திங்கள், 13 ஜூலை, 2009
எழுதப்படாத சரித்திரம்-தமிழ் இலக்கியமும் தமிழர் இலக்கியமும்!
அம்பேத்கரைச் சந்திக்க விரும்பினார் காந்தி.
காந்தி அந்தக் காலகட்டத்தில் (1931) உருவாகிக் கொண்டிருக்கும் தலைவராக இருந்தார். இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தில் ஆகப்பெரும் தலைவராக காந்தியை உருவாக்கும் அரிய முயற்சியில் காங்கிரஸின் ஒரு பிரிவினர் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் அது. காங்கிரஸ் கட்சியைத் தோற்றுவித்த முதல் தலைமுறைத் தலைவர்கள் ஒன்று காலமாகி இருந்தார்கள். அல்லது சிறையில் இருந்தார்கள். அல்லது ஒதுக்கப்பட்டு இருந்தார்கள். காந்தி தன்னை ஓர் அரசியல்-வாதி என்னும் நிலையிலிருந்து ஞானி நிலைக்கு அல்லது ஒரு மகாத்மாவின் நிலைக்கு உயர்த்திக் கொள்ள படாதபாடு பட்டுக் கொண்டிருந்த நேரம். அவர் தலைக்குப் பின்னால் ஒரு சக்கரம் சுற்றுகிறது என்றும், அது ஞான ஒளி என்றும் காங்கிரஸ் கட்சியில் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட முக்கால் கிழடுகள் கட்டமைத்துக் கொண்டிருந்தார்கள். காந்தியார் மற்றும் காங்கிரஸ் ஆளுகைக்குள் அன்றைய பெரும் முதலாளிகளும், பிரபுக்களும், இந்துச் சனாதானிகளும், மேல் சாதி ஆட்களும் திரண்டிருந்-தார்கள். சுதந்திரப் போராட்ட எழுச்சியை முன்வைத்து பெரும் மக்கள் கூட்டத்தை அவ்வப்போது அவர்கள் திரட்டிக் கொண்டும் இருந்தார்கள்.
சாமியார்கள், சாமியார்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு இந்த நாட்டில் எப்போதுமே ஒரு கவர்ச்சி இருந்தே வந்திருக்கிறது. காவியும், கோவணமும் ஞானத்தின் புற வடிவமாகத் தப்பாகப் புரிந்து கொள்ளப்பட்ட சமூகத்தைக் கொண்ட நாடு இது. பட்டினியை உண்ணாவிரதம் என்று மகிமைப்படுத்தி மக்களைக் கவர முடியும். காந்தி, பட்டினியை ஒரு போராட்ட வடிவமாகக் கட்டமைத்தார். இந்தியா-வில், அன்றும் இன்றும் முப்பது சத மக்கள் ‘உண்ணாவிரதம்’ இருந்த ‘வறுமை’, ஒரு வகையில் மகிமைப்படுத்தப்பட்டது இதன் மூலம். அப்புறம், குறைந்த ஆடை மரியாதைக்குரியதாக, துறவின் இலக்கணமாக, தியாகத்தின் வெளி அடையாளமாகவும் கருதப்பட்டதன் காரணமாக காந்தி அரையாடை மட்டும் அணியத் தொடங்கினார். ஆக, அரசியல், அரசியல் உலகுக்குப் பொருந்தாத, கவர்ச்சிக்கும், வேஷத்துக்கும், நடிப்புக்கும் ஆன உலகமாக காந்தியாரால் புனையப்-பட்டது.
இந்திய அரசியலின் முதல் வீழ்ச்சி இங்கேதான் தொடங்குகிறது.
வறுமையை விரட்டுதல், ஒழித்தல், பசி இல்லாத சமுதாயம் அமைத்தல் என்னும் அடிப்படை அரசியலை முன் நிறுத்தும் போராட்டத்துக்கு முரணாக அவைகளையே ஓர் அலங்காரமாக மாற்றியமைத்த காந்தியம், காந்திய அரசியலை அம்பலப்படுத்திய முதல் மனிதராக அம்பேத்கர் அரசியல் உலகில் தோற்றம் தந்தார். தாழ்த்தப்பட்ட மக்கள், அவரைத் தம் தலைவராக ஏற்றுக் கொண்டார்கள்.
அம்பேத்கரைச் சந்திக்க ஆசைப்பட்டார் காந்தி.
இதன் அர்த்தம், இருவேறு உலகங்கள் சந்திப்புக்குத் தயாராயின என்பதாகும். காந்தி சார்ந்த உலகம், இந்து மதத்து வன்கொடுமைகளை உள்ளடக்கிய, வர்ணாசிரமம் என்கிற உயர்வு தாழ்வு கற்பிதத்தை ஏற்றுச் செயல்படுத்துகிற ஆதிக்கச் சக்திகளின் உலகம். வெளிப்படையாகச் சொன்னால், ஆதிக்கச் சாதிகளைத் தம் மடியில் வைத்துப் பாதுகாக்கிற தலைமைச் சக்தியாக காந்தியார் இருந்தார். அதற்கு எதிராகத் தாழ்த்தப்பட்ட, சமூக மையங்களிலிருந்து விளிம்புக்குத் தள்ளப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட, பொருளாதாரம், வேலை வாய்ப்புகள் மறுக்கப்-பட்ட, சகல சமூக ஆக்கத்துக்கும் உருவாக்கத்-துக்கும் காரணமாக இருந்து, ஆனால், அவற்றின் எந்தப் பயனையும் அனுபவியாத ஏமாற்றப்பட்ட உலகத்தின் தலைவராக அம்பேத்கர் இருந்தார்.
இந்த இரு மனிதர்களும் சந்திக்-கிறார்கள். காந்திதான், அம்பேத்கரைச் சந்திக்க முதலில் அழைப்பு விடுத்தார். மிகக் கடுமையான காய்ச்சலில் இருந்த அம்பேத்கர் 1931 ஆகஸ்ட் 14 அன்று பம்பாயில் காந்தியைச் சந்திக்கிறார். காந்தி இப்படி பேச்சைத் தொடங்கினார்.
1. நீங்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே, தீண்டாதவர்கள் பிரச்னை பற்றியும் சிந்தித்து வருகிறேன். அவர்களின் குறையைப் போக்க உழைக்கிறேன்.
2. காங்கிரஸ் கட்சியின் செயல் திட்டங்களிலும் தீண்டாமை ஒழிப்பு இருக்கிறது.
3. தீண்டப்படாதவர் முன்னேற்றத்துக்கு காங்கிரஸ் இருபது லட்சம் ரூபாய் செலவிட்டிருக்கிறது.
4. ஆக, என்னை ஏன் நீங்கள் எதிர்க்கிறீர்கள்? என்னைத் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராக ஏற்பதில் உங்களுக்கு என்ன தடை?
காந்தி சொன்னவற்றை அம்பேத்கர், அவருக்கே உரிய மேதைமையோடும், தர்க்க அழகுகளோடும் மறுத்து, கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் பேசினார்.
1. வயதானவர்கள் தங்கள் வயதை முன்னிலைப்படுத்திப் பேசுவது இயற்கைதான். (அறிவின் பலத்தை நம்பாமல், வயதில் முதுமையை நம்புகிற-வர்களின் பலவீனங்களில் இதுவும் ஒன்று.)
2. தீண்டாமையை, காங்கிரஸ் ஒரு பிரச்னையாக எடுத்துக் கொள்கிறதே தவிர, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து எதையும் செய்வதில்லை.
3. தீண்டாமைக்கு எதிராக நீங்கள் இருபது லட்ச ரூபாய் செலவிட்டது இப்போதுதான் எனக்குத் தெரிகிறது. அதனால் என்ன பலன்? இவ்வளவு பணம் எனக்குக் கிடைத்திருந்தால், என்னுடைய மக்களின் பொருளாதார, சமூக முன்னேற்றத்தில் ஆச்சரியப்-படும்படியான மேம்பாட்டுப் பணிகளைச் செய்திருப்பேன்.
4. காங்கிரஸ் தீண்டாமையில் உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்கிறது என்பது உண்மை-யானால், தீண்டாமை ஒழிப்பில் உறுதியும் அக்கறையும் உள்ளவர்களே காங்கிரஸில் உறுப்பினர்-களாகலாம் என்று விதி செய்வீர்களா? தீண்டத்தகாத ஆணையோ, பெண்ணையோ வீட்டு வேலைக்கு எடுத்துக் கொள்வது; தீண்டாமைக்குள்ளான மாணவரை எடுத்து வளர்ப்பது; குறைந்தது வாரத்துக்கு ஒரு நாளாவது, தீண்டாதவரோடு சேர்ந்து உணவு உண்பது போன்ற விதிகளை வகுத்து, இவைகளைப் பின்பற்றுபவர்களே காங்கிரஸில் உறுப்பினர் ஆகலாம் என்று விதி வகுத்தீர்களா?
5. ஆங்கிலேயர்களிடம் மனமாற்றம் ஏற்பட-வில்லை என்கிறீர்கள். எங்கள் விஷயத்தில் இந்துக்கள் மனமாற்றம் பெற்றார்களா?
தொடர்ந்து அம்பேத்கர், வெடிகுண்டுகளுக்கு நிகரான வார்த்தைகளை, எவரும் உரைக்காத உண்மைகளை இப்போது சொல்கிறார்.
“...இது என் தாய்நாடு அல்ல. எந்தத் தீண்டாமைக்குள்ளான மனிதனிடம் துளி சுயமரியாதையும் மனிதாபிமானமும் உள்ளதோ, அவன், ‘இது எனது நாடு’ என்று சொல்லமாட்டான். இந்த நாட்டில் நாய் பூனைக்குக் கிடைத்துள்ள இடம் கூட அவனுக்குக் கிடைக்கவில்லை...”
அம்பேத்கரின் இந்தக் கடைசி வாக்கியத்-திலிருந்துதான் இந்தக் கட்டுரை தொடங்குகிறது. நாய்க்கும் பூனைக்கும் உள்ள இடம்கூட, மனிதனுக்கு - அவன் அல்லது அவள் தாழ்த்தப்பட்டவராக இருந்தால் - இங்கு இல்லை என்பதன் அடிப்படை வேர் அல்லது வித்து எங்கிருக்கிறது என்பதைப் பல நூறு வரலாற்று, இலக்கிய ஆதாரங்களின் ஊடாக நாம் காண இருக்கிறோம்.
ஒரு மனிதனை இவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன் என்று கூறக் காரணமாக எது இருக்கிறது? சாதியும், மதமும் எதன் ஆதாரத்திலிருந்து பிறந்து, ஜனத்திரளின் பெரும்பகுதியைத் தாழ்த்தப்பட்டவராகவும், மிகப் பிற்படுத்தப்பட்டவராகவும் அழுத்தி வைத்தது என்பதை ஆராய்வது மனித சரித்திரத்தை ஆராய்வது என்பதாகும்.
தமிழ் மொழியின் மிகப் பழைய இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள் என்று சொல்லப்படுகிறது. சங்கம் என்பது தமிழ்க் கவிஞர்களின் அமைப்பு. இச்சங்கங்களின் காலம், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. சரியாகச் சொன்னால் கிறித்து பிறப்பதற்கு முன்னால் ஐந்நூறு ஆண்டுகளும், பின்னால் ஐந்நூறு ஆண்டுகளும். அதாவது 500 ஆண்டுகள் முதல் ஆயிரம் ஆண்டுகளுக்குள் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பே, சங்க இலக்கியங்கள் எனும் தமிழ் மொழியின் பழைய இலக்கியங்கள்.
தமிழர்களின் பண்பாட்டை, வாழ்க்கையை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிகத்தைச் சொல்லும் இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் என்று பெருமையாகத் தமிழகத் தலைவர்கள் முதல் தமிழாசிரியர்கள் வரை, எல்லோருமே முழங்கித் திரிவதை நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.
உண்மை என்னவென்றால், இந்தச் சங்க இலக்கியங்கள் அல்லது ஆகப் பழைய தமிழ் இலக்கியங்கள், தமிழர் இலக்கியங்களா என்றால் இல்லை. இது மேட்டுக்குடி மக்களின், இன்றைய அரசியல் வார்த்தைகளில் சொல்லப்போனால், இவை மேல் சாதி இலக்கியங்கள். ஆதிக்கச் சாதியர்களின் காதல் விவகாரங்களைப் போற்றிப் பாடப்பட்டவை.
தமிழகத்தின் நிலம் நான்கு வகையாகவும், பிறகு ஐந்து வகையாகவும் பிரிக்கப்பட்டது.
மலையும் மலையைச் சுற்றியுள்ள இடமும் குறிஞ்சி என்றழைக்கப்பட்டது. மலைகளில் மலரும் பூக்களில், குறிஞ்சிப் பூ சிறப்பானது என்று அக்கால மக்களால் கருதப்பட்டு, குறிஞ்சி மலரும் இடம் குறிஞ்சி நிலம் என்று பெயர் சூட்டப்பட்டது.
காட்டுப் பகுதிகள், புல் பூமிகள்‘முல்லை’ எனப்பட்டது. முல்லைப் பூக்களால் பெற்ற பெயர் இது.
வயல் நிலங்களும், அதைச் சுற்றி இருக்கும் பூமி மருதம் எனப்பட்டது. மருத மரங்களைக் குறிக்கும் நிலம் இது.
கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல் எனப்பட்டது. நெய்தல் பூக்கள் இந்நிலத்தின் சிறப்பு.
வறண்ட, நன்செய்க்குப் பயன்படாத நிலம் பாலை. பாலையும் ஒருவகைத் தாவரத்தால் பெற்ற பெயரே ஆகும்.
இந்த ஐந்து வகை நிலங்களிலும் இருந்த மேட்டுக்-குடி மக்கள் - தலைவர்களும் தலைவிகளும் - கொண்ட காதல் சமாசாரங்களைச் சொல்லும் காதல் தொடர்பான பாடல்களே சங்க இலக்கியத்தில் பெரும்பான்மை-யாகும். இவைகளை ‘அக இலக்கியம்’ என்பார்கள்.
மேட்டுக்குடி மக்களின்காதல்தான் காதலா? உழைக்கும் மக்கள், பிற்பட்ட, சமூகத்தின் தாழ்நிலையில் இருந்த மக்களின் காதல் வாழ்க்கையைத் தமிழ் இலக்கியங்கள் சொல்லியதா என்றால் இல்லை.
‘தாழ்ந்தவர்களுக்கு’க் காதல் வரக்கூடும். அதை மரியாதைக்குரியதாகக் கருதி, பாடல் செய்யக்கூடாது என்பது இலக்கணம். இப்போது சொல்லுங்கள் - தமிழ் இலக்கியம் தமிழர் இலக்கியம்தானா?
-ஆராய்வோம்
பிரபஞ்சன்
தமிழக அரசியல் 16.07.2009
ஞாயிறு, 12 ஜூலை, 2009
வியாழன், 9 ஜூலை, 2009
நாடோடி- காதலர்களுக்கும், காதலர்களின் நண்பர்களுக்கும் அறிவுரை

நாடோடி- காதலர்களுக்கும், காதலர்களின் நண்பர்களுக்கும் அறிவுரை
தமிழர்களுக்கு நிரந்தரமாகிவிட்ட புலம்பெயர் வாழ்க்கையின் சாட்சியாக தாய்தமிழகம் விட்டு மும்பையில் வாழும் தமிழனாகிய நான் என்னைப் போன்றே புலம்பெயர்ந்த மும்பை தமிழ் நண்பர்களோடு நாடோடி திரைப்படம் பார்க்க மாட்டுங்கா பகுதியில் உள்ள அரோரா திரையரங்கிற்கு சென்றோம். திரையரங்கு முன்றைய எங்கள் அனுபவத்தைவிட அதிக அளவில் இளைஞர்களால் நிரம்பி வழிந்தது. இளைஞர்கள் இதற்கு முன்பு ரஜினி, விஜய், அஜித் போன்று திரையை இளைஞர்களுக்கு போதையூட்டும் கருவியாக பயன்படுத்தும் நடிகர்களின் நடிக்கும் திரைப்பட்த்திற்கே இவ்வளவு கூட்ட்த்தை கண்டிருக்கிறேன்.
திரையரங்கிற்குள் நுழைந்தவுடனேயே, திரைப்பட்த்தின் தொடக்கம் இந்திய தேசியப்பாடலோடு தொடங்கியது. சில தமிழ் இளைஞர்கள் முன்பே முடிவு செய்து வந்தது போல் இந்திய தேசியப் பாடலுக்கு எழும்ப மறுத்து அமர்ந்திருந்தனர். இலங்கை பிரச்சினையில் ஈழத்தமிழர்களுக்கு இந்திய தேசியம் செய்த துரோகத்தையும், இந்தியர்களாக அடையாளப்படுத்தப் பட்டிருக்கும் இந்திய தேசிய உணர்வை மீறி தமிழ் இன-உணர்வோடு போராடிய தமிழர்களை மதிக்காததற்கும், தமிழ் இளைஞர்களின் எதிர்வினையாகவே நான் இதை கண்டேன்.
இந்திய தேசியத்திற்கு வலுக்கட்டாயமாக மதிப்பு தெரிவிக்க வைக்க திரையரங்குகளில் இந்திய தேசியம் ஒலிக்க வைப்பதற்கு பதிலாக, இந்தியாவில் வாழும் பல்வேறு ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் மெய்யான உணர்வுகளை மதிப்பதே இந்திய தேசியம் கோரும் மதிப்பை இயல்பாக பெற்றுத் தரும், இல்லையேல் போலிகள் வருங்கால வரலாற்று பக்கங்களில் சிதறி விழுவதை தடுக்க இயலாது.
இந்திய தேசியப்பாடல் முடிந்தது, திரைப்படம் தொடங்கியது, தொடக்கமே தமிழகத்தில் கிராமங்கள் (உண்மையாக) காணாத சீரான தார் சாலையை காட்டியது, தார் சாலையின் ஊடாகவே திரைப்படத்தில் உழைத்த கலைஞர்களின் பெயர் வரிசை மெதுவாக நகர்ந்தது. பெயர் வரிசை முடிந்ததும் இன்னொரு வரிசை காத்திருந்தது, காவல்துறை ஆட்சேர்ப்பு வரிசை.........தமிழக இளைஞர்களின் வாழ்க்கை வழியில் பெற்றோர்கள் வலியிறுத்தும் அரசு வேலையும், அதற்காக இளைஞர்கள் நேர்மையாக, அரசு வேலை கிடைத்து விடாதா? என்ற உழைப்பையும் ஒரு சில காட்சிகளில் உணர வைத்து விடுகிறார் இயக்குனர்..

காதல் என்றாலே வெறுத்தொதுக்கும் இந்த சமூகத்தில் காதலை வரவேற்பதற்கும், காதல் என்ற பெயரால் தன்னுடைய காமப்பசிக்கு
விளக்குபிடிக்க ஆள்தேடும் வேலையை செய்யும் நண்பர்களுக்கு, நண்பனின் காதல் என்றவுடன் கண்மூடித்தனமாக உதவி செய்ய கிளம்பும் நண்பர்களுக்கு என கொஞ்சம் அழுத்தமாகவே குட்டு வைத்திருக்கிறார் இயக்குனர்.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க இதுவரை பொருளாதாரம்தான் காரணம் என்று மட்டும் சொல்லிவிட்டு, காதல் என்ற இயற்கை உணர்வை நாம் வாழும் சாதி வன்மையாக எதிர்க்கிறது என்ற உண்மையை இதுவரை தவிர்த்து வந்த திரையுலகத்தில், சாதி என்ற கேவலமான சிந்தனையும் காதலை எதிர்க்க காரணம் என்று ஒரு நிமிட வசனத்திலாவது சொல்லத்துணிவு கொண்ட இயக்குனருக்கு பாராட்டுக்கள் நிறையவே வந்து குவிய வேண்டும்....( ஆனால் கொஞ்சம் இந்த சாதிய இழி சிந்தனையை இன்னும் பேசியிருக்கலாமோ என்ற எதிர்ப்பார்ப்பு இல்லாமிலில்லை, பிரச்சினையில்லை)
அடுத்த பெண்ணடிமைத்தனத்தை கொஞ்சம் தொட்டிருப்பதும் ஆறுதலான செய்தி....தன்னுடைய போலி சமூக மதிப்பை நிலைநாட்ட தன் மகளை மிரட்டி, தற்கொலை செய்து கொள்வேன் என உணர்வுரீதியில் மிரட்டி, தன் காதலனை, மாமனை விடுத்து வேறொருவனை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தும் தகப்பனையும், அதற்கு ஒத்துப்போகும் தாயையும், தன் அடிமைச்சின்னமாகிய தாலியை தனக்கு மேலும் சில ஆண்டுகாலம் உறுதி செய்து தரச்சொல்லி காலில் விழும் தாயிடம், தன் உணர்வுகளுக்கு, உரிமைகளுக்கு பூட்டுப்போட்டு தானும் போய் அடிமைச்சங்கிலியில் மாட்டிக் கொள்கிறாள், இந்த கதாப்பாத்திரத்தில் வரும் பெண்.
அதே நேரத்தில், இதே போலி மதிப்பைக் காட்டி தன் பெண்ணின் உள்ளத்து உணர்வுகளை தடுக்க நினைக்கும் தகப்பனுக்கு, கதையின் நாயகனின் தங்கையின் காதலின் ஊடாக பதில் சொல்ல முனைந்திருக்கிறார் இயக்குனர். வாழ்க்கை துணையாக வருவதற்கு சாதி தகுதி கிடையாது, நற்பண்பு, திறமை மட்டுமே என்று உறுதியாக சொல்லிச் சென்றிருக்கிறார்.
மற்றொரு பரிணாமத்தில், காதலர்கள் தாங்கள் காதலிக்கும் போது தங்கள் பாலியல் தேவைகளை மட்டும் தீர்த்துக் கொள்ள முழுமுயற்சி எடுக்கின்றனரே ஒழிய, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள எள்ளளவு முயற்சி கூட எடுப்பதில்லை. இப்படி பாலியல் தேவைக்காக இணையும் காதலர்கள், தேவை முடிந்ததும் பிரிந்து போய்விடுவார்கள் என்று கதாப்பாத்திரங்களின் மூலம் சொல்ல முயற்சித்திருக்கிறார்.( ஆனால், பெண்ணோ/ஆணோ விருப்பப்பட்டு ஒரு உறவில் நீடிக்க வேண்டுமேயொழிய, வலுக்கட்டாயமாக இல்லை,என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம்).
இப்படி பல விசயங்கள் படத்தில் ரசிக்க வைத்தாலும், நடுவில் சேர்க்கப்பட்ட குத்துப்பாட்டு தேவையற்றது. மக்கள் ஆபாச குத்துப்பாட்டு விரும்புகிறார்கள், என்று சொல்லி படைப்பாளிகள் ஆபாசத்தை திணித்துவிட்டு தப்பிக்க முயல்வதை நிறுத்த வேண்டும். படத்தை உருவாக்கி திரையிட்டபின் மக்கள் தியேட்டர் குத்துப்பாட்டு திரையை கிழித்த்தாக எங்காவது கேட்ட்துண்டா? மாற்று சினிமா பற்றி சிந்திப்பவர்கள், இதற்கு மாற்று குறித்து சிந்திக்க வேண்டும். இயல்பான வாழ்க்கை பற்றி சிந்திப்பவர்கள், இப்படி ஆபாச குத்துப்பாட்டுதான் நம் வாழ்க்கைக்கு தேவையா?என்பதையும் சிந்திக்க வேண்டும்.
இப்படி ரசிக்க பல செய்திகள் இருந்தாலும், முழுக்க முழுக்க இது மாற்று சினிமா என ஒப்புக்கொள்ள முடியாவிட்டாலும், மாற்று சினிமாவுக்கான முன்முயற்சி என்று இதை நாம் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளலாம். சமூக அக்கறையுள்ள நம் சகோதரர்கள், ஒடுக்கப்பட்ட, பிறபடுத்தப்பட்ட உழைக்கும் மக்களில் இருந்து தம் சமூக அக்கறையை, கவலையை வெளிப்படுந்த முனைந்திருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியை தருகிறது.
இளைஞர்கள் இது போன்ற சினிமாக்களுக்குதான் இப்பொழுது சினிமாவுக்கு போகிறார்கள், ரசிக்கிறார்கள். இயக்குனர்கள் இதுபோன்ற, இதைவிட சிறப்பான, காதலைவிட முக்கியமான சமூக பிரச்சினைகளை தொட்டு சிறந்த திரைப்படங்களை உருவாக்க வேண்டும்.