வெள்ளி, 14 நவம்பர், 2008

மீனவர் பிரச்சினை: உளவுத் துறையின் குளறுபடிகள்

ஈழத் தமிழர் பிரச்சினையில் - உளவு நிறுவனங்கள் தொடர்ந்து தலையிட்டு, தமிழ் ஈழ விடுதலைப் போராளிகளுக்கு எதிராக அரங்கேற்றி வரும் நாடகங்களின் சில உண்மைக் காட்சிகளை, ‘புரட்சி பெரியார் முழக்கம்வழியாக அம்பலப்படுத்தி வருகிறோம். இந்திய கப்பல் படையும், இலங்கை கப்பல் படையும் இணைந்து, இந்தியக் கடற்பரப்பில் கூட்டு ரோந்துநடத்தும் திட்டத்தை அமுல்படுத்திவிட்டால், ஈழப் போராளிகளின் கடல்வழி நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திவிடலாம் என்ற நோக்கத்தோடு - இந்திய உளவு நிறுவனங்கள் தமிழகத்தில் முகாமடித்து, தமிழகக் காவல்துறையையும் மிரட்டி, செயல்படத் துவங்கியதை ஏற்கனவே சுட்டிக் காட்டினோம். ஆனால், முற்றிலும் இவர்கள் எதிர்பாராத நிலையில், ஈழப் போராளிகள், வான் வழித் தாக்குதலைத் துவக்கியவுடன், உளவுத் துறை அதிர்ச்சியடைந்தது.


இதனால் இந்தியாவுக்கு ஆபத்து வந்துவிட்டது என்று ஒரு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு வருகிறார்கள். போராளிகளின் விமானத் தாக்குதல் அந்நாட்டு சிங்கள மக்களையே குறிவைக்கவில்லை. ராணுவ, பொருளாதார நிலைகளை மட்டுமே தாக்கி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவுக்கு, தமிழ் நாட்டுக்கு ஆபத்து என்று கூக்குரல் போடுவது அப்பட்டமான பொய்ப் பிரச்சாரம் என்பது, தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும் நன்றாகவே புரியும் (ஈழப் போராளிகளை தொடர்ந்து எதிர்த்து வரும் துக்ளக் பார்ப்பன ஏடு கூட - இந்த விமானத் தாக்குதலால் தமிழ் நாட்டுக்கோ, இந்தியாவுக்கோ ஆபத்து வரும் என்கிற கருத்தை ஏற்க முடியாது என்று எழுதியிருப்பதை நினைவூட்டுகிறோம்).

ஆனாலும் - தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உருவாகி வரும் மக்கள் ஆதரவை - திசை திருப்பிக் குழப்பிடும் முயற்சிகளில் உளவு நிறுவனங்கள், இப்போது தீவிரமாக செயல்படத் துவங்கி விட்டன. தமிழக மீனவர்கள் 5 பேரை கடந்த மார்ச் 29 ஆம் தேதி சுட்டுக் கொன்றது - விடுதலைப் புலிகளின் கடற்படையினர்தான் என்றும், அதற்கு 25 நாட்களுக்கு முன் மார்ச் 4 ஆம் தேதி மீன் பிடிக்கப் போய் திரும்பி வராத தமிழக மீனவர்கள் 12 பேரை விடுதலைப் புலிகள்தான் சிறை பிடித்து வைத்துள்ளனர் என்றும், உளவுத் துறை பிரச்சாரம் செய்து வருகிறது. தமிழக காவல்துறையும் இது உண்மைதான் என்று உறுதிப்படுத்துகிறது. இதற்கான ஆதாரம் என்ன?

விடுதலைப்புலிகளின் கடற்படையினரையே நாங்கள் பிடித்து வைத்துள்ளோம். அவர்களே, இந்த உண்மைகளை ஒப்புக் கொண்டு விட்டார்கள். அவர்கள் தந்த ஒப்புதல் வாக்குமூலத்தை வீடியோவில் பதிவு செய்துள்ளோம்என்கிறது தமிழக காவல்துறை. தமிழக காவல்துறை இயக்குனராக இருக்கும் முகர்ஜி என்ற பார்ப்பன அதிகாரி - சட்டம் ஒழுங்குப் பிரச்சினைஎன்ற எல்லைகளைத் தாண்டி இப்படி எல்லாம் அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் குறிப்பிட்டதுபோல், சட்ட மீறலைத் தடுத்து நடவடிக்கை எடுப்பதுதான் காவல்துறையின் கடமையே தவிர, நிகழ்ந்த சம்பவத்தில் அரசியல் யூகங்களைத் தெரிவித்துக் கொண்டிருப்பது அல்ல.

இரண்டு அரசியல் கட்சிகளுக்குள் மோதல் நடந்தால், குற்றவாளிகளைக் கைது செய்து வழக்கு தொடருவதுதான் காவல்துறை வேலையாக இருக்க முடியுமே தவிர, கைதானவர், ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவர்தான் என்பதற்கு ஆதாரங்களைத் தேடி - அறிவிப்பது அல்ல; அதைத்தான் தமிழக காவல்துறை இயக்குனர் முகர்ஜியிலிருந்து, கப்பல்படை தளபதி வரை இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் நடவடிக்கைகளில் அரசியல்கள் நோக்கம் அடங்கி இருக்கிறது என்பதை, இது அப்பட்டமாக வெளிப்படுத்தி விடுகிறது.

நடந்த சம்பவங்களை உன்னிப்பாகப் பரிசீலித்தால், தமிழக காவல்துறையும், மத்திய உளவுத்துறையும் மக்களை திசை திருப்பிட, திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருவதாகவே அழுத்தமான சந்தேகங்கள் எழுகின்றன.

மார்ச் 4 ஆம் தேதி கன்யாகுமரியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் கரை திரும்பவே இல்லை. அவர்களை விடுதலைப்புலிகள் பிடித்து வைத்திருப்பதாக உளவுத் துறையும், காவல்துறையும் கூறுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் மறுத்துவிட்டது. தமிழக மீனவர்களைப் பிடித்து தமிழர்களோடு முரண்பாட்டை வளர்க்க வேண்டிய அவசியம் விடுதலைப்புலிகளுக்கு என்ன வந்தது என்பது முதல் கேள்வி? தமிழகத் தமிழர்களின் நட்புக்கும், நேசத்துக்கும் ஆதரவுக்கரம் நீட்டி நிற்பவர்கள் - தமிழ் ஈழப் போராளிகள்.

தற்போது தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள உளவுத் துறையில் கடற்புலிகள்என்று சுட்டப்படுகின்ற, 6 தமிழர்களும் யார்? அவர்கள் உண்மையில் கடற்புலிகளா? அல்லது மீன் பிடிக்க வந்த ஈழத் தமிழர்களா? யார் இவர்கள்?

இவர்கள் கன்யாகுமரி அருகே நடுக்கடலில் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டவர்கள், இவர்கள் பிடிபடுவதற்கு ஒன்றரை மாதத்துக்கு முன்பு, கடலில் மீன்பிடிக்கப் போன 12 தமிழ்நாட்டின் குமரி மாவட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்களை சுட்டுக் கொன்றது, இப்போது பிடிப்பட்டவர்கள்தானா என்ற சந்தேகங்களும பத்திரிகைகளால் எழுப்பப்பட்டன.

இது பற்றி - தமிழ் நாளேடுகளான தினமணி’, ‘தினத்தந்தியில் வெளியான செய்திகள் என்ன கூறின?

மார்ச் மாதம் 4 ஆத் தேதி மீன் பிடிக்கச் சென்ற 12 தமிழ்நாடு மீனவர்கள் கரை திரும்பவில்லை.

மார்ச் 29 ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற தமிழ்நாடு மீனவர்கள் மீது நடுக்கடலில் சிலர் துப்பாக்கியால் சுட்டதில் 5 தமிழக மீனவர்கள் இறந்து விட்டனர். அதே படகில் இருந்த மற்றவர்கள் காயங்களுடன் உயிர் தப்பி, கரை திரும்பிவிட்டனர். அப்படி, தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் வந்த படகில் மரியாஎன்று எழுதப்பட்டிருந்தது.

ஏப்ரல் 11 ஆம் தேதி - இந்திய கடலோரப் பாதுகாப்புப் படை கடலில் ரோந்து சென்றபோது, தூத்துக்குடி அருகே தமிழக கடல் பரப்பில் 6 ஈழத் தமிழர்களையும், 6 தமிழக மீனவர்களையும், கைது செய்து அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர். மீன் பிடிக்க வந்தபோது, படகு பழுதாகி, கடலில் தவித்துக் கொண்டிருந்த இலங்கைத் தமிழ் மீனவர்கள், தங்களிடம் உதவி கேட்டபோது, அவர்களைக் காப்பாற்றி அழைத்து வந்ததாக தமிழக மீனவர்கள் தெரிவித்தனர். ஈழத் தமிழ் மீனவர்களின் படகில் மரியாஎன்ற பெயர் காணப்பட்டதால், ஒரு சந்தேகம் எழுந்தது. இதே பெயர் எழுதப்பட்ட படகில் வந்தவர்கள்தான் ஏற்கனவே தமிழக மீனவர்கள் 5 பேரை சுட்டுக் கொன்றதாக, அவர்களுடன் சென்று உயிர் தப்பி வந்த மீனவர்கள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரி ஜான் நிக்கல்சன், இவர்களிடம் விசாரணை நடத்தினார். ஏற்கனவே நடந்த துப்பாக்கிச் சூட்டில், உயிர் பிழைத்து கரை திரும்பிய கன்யாகுமரி மீனவர்கள், தூத்தக்குடிக்கு அழைக்கப்பட்டனர். இப்போது மரியா படகில் பிடிப்பட்டுள்ளவர்களைக் காட்டி, “இவர்கள்தான், உங்களைச் சுட்டவர்களா?” என்று கேட்டபோது, தமிழக மீனவர்கள் அவர்களைப் பார்த்து - எங்களைச் சுட்டது இவர்கள் இல்லைஎன்று கூறிவிட்டனர். அத்தோடு இந்த மரியாபடகும் - எங்களைச் சுட்டவர்கள் வந்த படகு அல்ல என்றும் தெரிவித்தனர். பிடிபட்ட ஈழத் தமிழ் மீனவர்களின் பெயர், ஊர்களோடு பத்திரிகைகளுக்கு செய்தி தரப்பட்டது. தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டது, பிடிபட்ட, ஈழத் தமிழ் மீனவர்கள் அல்ல என்று காவல்துறை திட்டவட்டமாக அறி வித்தது. கைதானவர்களிடமிருந்து எந்த ஆயுதங்களும் கைப்பற்றப்படவில்லை. எல்லை தாண்டி - தமிழ் நாட்டுக்குள் நுழைந்தார்கள் என்பது மட்டுமே குற்றச்சாட்டு. அந்த வழக்கைப் பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்டார்கள்; பிரச்சினை முடிந்துவிட்டது.

இதற்குப் பிறகு நடந்த சம்பவங்கள் தான் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன. ஏற்கனவே தமிழகத்தில் முகாமிட்டு, ‘கூட்டு ரோந்துக்குஉரிய அரசியல் சூழலை உருவாக்கும் நோக்கத்தோடு, திட்டமிட்டு செயல்பட்டு வரும் மத்திய உளவுத் துறை, தமிழ் ஈழப் போராளிகள் மீது பழி போட்டு, தமிழ் நாட்டுக்கும், ஈழப் போராளிகளுக்கு மிடையே முரண்பாட்டை கூர்மைப்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்கத் தொடங்கின. இப்படிக் கருதுவதற்கு வலுவான காரணங்களும் இருக்கின்றன.

தமிழக மீனவர்கள் - நடுக்கடலில் சுடப்பட்டது மார்ச் 29, 2007. அடுத்த நாளே - அதாவது மார்ச் 30 ஆம் தேதியே சிறிலங்கா அரசு, தமது கப்பல்படை, சுடவில்லை என்று மறுக்கிறது. அது மட்டுமல்ல, இதில் விடுதலைபுலிகளுக்கு தொடர்பு இருக்கலாம்என்றும், பழியை விடுதலைப்புலிகள் மீது போடுகிறது.

(The Srilanka Government said the complicity regarding the incident must be attributed to the LTTE, March 31, ‘Daily Mirror’)

சிறீலங்கா அரசு மறுப்பு வெளியிட்ட அதே நாளில், அதே குரலை அப்படியே எதிரொலிக்கிறார். இந்தியாவினுடைய கப்பல் படை தலைமை அதிகாரி அட்மிரல் சுரேஷ் மேத்தா, அதே மார்ச் 31-ல் அவரது பேட்டியை இந்துநாளேடு வெளியிடுகிறது. இதில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு உண்டு என்ற கருத்தை புறக்கணித்துவிட முடியாதுஎன்கிறார், இந்திய கப்பல்படையின் தலைமை அதிகாரி. இன்னும் ஒரு படி மேலே போய், தமிழ்நாடு அரசையும் குற்றம்சாட்டுகிறார். தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கைக் கடற்பகுதிக்குச் சென்று மீன் பிடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி, தமிழக மீனவர்களுக்கு போதுமான எச்சரிக்கை வழங்க, தமிழ்நாடு அரசு தவறிவிட்டதுஎன்றும் தமிழக அரசைக் குற்றம் சாட்டினார்.

மீனவர்கள் சுடப்பட்டது மார்ச் 29. உடனே - ஒரே நாள் இடைவெளியில் எந்த விசாரணையுமின்றி விடுதலைப்புலிகள் மீது, இந்திய கப்பல்படை அதிகாரி எப்படிப் பழி போட முடிகிறது? இப்படி யூகத்தின் அடிப்படையில் ஒரு குற்றச்சாட்டை, பொறுப்புமிக்க அதிகாரி ஏன் பிரச்சார காரரைப் போல் பரப்ப வேண்டும்? சிறீலங்கா அரசின் குரலை அப்படியே ஏன் எதிரொலிக்க வேண்டும்? தமிழக அரசையும் சேர்த்து, ஏன் குற்றக் கூண்டில் நிறுத்த வேண்டும்? ஆக, இதற்குப் பின்னால், திட்டமிட்ட உள்நோக்கம் ஒன்று இருக்கிறது என்ற சந்தேகம் எழத்தானே செய்கிறது?

இந்த நிலையில், அடுத்த நாளே - ஏப். முதல் தேதியன்று, விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் இளந்திரையன், இது திட்டமிட்ட விசமப் பிரச்சாரம் என்று மறுத்து விடுகிறார்.

தாயகத் தமிழ் உறவுகளும், ஈழத் தமிழர்களும் இணைந்து நல் உறவைப் பேணுவதையும், தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்கள் மீதான அனுதாப அலைகள் உருவாவதையும் விரும்பாத மற்றும் கொச்சைப்படுத்த வேண்டும் என்கிற தீய சக்திகளுடன் இப்படுகொலைகளை மூடி மறைக்க வேண்டும் என்று கருதுகிற சிறீலங்கா அரசும் இணைந்த இச்சம்பவத்தில் எங்களைத் தொடர்புபடுத்தி மிக மோசமான விசமப் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். தாய்த் தமிழக உறவுகளும், ஈழத் தமிழ் உறவுகளும் ஒரே ரத்தமாக இருப்பதால் ஒன்றாக இணைந்து நம்முடைய உறவைப் பேணுவதன் மூலம் இத்தகைய தீய சக்திகளுக்கும் நாடு இனபேதமின்றி தமிழ் மக்களைக் குறி வைத்துப் படுகொலை செய்கிற சிறீலங்கா அரசுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும்

-
என்று அந்த அறிக்கை கூறியது. ஈழத் தமிழர்களுக்கும், தமிழகத் தமிழர்களுக்கும் இடையே நல்லுறவை விரும்பாத தீய சக்திகள், சிறீலங்கா அரசோடு இணைந்து நடத்தும் சதி என்கிறது அந்த அறிக்கை!

இதற்குப் பிறகு - இரண்டு வாரங்கள் ஓடுகின்றன. மீண்டும் ஏப்.17 ஆம் தேதி சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம், கடலில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கும், இலங்கை அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மீண்டும் அறிக்கை விட்டது. அடுத்த நாள் - ஏப். 18 ஆம் தேதி இலங்கை கடற்படை அதிகாரி, கமாண்டி டி.கே.பி. தசநாய்க்கே என்பவர் கொழும்பில் பத்திரிகையாளர்களைக் கூட்டி, தமிழக மீனவர்களை சுட்டது விடுதலைப்புலிகள்தான் என்று கூறினார். அடுத்த இரண்டு நாட்களிலேயே தமிழ் நாட்டில், உளவுத் துறை தீவிரமாக செயல்படத் துவங்குகிறது.

ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு, மீனவர்கள் தான் என்று உறுதி செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட, ஈழத் தமிழ் மீனவர்களை மீண்டும் தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவு சிறையிலிருந்து வெளியே எடுத்து விசாரணை நடத்துகிறது. ஏப்.20 ஆம் தேதி காவல்துறை அவர்களை விசாரணைக்கு எடுக்கிறது. அடுத்த இரு நாட்களில் ஏப்.23 இல் உளவுப் பிரிவு, விசாரணைக்கு எடுக்கிறது. அடுத்த நான்கு நாட்களில் ஏப்.27-ல் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி தமிழக மீனவர்களை சுட்டது விடுதலைப்புலிகள் தான் என்று அறிக்கை விடுகிறார். தமிழக முதலமைச்சரும் இதே அறிக்கையை சட்டசபையில் உறுதி செய்கிறார். மீண்டும் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இதை மறுத்துள்ளனர்.

உளவு நிறுவனமும், சிங்கள அரசும் இணைந்து தமிழ்நாட்டு மக்களிடமிருந்து போராளிகளை தனிமைப்படுத்த தயாரித்த திட்டம் - தமிழக காவல்துறை வழியாக, அமுலாக்கப்பட்டு, அதையே தமிழக முதல்வரின் அறிக்கையாகவும், சட்டசபையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற சந்தேகத்திற்கு வலிமையான காரணங்கள் இருக்கின்றன.

தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொல்ல வேண்டும் என்பதற்கான காரணங்கள் ஏதுமில்லை. சிங்கள மீனவர்கள்களையே சுட்டுக் கொல்லாத விடுதலைப்புலிகள், தமிழக மீனவர்களையா சுட்டுக் கொல்லப் போகிறார்கள்?

கடந்த காலங்களில் அப்படி எந்தத் தொந்தரவும் புலிகளிடமிருந்து வந்தது இல்லை என்பதால், இதனை நம்புவதற்கு சிரமமாக இருக்கிறது. நான் இது பற்றி டி.ஜி.பி., கியுபிராஞ்ச் எஸ்.பி. ஆகியோரிடம் பேசினேன். உயர் அதிகாரிகள் அறுதியிட்டுச் சொல்லும் போது நம்பித்தான் ஆக வேண்டியுள்ளதுஎன்கிறார் தெற்காசிய மீனவ தோழமை அமைப்பு அமைப்பாளர் சர்ச்சில்! (பேட்டி - குமுதம் ரிப்போர்ட்டர்)

ஈழப் போராளிகளான விடுதலைப் புலிகளுக்கும், தமிழ்நாடு மீனவர்களுக்கும் உள்ள நெருக்கமான உறவை, ஈழத் தமிழ் மீனவரான நாதன் தாமஸ் என்பவர் இணையதளம் ஒன்றில் (www.yarl.com) எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்களை சுட்டது விடுதலைப்புலிகள்தான் என்று கூறிய தமிழக காவல்துறை அதிகாரியை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நான் இரணை தீவு கடல் தொழில் சங்கத்துக்கு தலைவராக இருந்தபோது நடந்த சம்பவத்தைக் கூறக் கடமைப்பட்டுள்ளேன். இந்தியத் தமிழ் மீனவர்கள் எமது உடன் பிறப்புகள். 1990 ஆம் ஆண்டு ஆடி மாதம் - இரணைத் தீவு கடற்கரையில் தமிழ்நாடு மீனவர்களின் 250 படகுகள் தனித்து நின்றன. அவற்றை சிறீலங்கா அரசு தங்களது வான்கலங்களைக் கொண்டு (விமானங்கள்) அழிக்க முயற்சித்தது. அப்போது - எமது கிராமத்தில்தான், ஆயிரக்கணக்கான இந்தியத் தமிழ் மீனவர்களுக்கு அடைக்கலம் தந்து காப்பாற்றினோம். அவர்களை விடுதலைப்புலிகளின் பாதுகாப்போடு தமிழகத்துக்கு பத்திரமாக அனுப்பி வைத்தோம். அது மட்டுமல்ல, அச்சம்பவத்தின்போது, இலங்கை விமானப் படை தாக்குதலால் பல படகுகள் சேதமாக்கப்பட்டன. விடுதலைப் புலிகளின் உதவியால் - அப்படகுகளை சரி செய்து மீண்டும் மீனவர்களிடம் ஒப்படைத்தோம். காயமடைந்த 205க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு விடுதலைப்புலிகள் உதவியோடு, சிகிச்சைகள் வழங்கினோம். அந்த உறவு தொடர்ந்து நீடித்தது.

மட்டக்களப்பு, யாழ்ப்பாண மாவட்டங்களின் கிராமங்களிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக சென்று எமது மக்களை, நாங்கள் இங்கு செய்த உதவிக்காக, அங்கே இந்திய மீனவர்கள், உணவு, தேவைக்கான பொருள்களை வழங்கி, நன்றாகக் கவனித்தார்கள். எங்களுக்குள் உள்ள இந்த உறவை, தமிழக காவல்துறை அதிகாரி அறிவாரா? எதற்காக, இப்போது, உண்மைகளை தலைகீழாகப் புரட்டி கூறுகிறார்? இதனால் உண்மைகளைப் புதைத்து விட்டோம் என்றோ சிங்களவன் தப்பி விட்டான் என்றோ அவர் தப்பாகக் கருதி விடக்கூடாது. அப்படி கருதினால் அது முட்டாள்தனம். எங்களது உறவுகளை சிங்கத்துக்கு (சிங்களருக்கு) காவு கொடுக்க நினைக்கிறாரா, அந்த அதிகாரி? - என்று, தனது உள்ளக் குமுறலைக் கொட்டியிருக்கிறார் அந்த மீனவர்! உண்மைகள் நீண்டகாலம் உறங்காது. அவைகள் விழித்தெழும்போது பொய்மைகள் வெளிச்சத்துக்கு வரவே செய்யும்.

http://www.keetru.com/periyarmuzhakkam/may07/fishermen.php

கருத்துகள் இல்லை: