வெள்ளி, 9 மார்ச், 2012
என் பள்ளி நினைவுகள் - 1
மும்பை தமிழ் மாணவர்களுக்கு சரியான பள்ளி என்று ஒன்றை குறிப்பிட வேண்டுமென்றால், அது கண்டிப்பாக தாராவி 90 அடி சாலையில் அமைந்துள்ள “காமரசர் உயர்நிலைப்பள்ளி” தான். 1 ஆம் வகுப்பு முதல் 4 ஆம் வகுப்பு தமிழ்வழிக் கல்வியும், 5 ஆம் வகுப்பு ஆங்கிலவழிக் கல்வியும் அங்கே கற்பிக்க படுகிறது. சரியான வழிகாட்டுதல் உள்ள மாணவர்கள், தமிழ் உள்பட நான்கு மொழிகளை சரளமாக பேசக் கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொடுக்கும் பெரும்பாலான ஆசிரியர்கள் நாகர்கோவில் பகுதியை சார்ந்தவர்கள் ஆகையால் குழந்தைகளுக்கு கூட நாகர்கோவில் வட்டார வழக்கு தொற்றிக் கொள்ளும், ஆங்கிலவழிக் கல்வியும் கூட நாகர்கோவில் வட்டார வழக்கில்தான் எமக்கு கற்பிக்க படும். ஆங்கிலத்தையும், பிற பாடங்களையும் எழுத்து வடிவிலோ, மனப்பாடம் செய்யும் பொழுதிலோ ஆங்கிலத்தில்தான் நாங்கள் மேற்கொள்ள இயலும் என்றாலும், நாங்கள் பாடங்களை புரிந்து கொண்டது என்னவோ தமிழில்தான்.
ஆசிரியர்களின் பேச்சு வழக்கு சில வேளைகளில் என்னை போன்ற திருநெல்வேலி வட்டார மாணவர்களின் வீட்டில் கூட எதிர்ப்பை ஈட்டும்.
“எம்மா அவிய வந்துட்டாவலா” என்று வீட்டில் பேசினால், ஏய் என்ன பேச்சு பேசுற, வாந்தவிய, போனாவியன்னு....அவிய, பொறியன்னுகிட்டு...ஒழுங்கா பேசுல” என்று திட்டு விழும்.
“எலா படிச்சுட்டு வந்தியாலா”, “எலா நீ உருப்படவே மாட்டாலா”, எலா சோவாரி “நீயெல்லாம் ஏம்லா பள்ளிக்கூடத்துக்கு வாரலா” போன்றுதான் நாங்கள் அடிக்கடி ஆசிரியர்களிடம் வசைகளை வாங்கிக் கொள்வோம். சில ஆசிரியர்கள் படிக்காத மாணவர்களிடத்தில் கொஞ்சம் கூடுதலாக சினம் கொள்ளும் நேரத்தில், “ஏலா நாப்பெய உள்ளா”(நாய் பய புள்ள) என்றெல்லாம் கூட திட்டுவார்கள். அப்படியான ஆசிரியர்களில் இன்றும் என்னுடைய பள்ளி தோழர்கள் சந்திக்கும் பொழுதில் இன்றும் நினைவிலிருப்பவர்களில் முக்கியமான ஆசிரியர் “முத்துவேல்” எமது கணக்கு ஆசிரியர். நான் தான் வகுப்பின் லீடர் ஆகையால்.....பள்ளிக்கு மாணவர்களை அடிக்கும் பிரம்பு கம்பு, கரும்பலகையில் எழுதப்படுவதை அழிக்கும் டஸ்டர் போன்றவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்று பள்ளிக்கு மீண்டும் மறுநாள் எடுத்து வரும் வேலை எனது. பல நாட்களில் பள்ளிக்கு கிளம்பும் அவசரத்தில் மறந்து வந்துவிடுவேன்..
“எலா, நீயெல்லாம் ஒரு லீடர், சோப்ளாங்கி, சோப்ளாங்கி....வேற எந்த க்ளாஸ்லயாவது போய் ஸ்டிக் வாங்கிட்டு வாலா.....ஏய் லீடர் go and get the stick i say”
என்று வகுப்பிலிருந்து விரட்டி விடுவார். நானும் பள்ளி வளாகம் முழுக்க சுற்றி விட்டு அவரது வகுப்பு நேரம் முடியும் நேரத்திற்கு எதையாவது குச்சியை பொறுக்கிக் கொண்டு வருவேன்...அவரும் ரெண்டு மாணவரை அடித்து விட்டு சென்று விடுவார்..
அப்படி என் பள்ளி தோழர்கள் இன்றும் சந்தித்தும் நினைவூட்டிச் சிரித்துக் கொள்ளும் இரண்டு சம்பவங்களை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.
நான் அப்பொழுது 9 ஆம் வகுப்பு படித்து வந்தேன். காலை 7 மணிக்கே வகுப்பு, முதல் வகுப்பே முத்துவேல் சாருடைய வகுப்புதான்.
வகுப்பில் நுழைந்தவுடன் சேட்டை செய்து கொண்டிருந்த நாங்கள் எல்லோரும் அவர், அவர் இருக்கைக்கு சென்றோம். ஆசிரியர் தன்னுடைய இருக்கைக்கு அருகே இருந்த மேசையில் சாய்ந்து கொண்டு நின்றார். மொத்த வகுப்பும் அமைதியாக
“தோஸ் ஹூ ஹவ் நாட் டன் த ஹோம் வர்க் ஸ்டாண்ட் அப்” என்றார்.
(those who have not done the home work, stand up)
வகுப்பில் யாருமே எழவில்லை.
மீண்டும்
“தோஸ் ஹூ ஹவ் நாட் டன் த ஹோம் வர்க் ஸ்டாண்ட் அப்” என்றார்.
மொத்த வகுப்பில் யாருமே எழல்லை.
முதல் வரிசையில் அமர்ந்திருந்த “முத்து” என்ற மாணவனின் நோட்டை கையில் தூக்கிக் கொண்டு “ஹோம் வர்க் எங்கல” என்றார்.
அவனும் புன்முறுவலுடன் “ சார் நோட்,,,,” என்று அவர் கையிலிருந்த நோட்டை வாங்கி....ஏதோ அவன் செய்துவிட்டு வந்த வீட்டுப்பாடம் நோட்டிலிருந்து காணாமல் போய் விட்டது போல நடித்தான்.
கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.
மீண்டும், “தோஸ் ஹூ ஹவ் நாட் டன் த ஹோம் வர்க் ஸ்டாண்ட் அப்” என்றார்.
மொத்த வகுப்பும் எழுந்து நின்றது.
நானும், வசந்த மேரி என்ற பெண்ணும் மட்டும் எழ வில்லை. ஏனென்றால், நாங்கள் இருவரும் லீடர்...எங்களை பெரும்பாலும் ஆசிரியர்கள் சோதிப்பதில்லை என்ற திமிரில் எழ வில்லை. ஆனால், நாங்கள் இருவருமே வீட்டுப்பாடம் அன்று செய்யவில்லை என்பது வேறு செய்தி.
என்னை நோக்கி “ ஏய், லீடர் ஸ்டிக் எங்கலே, where is the stick” என்றார்.
நான் பம்மி, பம்மி எழுந்தேன்......
“சோப்ளாங்கி, சோப்ளாங்கி நீயெல்லாம் ஒரு லீடர்,,,,போலே போய் ஸ்டிக் வாங்கிட்டு வா”
நான் நேரடியாக தலைமை ஆசிரியரின் அறைக்கு சென்று அவரிடம் கெஞ்சி குச்சியை வாங்கி வந்தேன்.
கம்பை வாங்கியவருக்கு என்னை நினைவு வந்திருக்குமோ தெரியாது.
ஆனால், கண்டிப்பாக அந்த நிகழ்வுதான் நினைவு வந்திருக்கும்.
(சும்மா ஒரு Flash back னு நினைச்சுக்கோங்க.....)
ஒரு நாள் முத்துவேல் சார், வகுப்பில் கணக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார், கரும்பலகையில் மும்முரமாக sin, cos, tan, cot, sec, cosec என்று எழுதிக் கொண்டிருந்தார். கடைசி இருக்கையில் இருந்த ஒரு மாணவன் எழுந்து, “ஏலே முத்து” என்றான். ஆசிரியரும், முதல் இருக்கையில் இருந்த முத்து இருவரும் திரும்பினர்.
ஆசிரியர், “என்னலே” என்றார்
“சார், பென்சில் சார்” என்றான் கடைசி இருக்கை மாணவன்.
மீண்டும் அந்த துடுக்கு பையன் அதே போல செய்ய, ஆசிரியர் திரும்பி “ இப்ப என்னலே, என்க... ”ரப்பர் சார்” என்றான். இவனுக்கு முத்துனு பெயர் இருக்கிறதுனாலதானே இந்த பயலுக நம்மை பெயர் சொல்லி அழைத்து எகத்தாளம் செய்கிறார்கள் என்று அவன் மேல் வஞ்சம் வைத்தாரோ என்னவோ...
(Flash Back முடிஞ்சது)
ஸ்டிக்கை கையில் வைத்திருந்தவர், முத்துவை அடித்து, அடித்தே....
முதல் வரிசையில் இருந்து கடைசி இருக்கை வரை கொண்டு வந்துவிட்டார்.
அவனும் எவ்ளோதான் அடி வாங்குவான்....
“சார், என்ன சார் அடிச்சிட்டே இருக்கீங்க......சும்மா....” என கம்பை பிடுங்கி வீசி எறிந்தான்.
ஆசிரியருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை... அப்படியே நடந்து சென்று...தம் மேசையில் சாய்ந்து கொண்டு.....
“ Students எல்லாம் ரவுடிகளாயிட்டானுங்க...ஹோம் வர்க் செய்யாம வந்ததுக்கு சார் அடிச்சா...சார் திருப்பி அடிப்பானுவ....படிங்க....இல்லன்னா படிக்காம நாசமா போங்க” என்று சொல்லி விட்டு வகுப்பை விட்டு வெளியேறிவிட்டார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)