சனி, 5 ஏப்ரல், 2014

மரம்வெட்டிகளின் பங்காளிகள் மரம்வெட்டிகளே!

மாசுபட்ட சபர்மதி ஆறு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான 22 மார்ச் 2010 அன்று டி.என்ஏ நாளிதழில் வெளியான ஆவணமொன்று  இந்தியாவிலேயே அதிகமாக மாசுபட்ட மாநிலமாக குஜராத்தை அறிவிக்கின்றது,  அந்த ஆவணத்தில்,
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகவும் ஆபத்தான கழிவுகளில் மிக அதிகபட்சமாக 29% குஜராத்தே வெளியேற்றுகின்றது, அதற்கு அடுத்தப்படியாக மகாராஷ்டிரா 25% ஐ வெளியேற்றுகின்றது. மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் குஜராத்தை மிக அதிகமாக மாசுபட்ட மாநிலமாக அறிவிக்கின்றது. தொடர்ந்து அபாயமான கழிவுகளை வெளியேற்றுவது தொடர்ந்து அதிகரித்து வருவதிலிருந்து இந்த முடிவு எட்டப்பட்டது.

குஜராத்தில் இயங்கும் பெரும்பாலான தொழிற்சாலைகள் மாசுகட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியின்றியோ அல்லது சுரங்கம் தோண்டுவது போன்றவற்றில் சட்டத்திற்கு புறம்பாகவும் செயல்பட்டு வருகின்றன. மோடியின் அமைச்சரவை சகா பாபுபாய் போக்ரியா சட்டத்திற்கு புறம்பான சுரங்க பணிகளுக்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அதேபோல மோடி பாலூற்றி வளர்த்த மக்கள் விரோத நச்சுப்பாம்பான  அதானி மாசுக்கட்டுபாடு வாரியத்தின் அனுமதியின்றியே தமது முக்கியமான தொழில்களை நடத்தி வருகின்றார் என்பதை வாசிப்பவர்கள் ஆழ்ந்து தம் கவனத்தில் இருத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும். அதானி கும்பலின் இந்த மோசடியை 13, ஜனவரி 2014 அன்று குஜராத் உயர்நீதிமன்றம் உறுதி செய்ததோடு, அதானி கும்பலின் சிறப்பு பொருளாதார மண்டலங்களை (APSEZ) மூட  உத்தரவிட்டது. நைவால் கிராம மக்கள் சார்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த பாஸ்கர் பட்டாச்சார்யா தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. (இணைப்பு)

இந்த பொதுநல வழக்குகள் விசாரிக்கப்படுவதற்கு முன் சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சகம் சுனிதா நாரெய்ன் தலைமையில் நிபுணர் குழு அமைத்தது.அதானியின் சிறப்பு பொருளாதார மண்டலம்  ‘75 ஹெக்டர் மாங்க்ரோவ் காடுகளுக்கு கடுமையான தீங்கை செய்திருப்பதாக’ தமது அறிக்கையில் அந்த குழு குற்றம் சுமத்தியது.  
இந்த காவி கும்பல்தான் நமக்கு முன்னேற்றம் பற்றி வகுப்பெடுக்கின்றது. அனைத்து உயிர்களையும் வணங்குவதுதான் இந்து மதத்தின் சுபாவம் பீற்றித் திரியும் இந்த கும்பல், வனங்களை மட்டும் முதலாளிகளின் காலடியில் வைப்பதன் மர்மமென்ன? ஒருவேளை இந்த காவி கும்பல் வணங்கும் உற்சவ மூர்த்தியே முதலாளிகள்தானோ?
நம் மூதாதையர்கள் வாழ்ந்து பாதுகாத்த பூமியை, அடுத்த தலைமுறைக்கு விட்டு வைக்காமல், பணத்தாசை பிடித்து தெரியும் இந்த பெருமுதலாளிகளுக்கு தாரை வார்த்துவிட்டு தனது தேர்தல் பிரச்சாரத்தில் இந்த மோடி என்னும் பொய்யர் என்ன  உளறியிருக்கின்றார் தெரியுமா? சுற்றுச்சூழல் குறித்து கிஞ்சித்தும் அக்கறையில்லாத இந்த நரமாமிச மோடி மரங்களையும் வெட்டி வீழ்த்தி காடுகள் அழிய துணை போன எப்படி தன்னை மீட்பர் போல கட்டமைக்கின்றார் தெரியுமா?
தனது கோவா பிரச்சாரத்தில்,
“நாங்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்.”
“ஜெயந்தி நடராஜன் அமைச்சராக இருந்தபோது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்தில்  பணத்தை கொடுக்காமல் எந்த கோப்புகள் விரைவாக நகர்ந்ததே இல்லை. ”
இது மட்டுமில்லாமல், தனது ட்வீட்டர் கணக்கில்
“கோவா மக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பதற்கான உறுதிமொழியை வழங்கினேன்” என்று வேறு  எழுதி தொலைத்திருக்கின்றார்.
            பொய் சொல்வது பாசிஸ்டுகளுக்கு வெட்கமாயிருக்காதுதான். ஆனால்,  இந்த    பொய்களை நம்புபவர்களுக்கு  வெட்கம் வர வேண்டாமா?
[ஜெயந்தி நடராஜனுக்கு பிறகு 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு பெரிய தடையேதுமில்லாமல் ‘தடையில்லை’ ஆவணத்தை வழன்கும் மொய்லி அமைச்சராக இருப்பதையும், அந்த ஆளை பற்றி மோடி வாய்  திறக்கவில்லை என்பதையும் நினைவில் கொள்க]

மன்மோகன் கும்பல் மக்கள் நலனில் கரைதேர்ந்தவர்கள் என்றோ, மிகவும் நேர்மையானவர்கள் என்றோ நாம் கூறவில்லை. அவர்கள் உலக மகா திருடர்களே. ஆனால், மன்மோகனுக்கு மாற்று மோடி கும்பல் என்பது முட்டாள்தனத்தின் உச்சம். காங்கிரஸ் திருடர்கள் சுற்றுச்சூழல் விசயத்திலும் தேர்தல் நெருங்க, நெருங்க கார்ப்பரேட்டுகளுக்கு வேக, வேகமாக உரிமம் வழங்கியதை நாம் அறிவோம்.

ஆனால், அப்படி உரிமம்  வழங்குவதற்கு எதிராக ஒற்றை கேள்வியை இந்த கொலைக்கார கும்பல் கேட்டிருக்குமா? கேட்காது. 
ஏனென்றால், பிச்சைக்காரனுக்கு செக்யூரிட்டி பிச்சைக்காரனே.

நன்றி : இணைப்பு

வியாழன், 6 பிப்ரவரி, 2014

வைகோ + காவி கும்பலின் ஈழ ஆதரவு லட்சணம்

இலங்கையை இந்தியாவோடு இணைக்கும் தீர்மானத்தை இலங்கை தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். – சு.சாமி (1-5-2000)

தீர்வுக்கான எந்த உத்தரவாதமும் பெறாமல் இலங்கை அரசுக்கு உதவி செய்வதன் மூலம், ஈழத்தமிழர்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்கின்றது. சு.சாமி 3-5-2000

“சிலர் தனி ஈழம் கோருகின்றார்கள், எங்கே இருக்கின்றது ஈழம்? புலிகளே அதை இன்னும் அறிவிக்கவில்லையே” – கிருஷ்ணமூர்த்தி ( பாஜக, துணைத்தலைவர்) தில்லியில் 6-5-2000

திமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகளின் ஈழம் தொடர்பான நிலைப்பாடு, மத்திய அரசின் நிலைப்பாட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. – பிரமோத் மகாஜன்

ஈழத்தை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை. – 8/05/2000 அன்று வாஜ்பாய் (அண்ணன் வைகோவின் அண்ணன்)

அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. அதில் நார்வோ, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பங்கும் இருக்கின்றது. - லட்சுமண் கதிர்காமர் 22-5-2000

இலங்கை தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் முடிவுகளுக்கு பாமக கட்டுப்படும் – ராமதாஸ் (2-6-2000)

நீண்டகால நண்பனான இந்தியாவை புரிந்து கொள்வதுதான் இலங்கை பிரச்சினையை தீர்க்க உதவி புரியும். – திருச்சியில் ஆறுமுக தொண்டைமான், முன்னாள் இலங்கை அமைச்சர், 2-6-2000

இந்திய அரசு தற்போதைய சூழலை பயன்படுத்தி, பிரபாகரனையும், பொட்டுஅம்மானையும் கைது செய்ய வேண்டும். – சு.சாமி (2-6-2000)

செக் – ஸ்லோவேகியா போல இலங்கை பிரிக்கப்பட வேண்டும். கலைஞர் கருணாநிதி 4-6-2000

இந்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. 5-6-2000

செக்-ஸ்லோவேகியா பாணியில் என்று கருத்து கூறிய கருணாநிதி குழம்பி போயிருக்கின்றார். ஜி.கே.முப்பனார் (7-6-2000)

பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியினர் புலிகளின் மீதான தடையை நீக்க கோரிக்கை வைத்திருப்பது தொடர்பான தகவல்கள் பாஜகவுக்கு தெரியாது. அப்படியே, கோரிக்கை வைக்கப்பட்டாலும், புலிகள் மீதான தடையை நீக்க முடியாது. – வெங்கையா நாயுடு (11-5-2000)

புலிகள் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டிருப்பதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். - அத்வானி (14-5-2000)

அவர்களை தனி ஈழத்தையும் காண விரும்பவில்லை, இலங்கை அரசுக்கும் உதவ விரும்பவில்லை. தற்போதைய நிலையில் இந்தியாவின் நிலை குழப்பத்திற்குரியதாகவே இருக்கின்றது. - தர்மலிங்கம் சித்தார்த்தன், கொழும்புவில் (28-5-2000)

நான் இந்துத்வ சக்திகளை எதிர்க்கிறேன். நான் சிறையிலிருந்த பொழுது, அவர்கள் தங்களது ரகசிய செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்வதை அறிந்தேன். திராவிட இயக்கத்தை வலுப்படுத்த, பாஜகவை எதிர்ப்பது என் முதன்மை கடமையாகின்றது. காங்கிரஸை பொறுத்தவரை அது ஒன்றிரண்டு தவறிழைத்திருந்தாலும், அது மதச்சார்பின்மையை உறுதியாய் பேணுவதில் அக்கறையோடு இருக்கின்றது. ஆகவே, நாட்டின் நலன் கருதி நான் காங்கிரஸை ஆதரிக்கிறேன். - வைகோ (2004)

--------------------------------------------------------------------------------
8 ஜனவரி 2011 ஆம் ஆண்டு கௌகாத்தியில்(அஸ்ஸாம்) பாஜகவின் தேசிய செயற்குழுவில் பேசிய நிதின் கட்கரி...

"புலிகளை தோற்கடித்த போருக்கு பிறகு, இலங்கை தன்னை மீண்டும் கட்டமைத்து வருகின்றது. மக்கள் மீள் குடியிருப்பிற்காக காத்திருக்கின்றார்கள். அவர்கள் சுயமரியாதையோடு மைய நீரோட்டத்திற்கு அழைத்து வரப்பட வேண்டும்."

யாழ் கோட்டையில் புலிகள் முற்றுகையிட்டிருந்த போது..மே மாதம் 4 (4-5-2000) ஆம் தேதி ஜஸ்வந்த் சிங், பாஜக அமைச்சரவையின் வெளியுறவு துறை அமைச்சர் ராஜ்யசபையில் உரையாற்றும் போது

" இலங்கையில் நிகழ்ந்து வரும் மாற்றம் எங்களுக்கு வருத்தம் தருவதாக இருக்கின்றது. நாங்கள் இலங்கையோடு தொடர்பில் இருக்கின்றோம். ஒன்றுபட்ட இலங்கைக்குள் அமைதியான வழியில் தீர்வையெட்ட இந்திய அரசு முயற்சியை மேற்கொள்ளும்" என்று தெரிவித்தார்

ஆக, புலிகள் வலுவாக இருந்த போதும், புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதும்...காவி, பாஜக கும்பல் தனி ஈழத்தை ஆதரிக்கவில்லை...

காவிகளுக்கு சொம்பு தூக்கி கொண்டு கருப்புத் துண்டோடு...ஈழ வியாபாரம் செய்ய வருபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று மக்களே முடிவு செய்யுங்கள்..

மோடி இஸ்லாமிய மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை


வியாழன், 26 டிசம்பர், 2013

அம்பேத்கரை ஆதரிப்பது ஒவ்வொரு சுயம‏ரியாதைக்காரரின் கடமை - பெரியார்

எந்த விஷயத்துக்கும் கொள்கைகளுடன் அனுபவ ஞானமும் இருந்தால்தான் அதை மனிதத்தன்மை என்று சொல்லலாமே ஒழிய, மற்றபடி அனுபவ சாத்தியத்துக்கு இணங்காத கொள்கைகள் எதுவானாலும் அதைப் புஸ்தகப் பூச்சி என்றுதான் சொல்ல வேண்டும்; அல்லது வெறும் அபிப்பிராயத்துக்கு மாத்திரம் பெறுமானவர்களே ஒழிய, காரியத்திற்குப் பெறுமானவர்கள் அல்ல என்று சொல்ல வேண்டும்.

வெளிப்படையாய் நாம் பேசுவதானால், அம்பேத்கரும், அவரைப் பின்பற்றுவோரும் நாஸ்திகர்களாவதற்கும், மதமில்லாதவர்கள் ஆவதற்கும் இஷ்டமில்லாமல், அவர்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்காக முகமதியராகி விடலாம் என்று அவர்கள் கருதினால், அதில் நமக்கு இருக்கும் ஆட்சேபனை என்ன என்று கேட்கின்றோம்.

முகமதிய மதத்தில் பல கெடுதிகள் இருக்கலாம்; கோஷம் இருக்கலாம்; கடவுள் இருக்கலாம்; மூடநம்பிக்கை இருக்கலாம்; மதச் சின்னம், மதச் சடங்கு இருக்கலாம்; சமதர்மமில்லாமலும் இருக்கலாம். இதெல்லாம் யாருக்குக் கூடாது? சுயமரியாதைக்காரருக்கு கூடாததாய் இருக்கலாம். மற்றும் பெண்ணுரிமை மாத்திரம் பேணுவோருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; மூடநம்பிக்கை அனுஷ்டிக்காதவர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; மதவேஷமும் பயனற்ற சடங்கும் வேண்டாதவருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; நாஸ்திகர்களுக்கும், பகுத்தறிவுவாதிகளுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; சமதர்மவாதிகளுக்கும், பொதுவுடைமைக்காரர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்.

ஆனால், தீயர்கள், பறையர்கள், புலையர்கள், நாயாடிகள் என்று அழைக்கப்படுகின்ற ஒதுக்கப்பட்டிருக்கின்ற, தாழ்த்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு, நாயிலும், மலத்திலும், புழுத்த விஷக்கிருமிகளிலும் கேவலமாக மதிக்கப்பட்டு வருகிற மக்களிடம் தங்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிந்தால் போதும் என்று கருதிக்கொண்டிருக்கும் மக்களிடம் நமக்கு வேலை உண்டா இல்லையா என்று கேட்கின்றோம்.

ஏனெனில், அவன் கிறிஸ்தவனாகி, கிறிஸ்தவப் பறையன், கிறிஸ்தவச் சக்கிலி, கிறிஸ்தவ பிள்ளை, கிறிஸ்தவ நாய்க்கன் என்று தீண்டாதவனாகவே இருப்பதைவிட, பறத்துலுக்கன் என்றோ, சக்கிலிய முகமதியன் என்றோ, தீய முஸ்லிம் என்றோ அழைக்க இடமில்லாமலும் அழைக்கப்படாமலும் இருக்கும்படியான நிலையிலும் மற்றசமூகக்காரர்களோ மதக்காரர்களோ அவ்வளவு சுலபமாக இழிவுபடுத்தவோ, கொடுமையாய் நடத்தவோ முடியாத சுயமரியாதை அனுபவமும் உள்ள நிலையிலும் இருக்கும் ஒரு மதத்திற்கு, "எப்படியாவது தீண்டாமையை ஒழித்துக் கொள்ள வேண்டும்'' என்கின்றவன் போனால், இதில் சுயமரியாதைக்காரனுக்கு என்ன நஷ்டம் என்று கேட்கின்றோம். அன்றியும், "சரி, எப்படியாவது சீக்கிரத்தில் தீண்டாமையை ஒழித்துக் கொள்'' என்று சொல்வதிலும் என்ன தப்பு என்றும் கேட்கின்றோம்.

நமக்குக் கடிதம் எழுதின நண்பர், "இந்து மதத்தில் தீண்டாமை இருக்கிறது; இஸ்லாம் மதத்தில் பார்க்காமை இருக்கிறது; பெண்களுக்கு உறை போட்டு மூடிவைத்து இருக்கிறார்கள்'' என்று எழுதி இருக்கிறார். அது (உறை போட்டு வைத்திருப்பது) உண்மை என்றும், தவறானது என்றுமே வைத்துக் கொள்ளுவோம். இது, பெண்ணுரிமை பேணுவோர்கள் கவனிக்க வேண்டிய காரியமே ஒழிய, தீண்டாமை விலக்கு மாத்திரம் வேண்டும் என்று கருதுகின்றவர்கள் யோசிக்க வேண்டிய காரியம் அல்ல என்பது நமது அபிப்பிராயம்.

இந்து மதம் சீர்திருத்தம் அடைந்து வருகிறது என்றும், தீண்டாமை ஒழிக்கப்பட்டு வருகிறது என்றும், சில மூடர்களும், சூழ்ச்சிக்காரர்களும் சொல்லுகிறார்கள். அதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்து மதம் சீர்திருத்தமடைந்து வரவில்லை; இந்து மதம் ஒழிந்து வருகின்றது என்றுதான் சொல்லுவோம். இந்து மதத்தில் சீர்திருத்தத்திற்கு இடமில்லை; அதைச் சீர்திருத்தம் செய்ய யாருக்கும் அதிகாரமும் இல்லை. இந்து மத ஆதாரங்கள் என்பவை அம்மத வேதம், சாஸ்திரம், புராணம் என்று சொல்லப்படுபவைகளைப் பொறுத்ததே ஒழிய, சாமிகள் என்றும், மகாத்மாக்கள் என்றும், தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொள்ளும் சில விளம்பரப் பிரியர்களைப் பொறுத்தது அல்ல.

இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு அனுகூலம் செய்ய, சில தீவிர சுயமரியாதைக்காரர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளுகின்றவர்கள், அம்பேத்கர் வேறு மதத்துக்குப் போவதை அனுமதிக்கக் கூடாது என்றால் அது நியாயமாகுமா? அல்லது ஒன்றும் பேசாமல் சும்மா இரு என்பதுதான் நியாயமாகுமா? ஆதலால், அம்பேத்கருடைய முடிவை நாம் மனமார ஆதரிப்பதுடன், அம்முடிவுப்படி சரியான செயலுக்கு நம்மாலான உதவியளிக்க வேண்டியதும் ஒவ்வொரு சுயமரியாதைக்காரருடையவும் கடமையாகும் என்பது நமது அபிப்பிராயம்.
(17.11.1935 "குடி அரசு' இதழில் எழுதிய தலையங்கம்)

நன்றி : கீற்று