வியாழன், 12 மார்ச், 2009

தேர்தலில் யாரையெல்லாம் விரட்டியடிக்க வேண்டும்- ஒரு பாமரத்தமிழனின் சினம்

நான் பாமரன். நடக்கும் தீமை கண்டு கொதிக்கும் உள்ளம் இருந்தும், தடுக்கும் திராணியற்று போயிருக்கும் சமூகத்தின் ஒரு உறுப்பினன். தன் இனத்தை சார்ந்த ஒரு பெருங்கூட்டம் கொல்லப்பட்டும் ஒன்றும் செய்யமுடியாமல், உருவாகாத இந்திய போலி தேசியத்திடம் பிச்சை கேட்டு நிற்கும் பழம் பெருமை வாய்ந்த இந்நாள் தலைமுறையின் ஒரு பாமரன். பேசும் மொழியால் தமிழன் நான், கொள்கையின் வழியால் பெரியாரியல் மாணவன் நான். மற்றபடி சொல்வதற்கோ, பேசுதற்கோ ஏதுமில்லை என்னை பற்றி.

என்னை பற்றி பேசவா,எழுதத் தொடங்கினேன்.எம் நிலை பற்றி பேசத்தானே பேச/எழுதத் தொடங்கினேன். ஆனால், நம் நிலை பேசும் நிலையில் இல்லை, பேசினால் நாம் வெளியில் இல்லை. காலம், காலமாக மக்கள் போராட்டங்களை கொச்சைப்படுத்திய பார்ப்பன நச்சு பாம்புகளைவிடக் கொடிய பெரியாரை கொச்சைப்படுத்தும் திராவிட பாம்புகள்தான் நம்மை ஆளும் வர்க்கம். பெரியாரை உள்வாங்கிக் கொள்ளுங்கள், அவர் தொண்டு செய்து பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும்.............., அவ்வளவுதான் அவரை பற்றி அவர் வழியில் பேச முடியும். சொன்ன கடவுள் மறுப்பை பேசக்கூடாது, அவர் பேசிய தன்மதிப்பு கொண்ட, சுயநிர்ணய உரிமைக் கொண்ட தேசியம் பற்றி பேசக் கூடாது. பேசினால்............

சரி பேசத்தான் கூடாது,எழுதினால்

தமிழர்களின் தலைவர் என்று தமிழர்களிடம் சொல்லாமலேயே தலைவராகிப்போன தலைவர் கலைஞர்,

மிகவும் நல்லவர்...........அவருடைய குடும்பத்திற்கு,

சமதர்மம் பேணுபவர்...............அவர் குடும்பத்தில் அனைவருக்கும் பாரபட்சமில்லாமல் எழுதி வச்சிட்டு இருக்காரே,

எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்.........தன் குடும்பத்திற்காக காங்கிரசு கொடுக்கும் குடைச்சல் அத்தனையையும் தாங்கி கொண்டவர்,

மிகவும் அன்புள்ளம் கொண்டவர் தமிழர்கள் வீட்டில் கருமாதி விழுந்தாலும், அடுப்பெறிய வேண்டும், வாய்க்கரிசி வேண்டும் என்று அக்கறையோடு பிச்சை எடுத்து பிச்சை போட்டுருக்காரே,

பெண்ணுரிமை பேணுபவர்......சோனியா என்னும் தனிப்பெண்ணின் ஒரே கணவனை கொன்றதாக சந்தேகத்திற்கிடமாக சந்தேகப்படப்படும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவாக இருக்கும் பெரும்பாலான ஈழத்தமிழ் கூட்டம் அழித்தொழிக்கப்பட வேண்டும், பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க தாமதமானாலும் பரவாயில்லை , சோனியாவில் ஹீல்ஸ், பிளாஸ்டிக் செருப்பில் தைத்த குண்டூசியை உடனடியாக எடுக்கப்பட வேண்டும், அதை புரிந்து கொள்ளாத ஆணாதிக்க தமிழர்களை புரிந்து கொள்ளாமல் தவிர்த்து, தமிழர்களை மைய-அரசை புரிந்து கொள்ள தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறாரே. பெண்ணின் உள்ளுணர்வை புரிந்து கொண்டுள்ளாரே.

கலையார்வம் இன்னும் கலையாதவர்....

இறப்பு என்பது ஒரு முறைதான், அது இன்று வந்தால் என்ன? நாளை வந்தால் என்ன? என்று ஈழத்தமிழர்கள் கொத்து குண்டுகளுக்கு பலியாகி கொண்டிருக்கும் பொழுது சொன்னதை வைத்து தமிழர்கள் கருணாநிதி ஏதோ தன் உயிரை பற்றித்தான் சொல்கிறார் என்று நினைத்தனர். வயதான பின்னாவது உண்மையான தமிழுணர்வோடு பேசுகிறார்,என்று தமக்குள் கதைத்துக் கொண்டனர். ஆனால், அத்துனை பேரையும் ஏமாற்றும் விதமாக தான் சொன்ன வசனம் ஈழத்தமிழர்களின் உயிரைப்பற்றிதான் என்பதை புரியாமல் இருக்கும் தமிழர்களிடம் இப்பொழுதும் ஓட்டு வாங்க கிளம்பிவிட்டாரே? ஒரு மாத மருத்துவமனை இடுப்பு(நடிப்பு) சிகிச்சை முடிந்து.

என்ன தமிழ்நாட்டில் இவர் மட்டும் தான் நல்லவரா?

எதிர்கட்சித் தலைவர் செயலலிதா என்ன குறைந்தவரா? அவர் அரக்கிக்கு அரக்கி, வீராதி வீர, வீர பராக்கிரம சூரி? திராவிடத்தின் பரிணாம கோளாரில் எம்ஜிஆர் என்னும் நடிகரால் ஒரு பெரிய திராவிட கட்சியின் தலைவி, தன்னை பாப்பத்தி என்று அறிவித்துக் கொண்ட பின்பும் பார்ப்பன அடிவருடிகளின், கொள்கை அடிவருடிகளின், ஓட்டு பொறுக்கிகளின் தலைவி, பெரியார் பார்ப்பன ஆதிக்கத்துக்கு அடித்த ஆப்புக்கெல்லாம் ஆப்படிக்கும் விதமாக நாளும் பாப்பத்தி காலில் விழ திராவிடர்களை காத்தி நிற்க வைக்க பார்ப்பன சாதுர்யம். என ஆரியர்களின் இனசொறிக்கு(வெறிக்கு) அருமருந்து என கொள்கை பிளம்பாக இருக்கும் செயலலிதா.

இன்றும் தமிழ்நாட்டில் செல்வி என்னும் பட்டத்தோடு வலம் வரும் இவர், திமிரோடு சிறிது கூட மனிதாபிமானம் இல்லாமல், போர் நடக்கும் இடங்களில் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்ற அரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்தவர். ஒரு கண்டுபிடிப்போடு நிற்காமல் ,இங்கு தமிழுணர்வு சாதிக்கு பின்னாலும், பணத்திற்கு பின்னாலும் இலகுவாக ஒழிந்து கொள்ளும் என்ற பழைய இவருடைய கண்டுபிடிப்புக்கு உரிமம் வாங்கும் விதமாக ஓட்டுப்பொறுக்க ஈழத்தமிழர்களுக்கு பணம் பொறுக்கி, அதற்கு வைகோ, தா. பாண்டியன் போன்றவர்களை ஒத்து ஊத, பக்க மேளம் அடிக்க வைத்து ஒரு உண்ணாவிரத நாடகத்தையும் (பழைய நடிப்பு திறமை கைகொடுத்திருக்கும்!) நடத்தி முடித்திருக்கிறார்(டேக் எத்தனை?)

புயல் வருது விலகுங்க, அக்காவோட தம்பி வர்ராறு வழி விடுங்க!

அடுத்தது வைகைபுயல் வடிவேலு, மன்னிக்கவும் வைகோ. அவர்கள். இவர் தமிழின துரோகத்தை, தமிழின எதிரியோடு இருந்து கண்டுபிடிப்பார், பின்னர் கண்டிப்பார். என்னை ஜெயலலிதா கைது செய்ததில்லை,என்பது போல் பேசும் இவர், கைது செய்ததை மறக்க அது போன ஆட்சி, நான் சொல்றது இந்த மைனாரிட்டி கருணாநிதி ஆட்சி. கருணாநிதி ஆட்சியில கருணாநிதி அரசுதான் கைது செய்யும், ஜெயலலிதா கைது செய்ய முடியாது. என்பது ஏன் இந்த கொள்கை புயலுக்கு புரியவில்லை, என்பதுதான் நம்மால் கண்டுபிடிக்க முடியாதது.

அடுத்தது மருத்துவர் ஐயா தமிழ்க்குடி தாங்கி (இராமதாசு),

இவரது ஊடகம்தான் ஈழம் குறித்த செய்திகளை தமிழ்நாட்டில் பெருமளவில் உண்மையாக தெரிவித்தது. அதில் மிகவும் உரிமையோடும், கடமையோடு பாராட்டுகிற அதே வேளையில், எந்த அரசு தமிழக மக்களை கொன்று குருதி குடிக்க ஆவலோடு உதவி செய்து வருகிறதோ, அந்த அரசில் அமைச்சராக தமது மகனை அமைச்சராக வைத்துக் கொண்டு, யாரை எதிர்த்து போலியாக உருவாக்கப்பட்டுள்ள இந்தியா என்னும் நாட்டில் விரும்பியோ/ விரும்பாமலோ குடிமகனாக இருந்து கொண்டு யாருக்கு எதிராக போராடுகிறீர்கள். சோனியாவை எதிர்க்கமாட்டாமல், கலைஞரை மட்டும் எதிர்த்து கொண்டு, காங்கிரசை எதிர்க்காமல் இலங்கை தமிழரை காப்பாற்ற அமைப்பை யாருக்கு எதிராக உருவாக்கியிருக்கிறீர்கள்.

அதோடு, உங்கள் தமிழுணர்வு சாதியுணர்வை தமிழர்கள் மத்தியில் மழுங்கடிக்க உதவுமென்றால என்னை போன்ற இன்றைய தலை முறை இளைஞர்கள் கண்டிப்பாக குரல் கொடுப்போம். சாதி ஒழிப்பை இனியாவது, ஈழப்பிரச்சினைக்கு பிறகாவது, நீங்கள் சார்ந்ததாக இந்த சமூகம் கருதும் வன்னிய சமூகத்தாரிடம் கொண்டு செல்லும் வழியை விரைவில் சென்றடையுங்கள், இதை நீங்கள் செய்வீர்களேயானால் தமிழ் இனம் ஈழத்தில் மட்டுமல்ல, இங்கும் விடுதலை பெறும்.

தமிழக தலைவர்களே உங்களை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கோடு இதை நான் எழுதவில்லை,மாறாக நீங்கள் விமர்சிக்கும் படியாக அயோக்கியத்தனம் செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதனால் எழுதப்பட்டது.

நீங்கள் எடுக்கும் முன்னெடுப்பை தவறு கூறுவதற்காக அல்ல இது, தயவு கூர்ந்து தமிழக மக்களுக்காக சிந்திக்க தொடங்குங்கள். மைய அரசை மையப்படுத்தி சிந்திப்பதை தவிர்த்தாலே, தமிழர்களை மையப்படுத்தி சிந்தித்தாலே, மைய அரசு நம் காலில் விழும், ஆனால் நாம் கண்டிப்பாக காலில் விழும் நிலை வந்திருக்காது. மைய அரசில் அமைச்சர் பதவி கனவு கண்டிப்பாக நம் சுய உரிமைக்கான சிந்தனையை மழுங்கடித்திருக்கிறது.

தயவு கூர்ந்து, அரசியலிலிருந்து அரசியல் சாராமல் தமிழின எழுச்சிக்காக குரல் கொடுக்க முன்வாருங்கள், இங்கு விமர்சனத்தில் திருமா சேர்க்கப்படாதது, அவருடைய இன்றைய நிலைதான் காரணம் நாளை, இந்த அரசியல் காய்நகர்த்தலால் அவரும் வந்து சேரலாம்.

தமிழர்கள் யாரும் திமுகவையோ, அதிமுகவையோ விரும்பவில்லை, காங்கிரசை கணக்கிலேயே எடுத்துக் கொள்ள வில்லை. ஒரு மாற்றை தேடுகிறது ஒரு பாமர தமிழரின் உள்ளம். இவர்களுக்கு ஒத்து ஊதுபவர்களுக்கு மாத்தை தேடுகிறது, விளக்கு மாத்தை தேடுகிறது.

இனத்துரோகம், செய்பவர்கள் வருங்கால இளைஞர்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

அரசியல்வாதிகளிடம் இந்த கோரிக்கை தவறானதுதான், இருந்தாலும்

நீங்கள் களைகளாக இருக்காதீர்கள், களைஎடுப்பவர்களாக மாறுங்கள், தமிழனின் வாழ்வுநிலை, சிந்திக்கும் திசை மாறும்.

தமிழர்களே! தேர்தலில் இவர்கள் எல்லோரையும்தான் விரட்டியடிக்க வேண்டும், ஆனால், விரட்டமுடியாதபடி வித்தியாசமாய், துரத்தும் முன்னே அவர்களே கைகோர்த்து ஓடத் தொடங்கியுள்ளனர். ஓடும் வரை ஓடட்டும், நாம் காத்திருந்து கண்டிப்பாக இந்த புல்லுருவிகளை ஓட வைப்போம்.

2 கருத்துகள்:

Bleachingpowder சொன்னது…

நீங்க சொல்ற எல்லாரையும் விரட்டி அடிச்சுட்டா மிச்சம் இருக்கிறது, விஜய்காந்த்தும், சரத்குமாரும் தான்.

இதுல விஜய்காந்திற்கு மக்களவை தேர்தலில் எவ்வளவு தொகுதி இருக்குன்னு கேட்டா, கூட இருக்கிற பன்ரூட்டியை பார்த்து மண்டையை சொறிவார். அப்புறம் நம்ம சரத்குமார், அவரையும், அவரோட தொண்டர்களையும் ஒரே வேனில் ஏத்திடலாம்.

Mugundan | முகுந்தன் சொன்னது…

மகிழ்நன்,

மிக அழகாக விவரித்துள்ளீர்கள்.

தமிழன் இந்த தேர்தலில், தமிழின துரோகிகளுக்கு(திராவிட முன்னேற்ற காங்கிரசு)பாடம் புகட்ட உறுதி ஏற்போம்.