முதல் முறையாக மும்பையில் சீமானை இரண்டு ஆண்டுகளுக்கு(சரியாக நினைவில்லை, மூன்று ஆண்டுகளாக கூட இருக்கலாம்) முன்பு தொலைவில் இருந்து ஒரு அரங்கில் உரையாற்றியதை கண்டேன் ,கேட்டேன்.....
“தமிழன் இவ்வளவு தரம் தாழ்ந்து போய்விட்டானே, வேற்று மொழியில் பெண் கொடுத்து பெண் எடுக்க தயங்காதவன், தன் தாய்மொழி பேசும் நபர்களோடு திருமண உறவு கொள்ள தயங்குகிறானே? மொழி, இன பற்றை விட சாதி பற்று தமிழனிடத்தில் என்று ஆட்கொண்டதோ அன்றே தமிழன் வீழ்ந்தான், வந்தவனெல்லாம் ஏறி மிதித்து போய்க் கொண்டே இருக்கிறான்.”
தமிழனிடம் இருக்கும் சாதிய பிரச்சினைகளை பேச, பகுத்தறிவு சிந்தனைகளை பரப்ப இப்படியொரு ஆளா? அதுவும் திரைப்படத்துறையிலிருந்தா? என்று பிரம்மித்துதான் போனேன், எனக்கு அப்பொழுது 21 வயதுதான் இருக்கும். அதிகம் புரிதல் இல்லா நேரம், பெரியார் அப்பொழுதுதான் அறிமுகமாயிருக்கிறார். பெரியாரை அப்பொழுதுதான் படிக்க தொடங்கியிருக்கிறேன்....புரட்சிகர கருத்துக்கள் சீமானின் சிந்தையில் இருந்ததா இல்லையா? என்பதெல்லாம் எனக்கு தெரியாது ஆனால், சொற்களில் இருந்தன.
“ புரட்சி என்பது காய்ந்த சருகு போன்றது, யார் முதலில் தீக்குச்சி ஆவது என்பதுதான் இங்கே கேள்வி.”என்று அவர் சொற்களை உதிர்த்து கொண்டே போனார். அந்த நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கம் இன்னும் என்னுள் இருக்கிறது. அந்த தாக்கம்தான் பெரியார் என்னும் பெரும் தலைவனை எனக்குள் ஆழமாக விதைத்தது.....பெரியாரை படிக்க தொடங்கியது உலகத்தில் உள்ள விடுதலைச்சிந்தனைகளை தேடி தேடி படிக்க வைத்து, தேடலை விரிவுப்படுத்தியது......தேடல் தொடர்கிறது
இவரை மேடையில் பார்த்தபின்பு அவரின் சீமானின் தம்பி திரைப்படம் பார்க்க நேரிட்டது. படத்தில் மாதவன் தன்னுடைய குடும்பத்தில் வீட்டிலிருக்கும் காட்சி வந்தது, பெரியாரின் படம் வந்தது, பாரதிதாசன் படம் வந்தது, கூடவே முத்துராமலிங்கம் என்ற சாதி வெறியனின் படமும் அந்த திரைப்படத்தில் வந்தது...அதிர்ச்சியுற்றேன்...தோழர்களோடு இதை பகிர்ந்து கொண்ட பொழுது மிகவும் வருத்தமடைந்தடைந்தனர்..ஆழ்ந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
சீமானோடு அப்பொழுது தொடர்பு கொண்டு எனது தோழர் ஒருவர் கேட்டதற்கு அது பிழையாக நடந்துவிட்டது...என்று கூறியிருக்கிறார்...பேச்சுனூடாக இன்னும் சாதி வெறியை கக்கி கொண்டிருக்கும், தமிழன் என்ற உணர்வேயில்லாமல் சாதிய வெறி கொண்டு சகதமிழனை ஒடுக்கும் சாதி வெறியர்களையும் சீமான் கண்டித்ததாக தொடர்பு கொண்ட தோழர் கூறினார்....
அது தற்செயலாக நடந்தது. இனி அதை தவிர்த்து விடுகிறேன் என்று கூறியவுடன் விமர்சனங்களையும், அதன் மீதான தனது நிலைப்பாட்டையும், தவறிருந்தால் திருத்திக் கொள்ளும் மனப்பான்மையும் இவருக்கு இருக்கிறதே என்று மகிழ்ச்சியடைந்தேன்.
அதோடு மட்டுமில்லாமல் கீற்றுவில் அவரது நேர்காணலையும் படித்தேன் அதில் சாதியை குறித்து அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுருந்தார்..
கேள்வி: தமிழ் சினிமா சாதியை எப்படி கையாளுது. சாதியை எதிர்த்து வந்த படங்கள் கூட அதைத் தீவிரமா செய்யலை. சாதியை எதிர்த்து ‘வேதம் புதிது’ன்னு பாரதிராஜா ஒரு படம் எடுத்தார். அதிலயும் கடைசியில் பார்ப்பனர்களுக்கு அடிபணிந்து போறமாதிரி தான் எடுத்திருப்பார்...
மார்க்சிஸ்டுகள், பெரியாரிஸ்டுகளைத் தவிர வேறு யாருக்கும் சாதியைக் கடந்து மக்களை மீட்கணுங்கிற நோக்கம் கிடையாது. இங்க சாதி, மதம்னு எல்லாம் எதுவும் கிடையாது. அது ஒரு உணர்வு அவ்வளவுதான். கடவுள், கற்பு இதெல்லாம் எப்படிக் கற்பிதமோ சாதியும் அப்படி ஒரு கற்பிதம். ஒரு உருவகம். வேதங்கள் சொல்லுது, தர்மங்கள் சொல்லுதுன்னா அதையே நாமக் கொளுத்தணும். ஆனா சாதியை அடிச்சு நொறுக்கணுங்கிற நோக்கத்தில இங்க யாரும் எதையும் படைக்கலை. அந்த உணர்ச்சிகளையும் வைச்சு காசு சம்பாதிக்கணுங்கிற நோக்கத்தில் தான் திரைப்படங்கள் படைக்கப்படுது.
கேள்வி:நீங்க சாதியைப் பத்திப் பேசறதால இங்க ஒரு கேள்வி கேட்க விரும்புறோம். முத்துராமலிங்கத் தேவரை கைது செய்தாத்தான் தமிழ்நாட்டில் சாதிப்பிரச்சனை ஒழியும்னு முதுகுளத்தூர் கலவர நேரத்தில் பெரியார் சொல்லியிருக்கார். ஆனால் உங்களோட படங்களில் முத்துராமலிங்கத் தேவரோட புகைப்படம் தொடர்ந்து இடம்பெறுகிறது.?
கொஞ்சநாள் முன்பு வரைக்கும் எனக்கு முத்துராமலிங்கத் தேவர் பத்தின உண்மைகள் எதுவும் தெரியாது. தம்பி படம் வந்தபிறகு அண்ணன்களெல்லாம் சொன்னபிறகு தான் என்னோட பிழை தெரிஞ்சது. அவரை முன்னிறுத்தணுங்கிற உள்நோக்கம் எல்லாம் எதுவும் கிடையாது. படம் வந்த பிறகு தான் தேவரும், பெரியாரும் கொள்கைரீதியா வேறானவங்கன்னு எனக்குத் தெரிய வந்தது. பெரியார் இறந்தபோது அரைக்கம்பத்தில் பறக்காத ஒரே கொடி, முத்துராமலிங்கத்தோட பார்வார்ட் பிளாக் கொடிதான் என்பதையும் தெரிஞ்சிக்கிட்டேன். நான் முழுக்க முழுக்க பெரியாரைப் பின்பற்றுகிறவன். முத்துராமலிங்கம் படத்தை நான் பயன்படுத்தியது முழுக்க முழுக்க அறியாமல் நடந்த பிழைதான்.
அதற்கு பிறகு அவரை சமீபத்தில் விழித்தெழு இளைஞர் இயக்கத்தின் சார்பாக மும்பையில் நடந்த நிகழ்ச்சியில்தான் அவரை சந்தித்தேன். அவரை கண்டு வியந்து போனேன், கூர்ந்து கவனித்த பொழுது தன்னலமில்லா, கள்ளமில்லா உள்ளமும் கொண்டவர் என்றே இதுவரை நினைத்து வருகிறேன். இன்னமும் குழந்தை உள்ளத்தோடு இந்தச்சமூகத்திற்கு ஏதாவது செய்துவிட முடியாதா? என்ற ஏக்கமும் அவரிடம் என்னால் காண முடிந்தது....
ஆனால்,எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும் அவரின் தவறான அரசியல் நிலைப்பாடுகளை எப்படி ஆதரிக்க இயலும்......
பெரியாரின் பேரன் முத்துராமலிங்கம் என்ற சாதிவெறி பிம்பத்திற்கு சீமான் மாலை அணிவித்ததைத்தான் குறிப்பிடுகிறேன்.
ஈழத்தில் சிங்கள இனவெறி தமிழர்கள் மீது ஏவிவிட்ட அடக்குமுறைக்கு எதிராக முழங்கும் தமிழ்த்தேசியவாதிகள் தமிழகத்திலேயே சம மரியாதை இல்லாமல் சக தமிழன் சாதியின் பெயரால் மிகக்கொடுமையாக ஒடுக்கப்படும் கொடுமைக்கு எதிராக குரல் கொடுப்பதில்லையே என்ற ஆதங்கம் எமக்கு இருந்தாலும் அதை தருணம் கருதி ஈழப்பிரச்சினையின் தற்காலத்திய முக்கியத்துவம் கருதி, குரல் கொடுக்க வேண்டிய தேவை கருதி அதைப்பற்றி விரிவாக விவாதத்திற்குள் உட்புகவில்லை...ஆனால், சாதிய ஒழிப்புதான் தமிழர்களை அணிதிரட்டும் என்பதில் மாறுபடாமல் இருந்தோம்.....
“ஈழத்தில் நடக்கும் கொடுமைக்கு தீண்டாமை கொடுமைக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை இனியாவது உணர்வார்களா என்றால் அதுதான் நடக்கவில்லை....என்ன ஒரே வேறுபாடு..ஈழத்தில் ஒடுக்குபவன் சிங்களவன், தமிழகத்தில் தமிழன்”
ஈழக்கொடுமை கண்டாவது விழிப்புணர்வு பெற்று தமிழர்கள் சாதி வெறிக்கெதிராக வரமாட்டார்களா? என்ற ஏக்கம்தான் காரணம்..
பெரியார் திராவிடர் கழகம் “இனி என்ன செய்யப்போகிறோம்”என்ற குறுந்தகட்டை பிரதி எடுத்து மும்பையில் தமிழர்கள் மத்தியிலே பிரச்சாரம் செய்து வந்த வேளையில் ஒரு நபர் என்னை அணுகினார்..
“ஈழக்கொடுமையெல்லாம் சரிதான்....ஆனால், அதில் வரும் பெரியாரின் படத்தை எடுத்து விட்டு தாருங்களேன்.” என்று கூறினார். அங்கு வெளிவந்தது சாதிய திமிர் என்னும் பூனை...பெரியாரின் சாதிக்கு எதிரான கொள்கையின் வீரியம் அங்கே நினைவுக்கு வந்தது......
சாதி வெறிக்கெதிராக தமிழகத்தில் இயங்குவதற்கு பெரியார்தான் கருவி என்பதை நான் அன்று நன்கு புரிந்து கொண்டேன்...இதையே தமிழர்களோடு சமூக தளத்தில் இயங்கிய பொழுது பல நிகழ்வுகள் இதையே வலுவாக உறுதி செய்தன.
முத்துராமலிங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பது சாதிக்கு ஆதரவாக இயங்குவதாகத்தான் போய் முடியும்.என்பதையும் சேர்த்தே உணர்த்தியது...
தமிழர்களாக அணிதிரட்ட கிளம்பியிருப்பதாக கூறும் பெரியாரின் பேரனாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் சீமான் சாதி ஒழிப்பிலிருந்துதானே தொடங்கியிருக்க வேண்டும்...ஆனால், அதை விடுத்து பெரியாரை சாதி வெறி தேவர் பூசை கொண்டாட்டத்தில் கொண்டு போய் விட்டு விட்டு சாதியை தூக்கி பிடிக்கும் மக்களிடம், அவர்களிடம் வைக்க வேண்டிய நேர்மையான விமர்சனங்களை வைக்காமல் முத்துராமலிங்கத்திற்கு மாலை போட்டு வந்ததுதான் ஏற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறது...
“அவர்களும் தமிழர்கள்தானே அவர்களை புறக்கணிப்பது சரியா? என்று என்னதான் சமாதானம் கூறினாலும்...” அது
“ராஜபக்சேவும், பிரபாகரனும் எனக்கு நண்பர்கள்தான்” என்று சொல்வதுபோல்தான் முடியும்..
இனத்திற்கு தலைவனாக விரும்புவன் மக்களிடம் சமரசம் செய்து கொண்டால் சமரச சாதாரண பிழைப்புவாத அரசியல்வாதிதான் ஆக முடியும், மாறாக மக்களிடம் பரப்ப வேண்டிய கொள்கைகளை பரப்புரையின் மூலமாக தம் பின்னே அணி திரள வைப்பவன்தான் நேர்மையான அரசியல்வாதியாக,இந்த இனத்திற்கான விடிவாக வர முடியும்
சீமான் செய்ய வேண்டியது தமிழர்களிடையே இருக்கும் சாதியை ஒழிப்பதற்கு களம் காண்பதுதான்..சாதி ஒழிப்பை மறந்தாலோ, சிறுது நாட்களுக்கு ஒதுக்கி வைத்தாலோ, சாதிய ஆதிக்க வாதிகளிடம் அடங்கி போனதாய்தான் முடியும்.
கால ஓட்டத்தில்
நாம் தமிழர் என்பது போலி முழக்கமாகிவிடும்...
ஏனென்றால்....சாதி ஒழியாத வரை தமிழகத்தில்
“தமிழ் தேவர், தமிழ் பறையர், தமிழ் பள்ளர், தமிழ் கோனார்,தமிழ் பிள்ளைதான் இருப்பார்களேயொழிய...”
தமிழர்களாக தமிழகத்தில் எவனும் சீமானுக்கு கிடைக்கமாட்டான்.
தொடர்பான இணைப்புகள்:
சண்டாளர் என்ற சொல்லை பயன்படுத்தியதால் மறுப்பு கூறு தலித் முரசு 2006 இதழிற்கு சீமான் அனுப்பிய மடல் அழுத்துக
தோழர் சுகுணாதிவாகரின் இணைப்புகள் 1, 2, 3
தோழர் அசுரன் மாமேதை முத்துராமலிங்கத்தை பற்றிய பதிவு : 1
தமிழகத்தில் தொடர்ந்து நடக்கும் சாதி வன்முறையின் ஓர் தொகுப்பு.
17 கருத்துகள்:
ரெம்ப நல்லா சொன்னீங்க மகிழ்நன்!
இதே பகுத்தறிவு 'திருமா' பத்தி விமர்சிக்கும் பொழுது பலபேருக்கு (நம்மளுக்கும்தான்) வருவதில்லையே ஏன்? மதுரை விமானநிலையத்துக்கு தேவர் பெயரை வையுங்கள் என்றும் பிறந்தநாளில் அரசு விடுமுறை விடுங்கள் என்றும் கோரிக்கை வைப்பது. சேதுராமனோடு சேர்ந்துகொண்டு தேவர் உருவப்படம் போதித்த நாணயம் வெளியிடுவது. அப்புறமா நான் அண்ணல் அம்பேத்காரின் வாரிசு பெரியாரின் வாரிசு என்று போஸ்டர் ஓட்டுவது. இதையெல்லாம் நாம கண்டுக்க கூடாது. அப்படி ஏதாவது எழுதினால் தலித் தலைவரை விமர்சிக்கலாமா அப்படின்னு கிளம்பிடுவாங்க.
தமிழன்பன்
திருமா....மட்டுமல்ல தோழர்!! ஓட்டுபொறுக்க அரசியல் போகிறவர்கள் எல்லாம் இந்த அமைப்புக்குள் போனவுடன் சீரழிந்து விடுகிறார்களே என்பதுதான் நம் கவலை....
தமிழர்களுடைய விடுதலையின் சேரியில் முடக்கப்பட்டிருக்கும்
தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலையிலிருந்துதான் தொடங்க முடியும் என்பது நமக்கு தலைவர்களாக எவருக்கும் வருபவர்களுக்கு கூட புரிவதில்லையே என்பதுதான்(அல்லது புரிந்தும் அந்த கூற்றை நிராகறிக்கிறார்களா?) நமக்கு ஆதங்கமாக இருக்கிறது
சீமான் ஒரு கொழப்ப வாதியாக தான் பல காலமாக இருக்கிறார். இப்ப கேட்டால் சாதி நல் இலக்கணம் பற்றி பேசுவார் என்று நினைக்கிறன்.
நன்றி மகிழ்நன் உங்கள் வலைபூ மற்றும் உங்கள் கள பணி தொடர வாழ்த்துக்கள்.
சீமான் குழப்பவாதியா? இல்லையா என்பதைவிட..நானறிந்த வரையில் நல்ல மனிதர்..இந்த பதிவு....அவரின் தவறான அரசியல் பாதையை சுட்டிக்காண்பித்து...அவரை சரியான பாதைக்கு கொண்டுவர வேண்டும் என்ற தோழமை உணர்வுடன் கூடிய பதிவே இது..
இதுவரை..வந்த அரசியல்வாதிகளால் தமிழர்களிடையே ஒற்றுமையை வளர்த்தெடுக்க முடியாமைக்கு காரணம் சாதி வெறிக்கு ஊக்கம் கொடுத்து அரசியல் லாபம் கொண்டதுதான்...
தங்களை தேவர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் அம்மக்களும் தமிழர்கள்தான் என்று சீமான் சமாதானம் சொன்னாலும்...அவர்கள் தமிழர்களை ஒடுக்கும் பொழுது கண்டித்தால்தான் தான் தொடங்கியிருக்கும் அமைப்பின் பெயருக்கு ஏற்றபடி "நாம் தமிழர்" என்ற அடையாளத்தை தமிழர்க்ளிடையே நிறுவ முடியும்.
seeman is a man of tamil
//seeman is a man of tamil//
ஆனால், தமிழர்கள் சாதி/மத வெறி பிடித்த பிண்டங்களாக அல்லவா இருக்கிறார்கள்..
தந்தை பெரியாரின் அடிப்படைக் கொள்கையே தேர்தல் அரசியலில் ஈடுபட்டால் - கொள்கை நீர்த்துப்போய்விடும் என்பது தான்.
நாம் தமிழர் என்று இயக்கத்தை ஆரம்பித்து விட்டு உடனேயே ஆறு மாதத்தில் இதை அரசியல் கட்சி ஆக்கப்போகிறேன் என்கிறாரே - இவரிடம் எப்படி நம் எதிர்பார்ப்பு நிறைவேறும் ?
ஓட்டுப்பொறுக்கிகளால் (மன்னிக்கவும் -இதுவும் பெரியாரின் சொல் தான் ) நிச்சயமாக இலட்சியத்தில் குறியாக இருக்க முடியாது ! அவர்கள் யாரோடும், எதோடும் சமரசம் செய்துக்கொள்ளத் தயாராக இருப்பார்கள் !!
நமது தேடல் இன்னும் தொடர வேண்டி தான் இருக்கிறது.
- காவிரிமைந்தன்
http://www.vimarisanam.wordpress.com
மும்பை விழாவிலேயே சீமான் ஒரு தவறான கருத்தைப் பேசியுள்ளார்.
....பெரியார், அம்பேத்கர், காமராசர் போன்ற தலைவர்கள் சாதி ஒழிப்பைப்பற்றிப் பேசினார்கள், போராடினார்கள், சாதியை ஒழிக்க முடியவில்லை. ஆனால் ஈழத்தில் பிரபாகரன் சாதியை ஒழித்துவிட்டார்....என்று பேசியுள்ளார்.
இதற்கு நீங்களே மறுப்பு சொல்வீர்கள் என எதிர்பார்த்தோம். வெளிப்படையாக இல்லாவிட்டாலும் தனிப்பட்ட முறையிலாவது சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறோம். நன்றி.
//நானறிந்த வரையில் நல்ல மனிதர்..இந்த பதிவு....அவரின் தவறான அரசியல் பாதையை சுட்டிக்காண்பித்து...அவரை சரியான பாதைக்கு கொண்டுவர வேண்டும் என்ற தோழமை உணர்வுடன் கூடிய பதிவே இது..//
இது என்னமோ குழந்தை தனமா இருக்கு. இது முதல் முறையும் அல்ல, சீமான் ஒன்னும் தெரியாதவரும் அல்ல. தம்பி படத்தில் இந்த பிரச்சனை எழுந்த போதே அவருடைய விளக்கம் நம்பும் படியாக இல்லை. சாதி அபிமானம் அவருக்கு இருக்கா இல்லையா என்பது பிரச்சனை இல்லை ஆனால் பிழைப்புவாத சிந்தனை மற்றும் அரசியல் தான் இவ்வாறு இட்டு செல்கிறது. பேசுவது சுலபம் என்று கூறலாம் பலர் ஆனால் அவ்வாறு உண்மையிலே வாழும் தலைவர்கள் இருக்கிறார்கள். தமிழ் தேசியம் ஈழத்திற்கு பிறகும் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. தமிழன் மானம்கெட்டு இருக்கானு சொல்லும் மாந்தர்களே தமிழன் உண்மையிலே சாதிகேட்டு இருக்கான் அதை உணராத வரை வெறும் முழக்கங்கள் தான் மிஞ்சும் தமிழனுக்கு.
//மும்பை விழாவிலேயே சீமான் ஒரு தவறான கருத்தைப் பேசியுள்ளார்.
....பெரியார், அம்பேத்கர், காமராசர் போன்ற தலைவர்கள் சாதி ஒழிப்பைப்பற்றிப் பேசினார்கள், போராடினார்கள், சாதியை ஒழிக்க முடியவில்லை. ஆனால் ஈழத்தில் பிரபாகரன் சாதியை ஒழித்துவிட்டார்....என்று பேசியுள்ளார்.//
வழிமொழிகிறேன்........புலி அரசியலை மீறி சிந்திக்க வேண்டிய கட்டையாம் தமிழ் சமூகத்துக்கு உள்ளது.
//....பெரியார், அம்பேத்கர், காமராசர் போன்ற தலைவர்கள் சாதி ஒழிப்பைப்பற்றிப் பேசினார்கள், போராடினார்கள், சாதியை ஒழிக்க முடியவில்லை. ஆனால் ஈழத்தில் பிரபாகரன் சாதியை ஒழித்துவிட்டார்....என்று பேசியுள்ளார்.//
சாதி ஒழிபிற்காக இந்த தலைவர்கள் போராடவில்லை என்று சீமான் சொல்லவில்லை. நம் மக்களை ஓரளவுதான் இவர்களால் திருத்த முடிந்தது. அது இந்த முபெரும் தலைவர்களின் தவறல்ல. நம்மக்களின் தவறு. மேதகு பிரபாகரன் அவர்களால் அதனை செயல் படுத்த முடிந்தது. ஒட்டு பொருக்கி ஒட்டு பொருக்கி என்று கூறி கொண்டிருந்தால் போதாது.அரசியலில் ஈடுபட்டாலே அவர் நம்பக தன்மை இல்லாதவர் என்கிற வாதம் சரி இல்லை. நாம் எல்லோருடைய எண்ணமும் ஒன்றே, சரியான புரிந்து கொள்ளாமையே நமக்குள் சந்தேகங்களை உருவாகுகிறது. சாதியை வைத்து கொண்டு தமிழை ஒன்றிணைப்பது அடிமை தனத்திலே கொண்டு சேர்க்கும். தவறுகளை சுட்டி காட்டுங்கள் நண்பர்களே ! சந்தேகம் கொண்டு ஒதுகாதீர்கள் ! அதனால் நம் எதிரிகள் பார்ப்பார்கள் தான் ஆதாயம் அடைவார்கள் ..
தோழர் பிரபாகரன் அவர்கள் ஈழத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சாதியை ஒழித்திருக்கிறார். ஈழ மக்களிடத்தில் சாதிய எண்ணம் சாதிச் சிந்தனை குறையவில்லை. விடுதலைப்போராட்டத்துக்கு முந்தய நிலைதான் நீடிக்கிறது. ஆனால் பெரியார் அம்பேத்கர் காமராசர் போன்ற தலைவர்கள் மக்களிடத்திலேயும் சாதியை சாதிஆதிக்கத்தின் தன்மையைக் குறைத்திருக்கிறார்கள். சமுதாயத்தில் சாதியை எதிர்த்து மிகப்பெரும் மாறுதல்களைக் காணச் செய்திருக்கிறார்கள். தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஒரு இயக்கத்தில் மாறுதல்களைக் கொண்டுவந்தததைவிட ஒட்டு மொத்த சமுகத்திலும் மாற்றத்தை விளைவித்தவர்கள் பெரியாரும் அம்பேத்கரும் காமராசரும். இவர்களைக் கொச்சைப்படுத்துவதாகவே உள்ளது சீமானின் மும்பை உரை.
அரசியலுக்கு செல்வதாலேயே ஒருவரை தவறாகப் பார்க்கவில்லை. கழிசடைத்தனமான காரியங்களை தொடர்ந்து செய்யும் அரசியல்வாதிகளை தன்மை அப்படியே சீமானிடமும் வரும்போது விமர்சிக்கிறாம்.
எதிரிகளுக்குத் தான் இது லாபம் என்ற எண்ணம் சீமானுக்கும் இருக்கவேண்டும்
சாதிகள் நம் ஜீனில் உள்ளது. அது நம்மை விட்டு நீங்க நீண்ட நாள் ஆகும். SC என்ற வார்த்தைப் பார்த்தாலே வாந்தி எடுத்தவர்களை நான் பார்த்து உள்ளேன். இவர்கள் எல்லோரும் பிராமணர் அல்ல.
நல்ல பகிர்வு மகிழ்நன்..எமது எண்ணமும் அதுவே.. ப. ஜீவா, அண்ணாதுரை மற்றும் கருணாநிதி வரிசையில் சேரும் முன் விழித்துக்கொண்டால் மகிழ்ச்சியே.
இதை நீங்கள் அவரிடமே கேட்டிருக்கலாம்.இயக்கத்தில் இருப்பவர்கள் அவருக்கு நாம் மறைந்த எந்த ஒரு தலைவரையும் புறக்கணிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறியிருக்கலாம்.
எதுவாயினும் அவரை அறிந்த நீங்கள் அவரிடம் பேசிவிட்டு எழுதியிருக்கலாம்.அவர் தரப்பில் நியாயமே இருக்க முடியாது என்று
நீங்களாக முடிவு செய்திருந்தாலும்
கேட்பதில் தவறில்லையே.
சிறு வேறுபாட்டினைக் கூட ஊதிப்
பெருக்கி பின்னூட்டம் மூலம் பிளவு ஏற்படுத்த முயல்வோரிடம் விழிப்பாக இருங்கள்.
தமிழன்பா உன் தேவன் பற்று இன்னும் விடலையா உன்ன...
தோழர்களே நண்பர்களே இந்த தமிழன்பன் வெறித்தனமான தேவர் சாதி வெறியன்.....
இவனிடம் எச்சரிக்கையாக இருங்கள்..
pasupathi ur correct be aware of him
இந்த ஈழ தமிழர்களுகாக குரல் கொடுக்கும் கூடத்தில் பெரும்பாலும் பெரியார் தி.க கட்சியினரும், தலித்துகளும் தான் இருகிறார்கள், அதனால் இவர்கள் எபோதும் ஹிந்து மதத்தையும் மற்ற சாதியினரையும் கண்டாலே பிடிக்காது. ஹிந்துக்களையும், குறிப்பாக தேவர் இந்தையும் வம்புக்கு இழுத்து விமர்சனம் செய்கிறார்கள். வேறு மதத்தை பற்றி விமர்சித்தால் இவர்கள் டவ்சறை அவுத்து அம்மணமாக்கி விடுவார்கள் என்பதால் தான் எதற்கெடுத்தாலும் ஹிந்து மதத்தை மட்டும் சாடுகிறார்கள்.
சீமான் தேவரை பற்றி பேசினால் பிடிக்காது. ஆனால் அவர் அம்பேத்கரை பற்றி பேசினால் மகிழ்வார்கள் இந்த பெரியார் தி க தோழர்கள் அடங்கிய (நாம் தமிழர் கட்சியினர்). சீமான் அந்த கட்சியை தொடங்கியது நல்லா நோக்கத்தில் தான் ஆனால் அதில் இருக்கும் சில புல்லுருவிகள் இப்படி அவரின் பெயருக்கு களங்கம் விளைவிகிரார்கள்.
முத்துராமலிங்க தேவரும், அம்பேத்கரும் என்றுமே மற்ற ஜாதியையும் சாதியினரையும் விமர்சித்தோ வெறுத்தோ இல்லை. ஆனால் அவரை பின்பற்றி வந்தவர்கள் சொந்த ஆதாயத்திற்காக இவிரண்டு சமூகத்திற்கும் இடையில் பிளவை எற்படுத்துகிறார்கள்
இந்த கட்சி காரர்களுக்கு எல்லா கடவுள்களும் பிடிக்காத? அல்லது ஹிந்து கடவுள்கள் மட்டும் பிடிக்காதா?
அங்கே ராஜபக்ஷே குசு போட்டால் கூட அதற்கு காரணம் ஹிந்து கடவுள்கள் தான் என்று கூறுவார்கள்.
ஒருபுறம் என்னுடைய கடவுள் தான் பெரியது மற்ற கடவுள்கள் எல்லாம் கல் என்று மதம் மாற்றும் ஒரு கூட்டம். மற்றொருபுறம் கடவுள் இல்லை என்று கூறும் ஒரு கூட்டம். எந்த கடவுளை கும்பிட வேண்டும் என்பது அவரவர் சொந்த விருப்பம், கடவுளை கும்பிடாமல் இருபதும் அவரவர் விருப்பம். கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யச்சொல்லும் நீங்கள், மசூதியிலும் தேவாலயத்திலும் தமிழில் வழிபட சொல்லுங்கள் பாப்போம். உங்களது கொள்கைகளை மற்றவர்களிடத்தில் திணிக்காதீர்கள் அது உன் மனைவியை மற்றவரிடத்தில் அனுபுவதற்கு சமம்.
கடவுளுக்கு மாலை மரியாதை செய்வதை எதிர்க்கும் நாத்திகர்கள். பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அவரை கடவுள் போல பாவிகிறார்கள். நாத்திகன் என்றல் எல்லா மதத்தையும் எதிர்கவேண்டியது தானே? ஆதி முதல் உள் நாட்டில் உருவான ஹிந்து மதத்தை எதிர்கிறார்கள் ஆனால் அயல் நாடு வழி வந்த மதங்களை வளர்கிறார்கள். மதம் என்பது கலாச்சாரம், பண்பாடு கலந்தது அவரவர் கலாச்சாரத்தை மட்டும் பின்பற்றினால் போதும், மற்ற கலாச்சாரத்தை கற்கவும் வேண்டாம் பிறருக்கு கற்பிக்கவும் வேண்டாம்.
கருத்துரையிடுக