புதன், 11 பிப்ரவரி, 2009
இன்னுமா தமிழா இந்திய மயக்கம்?-தியாகு
1965ஆம் ஆண்டின் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் என்பது ஒரு தமிழ்த்தேசிய எழுச்சியே. இந்த எழுச்சியின் அலைவிளிம்பில் ஏறிச் சென்றுதான்திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தின் மாநில ஆட்சியைக் கைப்பற்றிக்காங்கிரஸ் ஏகபோகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
மாநில ஆட்சி என்பது அதிகாரமில்லாத அதிகாரம். பதவிக் கட்டிலில் படுத்துத்தூங்கிய தி.மு.க. அதன்பின் விழிக்கவே இல்லை. 1967 முதல் வடிந்து வற்றியதமிழ்த் தேசிய எழுச்சி 1980களில் தமிழீழ மக்களின் விடுதலைப் போர்த்தாக்கத்தால் புத்துயிர் பெற்றது. அது வளர்ந்து செல்வதைத் தடுக்கும் பொருட்டுத்தமிழீழ மக்கள் போராட்டத்தை அடுத்தும் எதிர்த்தும் கெடுக்கப் பார்ப்பனியம்சூழ்ச்சி செய்து அதில் பெருமளவு வெற்றியும் கண்டது.
இராசீவ் காந்தியின் இந்திய வல்லாதிக்க அரசியலும், அதன் நீட்சியானஇராணுவப் படையெடுப்பும் தமிழீழ மக்களுக்கு இழைத்த கொடுமைகளைமறைத்து விட்ட கட்சிகளும் ஊடகங்களும்... அவரது கொலையைச் சாக்கிட்டுத்தமிழக மக்களைத் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் திசை திருப்புவதில்பெருமளவு வெற்றி கண்டன. கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாகக் கடுமையானநெருக்கடி களுக்கிடையே தமிழீழ ஆதரவுச் சுடரை அணையாமல் காத்துவந்தவை தமிழகத்தின் தமிழ்த் தேசிய ஆற்றல்களே. இதற்காக நாம் பெருமிதம்கொள்ளலாம்.
தமிழீழ ஆதரவுக் கட்சிகளாக அறியப்பட்டுள்ள மற்றக் கட்சிகளைப் பொறுத்தவரை அவ்வப்போது தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல்கொடுத்திருப்பதை நாமும் மதிக்கிறோம். ஆனால் இவை தம் தமிழீழ ஆதரவைத்தேர்தல் - கூட்டணி அரசியலுக்கு உட்படுத்தியே வந்துள்ளன. தமிழீழ விடுதலைப்போராட்டத்தை இந்திய அரசு அறிந்தேற்க (அங்கீகரிக்க) வேண்டும், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்பன போன்ற தெளிவானகோரிக்கைகளை இந்தக் கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்துவதும் இல்லை.
இந்தப் பின்னணியில்தான் கடந்த ஓராண்டு காலமாக இராசபட்சர்தலைமையிலான சிங்களப் பேரினவாத அரசு போர் நிறுத்தத்தைக் கைவிட்டுத்தமிழீழ மக்கள் மீது தொடுத்துள்ள கொடும்போர் தமிழகத்தில் ஓர்எதிர்வினையைத் தோற்றுவித் துள்ளது. குறிப்பாகக் கடந்த நான்கைந்து மாதகாலமாகத் தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சி தோன்றி யுள்ளது. அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், கட்சி சாராக் குடியியல் சமுதாயத்தைச்சேர்ந்தவர்களும் - வழக்கறிஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், தகவல் - தொழில்நுட்பர்கள், திரைக் கலைஞர்கள் - தமிழீழ மக்களைக் காக்கக் குரல்கொடுத்து வருகின்றனர்.
2008 அக்டோபர் 14இல் தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தின்தீர்மானங்கள் பற்றி நாம் முன்பே எழுதியுள்ளோம். அடுத்தடுத்து மனிதச் சங்கிலி, சட்டப் பேரவைத் தீர்மானம், தில்லிக்குத் தூது... என்று பல்வேறு வகையிலும்தமிழக மக்களின் உணர்வுகள் தில்லிக்கு உணர்த்தப்பட்டுள்ளன. ஆனால் தில்லிப்பேரரசு இந்த உணர்வுகளைத் துச்சமாக மதித்துச் செயல்பட்டு வருகிறது.
படைக்கலன்கள், படைப் பயிற்சி, போரியல் அறிவுரை, படைத் துறையினரின்நேரடிப் பங்கேற்பு, உளவுத் துணை, நிதியுதவி என்று சிங்கள அரசின் போர்முயற்சிக்கு எல்லா வகையிலும் இந்திய அரசு உடந்தையாக இருந்து வருவதைமறுக்கவோ மறைக்கவோ முடியாது. ஒரு பக்கம் பாகிஸ்தானுடன் போர்முழக்கம் செய்து கொண்டே, மறு பக்கம் சிங்களப் படைக்கு உதவுவதில்பாகிஸ்தானுடன் இந்தியாவும் கூட்டாகச் செயல்பட்டு வருவது அண்மையில்அம்பலமாகியுள்ளது.
இந்திய அரசின் இந்தத் தமிழர்ப் பகைப் போக்கில் ஒருசில அதிகாரிகள்மற்றவர்களைக் காட்டிலும் முனைப்பாக இருக்கலாம். ஆனால் இந்தஅதிகாரிகளே எல்லாவற்றுக்கும் பொறுப்பு என்று சொல்லி ஆளும்காங்கிரசையும், திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகளையும் காப்பாற்றும்முயற்சியை ஏற்பதற்கில்லை. ஆளும் கட்சி அல்லது கூட்டணி எதுவானாலும்இந்திய அரசு அடிப்படையில் தமிழீழத்துக்கும் தமிழர் களுக்கும் எதிராகச்செயல்பட்டு வருவதே வரலாறு.
தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி முதலில் போர்நிறுத்தம், ஆயுத உதவிநிறுத்தம் ஆகிய கோரிக்கைகளை எழுப்பினார். பிறகு போர்நிறுத்தத்தை மட்டும்கேட்கலானார். அனைத்துக் கட்சியினருடன் தில்லி சென்றுதலைமையமைச்சரைச் சந்தித்த பின் "பிரணாபை கொழும்புக்கு அனுப்புங்கள்' என்று கெஞ்சும் நிலைக்குப் போய்விட்டார். பிரணாப் கொழும்பு சென்றாலும்போரை நிறுத்தச் சொல்வாரா? அல்லது தொடர்ந்து நடத்தச் சொல்வாரா? என்றுகேட்கக் கூட கருணாநிதி அணியமில்லை.
அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானத்தின்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிவிலகுவார்கள் என்ற அச்சுறுத்தலிலிருந்து திமுக பின்னடித்துவிட்டது. சரி, மற்றக் கட்சிகளாவது அந்த அச்சுறுத்தலைச் செயலாக்கியிருந்தால், அதாவதுநாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்திருந்தால், தில்லிக்கு ஒருநெருக்குதலை ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் எந்தக் கட்சியும் அப்படிச்செய்யவில்லை. ஏன் என்பதற்கு இதுவரை பொருத்தமான விளக்கமும் இல்லை. திமுக பொதுக்குழுவே பிரணாபைக் கொழும்புக்கு அனுப்பும்படி கோரிக்கைத்தீர்மானம் இயற்றும் பரிதாப நிலை ஏற்பட்டது. சென்னை வந்த மன்மோகன் சிங்பிரணாபை விரைவில் கொழும்புக்கு அனுப்புவதாக மீண்டும்உறுதியளித்துள்ளார். பிரணாபை அப்படியெல் லாம் நினைத்த போதுகொழும்புக்கு அனுப்ப முடியாது என அமைச்சர் டி.ஆர். பாலுவே பொதுக்குழுவின்கன்னத்தில் அறை விட்டாற் போல் விடை சொல்லியிருக்கிறார்.
ஈழத் தமிழ் மக்களுக்காகத் தில்லியிடம் ஒரு துரும்பைக் கூடக் கிள்ள முடியாதகருணாநிதி சகோதரக் கொலை பற்றியெல்லாம் பேசித் தமிழீழ விடுதலைப்புலிகளைப் பழித்தார். இந்தத் தூற்றலின் உச்சமாக மாவீரர் துயிலும்இல்லங்களையே கேலி செய்து தமிழீழ மக்களுக் காக இன்னுயிர் தந்தவர்களின்புனித நினைவையே கொச்சைப்படுத்தினார். இதை யெல்லாம் பொறுத்துக்கொண்டால், கலைஞர் ஈழத் தமிழர்களுக்கு நல்லது நடக்கச் செய்வார் என்றுநம்பியிருந்தவர்கள் இலவு காத்த கிளி ஆனார்கள்.
அஇஅதிமுக தலைவி செயலலிதா தமிழினப் பகைவர். கருணாநிதியை அகற்றிவிட்டு நாற் காலியைப் பிடிப்பதற்காக எதுவும் செய்யக் கூடியவர். ஈழத்தமிழர்களுக்காக அனுதாபப் படுவது போல் "சில நாள் மட்டும் நடிக்க வந்தவர்' (இவருக்காகவே இந்த வரியைப் பாடலில் சேர்த்தவர் கண்ணதாசன்) விரைவில்தன் இந்துத் துவ உள்ளுருவை வெளிப்படுத்திக் கொண்டார். தன் கூட்டணியில்இருப்பவர்கள் ஈழம் பற்றி மாறுபட்டுப் பேசுவதை இவர் சகித்துக் கொள்கிறார்என்பது பொய்த் தோற்றமே. ஏதோ கத்தட்டும் என்று வேடிக்கை பார்ப்பார், கடிக்கமுற்பட்டால் அடித்து விரட்டி விடுவார். இந்த வகையில் இவரதுஅணுகுமுறையும் கருணாநிதியின் அணுகுமுறையும் ஒன்றே. சிபிஎம் கட்சி ஈழத்தமிழர்களை இந்த அளவுக்கு வெறுப்பது ஏன்? என்று பலரும் கேட்கின்றனர். அதன் இந்தியத் தேசிய வெறிதான் காரணம்.
இந்தியத் தேசிய நிலைப்பாட்டில் இருந்தாலும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சிஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு எதிராக நிலையெடுத்து அண்மைக் காலத்தில்போராடி வருவது நன்று. ஆனால் இன்னமும் இக்கட்சியினால் தமிழீழவிடுதலைக் குறிக்கோளைத் திட்டவட்டமாக ஏற்க முடியவில்லை. விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கு! என்ற கோரிக்கையையும் அது எழுப்பவில்லை - இது வரை!
தமிழீழ மக்களைக் காக்க இந்தியா தலையிட வேண்டும்! என்ற கோரிக்கையின்அப்பாவித் தனத்தை அண்மைய வரலாறு வெளிப்படுத்தி விட்டது. இந்தியாஏற்கெனவே தலையிட்டுத் தான் உள்ளது - சிங்கள அரசுக்கு ஆதரவாக! இந்தத்தலையீட்டை நேருக்கு நேர் எதிர்க்க வேண்டும். இந்தியா தமிழர்களைப் பகைவர்களாகக் கருதிச் செயல்பட்டுக் கொண்டிருக்கை யில், "தமிழர்களாகிய நாங்களேஇந்தியாவின் நண்பர்கள்' என்று இன்சொல் பேசிக் கொண்டிருப்பதால்பயனில்லை. தமிழீழ மக்களுக்கு எதிரான சிங்கள அரசின் போருக்கு இந்தியாஉதவியும் ஆதரவும் வழங்குவது என்ற நிலைபோய், இந்தியாவே சிங்களப்படைகளைக் கருவியாகக் கொண்டு இந்தப் போரை நடத்துவது என்ற நிலை வந்துவிட்டதைக் கிளிநொச்சி தெளிவாகப் புலப்படுத்தி விட்டது. இந்தியா கொடுத்தபயிற்சியைக் கொண்டு இந்தியா கொடுத்த படைக்கலன்களால் இந்தியாவின்வழிகாட்டலுடன் சிங்களப் படை தமிழ் மக்கள் மீது போர் தொடுத்துள்ளது என்பதேசாரமான உண்மை.
தமிழர்கள் தில்லியைக் கொஞ்சிக் கெஞ்சும் ("தாசா' செய்யும்) அணுமுறையைக்கைவிட வேண்டும். தில்லியை எதிர்த்துப் போராடி நெருக்குவதே சரியானஅணுகுமுறை. தமிழீழத் தேசியத்தை முரணின்றி ஆதரிக்கத் தமிழ்த் தேசியநிலைப்பாடு தேவை. எப்படியும் இந் திய வல்லாதிக்கத் தொடர்புநிலைப்பாடாவது தேவை. ஒருசில நண்பர்கள் தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்பதாகச் சொன்னாலும், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இந்தியஇறையாண்மைக்கும் ஒருமைப் பாட்டுக்கும் வணக்கம் சொல்வதை வழக்கமாகவைத்துள்ளனர். ஈழத் தமிழர்களை ஆதரிக் கிறோமே தவிர இந்தியஇறையாண்மையை எதிர்க்கவில்லை என்று தன்னிலை விளக்கம் தந்துகொள்கின்றனர். இவர்கள் ஒன்றைத் தெளி வாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது இந்திய இறையாண்மை என்பது தமிழ்த் தேசிய இறையாண்மையைமறுப்பது ஆகும். தமிழ்த் தேசியத்தின் அரசியல் சாரம் தமிழ்த் தேசியஇறையாண்மையை மீட்கப் போராடுவதே ஆகும். மேலும், இந்தியக் குடிமக்களாகஇருப்ப தாலேயே இந்திய இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்டக் கட்டாயம் எதுவுமில்லை. ஒரு மாற்றுக் கருத்துஎன்ற அளவில் கூட இந்திய இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும்மறுக்கத் துணியாதவர்களைத் தமிழ்த் தேசியத்தில் மெய்யான அக்கறைகொண்டவர்கள் என்று நம்புவது கடினமாய் உள்ளது.
நமது தமிழ்த் தேசியம் என்பது இந்திய இறை யாண்மையையும்ஒருமைப்பாட்டையும் மறு தலித்துத் தமிழக இறையாண்மையையும் தமிழ்த்தாயகத்தையும் மீட்கப் போராடுவது ஆகும். தமிழகம் தொடர்பாகவும் சரி, தமிழீழம்தொடர் பாகவும் சரி, இந்திய மயக்கம் நமக்கில்லை. தமிழீழ மக்களின் போராட்டம்அவர்களின் சாதனைகளும் வேதனைகளும் - தமிழர்களை இந்தியமயக்கத்திலிருந்து விடுபடச் செய்து வருகின்றன. தமிழீழ விடுதலைப் போர்சிங்களப் பேரின வாதத்துக்கு எதிரானதாக மட்டும் பார்க்கப்பட்ட நிலை மறைந்துவிட்டது. அதனை இந்திய வல்லாதிக்கம் தனக்கு எதிரானதாகப் பார்க்கிறது. அமெரிக்க வல்லா திக்கமும் பயங்கரவாத எதிர்ப்பு என்ற போர்வையில் எல்லாத்தேசிய விடுதலைப் போராட் டங்களையும் எதிர்ப்பது போலவே ஈழ விடுதலைக்குஎதிராகவும் முனைப்புக் காட்டுகிறது. பிரிட்டன், சீனா, உருசியா போன்றவல்லரசுகளும் சிங்களத் தின் பக்கம் நிற்கின்றன. இந்தக் கொலைகாரக்கூட்டணிக்குத் தலைமை வகிப்பது இந்தியாவேதான்.
தமிழகத்தின் இறை யாண்மையை மறுக்கும் இந்தியா தமிழீழத்தின் இறையாண்மையையும் மறுத்து நிற் கிறது. சிங்கள இறையாண்மைக்கு எதிரானஒவ்வொன்றையும் இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகப் பார்த்து ஒடுக்கமுற்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்கு முன் இட்லரின் பால் கொஞ்சிக்கெஞ்சும் கொள்கையை கடைப் பிடித்த மேலை வல்லரசுகளின் பட்டறிவுநமக்கோர் எச்சரிக்கை. இட்லரின் வழித்தோன்றல் தான் இராசபட்சர். இராசபட்சரின் இராசகுரு தான் மன்மோகன் சிங். இவரை எதிர்த்துமுறியடிக்கலாமே தவிர, கொஞ்சிக் கெஞ்சி எதையும் அடைய முடியாது.
இன்னமும் இந்திய மயக்கத்திலிருக்கும் தமிழர்கள் இனியாவது அதிலிருந்துவிடுபட வேண்டும். இது ஈழப் போராட்டம் நமக்களித்த கொடையாக இருக்கட்டும். மயிலே மயிலே என்றால் இறகு போடாது... இந்தியாவும் இப்படித்தான்.
http://www.keetru.com/thamizhthesam/jan09/prabaharan.php -
சனி, 7 பிப்ரவரி, 2009
தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்! (3)ஆல்பர்ட்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்.
ஒரு வழியாக பிரணாப் முகர்ஜி இருநாள் பயணமாக கொழும்பு போய்....திரும்பி வந்தும் விட்டார். உங்கள் வேண்டுகோள் இறுதியாக செவிமடுக்கப்பட்டுவிட்டது. பிரதமரைச் சந்தித்து, சட்டசபையில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றி அதுவும் இறுதி வேண்டுகோளில் அய்யகோ என நீங்கள் கதறிய கதறல் கேட்டுப் பதறிப்போன பிரணாப் புறப்பட்டுவிட்டார் இலங்கைக்கு! இலங்கை செல்லும் முன்பாக உங்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடி தங்களிடம் உத்த்திரவு பெற்று கிளம்பியதாக சட்டப்பேரவையிலும் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தருணத்திற்காகத்தானே நீங்கள் காத்திருந்தீர்கள்!
நீங்கள், மருத்துவமனையில் இல்லாவிட்டால் இந்நேரம் உடன்பிறப்புகளுக்காகவாவது ஒரு மடல் எழுதியிருப்பீர்கள்? இறுதிவேண்டுகோள் டெல்லிக்கு எட்டும்படி நான் அய்யகோ என்று கதறி அழுததற்கு பலன் கிடைத்துவிட்டது. பிரணாப் இதோ புறப்பட்டுவிட்டார். போர் நிறுத்தம் நடக்கும் என்று நம்புவோம்; குறைந்தபட்சம் வெடிச்சத்தங்களையாவது நிறுத்திவிட்டால் நம் தமிழினம் காக்கப்படும்;நாளும் கொல்லப்படுவதிலிருந்து தப்பிவிடும்; நாம் பொறுமைகாத்ததற்கு பலன் கிடைத்துவிட்டது. இன்னும் கொஞ்சம் அவர் வருமட்டும் பொறுமை காப்போம்! நல்லதையே நினைப்போம்; நல்லதே நடக்கும் என்று ஒரு கடிதம் எழுதி உலகத் தமிழர்களுக்கெல்லாம் உங்கள் நிலையுணர்த்தியிருப்பீர்கள்! பாழாய்ப்போன முதுகுவலி போரூர் மருத்துவமனையில் கொண்டுபோய்விட்டுவிட்டது.
நடந்தது என்ன?
பிரணாப் முகர்ஜி எதற்காக இலங்கை செல்கிறார்? என்பதை இந்திய அரசு வெளிப்படையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவே இல்லையே!
பிரணாப் இலங்கை செல்ல வேண்டும் என்பது நீண்ட நாளைய கோரிக்கை, தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்திய அரசு "போர் நிறுத்ததை" வலியுறுத்துவதற்காக வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களை கொழும்புக்கு அனுப்புகிறது என்று செய்திகளே வெளியாகவில்லையே.
"தங்களின் அழைப்பின் பேரிலேயே இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு வந்துள்ளதாகவும்,புலிகளுடனான போரில் தாங்கள் பெற்ற வெற்றியைப் பகிர்ந்து கொள்ளவும், அடுத்து நடக்க வேண்டியவை குறித்து விவாதிக்கவுமே பிரணாப் முகர்ஜியை நாங்கள் இலங்கைக்கு அழைத்துள்ளோம் என்று அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார் என்று வெளிநாட்டு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில் மேலும்,"இலங்கைக்கு பிரணாப் முகர்ஜி வருவது இந்திய அரசின் முடிவல்ல. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே விடுத்த அழைப்பை ஏற்றுத்தான் பிரணாப் முகர்ஜி வந்துள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான நட்பு மற்றும் பாரம்பரியத்தைக் காக்கவும், முன்னேற்றத் திட்டங்கள் குறித்து உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சு நடத்தவுமுள்ளார்"என்று தெளிவாக இலங்கைப் பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாக வந்துவிட்டது.
"இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே சண்டை நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. இது பற்றி ராஜபக்சேவிடம் கவலை தெரிவித்தேன்"என்றும் நிலைமையை நேரில் பார்வையிட தமிழகத்திலிருந்து முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு இலங்கை வரலாம் என்று அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்" என்று திரும்பி வந்ததும் பேட்டியும் கொடுத்துவிட்டார் பிரணாப்.
ஆக, நீங்கள் எம்.பிக்களை அனுப்பிச் சொன்னது,சர்வ கட்சித்தலைவர்களோடு போய்ச் சொன்னது,உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி போராட்டம், சட்டபேரவையில் தீர்மானங்கள் இப்படி எத்தனையோ வழி முறைகளிலும் நீங்கள் சொன்ன "போர் நிறுத்தம்" என்ற பிரதான கோரிக்கையை கைகழுவிவிட்டது மத்திய அரசு!
கொழும்புக்கு செல்லும் முன்பாக பிரணாப் முகர்ஜியை,"இலங்கை அதிபரிடம் பேசும்போது "போரை நிறுத்த"வும் இனப்பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண பேச்சுவார்த்தையை தொடங்கவும் வற்புறுத்துமாறு பிரணாப்பிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்
கேட்டுக்கொண்டார் ராஜா. அதற்கும் "பெப்பே" காட்டிவிட்டு காங்கிரசு அரசு இரகசியமாக என்ன செய்யவேண்டுமோ அதை செயல்படுத்திவிட்டு வந்துவிட்டார்,பிரணாப்!
இதற்கிடையில், உங்களை நம்பினால் ஒன்றும் நடக்காது என்று பா.ம.க. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க.,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழர் தேசிய இயக்கம் ஒன்று சேர்ந்து "இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்" ஒன்றைத் துவங்கிவிட்டனர்.
தொடர்ந்து மவுனம் சாதித்தால் எங்கே நம்மை ஓரம் கட்டிவிடுவார்களோ என்று அவசர அவசரமாக பிப்.3ல் செயற்குழுவைக் கூட்டியுள்ளீர்கள். அதை வரவேற்கிறேன். வழக்கம்போல கெடு எதுவும் விதிக்காமல் மத்திய அரசுக்கு நீங்கள் அளிக்கும் ஆதரவை உடனடியாக விலக்கிக்கொண்டு தமிழினத்தைக் காக்க நீங்கள் முயற்சிக்காவிட்டால் உலக தமிழ்ச் சமுதாயம் உங்களை ஒருபோதும் மன்னிக்காது, முதல்வர் அவர்களே! பலநூறு ஆண்டுகள் ஆனாலும் உங்கள் மேல் விழுந்த கறை நீங்கவே நீங்காது!
உலகத் தமிழினத் தலைவர் அவர்களே, நீங்கள் மருத்துவமனையில் இருப்பதால் இலங்கையில் நம்மினம் படும்பாட்டை எடுத்துச்சொல்வது என் கடமை என்பதால் சில விதயங்களைப் பட்டியலிடுகிறேன்.
சிவசங்கரமேனன் போய்வந்த சில நாட்களாகியும் போரை நிறுத்தக்காணோமே என்று பிரணாப் போரை நிறுத்த நேரில் ஒருநடை போய் சொல்லிவிடலாம் என்று போய்விட்டாரோ?! என்று தோன்றியது. அவர் போயும் ஒன்றும் ஆகவில்லை!
அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள், முதல்வர் அவர்களே! எல்லோருக்கும் கடுக்காய் கொடுத்துவிட்டு எதைச் செய்ய வேண்டுமோ, அதை உங்களையும் கைக்குள் போட்டுக்கொண்டு சிங்கள அரசுக்கு சங்கநாதம் பாடிக்கொண்டிருக்கிறார்கள்!
சிங்கள அரசின் கொடூர இனப்படுகொலை சந்தித்திருக்கும் முல்லைத்தீவில் உள்ள மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பட்டினிச் சாவையும் எதிர்கொண்டுள்ளார்கள்.
சிங்கள அரசாங்கமே அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வல"யங்களிலிருந்து ஐ.நா மற்றும் உலக உணவுத் திட்ட அமைப்பின் பிரதிநிதிகள் வெளியேற சிங்கள அரசாங்கமே உத்தரவிட்டுள்ளது.
காரணம், பாதுகாப்பு வலயம் என்று சிங்கள அரசு அறிவித்த இடத்திலாவது ஒதுங்கியிருப்போம் என்றிருந்தவர்களை சாலையோரம், வேலியோரம், வீதிகளில், இடிந்த வீடுகளின் இடிபாடுகளில் உயிர் பிழைக்க உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்த தமிழர்களை மொத்தமாகக் குண்டுபோட்டு 500க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயங்களோடு சிகிச்சைக்கு வலியில்லாமல் வேதனையோடு கட்டாந்தரையில் படுத்துப்புரள்கின்றனர். முதுகுவலியோடு நீங்கள் சொகுசு மருத்துவமனையிலிருந்தாலும் இதனைச் சொல்வது என் கடமையில்லையா, முதல்வர் அவர்களே!
சர்வதேச செஞ்சிலுவைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இலங்கையின் வடபகுதியில் தொடரும் மோதல்களில் 250 சதுர கிலோ மீட்டர் பரப்பளவான இடத்தில் இரண்டரை லட்சம் பேர் சிக்கியுள்ளதாகவும், அங்கு பெரும் மனிதாபிமான நெருக்கடி ஒன்று உருவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் அடைக்கலமாகியிருக்கும் தமிழர்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகி பட்டினிச்சாவுக்கு முகம் கொடுக்கும் அவலத்தில் உள்ளது, என ஜெனீவாவில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் ஆசிய பிராந்திய நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக உள்ள ஜேக் மே டயோ தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்காவின் காங்கோ போல தென்னாசியாவிலும் அவலம் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக வன்னி தகவல்கள் அதிர்ந்து சொல்கிறது முதல்வர் அவர்களே! ஆனால் பிரணாப் எதிலும் சேர்த்தியில்லாமல், "ஒன்றரை லட்சம் தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது பற்றி ராஜபக்சேவிடம் கவலை தெரிவித்தேன்" என்று புள்ளிவிபரம் கூடத்தெரியாமல் உளறிக்கொட்டியிருப்பதிலிருந்து இவர் வெளிவிவகார அமைச்சரா? விவகார அமைச்சரா? இல்லை விவகாரம் தெரிந்து விவகாரம் செய்ய விரும்பாமல் காங்கிரசின் விருப்பத்தை மட்டுமே விருப்பாய்ச் செய்யும் அமைச்சரா? பதிலை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
இந்திய அரசின் அணுகு முறைக்கும் உங்கள் பொறுமைகாப்புக்கும் என்ன பலன் கிடைத்ததாகக் கருதுகிறீர்கள்? உங்களை இதைவிடக் கொடூரமாக அவமானப்பட வைக்க வேறு யாராலும் முடியாது என்றே எண்ணுகிறேன்.
நீங்கள் ஓய்வாக மருத்துவமனையில் இருப்பதால் உங்கள் நினைவுகளை பின்னோக்கி அசைபோட்டுப்பார்க்க ஒருவாய்ப்பாகக் கருதி நீங்கள் இதுவரை பொறுமைகாத்தது நியாயம்தானா என்பதை எண்ணிப்பாருங்கள் முதல்வர் அவர்களே! அதன் பிறகாவது செயற்குழுவில் கண்துடைப்புக்காகவோ, மூக்கு துடைப்புக்காகவோ ஒரு முடிவெடுக்காமல் ஒரு முக்கிய முடிவெடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இந்த மடலை அனுப்புகிறேன்,முதல்வர் அவர்களே!
* தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை 900 தடவைக்கு மேல் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, இலங்கையைக் கண்டித்து இந்தியா ஒரு வார்த்தையாவது கூறியதுண்டா?
*சிங்கள ராணுவம் நடத்தும் தாக்குதலில் தினமும் நூற்றுக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். பாதுகாப்பான பகுதி என்ற அறிவிக்கப்பட்ட இடத்தில் தங்கியிருந்த 500 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 4000க்கும் மேற்பட்டோர் காயங்களுக்கு சிகிச்சை பெற இயலாமல் உள்ளனர்.
*அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறும் மத்திய அரசு, மறைமுகமாக இலங்கை அரசுக்கு ஆதரவளித்து இரட்டை வேடம் போடுகிறது என்ற உண்மையை இப்போதாவது உணர்கிறீர்களா?
**சீனா இலங்கையின் யுத்தத்துக்கு தேவையான இராணுவ பீரங்கிகளை வழங்குவதாகச் சொன்னதும், சீனாவிடம் ஏன், நாங்களே தருகிறோம் என்றும் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துப்போடவுமே பிரணாப் சென்றதாக தகவல்கள் கசிந்திருக்கிறது. போர்த்தளவாடங்கள், தேவையான இந்திய இராணுவ வீரர்களை அனுப்பிவைக்கவும் இந்த ஒப்பந்தம் வழி செய்யப்போவதாக பிரணாப் பயண இரகசியங்கள் மெல்ல எட்டிப்பார்க்கத் துவங்கியிருக்கிறது.
*பிரபாகாரன் முல்லைத்தீவிலிருந்து கடல் வழி தப்பிவிடாமலிருக்க இராடார் பொருத்தப்பட்ட கப்பலையும், கொச்சி துறைமுகத்திலிருந்து அதிரடிப்படை வீரர்களை அனுப்பிவைக்கவும் பிரணாப் இராசபக்சேவுக்கு உறுதிகொடுத்து வந்துள்ள செய்தி தெரியுமா உங்களுக்கு? பாவம் உங்களுக்குத்தான் எதுவும் சொல்லாமலே செய்துகொள்வதுதானே காங்கிரசு அரசின் வழக்கமான பழக்கம்!
*திருகோணமலையில் அமெரிக்காவால் அமைக்கப்படும் ஏவுகணைத்தளம் இந்தியாவுக்கான அச்சுறுத்தலாகக் கருதுவதாகத் தெரிவிக்கவும், இதுதொடர்பான இந்தியாவின் கவலையை வெளிப்படுத்தவுமே தம் பயணம் என்று மகிந்த இராசபக்சேவிடம் பிரணாப் தெரிவித்த தகவலும் கூட உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை, இல்லையா முதல்வர் அவர்களே! அப்படியே தெரிந்தாலும் திருகோணமலையில் மின்நிலையம் அமைக்க அனைத்து உதவிகளையும் செய்வதாகத் தெரிவித்தேன் என்பார்!
*போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட நிதி தேவை என்ற மகிந்த இராசபக்சேவின் கோரிக்கையை இந்தியா ஏற்று பல இலட்சம் அமெரிக்க டாலர்களை வழங்குவதற்கான ஒப்புதலையும் பிரணாப் தெரிவித்துவிட்டார். மகிந்தா மகிழ்வானந்தாவாகிவிட்டார். காரணம் அந்த நிதியை அப்படியே பாகிஸ்தானிடம் கொடுத்து ஆயுதக் கொள்முதல் செய்ய முடியுமல்லவா?
*இவ்வளவுக்கும் பிறகு முத்தாய்ப்பாக,"தமிழ்நாட்டில் போடும் கூச்சலைக் கேட்டு இங்கு வரவில்லை; அதிபரின் தனிப்பட்ட அழைப்பின் பேரிலேயே வந்தேன் என்று பிரணாப் சிரித்து வழியச் சொல்லிய சேதியை அங்குள்ள பாதுகாப்புச் செயலக அதிகாரி சொல்லிச் சிரித்த சோகத்தையும் உங்கள் காதில் போட்டுவிட்டேன், முதல்வர் அவர்களே!
*நீங்கள் முன்பு"காங்கிரஸ் அரசு திமுகவுடன் தோழமை கொண்டுள்ள கூட்டணியிலே உள்ள ஒரு கட்சியின் அரசு. எனவே, கூட்டணி தர்மத்தைப் பின்பற்ற வேண்டுமென்று திமுக நினைப்பது தவறல்லவே?'' என்று குறிப்பிட்டிருந்தீர்கள். கூட்டணியாவது தர்மமாவது என்று காங்கிரஸ் கட்சி இப்போது உணர்த்திவிட்டது இல்லையா முதல்வர் அவர்களே!
இந்த நிலைப்பாடை நீங்கள் பிப்.3லும் எடுத்தால், இம்முறை நீங்கள் தனிமைப்படுத்தப்படுவீர்கள். உங்களோடு எந்தக் கட்சியும் தேர்தல்கால உறவுக்குக்கூட வரமட்டார்கள் என்பது சர்வ நிச்சயம் முதல்வர் அவர்களே!
*உலகத் தமிழினத் தலைவர், ஏழரைக்கோடி தமிழர்களின் முதல்வர் எத்தனையோ வழிமுறைகளைக் கையாண்டு பிரதமருக்கும், அன்னை சோனியாவுக்கும், வெளியுறவு அமைச்சருக்கும் எடுத்துச் சொல்லியும் இலங்கையில் நடக்கும்....நடந்துகொண்டிருக்கும் ஒரு வன்முறையைத் தடுத்து நிறுத்த முடியவில்லையென்றால் எங்கோ தவறு நடக்கிறது? எங்கோ திட்டமிட்ட சதி நடக்கிறது, என்பது இன்னுமா உங்களுக்குப் புரியவிலை?!
*பிரதமருக்கும், இந்திய அரசுக்கும் தாமதமின்றி உணர்த்தவேண்டிய நிலையில் இருப்பது யார்? அது தாங்களல்லவா? அதுவும் உங்கள் இறுதி வேண்டுகோளைப் புறக்கணித்த பிறகும் நீங்கள் பொறுமை காக்கவோ, கெடு விதிக்கவோ தேவையில்லை;உங்களை உதாசீனப்படுத்தியவர்களுக்கு தக்க பாடம் புகட்டவேண்டிய மிக முக்கியமான தருணமிது முதல்வர் அவர்களே!
*"தமிழ்நாட்டையே ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டத்தை நடத்த வேண்டும் என்பதையும்- காங்கிரஸ் ஆட்சிக்கு இனி இங்கே இடமே இல்லை, எங்களோடு இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று இறுதியான ஆனால் உறுதியான முடிவெடுக்க வேண்டுமா? வேண்டாமா?
*அறிஞர் அண்ணா வளர்த்து எம்மிடம் அளித்து விட்டுப் போன இந்த இயக்கத்தை ஆம், ஒரு கோடி உறுப்பினர் கொண்ட இந்த இயக்கத்தை பலியிட முனைவோருக்குத் துணை போக நான் தயாராக இல்லை" என்று எந்த காங்கிரசை நம்பிச் சொன்னீர்களோ அவர்கள் உங்களை நம்பிக் கழுத்தறுத்துவிட்ட நிலையில் நீங்கள் இறுதியான ஆயுதத்தை எடுக்க வேண்டிய கட்டாயம் வாய்த்துவிட்டது முதல்வர் அவர்களே!
*முதல்வர் அவர்களே! உங்கள் கோரிக்கையைக் கிடப்பில் போட்டுவிட்டு "மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட காங்கிரசு முனைந்துவிட்டபோது?" உங்கள் பின்னால் நாங்கள் அணிவகுக்கிறோம் இலங்கைப் பிரச்னைக்காக என்று ஒரு சில தலைவர்கள் சொன்னதை ஏன் நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது?
*உங்கள் தலைமையில் நடத்திய பல்வேறு போராட்டங்கள், நேரடி சந்திப்பு, ராஜினாமா அறிவிப்புகளெல்லாம் இந்திய அரசினை வழிநடத்திச் செல்லும் அரசின், ஆளும் கட்சியின் காது மடல்களைக் கூட தொட இயலவில்லை என்ற நிலையில் உங்கள் ஆட்சியை அவர்கள் கவிழ்க்கும் முன்பாக ஈழத்தில் தமிழினப்படுகொலை செய்ய மறைமுக உதவியைச் செய்யும் காங்கிரசு அரசை நீங்கள் கவிழ்க்க உங்களுக்கு தாராளமான ஏராளமான காரணங்கள் இருக்கிறது முதல்வர் அவர்களே!
*"வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை சென்று வருவதற்கு இயலாத காரணம் எதுவும் இருந்தாலும் அதனையும் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கலாம். அல்லது எது தக்க காலம், நேரம் என்பதையாவது எடுத்துரைத்திருக்கலாம். அப்படியெதுவும் நடைபெறாதது, மாநில அரசைப் பொறுத்தவரையில் வேதனையான நிலையாக உணரக் கூடியதுதான்". சொல்லியிருக்கிறீர்களே, அதுதான்..... அந்த ஏமாற்றம் தந்த வலிதாளாமல் தான், மாநில முதல்வரையே துச்சமாக எண்ணிவிட்டார்களே என்ற வேதனையின வெளிப்பாடாகத்தான், வேறு எதாவது செய்யலாம் என்று தோன்றுவதையெல்லாம் ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் முதற்கொண்டு உண்ணாவிரதம், மவுன விரதம் என்று புதிது புதிதாகச் செய்கிறார்கள்.
அதுமட்டுமில்லை. ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி, வகுப்பு புறக்கணிப்பு என்று போராட்டத்தில் குதித்து தெருவுக்கு வந்துள்ளனர். தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்கள் ஈழத் தமிழர்கள் மீது கொலைவெறியாட்டம் போடும் சிங்கள இனவெறி அரசின் போரை நிறுத்துமாறு வகுப்புக்களை புறக்கணித்து போராடுகின்றனர். மக்கள் போராட்டம் மெல்லமெல்ல வெடிக்கத் துவங்கிவிட்டது, முதல்வர் அவர்களே!
**1948-ல் இலங்கையில் 75 லட்சம் சிங்களர்களும், 37 லட்சம் தமிழர்களும் இருந்தனர். ஆனால், சிங்களர்கள் எண்ணிக்கை 1.40 கோடியாகவும், தமிழர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்குப் பதிலாக 35 லட்சமாக குறைந்தும் உள்ளது. திட்டமிட்டே தமிழினம் அழிக்கப்பட்டுள்ளது. இன்னும் அழித்துக்கொண்டே இருக்கிறார்கள். சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் என்ற பெயரால் அப்பாவித் தமிழர்கள் அன்றாடம் அங்கே உயிர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள், என்பதை நீங்களும் அறிவீர்கள்தானே!
*ஐ.நா.சபை அகதிகள் உதவிப் பிரிவு ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ரான் ரெட்மான்ட்,"கிழக்குப் பகுதியில் உயிரிழப்போர் மற்றும் காயமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், குடும்பங்கள் பயம் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறிவிட்டதாகவும் தாக்குதலுக்குப் பயந்து ஏராளமானோர் தற்போது இரவு நேரத்தில் தங்கள் வீடுகளில் உறங்காமல், அனைவரும் ஒன்றாக ஏதேனும் ஒரு வீட்டில் உறங்கி வருகின்றனர் என்றும் மோதல் நடைபெறும் இலங்கையின் வடக்குப் பகுதியில் இரண்டரை லட்சம் மக்கள் உள்ளதாகவும் அங்கு நிலவரத்தை நாங்கள் தீவிரமாக கவனித்து வருகிறோம்".என்றும் தெரிவித்துள்ளார்.
*இலங்கை அதிபராக ராஜபக்சே பதவியேற்ற நாள் முதல் இதுவரை 4 தமிழ் எம்.பி.க்களும், பத்திரிகை ஆசிரியர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். பள்ளிகள் மீதும் குண்டுகளை வீசி ஏராளமான குழந்தைகளை இலங்கை ராணுவம் கொன்று வருகிறது. இலங்கைக்கு முழு ராணுவ உதவிகளையும் இந்திய அரசுதான் செய்து வருவதாக இலங்கையின் பாதுகாப்புத் துறை அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். இதுபற்றியெல்லாம் யோசித்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தாக வேண்டிய நெருக்கடியான காலகட்டத்தில் நீங்கள் இப்போது!
போர் எப்போது ஓயும்? தமிழர்கள் எப்போது அங்கே நிம்மதியாக இருப்பது? பிரபாகரனைப் பிடித்தால்தான் இலங்கை போர் ஓய்ந்ததாக அறிவிக்கும்? பிரபாகரன் சிங்கள இராணுவத்தின் பிடியில் சிக்கப்போவதில்லை; இந்திய தேசத்தில் சுதந்திர வேட்கைக்காக ஆயுதமேந்தி எப்படி ஒரு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இருந்தாரோ அது போல தமிழ் ஈழம் என்ற உதயத்தில்தான் ஈழத் தமிழர்களுக்கு விடிவுகாலம் என்று எண்ணி, கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ போல நெஞ்சிலே உரமேற்றி தமிழர்களுக்காய் வீரப்போர் புரியும் பிரபாகரன் ஒருக்காலும் சிங்களச் சிப்பாய்களிடம் சிக்கப்போவதில்லை!
முல்லைத்தீவையே முழுமையாகப் பிடித்துவிட்டோம். ஒருமாதகாலத்துக்கு வெற்றியைக் கொண்டாடுங்கள் என்று சொல்லிய நிலையிலும் பிரபாகரன் சிங்கள இராணுவத்திடம் அகப்படவில்லை;அகப்படப்போவதுமில்லை! இப்போது இன்னும் உக்கிரமாகத் தமிழர்களை, எங்கே பிரபாகரனை ஒளித்துவைத்திருக்கிறீர்கள்? என்று இன்னும் கூடுதலாக தமிழர்களை கொன்றொழிப்பது தொடர்கதையாக நடந்து கொண்டு தானிருக் கப்போகிறது? இந்தப் பிரச்னையை எப்படித்தான் தீர்க்கப்போகிறீர்கள் முதல்வர் அவர்களே?
உங்கள் நடவடிக்கையை தமிழ் உலகம் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது. இது உங்கள் வாழ்நாளில் இறுதிச் சாதனையாக்குவது உங்கள் கரங்களில் இருக்கிறது என்று இன்னமும் கொஞ்சநஞ்ச நம்பிக்கையோடு எதிர்பார்ப்போடு இருக்கிறோம்!
"தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகளின் நடவடிக்கைகள் காரணமாக- இது இலங்கைத் தமிழரைப் பாதுகாக்கும் பிரச்சினை என்றில்லாமல்- ஏதோ காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சினை என்ற கோணத்தில் திருப்பி விடப்பட்டுள்ளது." என்று உங்கள் அறிக்கையை நினைத்து சிரிப்பதா? அழுவதா? என்று, அன்று தெரியவில்லை! ஆனால், இன்றைக்கு நீங்களே காங்கிரசை நம்பிப் புண்ணியமிலை என்ற முடிவுக்கு வந்திருப்பீர்கள்
இந்த நிலை ஏற்படக் காரணம் என்ன?
நீங்கள் பிரதமரிடம் மேற்கொண்ட முயற்சிகளெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகப் போய்விட்ட பிறகு உங்களைப்போல மற்றவர்களும் பொறுமை காக்கும் விதயமா இது? ஆற அமரப் பேசித் தீர்க்க போரை நிறுத்தியிருந்தால் காங்கிரசுக்கட்சியை தலைமேல் அல்லவா தூக்கிவைத்துக் கொண்டாடியிருப்பார்கள்; அது நடக்கவில்லையே அதனால்தானே காங்கிரசைச் சாடுகிறார்கள். தமிழக அரசு இலங்கைப்பிரச்னையில் நாடகமாடுகிறது என்றால் அது திமுகவைச் சாராதா?
இரண்டாவது அத்தியாயம்
அனைத்து கட்சிகளை ஒருங்கிணைத்து அறவழியில் எத்தனை எழுச்சியைத் தமிழ் மக்கள் வாயிலாக உணர்த்த வேண்டுமோ; அந்த வழிகளில் எல்லாம் உணர்த்தி விட்டு, பிரதமரையே சந்தித்து வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை சென்று முயற்சி மேற்கொள்வது என்ற திட்டத்துடன் இந்த அறப்போரில் ஒரு அத்தியாயம் முடிவுற்றது, என்று ஒரு அறிக்கையில் சொல்லியிருந்தீர்கள்.
இது இரண்டாவது அத்தியாயம் என்றே வைத்துக்கொள்வோம், கலைஞர் அவர்களே இது நீங்கள் அரசியல் அரிச்சுவடியைத் துவங்கிய காலமல்ல; இந்தக்காலம் கணினியுகக் காலம்! எதையும் மின்னல்வேகத்தில் செயலாற்றவேண்டிய காலம்!
இலங்கைப் பிரச்னையில் இந்திய அரசு மிகவும் அலட்சியம் காட்டுகிறது. இதில் உங்கள் தலைமையிலுள்ள திமுகவுக்கும் பங்கு உள்ளது. இப்பிரச்னையில் தமக்குள்ள பொறுப்பையும், கடமையை நீங்களும் தட்டிக் கழிக்க முடியாது. வெறும் அறிக்கை ஜாலங்களால் எதையும் சாதிக்க இயலாது!
நீங்கள் காங்கிரசை திருப்திப்படுத்த வண்ணவண்ண அறிக்கைகள் மட்டும் விட்டுக்கொண்டிருந்தால் இலங்கையில் தமிழ் இனமே அழிந்துபடும் பேரபாயம் நிமிடத்துக்கு நிமிடம், நொடிக்கு நொடி அதிகரித்துவருகிறது. தமிழக அரசினை....திமுக ஆட்சியைக் கவிழ்க்க இந்திய அரசால் முடியும் என்றால், இந்திய அரசினை...காங்கிரசு ஆட்சியைக் கவிழ்க்க திமுக எம்பிக்கள் ஆயுதம் என்ற ஒன்று உங்கள் கையிலும் இருக்கிறது என்பதை நான் நினைவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளேன், முதல்வர் அவர்களே!
கடிதம் நீண்டுவிட்டது வழக்கம்போல! அடுத்த மடலில் தமிழகத்தில் ஈழத்தமிழர்களை நீங்கள் எத்துணை அக்கறையோடு கவனிக்கிறீர்கள் என்பதற்கு உரிய ஆதார ஆவணங்களோடு அடுத்தமடலில் சந்திக்கிறேன்.
அடுத்த மடலில் சந்திக்கும்வரை
அசாதாரணத் தமிழன்,
- ஆல்பர்ட் பெர்னாண்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா.
- ஆல்பர்ட் பெர்னாண்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா. (albertgi@gmail.com)
http://www.keetru.com/literature/essays/albert_6.php