுத்தறுத்து மனிதனாய் வா இன்னொருமுறை கருத்தறித்து!

வெள்ளி, 14 நவம்பர், 2008

ராஜீவ் கொலையின் “உண்மைச் சதி” குறித்து சு.சுவாமியிடம் நார்கோ அனாலிசிஸ் சோதனை நடத்த வேண்டும்: திருச்சி வேலுச்சாமி

ராஜீவ் கொலையின் உண்மைச் சதி குறித்து இந்தியாவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமியிடம் நார்கோ அனாலிசிஸ் எனப்படும் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமியின் ஜனதா கட்சியின் முன்னாள் அகில இந்திய செயலாளர் திருச்சி வேலுச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் திருச்சி வேலுச்சாமி எழுதியிருக்கும் கடிதம்:

அன்பு நண்பர் சுப்பிரமணியன் சுவாமி அவர்களே.. குமுதம் ரிப்போர்ட்டரில் நீங்கள் கொடுத்திருக்கும் பேட்டியைப் படித்தேன். எனக்கு அழுவதா? சிரிப்பதா? என்றே தெரியவில்லை.

முதலில் ஜெயலலிதாவும் நீங்களும் நெருங்கிய நண்பர்கள் என்று சொல்கிறீர்கள். அவரைப் பார்க்க வேண்டும் என்று நீங்கள் சொன்னபோது, நான்தான் உங்கள் இரண்டு பேரையும் சந்திக்க ஏற்பாடு செய்து அறிமுகப்படுத்தி வைத்தேன். அப்படிப்பட்ட எனக்கில்லாத அளவுக்கு ஜெயலலிதாவுடன் உங்களுக்கு நட்பு என்றால் அது எப்படி என்பது எனக்குப் புரிகிறது.

1991 ஆம் வருடம் மே மாதம் 21 ஆம் நாள் இரவு பத்து மணிக்கு ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகுதான் இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் தலைவர்களின் புரோகிராம்களும் மாறின. ஆனால் அதற்கு முன்பே, தேர்தல் புரோகிராமை மாற்றியவர்கள் இரண்டே இரண்டு அரசியல் தலைவர்கள்தான். அதில் ஒருவர் நீங்கள். இன்னொருவர் ஜெயலலிதா. அந்த விதத்தில் நீங்கள் இரண்டு பேரும் ரொம்ப நெருக்கம் என்று எனக்குப் புரிகிறது.

அப்படிப்பட்ட நெருங்கிய நண்பர் (ஜெ.), சென்னை ஐகோர்ட்டுக்கு நீங்கள் போனபோது உங்களுக்கு அளித்த வரவேற்பை எந்த நண்பருமே கொடுத்திருக்க மாட்டார்கள். அதைப் போலவே நண்பர் என்ற முறையில் நீங்களும் அவருக்குச் செய்தது போல எந்த நண்பரும் செய்திருக்க முடியாது. உங்கள் நண்பர், உயிர்த்தோழி இன்றைக்கும் மீள முடியாமல் போராடிக் கொண்டிருப்பது பெங்களூர் ஸ்பெஷல் கோர்ட்டில் நடக்கிற சொத்துக்குவிப்பு வழக்கில்தானே? அதற்குக் காரணமான புகாரை எழுதிக் கொண்டு போய் கவர்னரிடம் கொடுத்தவர் நீங்கள்தானே? அது சரி, உங்களுடன் உட்கார்ந்து அதை அப்போது எழுதியவர் பொன்னையன். இன்றைக்கு அவர் அந்த அம்மாவுக்கு அரசியல் ஆலோசகராக இருக்கிறார். வி.வி.சுவாமிநாதன், பி.ஹெச்.பாண்டியன் எல்லோரும்கூட அப்போது வந்து ஆலோசனை தந்தார்களே? மறைந்த முன்னாள் சபாநாயகர் க.ராசாராம் வீட்டில் உட்கார்ந்துதானே அந்தப் புகாரைத் தயார் செய்தீர்கள்? அப்போது நானும் அங்கே இருந்தேனே. அதை மறந்து விட்டீர்களா? நாம் எப்படியெல்லாம் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் பார்த்தீர்களா? இந்த உண்மையெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிந்தால் அவர்கள் வாயால் சிரிக்க மாட்டார்கள்.

நீங்கள் கொஞ்ச நாளைக்கு முன் எழுதிய விடை தெரியாத வினாக்கள்என்கிற புத்தகத்தில், பக்கம் முப்பதில் இலங்கையில் இருக்கக்கூடிய சிங்களர்கள் பீஹாரில் இருந்து குடிபெயர்ந்து போன ஆரிய வம்சாவளியினர்என்று சொல்லியிருக்கிறீர்கள். அந்த சிங்களவர்களுக்கு எதிராக இருக்கக் கூடிய தமிழர்களை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள் என்பது இப்போதுதான் புரிகிறது. அந்தச் சந்தேகம் உறுதியானதற்கு உங்கள் பேட்டியிலேயே காரணம் இருக்கிறது.

தமிழ்நாட்டில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இனத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கிற, தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற இளைஞரான திருமாவளவனை இவ்வளவு கொச்சையாகவும், கேவலமாகவும் நீங்கள் பேசும்போதுதான் உங்கள் மனதில் இருக்கும் நஞ்சு என்ன என்பது புரிகிறது. நான் இந்த நேரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கையாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். தமிழ்நாட்டில் ஓர் ஆரிய- திராவிட வர்க்கப் போர் உருவாகி விடுமோ என்று நான் அச்சப்படுகிறேன். இதில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா மக்களும் ஒன்று சேர்ந்து உங்களை தமிழ்நாட்டில் நுழைய விடாமல் விரட்ட வேண்டும்.

திருமாவளவன் புலிகளிடம் காசு வாங்கினார் என்று சொல்கிறீர்களேபுலிகள் அவர்களுடைய வாழ்க்கைக்கும், போராட்டத்துக்குமே திண்டாடுகிற நிலையில், அவர்கள் எங்கே இவருக்குப் பணம் கொடுக்கப் போகிறார்கள்? ஆனால் உங்களுக்கு அமெரிக்காவின் சி.ஐ.ஏ.விடம் இருந்து கோடி கோடியாக பணம் வருவதாகச் சொல்கிறார்களே? அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள். இல்லையென்றால் உங்கள் அப்பா தந்த சொத்து என்ன? நீங்கள் சம்பாதித்த சொத்து என்ன? என்று பட்டியல் போடுங்கள் பார்க்கலாம். அமெரிக்கா போகிறேன், ஜெர்மனி போகிறேன், லண்டன் போகிறேன் என்று சுற்றிக் கொண்டு இருக்கிறீர்களே, அதற்குப் பணம் எங்கே இருந்து வந்தது? இதைச் சொல்லிவிட்டு அதன் பிறகு அல்லவா நீங்கள் எங்கள் இளவல் திருமாவிடம் கேள்வி கேட்க வேண்டும்.

திருமாவளவன் ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். அவர் ஒரு தேச பக்தர், மனிதாபிமானி. ஆனால் நீங்கள் தேசபக்தர் இல்லை என்பது மற்றவர்களைவிட உங்களுக்கும் எனக்கும் பட்டவர்த்தனமாகத் தெரியுமே!

நீங்கள் இந்தியாவில் இருந்தாலும் இந்தியாவுக்கா விசுவாசமாக இருக்கிறீர்கள்? இல்லையே. ராஜீவ் காந்தியை நண்பர் என்று சொல்கிறீர்கள். ஆனால், ராஜிவ் காந்தி செத்ததால் லாபமடைந்த முதல் மனிதர் நீங்கள் தானே? நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது காங்கிரசுக்குத் துளிகூட சம்பந்தமில்லாத உங்களை எப்படி டங்கல் காட்ஒப்பந்தக் கமிட்டிக்குத் தலைவராகப் போட்டார்கள்? அதில் முன்னால் நின்று ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டவர் நீங்கள்தானே? அதுவரை அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த ராஜீவ் காந்தியின் மரணத்துக்குப் பிறகுதானே இந்தியச் சந்தை அவர்களுக்குத் திறந்து விடப்பட்டது?

உலகத்தில் எந்த ஒரு கொலை நடந்தாலும் என்ன மோடிவ்? அல்லது யார் பயனாளி என்று பார்ப்பார்கள். அப்படிப் பார்த்தால் ராஜீவ் கொலையில் கண்ணை மூடிக்கொண்டு உங்களைக் கை காட்டலாம். ஆனால், இந்த நாட்டின் துரதிருஷ்டம், உங்களை இன்னும் தீவிரமாக விசாரிக்கவில்லை. அதை வலியுறுத்தித்தான் நாங்கள் இந்தப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம்.

பாமரர்கள் எல்லாம் வாய்க்கும் வயிற்றுக்கும் போராடிக் கொண்டிருக்கிறபோது, உங்களுக்கு லட்சக்கணக்கில் செலவு பண்ணி பாதுகாப்புத் தருவதால் எங்களுக்கு அவர்கள் (மத்திய அரசு) மேலேயே சந்தேகமாக இருக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. காங்கிரஸ்காரர்கள் எல்லாம் டூப்ளிகேட் என்று சொல்லியிருக்கிறீர்களேஎங்கள் கிராமத்தில் சொல்வார்கள் காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்என்று. அதுபோல நீங்கள் டூப்ளிகேட் என்பதால்தானே பார்க்கிறவர்கள் எல்லாம் உங்களுக்கு டூப்ளிகேட்டாகத் தெரிகிறார்கள்.

நீங்கள் ராஜீவ் காந்தி கொலையில் பல விஷயங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள். உங்களுடைய நண்பன் நான். ஜெயின் கமிஷனில் உங்கள் மேலேயே குற்றம் சொன்னேனே? உங்களைக் கூண்டில் நிற்க வைத்துக் கேள்வி கேட்டேனே. நீங்கள் கைகால் வெலவெலத்துப் போய் வேர்த்து விறுவிறுத்து ஸ்தம்பித்து நின்றீர்களேஅந்த கமிஷனே அதற்குப் பிறகு ஒன்றும் சொல்லாமல் ஒத்தி வைக்கப்பட்டதே. மறந்து விட்டீர்களா? அந்த கமிஷனிலேயே நீங்கள்தான் கொலைக்குற்றவாளி என்று சொல்லியிருக்கிறேனே.

உங்களுக்கு நார்கோ அனாலிசிஸ்என்கிற உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்தினால், ராஜீவ் கொலையின் உண்மைச் சதி என்ன? பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்பது உலகத்துக்கே தெரிய வந்துவிடும். இதனைச் சொல்கிற நேரத்தில் நீயும் இந்த டெஸ்ட்டுக்கு ரெடியா?’ என்று நீங்கள் கேட்கக்கூடும். முதலில் என்னை டெஸ்ட் செய்துவிட்டு, அப்புறம் உங்களை டெஸ்ட் செய்யட்டும். உங்களுடைய இந்த ஏமாற்று வேலை தமிழகத்தில் இனிமேல் எடுபடாது.

இப்படிக்கு,
உங்களை உள்ளும் புறமும் புரிந்த ஒரே நண்பன்
வேலுச்சாமி.