வியாழன், 25 மார்ச், 2010
ப்ளாஸ்டிக் க்ளாஸ்
தூக்கம் விழித்த கதிரவன் ஒளிபரப்பப்பட்டிருக்கும் வானம் பார்த்துக்கொண்டே, பறவைகளை வானமும், வானத்தை பறவைகளும் அடைந்துவிட துடித்து கொண்டிருக்கும் அழகை காண்கிறான். என்னதான் சொன்னாலும் “ சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரை போல வருமா” ன்னு பாட்டு படிச்சிக்கிட்டே எழுந்திருச்சு மொட்டை மாடியிலிருந்து கீழே வருகிறான்.
“ஏலே! ஐயா டீ குடிக்கிறியா? உங்க அப்பனும் ஆத்தாளும் ஒத்த உசிறு ஊரிலே தவிச்சிட்டு கிடக்குதுன்னு நகரத்துல படிச்ச உன்னை இந்த காட்டுப்பய ஊருலே படிக்க அனுப்பிருக்காங்க, கொஞ்சம் சூதானமா நடந்துக்கய்யா? வடக்கூருக்கு போனா உன் வெளியூரு பேச்சையெல்லாம் இங்க பேசாதய்யா, போனமா டீ குடிச்சமான்னு வந்துரு....2 ரூபாய் கொடுத்து பேப்பரு வாங்கிட்டு வந்து எம்புட்டு படிக்கணுமோ, இங்கேயே படி ராசா? இந்தா பிடி 20 ரூபாய், டீ, இட்லி சாப்பிட்டுட்டுவா. பாட்டி ஒரு வாய் கஞ்சி குடிச்சிட்டு போய் புல்லறுத்துட்டு வாரேன்.”
“போ, பாட்டி. நான் படிச்சிருக்கேன், இந்தியா என் தாய்நாடு,எல்லோரும் இந்நாடு மன்னர்கள்னு, நான் அவனுங்கள் பேசி திருத்திடுறேன். நீ டென்ஷன் ஆகாத பாட்டி.”என்று கதிரவன், கதிரவன் பல்விளக்க சென்றான்.
வீட்டுக்கருகில் பாயும் ஓடை, துள்ளி பாயும் மீன்கள் சிதறி தெறிக்கும் தண்ணீர், எல்லாம் பார்க்க அழகாக இருந்தது. “ஏண்டா, நாம சென்னையில படிச்சோம், சின்ன வயசுலேயே ஊருக்கு வந்துருக்கலாம் அழகா இருந்திருக்கும். பத்தாம் வகுப்பு வரை அப்பா காக்க வச்சிட்டாரே.” என்று கதிரவனின் சிந்தனையை சிதறச்செய்தது இயற்கை
“கவனம்ய்யா....”என்ற பாட்டியின் குரல் தொடர்ந்து “ பாட்டி, வரேன், புதுக்குடிக்கு கொடைக்கு போன தாத்தா வந்தா அந்த கஞ்சியை குடிக்க சொல்லுயா..”என்றதோடு மறைந்தது
“சரி பாட்டி.”என்று கதிரவன் பறந்து செல்லும் பறவைகளை பார்த்தபடியே பதில் சொன்னான்.
தனது தாத்தா சுடலைமுத்துவுடைய பெயர் சைக்கிளில் எழுதப்பட்டிருந்தது. கொஞ்சம் சீட் விலகி கொஞ்சம் லூசாகியிருந்தது. லேசாக சரி செய்து கொண்டு, சைக்கிளை அழுத்தினான். சைக்கிள் முன்னோக்கி நகர, இவனுக்கு சிந்தனை செல்வியை நோக்கி நகர்ந்தது. முந்தைய நாள் பள்ளி நிகழ்வுகள் நினைவுக்கு வந்தது.
காலை எட்டு மணி, வெள்ளிக்கிழமை, பள்ளிக்கூடம் திறந்த முதல்நாள், மறுநாள் சனிக்கிழமை விடுமுறை. குறைந்த எண்ணிகையிலேயே மாணவர்கள் வந்திருந்தனர். அறிவியல் ஆசிரியர்தான் முதலில் வகுப்புக்கு வந்தார். அனைவருடைய பெயரையும் கேட்டுவிட்டு, இன்று பாடம் ஏதுமில்லை, “அதனால், என் ஆலோசனைகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்” என்று தொடங்கி “பசங்க பொண்ணுங்ககிட்ட, பொண்ணுங்க பசங்ககிட்ட பள்ளிக்கூட நேரங்களில், பேசக்கூடாது, படிக்கிற வயதில் படிக்கணும், சாதிச்சு பெரிய ஆளா வரணும்னு...............” நிறைய நிறைய பேசிட்டே வகுப்பறையை விட்டு நேரம் முடிந்து வெளியே சென்றுவிட்டார்.
“பசங்க பொண்ணுங்ககிட்ட...” ன்னு ஆசிரியர் சொன்னவுடன்தான் கதிரவன் பெண்கள் அந்த அறையில் இருப்பதை கவனித்தான். அத்தனை பெண்களும் ஆண்களின் பார்வையில் அலட்டி கொள்ள, கொஞ்சம் முகத்தில் திமிரோடு அமர்ந்திருந்தாள். “திமிருக்கு அழகென்று பெயர்” என்ற தபூ சங்கரின் நூலை கொடுத்துவிடலாமென்று தோன்றியது, எல்லாம் அவன் நூலக நண்பனின் பழக்கதோசம். மதிய இடைவேளையில் சாப்பாடு பையோடு மரத்தடியில் அமர்ந்தாள் செல்வி. தோழிகள் யாரும் அவளோடு இல்லை. நல்ல சூழலில் ஏதாவது பேசிடலாமென்று சென்றவனை அவள் பார்த்ததை இவன் பார்த்ததும் இரண்டடி பின்நகர்ந்த்து மீண்டும் முன்நகர்ந்தான்.
அருகில் சென்று “ சாப்பிட போறீயா?”என்று அசடு வழிந்தான். அவளுடைய பார்வைக்கு பதில் பார்வை தராமல் எங்கோ பார்த்துக் கொண்டு அருகிலேயே நின்றான். அவன் இவனை ஒரு பொருட்டாக மதிக்காமல், சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்தும் விட்டாள்.
“என்ன லவ்வா, போங்கடா? நடக்கிற கதையை பாருங்க...சாதாரணமா பொண்ணுங்களே எங்கப்பாவுக்கு பயந்து பக்கத்துல வரமாட்ராளுக, வந்தவனுங்களும் இன்னாரு மகள்னு சொன்னதும், வந்த வழித்தடத்தை கூட அழிச்சிட்டு போயிடுறானுங்க..நீ என்னடான்னா? 15 நிமிசமா அசடு வழியுற...உனக்கு நான் வேலை வைக்கலை.....உன் மூஞ்சே சொல்லுது...உனக்கு எனக்கும் ஒத்து வராது. ஏன்னா நீ ப்ளாஸ்டிக் க்ளாஸ் நான் கண்ணாடி க்ளாஸ்”
கதிரவனுக்கு ஒரே அதிர்ச்சி, “நாம் காதலிக்கிறதா சொல்லவே இல்லை, நட்புக்குத்தான் முயற்சி செய்யலாமுன்னு பார்த்தோம், அதுக்குள்ள அவளாவே படபடன்னு அப்பளப்பூ மாதிரி பொறிஞ்சு தள்ளிட்டு போறா.. ம் நமக்கொரு காலம் வரும் இப்படி பொறியறதுக்கு.” ன்னு திரும்பவும் பள்ளிக்கூடத்துல உள்ளதில சொன்னதை உளறிட்டே வரான்............
“யாருப்பா அது? புதுசா இருக்கு..சொல்லைமுத்து பேரன்தானே நீ?” அலாரமடித்து கேட்டு சைக்கிள் கனவை கலைத்தார், வடக்கு ஊர் தாத்தா.
“ம், ஆமாம்” ன்னு இவன் மண்டையாட்ட
“உங்க தாத்தன்ன எங்கே”ன்னு 50 வயது மதிக்கத்தக்க நபர் 70 வயது கதிரவனோட தாத்தாவ விசாரிக்கவும்..வந்த கோவத்தில பாட்டி சொன்ன “நகரத்து பேச்சை பேசாதேங்”கிற வசனம் நினைவுக்கு வந்தது, வந்ததை அடக்கி கொண்டான்.
கடைக்குள் நுழைந்தவன் இட்லி சாப்பிட அமர்ந்தான்..
வாழை இலை போட்டு பரிமாறப்பட்டது, சாப்பிட்டு முடித்தவுடன் இலையை இவனையே எடுத்து சென்று குப்பையில் போடச் சொன்னார்கள். கதிரவனுக்கு அந்த அணுகுமுறை பிடித்திருந்தது...தன் வேலையை தானே செய்யணும்னு பள்ளிக்கூடத்துல சொல்லிக்கொடுத்தது மாதிரியே இருக்கே...ன்னு நினைச்சிக்கிட்டான்
கைகழுவி விட்டு கடையின் வாசல் பக்கம் வந்தவன்..
“ஐயா ஒரு டீ போடுங்க”ன்னு சொல்லிட்டு சுத்துமுத்தும் பார்த்தான் குப்பையில் பிளாஸ்டிக் கிளாஸும், இலையோடு சேர்ந்து கிடந்தது...அலமாரியில் அதிகம் பயன்படுத்தப்படாத சில்வர் பாத்திரமும், க்ளாசும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. நோட்டம் விட்டே கொண்டிருந்தவனின் கண்ணில் செல்வியும், அவரோடு வந்த முதியவரும் கண்ணில் பட்டனர்.
செல்வி “ போய்ட்டு சாயந்தரமா வந்துடறேன் தாத்தா, அத்தை வீட்டுக்கு போய் சேர்ந்ததும் ஃஃபோன் பண்றேன்” னு சொல்லி விட்டு தேநீர் கடைக்கு அருகிலிருகும் நிறுத்தத்திலிருந்து பேருந்தில் ஏறி பயணம் செய்கிறாள்.
அந்த முதியவர், மெல்ல நகர்ந்து கதிரவனை நோக்கி வர, செல்விதான் ஏதும் சொல்லிக் கொடுத்திருப்பாளோ, நம்மிடம் வந்து அந்த தாத்தா என்ன சொல்வாரோ? என்ன கேட்பாரோ என்ற அச்சத்தில் திரும்பி நின்று கொண்டான் கதிரவன்...
“ஏலே, ஒரு டீ போடுறா?” ன்னு ஒரு குரல். பின் திரும்பினால் அதே தாத்தா...
சிறுது நேரத்தில் இருவருக்கும் டீ வழங்கப்பட்டது, தாத்தாவுக்கு கண்ணாடி க்ளாசிலும், கதிரவனுக்கு ப்ளாஸ்டிக் க்ளாசிலும். அப்பொழுதுதான் குப்பையில் கிடந்த ப்ளாஸ்டிக் க்ளாசை பரிதாபத்தோடு பார்த்துவிட்டு.....
அதுவரை செல்வியை காதலிக்க சிந்திக்காத கதிரவன், அவளை காதலித்தால்தான் என்ன என்று வேகமாய் சைக்கிளை அழுத்தி பயணத்தை தொடர்ந்தான்..............
காதல் இப்படித்தான் நிகழ்ந்துவிடுகிறது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
மீக நன்றாக உள்ளது. ஒரு சாரா சரி பையனின் இயல்பு இது .
உண்மையுள்ள கதை. சாதிப்பற்று அற்று, அனைவரும் சரிநிகர் சமம் என்ற நிலை வருவதற்கு அனைவரும் அனைத்து முயற்சிகளையும் எடுக்கவேண்டும் என்பதே என் ஆவலும், எதிர்பார்ப்பும். நன்றியும், வாழ்த்துக்களும் ... (சிவா, சூடான் நாட்டிலிருந்து) (எனது Email id: nirmalsiva@gmail.com ... Sudan நாட்டில் பணிபுரிய விரும்பும் இளைஞர்கள் என்னைத் தொடர்புகொள்ளலாம்)(இந்த ஆண்டு கல்லூரிப் படிப்பு முடிப்பவர்களும், அஞ்சல் வழிக் கல்வி உட்பட)(கடுமையாக, நேர்மையாய் உழைத்து முன்னேற விரும்புவர்கள் மட்டும்) (வெளிநாட்டு வேலையில், ஜாலியாக இருக்கலாம் என்று நினைப்புள்ளவர்கள், தயவு செய்து வேண்டாம்)
நல்ல பதிவு...
இன்னும் கிராமங்களில் இதுபோன்றெல்லாம் நடக்கிறதா....
நம்பவே முடியவில்லை என்னால்...
சாதிப்பற்று... பிளாஸ்டிக் தம்ளர் ... இதற்கெல்லாம் முடிவு எப்போது...
thamizhil ezhutha ninaikkiren..
kathaikkana karu kathal illai.
varkkap porattam.anthap purithal pallich chirumikku mhoom varuvatharkku vayppu illai.
vallindhu seivatha kadal.illai..athu oru magnatic power.
poonga.rasathy@gmail .com
கருத்துரையிடுக