வியாழன், 25 மார்ச், 2010

ப்ளாஸ்டிக் க்ளாஸ்



தூக்கம் விழித்த கதிரவன் ஒளிபரப்பப்பட்டிருக்கும் வானம் பார்த்துக்கொண்டே, பறவைகளை வானமும், வானத்தை பறவைகளும் அடைந்துவிட துடித்து கொண்டிருக்கும் அழகை காண்கிறான். என்னதான் சொன்னாலும் “ சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரை போல வருமா” ன்னு பாட்டு படிச்சிக்கிட்டே எழுந்திருச்சு மொட்டை மாடியிலிருந்து கீழே வருகிறான்.

“ஏலே! ஐயா டீ குடிக்கிறியா? உங்க அப்பனும் ஆத்தாளும் ஒத்த உசிறு ஊரிலே தவிச்சிட்டு கிடக்குதுன்னு நகரத்துல படிச்ச உன்னை இந்த காட்டுப்பய ஊருலே படிக்க அனுப்பிருக்காங்க, கொஞ்சம் சூதானமா நடந்துக்கய்யா? வடக்கூருக்கு போனா உன் வெளியூரு பேச்சையெல்லாம் இங்க பேசாதய்யா, போனமா டீ குடிச்சமான்னு வந்துரு....2 ரூபாய் கொடுத்து பேப்பரு வாங்கிட்டு வந்து எம்புட்டு படிக்கணுமோ, இங்கேயே படி ராசா? இந்தா பிடி 20 ரூபாய், டீ, இட்லி சாப்பிட்டுட்டுவா. பாட்டி ஒரு வாய் கஞ்சி குடிச்சிட்டு போய் புல்லறுத்துட்டு வாரேன்.”

“போ, பாட்டி. நான் படிச்சிருக்கேன், இந்தியா என் தாய்நாடு,எல்லோரும் இந்நாடு மன்னர்கள்னு, நான் அவனுங்கள் பேசி திருத்திடுறேன். நீ டென்ஷன் ஆகாத பாட்டி.”என்று கதிரவன், கதிரவன் பல்விளக்க சென்றான்.

வீட்டுக்கருகில் பாயும் ஓடை, துள்ளி பாயும் மீன்கள் சிதறி தெறிக்கும் தண்ணீர், எல்லாம் பார்க்க அழகாக இருந்தது. “ஏண்டா, நாம சென்னையில படிச்சோம், சின்ன வயசுலேயே ஊருக்கு வந்துருக்கலாம் அழகா இருந்திருக்கும். பத்தாம் வகுப்பு வரை அப்பா காக்க வச்சிட்டாரே.” என்று கதிரவனின் சிந்தனையை சிதறச்செய்தது இயற்கை

“கவனம்ய்யா....”என்ற பாட்டியின் குரல் தொடர்ந்து “ பாட்டி, வரேன், புதுக்குடிக்கு கொடைக்கு போன தாத்தா வந்தா அந்த கஞ்சியை குடிக்க சொல்லுயா..”என்றதோடு மறைந்தது

“சரி பாட்டி.”என்று கதிரவன் பறந்து செல்லும் பறவைகளை பார்த்தபடியே பதில் சொன்னான்.

தனது தாத்தா சுடலைமுத்துவுடைய பெயர் சைக்கிளில் எழுதப்பட்டிருந்தது. கொஞ்சம் சீட் விலகி கொஞ்சம் லூசாகியிருந்தது. லேசாக சரி செய்து கொண்டு, சைக்கிளை அழுத்தினான். சைக்கிள் முன்னோக்கி நகர, இவனுக்கு சிந்தனை செல்வியை நோக்கி நகர்ந்தது. முந்தைய நாள் பள்ளி நிகழ்வுகள் நினைவுக்கு வந்தது.

காலை எட்டு மணி, வெள்ளிக்கிழமை, பள்ளிக்கூடம் திறந்த முதல்நாள், மறுநாள் சனிக்கிழமை விடுமுறை. குறைந்த எண்ணிகையிலேயே மாணவர்கள் வந்திருந்தனர். அறிவியல் ஆசிரியர்தான் முதலில் வகுப்புக்கு வந்தார். அனைவருடைய பெயரையும் கேட்டுவிட்டு, இன்று பாடம் ஏதுமில்லை, “அதனால், என் ஆலோசனைகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்” என்று தொடங்கி “பசங்க பொண்ணுங்ககிட்ட, பொண்ணுங்க பசங்ககிட்ட பள்ளிக்கூட நேரங்களில், பேசக்கூடாது, படிக்கிற வயதில் படிக்கணும், சாதிச்சு பெரிய ஆளா வரணும்னு...............” நிறைய நிறைய பேசிட்டே வகுப்பறையை விட்டு நேரம் முடிந்து வெளியே சென்றுவிட்டார்.

“பசங்க பொண்ணுங்ககிட்ட...” ன்னு ஆசிரியர் சொன்னவுடன்தான் கதிரவன் பெண்கள் அந்த அறையில் இருப்பதை கவனித்தான். அத்தனை பெண்களும் ஆண்களின் பார்வையில் அலட்டி கொள்ள, கொஞ்சம் முகத்தில் திமிரோடு அமர்ந்திருந்தாள். “திமிருக்கு அழகென்று பெயர்” என்ற தபூ சங்கரின் நூலை கொடுத்துவிடலாமென்று தோன்றியது, எல்லாம் அவன் நூலக நண்பனின் பழக்கதோசம். மதிய இடைவேளையில் சாப்பாடு பையோடு மரத்தடியில் அமர்ந்தாள் செல்வி. தோழிகள் யாரும் அவளோடு இல்லை. நல்ல சூழலில் ஏதாவது பேசிடலாமென்று சென்றவனை அவள் பார்த்ததை இவன் பார்த்ததும் இரண்டடி பின்நகர்ந்த்து மீண்டும் முன்நகர்ந்தான்.

அருகில் சென்று “ சாப்பிட போறீயா?”என்று அசடு வழிந்தான். அவளுடைய பார்வைக்கு பதில் பார்வை தராமல் எங்கோ பார்த்துக் கொண்டு அருகிலேயே நின்றான். அவன் இவனை ஒரு பொருட்டாக மதிக்காமல், சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்தும் விட்டாள்.

“என்ன லவ்வா, போங்கடா? நடக்கிற கதையை பாருங்க...சாதாரணமா பொண்ணுங்களே எங்கப்பாவுக்கு பயந்து பக்கத்துல வரமாட்ராளுக, வந்தவனுங்களும் இன்னாரு மகள்னு சொன்னதும், வந்த வழித்தடத்தை கூட அழிச்சிட்டு போயிடுறானுங்க..நீ என்னடான்னா? 15 நிமிசமா அசடு வழியுற...உனக்கு நான் வேலை வைக்கலை.....உன் மூஞ்சே சொல்லுது...உனக்கு எனக்கும் ஒத்து வராது. ஏன்னா நீ ப்ளாஸ்டிக் க்ளாஸ் நான் கண்ணாடி க்ளாஸ்”

கதிரவனுக்கு ஒரே அதிர்ச்சி, “நாம் காதலிக்கிறதா சொல்லவே இல்லை, நட்புக்குத்தான் முயற்சி செய்யலாமுன்னு பார்த்தோம், அதுக்குள்ள அவளாவே படபடன்னு அப்பளப்பூ மாதிரி பொறிஞ்சு தள்ளிட்டு போறா.. ம் நமக்கொரு காலம் வரும் இப்படி பொறியறதுக்கு.” ன்னு திரும்பவும் பள்ளிக்கூடத்துல உள்ளதில சொன்னதை உளறிட்டே வரான்............

“யாருப்பா அது? புதுசா இருக்கு..சொல்லைமுத்து பேரன்தானே நீ?” அலாரமடித்து கேட்டு சைக்கிள் கனவை கலைத்தார், வடக்கு ஊர் தாத்தா.

“ம், ஆமாம்” ன்னு இவன் மண்டையாட்ட

“உங்க தாத்தன்ன எங்கே”ன்னு 50 வயது மதிக்கத்தக்க நபர் 70 வயது கதிரவனோட தாத்தாவ விசாரிக்கவும்..வந்த கோவத்தில பாட்டி சொன்ன “நகரத்து பேச்சை பேசாதேங்”கிற வசனம் நினைவுக்கு வந்தது, வந்ததை அடக்கி கொண்டான்.

கடைக்குள் நுழைந்தவன் இட்லி சாப்பிட அமர்ந்தான்..

வாழை இலை போட்டு பரிமாறப்பட்டது, சாப்பிட்டு முடித்தவுடன் இலையை இவனையே எடுத்து சென்று குப்பையில் போடச் சொன்னார்கள். கதிரவனுக்கு அந்த அணுகுமுறை பிடித்திருந்தது...தன் வேலையை தானே செய்யணும்னு பள்ளிக்கூடத்துல சொல்லிக்கொடுத்தது மாதிரியே இருக்கே...ன்னு நினைச்சிக்கிட்டான்

கைகழுவி விட்டு கடையின் வாசல் பக்கம் வந்தவன்..

“ஐயா ஒரு டீ போடுங்க”ன்னு சொல்லிட்டு சுத்துமுத்தும் பார்த்தான் குப்பையில் பிளாஸ்டிக் கிளாஸும், இலையோடு சேர்ந்து கிடந்தது...அலமாரியில் அதிகம் பயன்படுத்தப்படாத சில்வர் பாத்திரமும், க்ளாசும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. நோட்டம் விட்டே கொண்டிருந்தவனின் கண்ணில் செல்வியும், அவரோடு வந்த முதியவரும் கண்ணில் பட்டனர்.

செல்வி “ போய்ட்டு சாயந்தரமா வந்துடறேன் தாத்தா, அத்தை வீட்டுக்கு போய் சேர்ந்ததும் ஃஃபோன் பண்றேன்” னு சொல்லி விட்டு தேநீர் கடைக்கு அருகிலிருகும் நிறுத்தத்திலிருந்து பேருந்தில் ஏறி பயணம் செய்கிறாள்.

அந்த முதியவர், மெல்ல நகர்ந்து கதிரவனை நோக்கி வர, செல்விதான் ஏதும் சொல்லிக் கொடுத்திருப்பாளோ, நம்மிடம் வந்து அந்த தாத்தா என்ன சொல்வாரோ? என்ன கேட்பாரோ என்ற அச்சத்தில் திரும்பி நின்று கொண்டான் கதிரவன்...

“ஏலே, ஒரு டீ போடுறா?” ன்னு ஒரு குரல். பின் திரும்பினால் அதே தாத்தா...

சிறுது நேரத்தில் இருவருக்கும் டீ வழங்கப்பட்டது, தாத்தாவுக்கு கண்ணாடி க்ளாசிலும், கதிரவனுக்கு ப்ளாஸ்டிக் க்ளாசிலும். அப்பொழுதுதான் குப்பையில் கிடந்த ப்ளாஸ்டிக் க்ளாசை பரிதாபத்தோடு பார்த்துவிட்டு.....

அதுவரை செல்வியை காதலிக்க சிந்திக்காத கதிரவன், அவளை காதலித்தால்தான் என்ன என்று வேகமாய் சைக்கிளை அழுத்தி பயணத்தை தொடர்ந்தான்..............


காதல் இப்படித்தான் நிகழ்ந்துவிடுகிறது

கறை நல்லது............?


இரண்டங்குலம் இன்னும் நெருக்கி நடந்தால் பள்ளிக்கூடத்தினுள் நுழைந்துவிடலாம். நெருங்காமல் கடந்து செல்கிறான் முத்து. பள்ளிக்கு அருகிலிருக்கும் ஈர்ப்பு காரணமோ என்னவோ? எட்டா கனிக்கு ஏன் கொட்டாவி விட வேண்டாம் என்று நினைத்துக் கொண்டானோ தெரியவில்லை...கடந்தாண்டு இதே பள்ளியினுள் இருந்து வெளியே வந்தது இன்னும் நினைவிருக்கிறது அவனுக்கு...பள்ளிக்கருகில் இப்பொழுது சென்று 50 காசுக்கு தேன் மிட்டாய் வாங்கி சப்பிக் கொண்டு என்ன நினைத்தானோ தெரியவில்லை...அருகிலிக்கும் மசாலா கடலை தயாரிக்கும் கூடத்தினுள் நுழைந்துவிட்டான்...

அந்த பணிக்கூடம் வெளியே புகை கக்கி கொண்டேயிருக்கிறது. சன்னல் வழியே அனல்காற்று வீசுகிறது. நம் கண்களும் உள்ளே சென்ற சிறுவனை தேடுகிறதில்லையா...நாளும் அவனை கவனித்தால் தேடாது, உங்கள் கண்களை கொஞ்சம் காத்திருக்கச் சொல்லுங்கள். பள்ளிக்கு இடைவேளை விடப்படுகிறது, அருகிலிருக்கும் பெட்டிக்கடையில் நிறைய குழந்தைகள் ஈ போல் மொய்த்து கொண்டிருக்கின்றனர்..ஆளுக்கு 50 பைசா, 1 ரூபாய்..5 ரூபாய் என்று வசதிப்படி தின்பண்டம் வாங்கி தின்கின்றனர்.

மாலை சரியாக நான்கு மணி பள்ளியின் இறுதி மணி அடிக்கிறது. வெண்மை நிற சட்டை அணிந்து சென்ற முத்து இப்பொழுது கரிக்கறையோடு வருகிறான். சட்டையின் வெண்மை குறையாத அழுக்குப்படியாத சட்டைகளோடு மாணவர்கள் நடந்து செல்கின்றனர். இவன் தன் கறையை தடவியபடி அவர்களை கடந்து செல்கின்றான் முத்து. சாலையின் இருபுறமும் இருக்கும் பலகைகள், பதாகைகள் ஆகியற்றை பார்த்து கொண்டே செல்கிறான்..

“ குழந்தைகளை பணிக்கு அமர்த்தாதீர்கள்” “குழந்தைகளை பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம்” என்று பதாகைகள் மிளிர்கின்றன.

ஏழைக்கெதற்கு பொழுதுபோக்கென்று நினைத்தார்களோ என்னவோ எந்த கேள்வியும் கேட்காமல் பொழுதுபோக்கு சாதனங்களை பாதுகாப்பாக கண்ணாடி கூண்டுக்குள் அடைத்து வைத்திருக்கின்றனர் கடைக்காரர்கள்.....முத்துவுக்கும் ஏழ்மைக்கும் தொலைவா என்ன? தொலைவிலிருந்த படியே ஒரு கடையின் முன் நின்று தொலைக்காட்சியை வெறித்து பார்த்து கொண்டிருக்கிறான்....

“ கறை நல்லது.........”என்று ஒரு சிறுகுழந்தை நடிக்கும் விளம்பரப்படம் ஒளி(லி)க்கிறது.

நீங்க சொல்லுங்க கறை நல்லதா?

வியாழன், 4 மார்ச், 2010

நாங்க‌தாண்டா சாமி(யார்?) ‍அக‌ம் பிர‌ம்மாஷ்மி ‍‍‍- மகிழ்நன்.பா



நித்யான‌ந்தா, க‌ல்கி, தேவ‌நாதன், புவ‌னேஷ்வ‌ரி இந்த‌ பெய‌ர்க‌ளை ப‌டித்தால் என்ன‌ நினைவுக்கு வ‌ருகிற‌து? நானேதும் த‌வ‌றாக‌ எழுத‌த்தொட‌ங்கி க‌வ‌னக்குறைவின் கார‌ண‌மாக‌ புவ‌னேசுவ‌ரியை இந்த‌ கோஷ்டிக‌ளோடு இணைத்துவிட‌வில்லை. ஆங்கில வ‌ழி ப‌ள்ளிக்கூட‌ங்க‌ளில் ‍‍‍Odd Man Out என்ற‌ வ‌கையில் கேள்விக‌ள் வ‌ரும். அதில் குறிப்பிட்ட‌ ப‌ண்பின்ப‌டி விதிவில‌க்கான‌தை த‌னியே பிரித்து, ப‌திலாக‌ எழுத‌ வேண்டும். மேலுள்ள‌ வ‌ரிசையில் புவ‌னேசுவ‌ரி பெண் என்ப‌தை தாண்டி எந்த‌ வேறுபாடு புனித‌(?), புதிர் க‌சுமால‌ங்க‌ளுக்கு இல்லை.

பாலிய‌ல் வேட்கை என்ப‌து அனைவ‌ருக்கும் பொதுவான‌து. சொல்லித‌ர‌ வேண்டிய‌ க‌லை இல்லை ம‌ன்மத‌க‌லை. ஆனால், இதையெல்லாம‌ க‌ட‌ந்த‌வ‌ர்க‌ள் போல‌ த‌ங்க‌ளை ச‌மூக‌த்தில் அடையாள‌ப்ப‌டுத்திக் கொண்டு, ம‌க்க‌ளுக்கு அறிவுரைக‌ள் வ‌ழ‌ங்கி ந‌ல‌வ‌ழிப்ப‌டுத்த‌ வ‌ந்த‌ தூத‌ர்க‌ள் போல‌ ச‌மூக‌த்தில் ந‌ற்பெய‌ரை ச‌ம்பாதித்துக் கொண்டு, அதே ந‌ற்பெய‌ரை அர‌சிய‌ல் செல்வாக்குக்கும் பய‌ன்ப‌டுத்திக் கொண்டு, சிறிது சிறிதாக‌ க‌ருப்ப‌ண‌த்தை ப‌துக்குவ‌தில் தொட‌ங்கி, அர‌சிய‌ல் ந‌க‌ர்வுக‌ள், த‌ர‌கு வேலைக‌ள் என விரிவ‌டைந்து, ப‌‌ண‌ புழ‌க்க‌ம் அதிக‌மான‌து தன‌க்குத்தானே போட்டுக் கொண்டு காவி வேட‌த்தை க‌லைந்து சினிமா ந‌டிகைக‌ளை த‌ங்க‌ள் வேட்கை தீர்க்க‌ ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்வ‌து(சினிமா காவி கோஷ்டிக‌ளையும் கெடுத்து விடுகிற‌தே :‍‍‍‍)). ம‌க்க‌ளும் இவர்க‌ளை ந‌ம்பி கோடி கோடியாய் ப‌ண‌த்தை கொட்ட‌, இவ‌ர்க‌ள் இப்ப‌டி கொட்ட‌மடித்துக் கொண்டிருக்கின்ற‌ன‌ர். ந‌ம் ம‌க்க‌ளும் ஒன்றும் முட்டாள்க‌ள‌ல்லர், அக‌ப்ப‌ட்ட‌வனை நம்பி போவதற்கு, இனி அக‌ப்ப‌ட‌ப்போகிற‌வ‌னிட‌ம் போய்தான் ஏமாறுகின்ற‌ன‌ர்.

புவ‌னேசுவ‌ரியின் செய்தியில் புவ‌னேசுவ‌ரி ம‌ட்டும்தான் ஒழுக்க‌ கேடான‌வ‌ர் போலும், ம‌ற்ற‌ ந‌டிக‌ர், ந‌டிகைக‌ள் ஒழுக்க‌மான‌வ‌ர்க‌ள் போல‌வும் சில‌ சினிமா ந‌டிக‌ர்க‌ளின் நாட‌க‌ காட்சிக‌ள் ஊட‌க‌ங்க‌ள் வாயிலாக‌வே, ஊட‌க‌த்திற்கு எதிராக அர‌ங்கேறின‌. ம‌க்க‌ளின் ஆழ்ம‌ன‌ வேட்கைக‌ளை தூண்டுவிடும்ப‌டியாக‌ திரையில் ந‌டித்து சாமியார்க‌ளிட‌மும், தொழில‌திப‌ர்க‌ளிட‌மும் த‌ஞ்ச‌ம‌டையும்‌ சில‌(?) ந‌டிகைக‌ள், அதை தெரிந்த‌ ந‌டிக‌ர்க‌ள் இன்று ர‌ஞ்சிதாவுக்கு ஆத‌ர‌வாக‌ போராட‌ வ‌ருவார்க‌ளா என்ப‌து அவ‌ர்க‌ளுக்கே வெளிச்ச‌ம்.

திரை உல‌கில் இருக்கும் ச‌ங்க‌ங்க‌ளாவது ஏதாவ‌து எதிர்ப்பை ப‌திவு செய்யுமா? சாமியார்க‌ளுக்கு எதிராக‌ போராட்ட‌ம் ந‌ட‌த்துவார்க‌ளா என்றால் க‌ண்டிப்பாக‌ ஏதும் ந‌ட‌க்காது, இவ‌ர்க‌ள் திரையில் செய்வ‌து அந்த‌ சாமியார்க‌ள் திரைம‌றைவில் செய்கின்ற‌ன‌ர். சில‌ நேர‌ங்க‌ளில் வெளிப்ப‌ட்டு விடுகிற‌து. திரைத்துறையில் இருந்து ஒரு க‌வ‌லை வ‌ருமானால் அது அந்த‌ ஒளிப்ப‌ட‌ காட்சியில் குறைந்த‌ லைட்டிங், கேமரா ஆங்கிள் போன்ற‌வ‌ற்றை குறித்து ம‌ட்டும்தான் இருக்கும்.

யாருமே இல்லாத‌ க‌டையில் டீ ஆற்றுவ‌து போல‌, யாருமே இந்து ம‌த‌த்தை கிழித்து தொங்க‌ விடுவ‌த‌ற்கு முன் தாங்க‌ளே த‌ங்க‌ள் சாமியார் நிறுவ‌ன‌ங்க‌ளும் ஒன்றான‌ நித்தியான‌ந்தாவுக்கு எதிராக‌ போராட‌ தொட‌ங்கியிருக்கிறார்க‌ள் இந்து ம‌க்க‌ள் க‌ட்சி போன்ற‌ அமைப்புக‌ள். நித்தியான‌ந்தாவின் ப‌ட‌ங்க‌ளை எரிப்ப‌து, அலுவ‌ல‌க‌ங்க‌ள் சூறையாட‌ப்ப‌டுவ‌து போன்ற‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் உண்மையிலேயே ஒரு முர‌ண்தான். வேறு யாரும் தாக்கும் முன்ன‌ரே தங்க‌ளை தாங்க‌ளே அடித்துக் கொண்டால் அடியின் வ‌லி குறைவாக‌ இருக்கும் என்ற‌ எண்ண‌மோ என்ன‌வோ? இதில் இவ‌ர்க‌ள‌து வேடிக்கையான‌ கோரிக்கை என்ன‌வென்றால்

" நித்தியான‌ந்தா குற்ற‌ம‌ற்ற‌வ‌ர் என்று குற்ற‌ம‌ற்ற‌வ‌ர் என்று நிருபித்த‌ பின் ச‌மூக‌த்தில் ந‌ட‌மாட‌ வேண்டுமாம்."

அப்ப‌டி என்ன‌ த‌வ‌றிழைத்து விட்டார் நித்தி(செல்ல‌மா கூப்பிட‌லாமேன்னுதான்) கிருட்டிண‌ன் கோபிக‌ளோடு(அடுத்த‌வ‌ர் ம‌னைவிக‌ளோடு) செய்யாத‌‌ லீலைக‌ளா, இந்திர‌ன் செய்யாத‌ சேட்டையா? புராண‌ங்க‌ள் சொல்லாத‌ முறைய‌ற்ற‌ க‌ல‌வியா? இந்த‌ நிலைக‌ளையெல்லாம் இவ‌ர் என்ன க‌ட‌ந்தாவிட்டார்....இன்னும் சொல்லப்போனால் இப்ப‌தானே முத‌ல் வ‌குப்பில் கால‌டி எடுத்து வைத்திருக்கிறார். ப‌ர‌மான‌ந்த‌ நிலையை அடைய‌ விரும்புவ‌ரை பிரேமான‌ந்தா போன‌ இட‌த்திற்கு அனுப்ப‌ பார்க்கிறார்க‌ளே என்ன‌ கொடுமை சார் இது?

நித்தியான‌ந்தாவுக்கு எதிராக‌ போராடும் இந்து அமைப்புக‌ள் முத‌லில் ந‌ம்ப‌க‌மான‌ சாமியார்க‌ள் ப‌ட்டிய‌லை வெளியிட‌ட‌ட்டும். த‌யாரா? ஆனால், அத‌ன் பிற‌கு த‌வ‌று ந‌ட‌ந்தால் ச‌ங்க‌ங்க‌ளை க‌லைத்துவிட்டு ஊர்போய் சேர்ந்து வேலைவெட்டியை பார்க்க‌ட்டும்.

அடுத்து நாம் பார்க்க‌போற‌ ப‌ட‌ம் க‌ல்கி.............
தேவ‌நாத‌ன், நித்தி ப‌ட‌ங்க‌ளின் விம‌ர்சன‌ங்களே இத‌ற்கு அப்ப‌டியே ஒத்துப்போவ‌தால் மேற்கொண்டு அதையே எழுதி கிறுக்கி உங்க‌ள் நேர‌த்தை வீணடிக்க வேண்டுமா? என்ன‌....

அடுத்து நாம் க‌வ‌னிக்க‌ வேண்டிய‌து செய்தித்தாள் ம‌ற்றும் காட்சி ஊட‌க‌ங்க‌ள், ஈழ‌ப்பிர‌ச்சினையில் வாய்மூடி மௌன‌மாய் இந்திய‌ அதிகார‌ வர்க்க‌த்தின் கூட்டு திருட‌ர்க‌ளாய் இருந்துவிட்டு, ச‌மூக‌த்தில் மிக‌ முக்கிய‌ பிர‌ச்சினைப்போல் ந‌ம் வ‌ர‌வேற்ப‌றைக்குள் நுழைந்து ஆபாச‌ ப‌ட‌த்தை ஓட்டுகின்ற‌ன‌. ச‌தைக‌ளை ந‌ம்பியே க‌தையை ஓட்டி கொண்டிருக்கும் இந்த‌ ஊட‌க‌ங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ இந்த‌ சாமியார்க‌ளை குறித்த‌ புனித‌ பிம்ப‌த்தை உடைப்ப‌து என்ற‌ நேர்மையான‌ நோக்க‌ம் ம‌ட்டும் இருக்காது, எல்லாம் TRP ரேட்டிங் செய்ற‌ மாய‌ம். காலையில் இவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் நிக‌ழ்ச்சிக‌ளை ஓட்டுவ‌தே இந்த‌மாதிரி அண்டைக்காக்க‌ கொண்டைக்கார‌ சாமியார்க‌ளை வைத்துதானே. (தேவ‌நாத‌னுக்கு இவ்வ‌ள‌வு ஃபோக‌ஸ் இல்லை, க‌வ‌னிக்க‌வும்).

ஆக‌, ம‌த‌ம் என்னும் ம‌க்க‌ளை சுர‌ண்டும் நிறுவ‌ன‌ அமைப்பு, அத‌ன் த‌ரகர்‌க‌ளாக‌ செய‌ல்ப‌டும் நித்தியான‌ந்தா போன்ற‌ சாமியார்க‌ள், ம‌க்க‌ளின் நிம்ம‌தியான‌ வாழ்வை கெடுக்கும் அடிப்ப‌டைவாத‌ அமைப்புக‌ள், இவ‌ர்க‌ளுக்கு துணைபோகும் ஊட‌க‌ங்க‌ள் என ந‌ம் ச‌மூக‌த்தை சீர‌ழிக்கும் க‌ருவிக‌ளிலிருந்து த‌ற்காத்து‌ ப‌ண்ப‌ட்ட‌ வாழ்வு வாழ்வ‌தே சிற‌ந்த‌து.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

காதலை எதிர்ப்பதா? யாரப்பா அது? – மகிழ்நன்


மௌனத்தின் மொழி பேசிய மனித இனத்தின் மூதாதையர்கள் முதன் முதலில் பேசிய மொழிதான் காதல். எத்தனை காதலர்களை கடந்து வந்திருந்தாலும், எத்தனை தோல்வி, வலி மிகு காவியங்களை உலகிற்கு தந்திருந்தாலும், இன்றும் ஈர்க்கின்றது காதல் என்ற சொல்.

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடியின் வழித்தோன்றல்கள் என்று பீற்றிக் கொள்கிறோம் நாம். ஆனால், தமிழ் பேசும் முன்பே மனிதன் பேசிய மொழியை சாதி, மதம், பணம் போன்றவைகளால் தீண்டத்தகாதவர்களாகி நிற்கிறோம். வள்ளுவன் புகட்டிய காமத்துப்பாலை குடித்த மூதாதையர்களின் இளைய தலைமுறைகளின் காதலுக்கு கள்ளிப்பால் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்து கொண்டிருக்கிறது.........நம் தமிழ்ச் சமூகம்.

காதல் என்றதும் இங்கே ஆண்-பெண் காதல் என்று பொருள் கொள்ளவும். அது இயல்பானது. வயது-உடல் முதிர்ச்சி அடைந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இயல்பாக தோன்றும் ஈர்ப்பு, பின்பு வரும் மதிப்பு இவை கலந்ததே காதல் என்று கொள்ளலாம். இதில் காதல் வேறு, காமம் வேறு என்ற பட்டிமன்றம் வேறு நடக்கிறது.

இக்காலத்து இளசுகளுக்கு காதலுக்கும் காமத்திற்கும் வித்தியாசமே தெரியலை, உண்மையான காதலெல்லாம் தற்காலத்தில் இல்லை, தமிழ் பண்பாடு சீரழிஞ்சு போகுது போன்ற வசனங்கள் நாம் இன்று பல இடங்களில் சந்திப்பவை. ஆனால், இதை பேசும் பழைய ஓட்டை உடசல்களின் பண்பாடு எதுவாக இருந்தது?

பெண்ணை கோவிலிற்கு பொட்டு கட்டி விடுவது, விதவை திருமணத்தை,மறுமணத்தை மறுத்தது, பெண்ணை உடன்கட்டை ஏறச் சொன்னது போன்ற ஆணாதிக்க லூசுத்தனங்களை செய்ததுதான் இவர்கள் பண்பாடு. இன்றைய தலைமுறைக்கு பண்பாடு சொல்லித்தரும் அளவிற்கு அன்றைய தலைமுறையினருக்கு தகுதியிருக்கிறதா? என்ற கேள்வி இன்றைய தலைமுறையின் சார்பாக வருகிறது.

ஆனால், இந்த பெரிசுகளின் பொது உளவியலில் எழும் கேள்வி, அல்லது இன்றைய தலைமுறையினர் நம்பி வரும் காதலில் உள்ள புனிதத்தன்மை நம்பிக்கைகள் பற்றி நாம் உரையாடாமல் விட்டோமானால், சார்புத்தன்மையுடதையாக ஆகிவிடும்.

அந்த புனித கற்பிதத்தில் காதலில் சொல்லப்படும் முக்கியமான வசனம் காதல் வேறு? காமம் வேறு என்பதுதான்

உண்மையிலே காதல் வேறு? காமம் வேறா?

இது குறித்தான விவாதத்திற்குள் நாம் உட்புகும் முன் தந்தை பெரியார் காதலை பற்றி கூறியதை கொஞ்சம் கவனிப்பது உகந்ததாக இருக்கும்.

பெரியார் காதலை பற்றி என்ன சொல்கிறார் கேளுங்கள்....

உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி, அனாவசியமாய் ஆண் - பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச் செய்து காதலுக்காகவென்று இன்பமில்லாமல் திருப்தியில்லாமல் தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படுகின்றதை ஒழிக்க வேண்டும்.

காதல் என்பது

ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும். அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது என்றும் பிறகு வேறு ஒருவரிடமும் அந்தக் காதல் ஏற்படாது அந்தப்படி மீறி அந்தப் பெண்ணுக்கோ ஆணுக்கோ வேறு ஒருவரிடம் ஏற்பட்டு விட்டால் அது காதலாயிருக்க முடியாது. அதை விபச்சாரம் என்று தான் சொல்ல வேண்டுமேயொழிய அது ஒருக்காலும் காதலாகாது என்றும், ஒரு இடத்தில் உண்மைக் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு யாரிடமும் காமமோ விரகமோ மோகமோ என்றெல்லாம் ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றது.

இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி நாம் சொல்லும் மற்றொரு விஷயமென்னவென்றால் ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ மற்ற மூன்றாவதர்கள் யாராவதோ பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்ப்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே கிடையாது என்றும் சொல்கின்றோம்.

அழகைக் கொண்டோ, பருவத்தைக் கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக் கொண்டோ, கல்வியைக் கொண்டோ, சங்கீதத்தைக் கொண்டோ, சாயலைக் கொண்டோ, பெற்றோர் பெருமையைக் கொண்டோ, தனது போக போக்கியத்திற்குப் பயன்படுவதைக் கொண்டோ அல்லது மற்றும் ஏதோ ஒரு திருப்தியை அல்லது தனக்குத் தேவையான ஒரு காரியத்தையோ குணத்தையோ கொண்டோதான் யாரும் எந்தப் பெண்ணிடமும் ஆணிடமும் காதல் கொள்ள முடியும். அப்படிப்பட்ட அந்தக் காரியங்களெல்லாம் ஒருவன் காதல் கொள்ளும் போது இவன் அறிந்தது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது அங்கு இருப்பதாக அவன் நினைத்துக் காதல் கொண்டு இருந்தாலும் இருக்கலாம். அல்லது வேஷ மாத்திரத்தில் காட்டப்பட்ட ஒன்றினால் இருந்தாலும் இருக்கலாம்.

பெரியாருடைய கருத்து மறுத்தது எதையென்றால் இயற்கையான உணர்வுக்கு சமூகத்தின் பிற்போக்குத்தனத்திடம் அனுமதி கோரி நிற்பதைத்தான்.

காதலை சொல்வது என்பது ஆண்பெண் சேர்க்கையில், இணைந்து வாழ்வதற்கான ஒரு நாகரீகமான அணுகுமுறைதானேயன்றி வேறில்லை....

நம் சமூகத்தில் காமம் என்ற இயற்கையான உணர்வை பற்றிய சரியான விழிப்புணர்வு, உரையாடல்கள் இல்லாமைதான் இன்று காதலா? காமமா?என்ற குழப்பத்தில் கொண்டு போய்விடுகிறது. தன்னுடைய துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையையும், பக்குவத்தையும் இச்சமூகத்தின் இளைய தலைமுறைக்கு வழங்கிவிட்டால், காதலாக இருந்தாலென்ன, காமமாக இருந்தாலென்ன? யாருக்கு என்ன பிரச்சினை இருக்கப்போகிறது என்று நாம் இந்த கட்டுரையை முடித்துவிடலாமென்று கருதினால், பிரச்சினைகள் இருக்கிறது என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது.

அது சாதியின், மதத்தின், வர்க்கத்தின் உருவில் வந்து கத்துகிறது, சில நேரங்களின் பிரியமானவர்களின் கழுத்தையும் அறுக்கிறது. தாம் பெற்ற குழந்தைகள் என்பதை தாண்டி, சமூகத்தில் தான் நம்பி வந்த போலியான வரையரைகளை தன் பிள்ளைகளும் கடைபிடிக்க வேண்டும் என்று பிடிவாதமும் செய்கிறது.

தமது பிள்ளைகள் போலியான இந்த சமூக மதிப்பை காப்பாற்றுவதற்காகவே தன்னால் ஒரு பெண்ணோடு இணைந்து பெற்றெடுக்கப்படுகிறார்கள், என்று சொல்லாமல் சொல்கிறது இந்த பெற்றோர்களின் நடவடிக்கைகள். இதை எழுத்துவடிவில் படிக்கும்போது முகம் சுழித்துவிட்டு, வீட்டிற்கு சென்று நீங்கள் தாங்கள் நம்பும் போலியான மதிப்பீடுகளையே தூக்கி சுமந்து கொண்டு ஓடினீர்களென்றால், அறிவு வளர்ச்சி உங்களையும் சேர்த்தே குப்புற தள்ளிவிட்டு முதுகிலேறி பயணிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

இளைஞர்களே!!!

உங்களிடம் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், வாழ்க்கைப்பாதையில் சாதிக்க காதலை ஒரு தடையாக வைத்துக் கொள்ளாதீர்கள், உங்கள் உணர்வு நேர்மையானதாக இருந்தால்,சரியான துணையை தேர்ந்தெடுப்பதாக உறுதியாக நம்புவீர்களானால், பரஸ்பர புரிதல் சரியாக இருந்தால் , சமூகத்தின் பிற்போக்குத்தனங்களின் பிரநிதிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அடி பணியாதீர்கள். அந்த பிரநிதிகள் உங்கள் பெற்றோராகவும் இருக்கலாம்....

அன்புப்போரில் சாதி, மதம் எதிர்த்து தங்கள் உயிரை தாங்களே அறிந்தும், அறியாமலும் தியாகம் செய்த காதல் போராளிகளுக்கு வீரவணக்கங்கள்.