செவ்வாய், 28 ஜூலை, 2009

புத்தர் துறவும் பொய்மைக் கதைகளும்!



1950-ம் ஆண்டு மே 2-ம் நாள் உலக அளவிலும் இந்திய அளவிலும் மிக முக்கிய வரலாற்று நிகழ்வொன்று நடந்தேறியது. ஏழு கோடி தாழ்த்தப்பட்ட மக்களும் புத்த மதத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்று அம்பேத்கர் அன்றுதான் அறிவுறுத்தினார். அன்றைய சமூக தளத்தில் மிகப் பெரும் மீறலாகவும் வைதீகப் பரப்புக்குள் மிகப் பெரும் கலகமாகவும் அந்நிகழ்ச்சி அமைந்தது. அன்று ஏழு கோடியாக இருந்த தாழ்த்தப்பட்டோர் இன்று 25 கோடியினர்.

அம்பேத்கர் உணர்ச்சி ரீதியாக எடுத்த முடிவன்று இது. அவர் காலத்தில் மிகப் பெரும் அறிவாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் இருந்த அவர், 1935 தொடக்கத்திலிருந்தே மதமாற்றம் பற்றிச் சிந்திக்கத் தொடங்கி இருந்தார். புத்தரை நோக்கி அம்பேத்கர் நகர்ந்து கொண்டிருந்தார். அவரின் இந்திய மதங்கள், இந்தியாவுக்கு வந்து சேர்ந்த மதங்கள் பற்றிய ஆய்வில், பௌத்தமே தாழ்த்தப்பட்டோர்க்கு ஏற்ற சமயமாக இருந்ததை அவர் கண்டார். தீண்டப்படாத, இந்தியாவின் தொல்குடி மக்களே பௌத்தர்களாக இருந்தவர்கள், புத்தரின் கொள்கைகளைப் பின்பற்றியவர்கள் என்ற சித்தாந்தத்துக்கு வந்து சேர்ந்தார்.

19-
ம் நூற்றாண்டின் மிகப் பெரும் புரட்சியான பிரெஞ்சுப் புரட்சியே ஒரு சின்னஞ்சிறு நிகழ்ச்சிதான் என்று சொன்ன அம்பேத்கர், 2500 ஆண்டுகளுக்கு முன் பௌத்தர்களுக்கும் பிராமண வைதீகத்துக்கும் நிகழ்ந்த போராட்டமே மிகப் பெரும் புரட்சி என்று வரலாற்று ரீதியாக வரையறை செய்தார். தன் கண்டுபிடிப்பு-களுக்கு ஆதாரமாக புத்தரின் வாழ்க்கையையும், அவர் போதனைகளையும் பரிசீலிக்க நேர்ந்தது. அப்போதுதான் புத்தரின் வாழ்க்கை வரலாறே மாற்றியும் பொய்மை கலந்தும் எழுதப்பட்டிருப்பதை அவர் கண்டார். புத்தர் வரலாறு மட்டுமல்லாமல், புத்த தத்துவங்களே பிராமண மயமாக்கப்பட்டும், வைதீகத்துக்கு உகந்த முறையில் திரிக்கப்-பட்டும் உலவி வரும் மோசடிகளை அவர் கண்டுபிடித்தார். புத்தரையே மகாவிஷ்ணு-வின் இன்னொரு அவதாரமாக மாற்றி-யமைக்கும் வைதீகத்தின் புரட்டலையும் அவர் எதிர்கொள்ள நேர்ந்தது. ஆகவே புத்தரின் வரலாற்றையும், அவர் போதித்த தம்மத்தையும் (தர்மத்தையும்) பற்றி மிகச் சரியான, கறாரான, உண்மை ஒளிமிகுந்த ஒரு புத்தகத்தை அம்பேத்கர் எழுதி வெளியிட்டார். அதுவே, ‘புத்தரும் அவர் தம்மமும்என்ற புத்தகமாகும்.

கௌதம சித்தார்த்தனாகப் பிறந்து, துறவு ஏற்று புத்தராக உயர்ந்தோங்கிய புத்தரைப் பற்றிய, அவர் துறவு பற்றிய நாம் அறிந்த, நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட கதைகள் பொய்யானவை என்கிறார் அம்பேத்கர். நாம் அறிந்தது என்ன?

சித்தார்த்தர், ஒரு நாள் தன் மாளிகை ஜன்னலைத் திறந்து உலகத்தைப் பார்த்தார். இறந்தவர் ஒருவரின் பிணம் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மனிதன் ஒரு நாள் இறப்பான் என்கிற உண்மை அவரைத் தாக்கி அவரை நிலைகுலைய வைக்கிறது. அப்புறம் அவர், நோயால் உடல் தளர்ந்த சீர்கெட்ட நோயாளியைப் பார்க்க நேர்கிறது. நோய் என்பது வரும், வந்து உடம்பை இவ்வாறு சிதறடிக்கும் என்கிற இரண்டாம் உண்மை அவரை வந்தடைந்தது. நோய் என்கிற யதார்த்தம் அவரை திடுக்குற வைத்தது. பிறகு ஒரு முதியவரை அவர் கண்டார். முடி நரைத்து, தோல் சுருங்கி, உடம்பு திரைந்து, கோலூன்றி நடந்து தடுமாறும் மனித முதுமை அவருக்கு அறிமுகமாகிறது. இதன் காரணமாகவே, வாழ்வு நிலையாமையை உணர்ந்து அவர் துறவு மேற்கொண்டார்... இந்தக் கதைதான் பள்ளிக்கூடப் பாடத்திலிருந்து பெரிய அறிஞர்கள், ஆராய்ச்சி-யாளர்கள் வரை கற்றுக் கொடுக்கப்பட்டு சொல்லப்பட்டுக் கொண்டே வருகிறது.

எடுத்த எடுப்பிலேயே இக் கதையை அபத்தம்என்று விலக்குகிறார் அம்பேத்கர். புத்தர் துறவு ஏற்றது, அவரது 29-வது வயதில். இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த ஒரு மனிதர், ஒரு சிற்றரசராக மதிக்கப்-பட்ட-வர், மிகுந்த அறிவுத்தேட்டம் கொண்டவர் ஆகிய புத்தர், மரணத்தைக் காணாமல், அறியாமல் வளர்க்கப்-பட்டார், முதுமையை, நோயை அறியாமல் வளர்ந்தார் என்ப-தெல்லாம் ஒப்புக்கொள்ளக் கூடிய செய்தி-களா என்று கேட்கிறார் அம்பேத்கர். உண்மை. ஒப்புக் கொள்ள முடியாதவை.

சித்தார்த்தர் (புத்தர்) பிறந்த ஏழாம் நாள் அவர் தாய் இறந்தார். அரண்மனையில் மூத்த அதிகாரிகளும், உறவினர்களும் இறந்திருக்கக் கூடும். மற்றும் சித்தார்த்தக் குழந்தை வளர வளர அவரின் பெற்றோரே முதுமை அடையக் காணக் கூடியவர் அவர். நோய், மிகச் சாதாரணமாக எவரையும் தாக்கவல்லதே ஆகும். இவைகளை எல்லாம் அறியாமல் சித்தார்த்த புத்தர் வளர்ந்து 29 ஆனார் என்பதெல்லாம் அறிவுலகம் ஏற்க முடியாதவை.

சித்தார்த்தர் துறவேற்றும் பின்பு புத்தரான கதையை இவ்வாறு வடிவமைத்திருக்கிறார் அம்பேத்கர்.

கி.மு.ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னால், அதாவது இன்றைக்கு 2600 ஆண்டுகளுக்கு முன்னால், வட இந்தியா பல முடியாட்சி நாடுகளையும், முடியாட்சி அல்லாத நாடுகளையும் கொண்டிருந்தது. இந்தியா-வின் வட கிழக்கு நாடுகளில் ஒன்று கபிலவஸ்து. இந்த நாடு சாக்கியர்களின் பூமி. சாக்கியர்களின் குடி அரசில் அரச குடும்பங்கள் பலப்பல இருந்ததால் சுழற்சி முறையில் அது ஆளப்பட்டது. சித்தார்த்தர் பிறந்த-போது, அரசராக இருந்தவர் சுத்தோதனர். அரச சுத்தோ-தனருக்கும் மகா மாயாவுக்கும் மகனாக, கி.மு. 563-ம் ஆண்டில் விசாக பௌர்ணமி நாளில் பிறந்த குழந்தைக்கு சித்தார்த்தன் என்று பெயர் சூட்டப்-படுகிறது. கௌதமர் என்பது அவர் குலத்தின் பெயர். ஆகவே அவரை கௌதம சித்தார்த்தர் என்று அழைக்கும் மரபு ஏற்பட்டது. அரச மகன் அரண்-மனையில் பிறக்கவில்லை என்பது புத்தரின் வாழ்வில் ஒரு முரண். பூரண கர்ப்பக் காலத்தில் அன்னை மாயாவுக்குத் தன் தந்தை வீட்டுக்குச் செல்லும் அவா ஏற்பட்டுப் புறப்பட்டுப் போகும் வழியில் லும்பினி சோலை எனும் இடத்தில். தாய் எதிர்பாராமல், அவர் நின்றபடி குழந்தை பிறக்கிறது. ஒரு பெரிய சால் மரத்தின் கீழ் புத்தர் ஜனனமாகிறார்.

புத்தரை ஈன்ற தாய், ஏழாம் நாளில் மரணம் அடைகிறார்.

அரச குமாரர்க்குரிய போர்ப்பயிற்சிகளும், மனத்தை ஒருமுகப்படுத்தும் பயிற்சியும் அளிக்கப்-பட்டிருக்-கின்றன. போர்ப்பயிற்சியில் பூந்து வேட்டை ஆடுதல். இளவரசன் வேட்டையை விரும்பாது புறக்-கணிக்கிறார். ‘அப்பாவிப் பிராணிகளைக் கொல்வதை நான் விரும்பவில்லை. கொல்லப்-படு-வதைக் காணவும் நான் சகியமாட்டேன்என்பது அவர் கருத்தாக இருந்தது. வேட்டை என்பது ஒரு பொருளைக் குறிபார்த்து, எதிரியைக் குறி தவறாது வீழ்த்துவதற்கு உதவும் கலை ஆயிற்றேஎன்கிறார் சிற்றன்னை. மேலும் சத்திரியனின் கடமையும் அல்லவா போர்க்-கலை பயில்வதுஎன்றும் கேட்கிறார். ‘ஒரு சத்திரியன் ஏன் போர் புரிய வேண்டும்? ஒரு மனிதனை மற்றொரு மனிதன் கொல்வது எப்படிக் கடமையாகும்?’ என்கிறான் சித்தார்த்தன்.

பக்கத்தில் உள்ள பாகிஸ்தானுக்கும் மற்றுமுள்ள நாடுகளுக்கும் அஞ்சி ராணுவத்திற்கென்று பல லட்சம் கோடி ரூபாய்கள் விரயமாக்கும் இந்திய அரசும், அதே போலப் பாழ் செய்யும் பாகிஸ்தான் அரசும், உலக நாடுகளில் அமைதியே ஏற்பட விடக் கூடாது என்ற கொள்கையில் இயங்கும் அமெரிக்க அரசும் சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் புத்த போதனைகளில் இருக்கின்றன. ஏதோ, நாடுகளை ராணுவம்தான் காக்கிறது என்று நினைக்கும் மூட அரசுகள், அந்நாட்டு மக்களை மிகச் சௌகரியமாக மறந்து போகின்றன என்பதே வரலாற்றுச் சோகம்.

சித்தார்த்தர் தம் 16-ம் வயதில், அதே வயதான யசோதராவை மணக்கிறார். யசோதரா, சாக்கியர் தண்டபாணி என்பவர் மகள். (தண்டபாணி என்ற பெயர் உங்களுக்கு வேறு யோசனைகளை அளிக்கிறதா - நல்லது) துறவிகளுடனான சித்தார்த்தரின் உறவும் நட்பும் தந்தையைக் கவலைக்குள்ளாக்குகிறது. இளவரசனின் அந்தப்புரத்தில் அழகிகளை நிரப்புகிறார். அழகிகள் தோற்றுப் போகிறார்கள்.

சித்தார்த்தர் இருபது வயதை அடைகிறார். சாக்கிய வழக்கப்படி அவர் சங்கத்தில்சேர வேண்டும். சாக்கியர்களின் சங்கம் என்பது மிகவும் அதிகாரம் மிக்க, தனிமனிதர்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்க, ஏறக்குறைய ஓர் அரசதிகாரம் கொண்ட அமைப்பாகச் செயல்படும் நிறுவனம் ஆகும். சங்கத்தில் சித்தார்த்தர் சேர்த்துக் கொள்ளப்படுகிறார். சங்கத்தில் சேனாபதி, சித்தார்த்தருக்குச் சங்க விதிகளைக் கற்றுத் தருகிறார்.

1.
உடல், மனம், உடைமையால் சாக்கிய நலனைப் பாதுகாக்க வேண்டும்.

2.
சங்கக் கூட்டங்களுக்குத் தவறாமல் வருகை தர வேண்டும்.

3.
சக சாக்கியரின் தவறுகளைப் பொது நலன் கருதி சுட்டிக் காட்டுதல் விரும்பத்தக்கது.

4.
தவறுகளை ஒப்புக் கொள்ளும் மனம் வேண்டும்.

மேலும், சங்க உறுப்பினர் என்னும் தகுதியை இழக்கும் குற்றங்களாகச் சேனாபதி சொல்வதும் கவனிக்கத்தக்கது.

கற்பழிப்பு, கொலை செய்தல், களவு, பொய் சாட்சி சொல்லுதல் ஆகியவை சங்கத்தால் குற்றங்கள் என்று வரையறை செய்யப்பட்டன.

சித்தார்த்தர் எட்டு ஆண்டுகள் சங்கத்தின் மெய் உறுப்பினராகச் செயல்பட்டு உழைத்-திருக்கிறார். ஏற்ற பொறுப்பைச் சிதறாமலும், சிந்தாமலும் செயல்படும் பண்பு சித்தார்த்-தருக்கு இருந்தது. இச் சங்க அனுபவம், எதிர்காலத்தில் அவர் சங்கம் கட்டும் முயற்சிக்கும் அதன் வளர்ச்சிக்கும் பேருதவி செய்திருப்பதை வரலாறு நமக்கு உணர்த்து-கிறது. மிகச் சிறந்த தொண்டர், மிகச் சிறந்த தலைவராவதன் முன் நிபந்தனையை அவர் நிறைவேற்றினார்.

எட்டாம் ஆண்டின் இறுதியில் சித்தார்த்தருக்கும் சங்கத்துக்கும் முரண்பாடு வந்தது.

சாக்கியர்களின் அரச எல்லையில் கோலியர்கள் என்பவர்களின் அரசு இருந்தது. இரு அரசுகளையும் பிரிப்பது ரோகிணி நதி. நதிநீரைப் பாசனத்துக்காக இருவருமே பயன்படுத்தினார்கள். யார் முதலில் பயன் கொள்வது என்பதில் எப்போதுமே சச்சரவு இருக்கவே செய்தது.

சித்தார்த்தருக்கு 28 வயதாகும்போது, சாக்கியப் பணியாளர்களுக்கும் கோலியர்ப் பணியாளர்-களுக்கும் மோதல் நிகழ்ந்துவிட்டது. இருபக்கத்-தார்க்கும் கடும் காயங்கள் ஏற்பட்டுவிட்டன. நதிநீர்ப் பிரச்னையைப் போர் மூலம் தீர்த்துக் கொள்வது என்று இருவரும் தீர்மானித்தார்கள். சாக்கியச் சங்கம் கூட்டப்பட்டது. கோலியர்களின் மேல் படையெடுப்பது என்ற தீர்மானத்தை முன் மொழிந்தார் சேனாபதி.

சித்தார்த்தர் எழுந்து கூறுகிறார்.

சேனாபதியின் தீர்மானத்தை நான் எதிர்க்கிறேன். எந்தப் பிரச்னையையும் போர் தீர்த்துவிடுவதில்லை. போர் நமக்கு உதவப் போவதில்லை. ஒரு போர் மற்றொரு போரைத்தான் உருவாக்கும். ஒரு கொலைஞன், மற்றொரு கொலைஞனால் கொல்லப்-படுவான். ஆக்கிரமிப்பாளன், மற்றொரு ஆக்கிரமிப்-பாளனால் அழிவான். அழிகிறவன் அழிக்கப்படுவான்.”

சித்தார்த்தர் ஒரு நடுவழியைக் காட்டத் தவறவில்லை.

நம் பக்கத்து இருவரும், அவர்கள் பக்கத்துக்கு இருவரும், அந் நால்வரும் ஒரு பொது ஐந்தாமரைத் தெரிவுசெய்து பேச்சுவார்த்தை நடத்தி இப் பிரச்னையைத் தீர்க்கலாம்.”

சித்தார்த்தர் கருத்தைச் சங்கம் தோற்கடித்தது.

பகைமையை அன்பால் மட்டுமே வெல்ல முடியும்என்றார் சித்தார்த்தர். அவர் உபதேசத்தைப் பெரும்பான்மைச் சங்கம் ஏற்கவில்லை. மறுநாள் நடந்த சங்கக் கூட்டத்தில் போர்தான் என்று முடிவு செய்யப்பட்டது.

இருபதுக்கும் ஐம்பதுக்கும் இடைப்பட்ட சாக்கியர் அனைவரும் போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

சித்தார்த்தர் மீண்டும் எழுந்து தம் கருத்தை வற்புறுத்தலானார்.

நண்பர்களே, பெரும்பான்மை உங்கள் பக்கம் உள்ளதால் நீங்கள் விரும்பியதைச் செய்யலாம். நான் உங்கள் முடிவை எதிர்த்தாக வேண்டி இருக்கிறது. நான் உங்கள் படையில் சேரமாட்டேன். நான் போரில் பங்கேற்க மாட்டேன்...”

நெருங்கிய உறவினர்களும், அடுத்து வாழ்பவர்-களுமான கோலியர்களுடன் போர் செய்ய மறுக்கிறார் சித்தார்த்தர். எந்தப் பிரச்னையையும் பேசித் தீர்க்கலாம் என்றே கருதுகிறார். எந்த வகையிலும் மனித ரத்தம் சிந்தப்படுவதை அவர் ஏற்கவில்லை. தொடர்ந்து சங்கத்தில் அவருக்கும் சேனாபதிக்கும் ஏற்பட்ட விவாதங்களையும், அதன் பயனாக அவர் துறவு கொள்வதையும் அடுத்து நாம் காணப் போகிறோம்.

புத்தரின் துறவோடும், அவர் நிர்மாணித்த பௌத்த சமயத்தோடுமே, இந்தியத் தலித்துக்களின் வரலாறு தொடங்குகிறது. எனவேதான் புத்தரின் துறவில் நாமும் தொடங்கி இருக்கிறோம்.

(
சரித்திரம் தொடர்கிறது)

நன்றி :30.07.2009


கருத்துகள் இல்லை: