புதன், 6 பிப்ரவரி, 2013
Haasan Lied. Vishwaroopam Will Not Make Indian Muslims Proud - Feroze Mithiborwala
சனி, 23 ஜூன், 2012
பாலியல் தொழிலாளியின் தமிழ் முத்தம்
அடர்ந்த பிரதேசம் அது. Sex Ratio அதிகம் உள்ள இடம் அது. பெண்கள் அதிகம் உள்ள பகுதி என்று எடுத்துக் கொண்டாலும் சரி, Sex அதிகம் நடக்கும் இடம் என்று எடுத்துக் கொண்டாலும், தாராவியிலிருந்து தினமும் 20 நிமிடம் ரயில் பயணத்திற்கு பின், 10 நிமிட நடையில் நான் நாளும் கடந்த பகுதி அது. அந்த பகுதிக்கு அருகில்தான் என் அலுவலகம். அலுவலகத்தில் நிரம்ப பெண்கள் நிரம்பியிருப்பர், அது இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்திற்காக பணி புரியும் ஒரு கால் சென்டர். என்னோடு பணிபுரியும் பெண்கள் தேவதைகளாகவும், கஞ்சிக்காக வெளியே அரைகுறை உடையோடு காத்திருக்கும் பெண்கள் பரத்தைகள் என்ற புரிதலோடுதான் நான் இருந்தேன். உடன் பணிபுரியும் பெண்கள் மீது ஏற்பட்ட ஈர்ப்பு, அந்த பெண்கள் மீது ஏனோ வந்ததில்லை. அவர்கள் ஏதோ சொந்த விருப்பத்தின் பெயரில் அந்த தொழிலில் ஈடுபடுவதாக ஆழ் மனதில் பதிந்து போனது கூட காரணமாயிருக்கலாம். ஒரு நாள் என்னுடன் பணி புரியும் தோழியை வேலைக்கு வரும் வழியில் இடைமறித்து ஒரு தரகர் அந்த தொழிலுக்கு அழைத்த நிகழ்வு புரிதல் இல்லாமல் அந்த பெண்கள் மீதேதான் திரும்பியது.
நாட்கள் உருண்டோடின, மும்பையின் வாழ்க்கை முறை தமிழகத்தின் மீது தந்த ஈர்ப்பு சென்னைக்கு இழுத்து வந்தது.
சினிமா மோகத்தோடு வந்த என்னை சென்னை என்னை வரவேற்று ஒரு ஓலை குடிலுக்குள் தள்ளியது. அப்படியே ஒரு போலி சினிமா இயக்குனரிடம் உதவி இயக்குனராக இணைந்து பணி புரியும் வாய்ப்பையும் தந்தது. பெண்களை போகப்பொருளாக மட்டும் பார்த்து பழகிய பல பழைய முகங்களின் பிரதிபலிப்பாகத்தான் அவர் இருந்தார். “ உனக்கு சான்ஸ் தந்தா? எனக்கு என்ன கிடைக்கும்?” என்கிற ரீதியில்தான் அவரது பேரமே தொடங்கும். அவரோடு பயணித்த அந்த நீண்ட நாள் அயர்ச்சியை தந்ததேயன்றி சினிமாவின் கெண்டைக்கால் மயிரைக்கூட கடைசி வரை காண்பிக்கவில்லை. பொருளாதார சிக்கல் காரணமாக மீண்டும் ஒரு மாத காலத்திற்கு மும்பை சென்றேன். நல்ல மழைக்காலம். ஒரு போலித்தனமான மின்னஞ்சலில் 5 கோடி ரூபாய் பரிசு விழுந்திருப்பதாய் நம்பி ஆந்திரத்தில் பிரபலமான இயக்குனரும், தமிழ்த் திரையுலகில் சில திரைப்படங்களில் நடித்த நடிகையின் கணவருமாகிய ஒருவரோடு என் இயக்குனரும் மும்பை வந்து சேர்ந்தார். பல முயற்சிகளுக்கு பிற தம் பணத்தாசை தவறானது என்று உணர்ந்தவர், மும்பையின் இரவு வாழ்க்கையை காணவிரும்புவதாக கூறினார். நானும் எனக்கு தெரிந்த மும்பை நிழுலகத்தில் முன்பு தீவிரமாக இயங்கி வந்த ஒரு நபரை துணைக்கு அழைத்துக் கொண்டு கிராண்ட் ரோட்டிற்கு சென்றேன். கூடவே ஓட்டுனரான ஒரு நண்பரும் வந்தார்.
நாங்கள் அவ்விடத்தில் முதலில் சென்றது, ஒரு லேடிஸ் பாருக்கு. அங்கே பக்கவாதம் வந்த ஒரு
அல்லக்கைகள் பணத்தை இறைத்துவிட, அங்கே நடனமாடும் பெண் தன் இடுப்பு வளைவுகளின் அசைவுகளின் வழி அந்த பணத்தை அள்ளிக் கொண்டிருந்தாள். பாரில் (உலகில் அல்ல) ஒரு ஓரத்தில் அமர்ந்து இதை ரசித்துக் கொண்டிருந்த இயக்குனர், இந்த பெண்ணையே நம் திரைப்படத்தில் நடிக்க வைத்தாலென்ன? என சிந்திக்க தொடங்கியிருந்தார். எவ்வளவோ முயன்றும் அந்த பெண்ணின் தொடர்பு எண்ணை அவரால் கடைசிவரை பெறவே முடியவில்லை. அங்கிருந்து கிளம்பி நேராக காமாட்டிபுரா பகுதிக்கு சென்றேன்.
“கடைக்கண் பார்வைதனை கன்னியர்தம் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்” என்று கேட்ட வசனம் அங்கே பொய்த்து போனது. கடைக்கண் பார்வைக்கு அங்கே 100, 200, 500 என விலை அட்டை தொங்கவிடப்பட்டது போல இருந்தது. வண்டியிலிருந்தபடியே இதை நோட்டம் கொண்டிருந்த எனக்கு முன்னிருக்கையில் இருந்து இறங்கி கீழே சென்று வர வேண்டுமென்று ஆவல். இறங்கி அருகிலிருந்து பெட்டிக்கடைக்கு சென்று ஒரு கோல்டு ஃபிளாக் சிகரெட்டை வாங்கி பற்ற வைத்ததுதான் தாமதம்.
“ பாய் பகூத் படியா அய்ட்டம் ஹை, ஷிர்ஃப் 500 ருப்யே, 2 ஷாட்” என்றான் என் பின் நின்றிருந்த ப்ரோக்கர்.
“நஹி பாய்” என்று முன் நகர்ந்தால், நான் இருந்த இருக்கையில் வெள்ளை காக்ரா சோலி அணிந்திருந்த பெண் அமர்ந்து கொண்டு அந்த ஓட்டுனரை தடவிக் கொண்டிருந்தாள். மெல்ல அவளை சமாதானப்படுத்துவதாக நினைத்து வண்டிக்கு வெளியில் காத்திருந்தால், அவள் இருக்கையை விட்டு எழுந்து வெளிச்சென்றதுதான் தாமதம், இவர்கள் சமாதானமின்றி அவள் பின்னே சென்றுவிட்டனர். உள்ளே இரண்டே, இரண்டு படுக்கைகள், நடுவில் ஒற்றை துணித் திரை. உள்ளே சென்றதும், தன் ரவிக்கைக்குள் கைவிட்டு தன் மார்பகங்களை வெளியே திமிரச் செய்து..
“ஏ பாய் அய்ஸா அய்டம் சினிமாமேபி நஹி மிலேகா ஸிர்ப் 500 ருப்யா...கோன் பஹ்லா ஆயேகா?” (இதை மாதிரி அய்ட்டம் சினிமாவிலேயே கிடைக்காது, 500 ரூபாய்தான், யார் முதலில் வருவது?)என்று கூறிக் கொண்டே ஒருவரை இழுத்து படுக்கையில் தள்ளி விட்டிருந்தாள். அவர் பதறிப்போய் எழுந்து, “ருக்கோ, பாத் தோ கர்னே தோ” (நில்லுங்க பேசவாவது விடும்மா...)என்றார். இவர் பேசிக் கொண்டே இருக்க அவள் கவனியாதவளாய், மற்றவர்களை இழுக்க தொடங்கினாள். ஒருவருக்கு அங்கே துணிச்சல் வராததால், அனைவரும் வெளியேற முயற்சிக்க...
“அந்தர் ஆ கயா நா 500 ருப்யே தோ தேனா படேகா.”( உள்ளே வந்திட்டீங்க இல்ல, 500 ரூபாய் தந்துதான் ஆகணும்) என்று மிரட்ட தொடங்கிவிட்டாள்.
ஓட்டுனர்-நண்பர் காவல்துறையைப் போல வெட்டப்பட்டிருந்த தன் முடியை காண்பித்து, தாங்கள் பரிசோதனையிட வந்ததாகவும், காவல்துறையில் உயர் பதவியில் இருப்பதாகவும் கூற, உடனே எங்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டாள்.
பிறகு, ஒரு மதுக்கடைக்கு சென்று மதுவையும், உணவையும் வயிற்றுக்குள் நிரப்பிக் கொண்டு, ஒவ்வொரு விடுதியாய் சென்றோம், ரோட்டில் தரகு வேலை பார்க்கும் ஒருவன் நண்பனை போன்ற பேச்சுப்பாவனையோடு சலிக்காமல் ஒவ்வொரு விடுதிக்காய் அழைத்துச் சென்றான். விடுதிக்குள் நுழைந்ததும், மென் – விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட அறைக்குள் ஷோபாவில் அமர்ந்ததும், கதவை பூட்டிவிட்டு பெண்களை வரவழைத்தான் அந்த ப்ரோக்கர். வரிசையாக பெண்கள் வந்து நின்றனர். சிலர் சோர்விலும், சிலர் சோற்று பருக்கைகள் கைவிரலிடுக்கிலும், சிலர் உறக்கத்தை இமைகளுக்கு நடுவிலும் சுமந்தபடி வந்து நின்றனர். 5 நபர்களுக்கும் பெண்கள் தேட, 2 பெண்களுக்கு மேல் இவர்களின் ரசனைக்கு யாரும் தேராததால், மற்றொரு விடுதிக்கு சென்றனர். இப்படியே இந்த படலம் இரவு 12 மணி தொடங்கி, அதிகாலை 3 மணிவரை தொடர்ச்சியாக நடந்தது. இறுதியில் களைப்புற்று, இந்த விடுதியில் எப்படியான பெண்கள் இருந்தாலும் அவர்களோடு நேரத்தை கழித்துவிட்டு கிளம்பலாமென்று முடிவு செய்துவிட்டே உள்ளே நுழைந்தனர். கொண்ட கொள்கையில் உறுதியாய் நின்று அங்கிருந்த பெண்களில் 5 பேரை தேர்ந்தெடுத்தனர்.
கட்டிலின் மீது போடப்பட்டிருந்த மெத்தையின் நடுவில் அந்த ஆந்திர இயக்குனர் அமர்ந்து கொள்ள, அந்த பெண்கள் அவரை சுற்றி அமர்ந்து கொண்டனர். அதில் ஒரு பெண் எழுந்து வந்திருந்த ஒரு நண்பரின் தோளில் கைபோட்டுக் கொண்டு, ஏதோ பலநாள் பழகியவள் போல் உரையாடிக் கொண்டிருந்தாள், அவரும் ஏதோ நீண்ட நாளாய் உயிருக்கு, உயிராய் காதலித்ததுபோல் உரையாடிக் கொண்டிருந்தார். அந்த ஆந்திர இயக்குனர் தன் அருகில் இருந்த பெண்ணின் தொடையை தட்டி, “ ச்சீ, என்ன இத்தனூண்டு டிரெஸ் போட்டிருக்கே.” என்று சொல்ல.... அந்த பெண் ஏதோ கொஞ்சம் அதீத கோபம் வந்தவளாய்,
“ ஜிஸ் காம் கே லியே ஆயா, ஓ கர்கே நிகல் ஜானா, ஐஸா சவால் முஜே நா பூச்னா. க்யா சமஜ் ரகா முஜே” (என்ன வேலைக்கு வந்தியோ, அதை முடிச்சிட்டு போய்ட்டே இரு, இதை மாதிரிலாம் கேள்வி கேட்காதே, என்ன நினைச்சிட்டு இருக்கே என்னை?)
என்று திட்டிவிட்டு எழுந்து நகர்ந்து விட்டாள். அந்த பெண்ணின் சுயமரியாதை மெய்யாலுமே அழகாய்த்தான் இருந்தது. சமீபத்தில் ஒரு நீதிமன்ற தீர்ப்பில், பல நபர்களோடு உறவு வைத்துக் கொண்ட பெண்ணாக இருந்தாலும், அவள் முன்வைக்கும் புகாரை அவள் நடத்தையை முன்வைத்து புகாரை நிராகரிக்க முடியாது.
மதுவும், இதர பண்டங்களும், பெண்களுமாய் இருந்த அந்த சூழல் ஒரு சில நிமிடத்தில் ரணகளமாகி விட்டிருந்தது. திட்டு வாங்கிய அந்த இயக்குனருக்கு முகத்தில் ஈயாடவில்லை. அசடு வழிய சிரித்துக் கொண்டிருந்தார். அந்த பெண் அவசரமாய் சென்றதை கவனித்த வெளியில் காத்திருந்த தரகர்,
“க்யா ஹுவா பாய், குச் ப்ராப்ளம் ஹை க்யா.” (என்ன சகோதரா, ஏதும் சிக்கலா?) என்று வினவினான்.
வாசல் கதவுக்கருகே நின்றிருந்த நான் விளக்கிச் சொன்னதும்,
“ துஸ்ரி லட்கி பேஜூன் க்யா. மதராசி லட்கி சலேகி க்யா?” என்றபடி சென்றான்.
சில நிமிடங்களில், ஐந்தடி உயரத்தில் ஜீன்ஸ் பேண்ட், டி-சர்ட் அணிந்தபடி அந்த கருத்த நிறப் பெண் உள்ளே வந்தாள்.
“என்னங்க, அவர் கிண்டல் பண்ணதுக்கே அந்த பெண் ஓடிடுச்சு, இதுக்கே இப்படின்னா, இந்த மாதிரி தொழில்கள்ல எப்படி?” என்று நான் கேட்டதுதான் தாமதம்.
“உங்ககிட்ட பேசுறதுக்கோ, கிண்டல் பண்றதுக்கோ, என்னங்க இருக்கு, சொல்றதுக்கு ஒண்ணுமில்லாதவங்ககிட்ட?” என்று படபடவென பொறிந்து தள்ளிவிட்டாள்.
எனக்கோ அவள் சொன்னது, “எங்களுக்கு இந்த உலகத்திடம் சொல்ல ஒன்றுமில்லை, அதற்கான தகுதியும் இந்த உலகத்தில் இல்லை.”என்றதுபோல்தான் கேட்டது.
சில நிமிடங்களில் மீண்டும் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த தரகர்,
“ யஹா பைட்கே பாத் கர்தே ஹி ரகேங்கே க்யா? ஹர் ஏக், ஏக் லட்கி கோ லேக்கர், அப்னே அப்னே கம்ரே மேன் ஜாவ், அய்ஸா நஹி சலேகா” ( இப்படியே அமர்ந்து பேசிக் கொண்டிருப்பீர்களா, தத்தமது அறைக்கு ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு செல்லுங்கள், இப்படியே பேசிக் கொண்டிருப்பது செல்லாது) என்றான்.
அப்படியே ஒவ்வொருவரும் தத்தமது அறைக்கு ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு சென்றனர். அவளை மட்டும் வந்திருந்தவர்கள் தேர்வு செய்யவில்லை. நானும் அந்த பெண்ணும் மட்டும் மீந்து நின்றோம், தரகர் என்னைப் பார்த்து ஏதோ வினவுவது போல கண்ணசைத்தான். நான், “இந்த பெண்ணை என்னோடு அழைத்துச் செல்கிறேன்.” என்றேன்.
அறைக்கான திசை காண்பிக்கப்பட்டது. நானும் எனது பையை எடுத்துக் கொண்டு அந்த அறைக்குள் சென்றேன். உள்ளே சென்றதும், எனக்கு புகைக்க வேண்டுமென்றேன். அறைச்சேவகன் ஒருவனை அழைத்து எனக்கு தீப்பெட்டி வாங்கித் தந்தாள். நான் புகைத்தபடியே அமர்ந்திருந்தேன். அவளை வந்து அமருமாறு அழைத்தேன். அவள் காத்திருக்குமாறு கூறுவிட்டு வாசலிலேயே நின்றாள். அதே சேவகன் ஒரு வெள்ளைத் துண்டை கொண்டு வந்து கொடுக்க, அவள் அதை வாங்கி என்னிடம் தந்தாள். நானும் வாங்கி என் அருகில் அதை வைத்தேன். அதை வைத்தபடியே,
“ இப்படியான தொழிலைச் செய்கிறீர்களே, ஏதும் பாதுகாப்புக்குப் பயன்படுத்துவதில்லையா?” என்றேன்.
“அந்த துண்டைத் திறந்து பாருங்கள்.” என்றாள். திறந்தேன், உள்ளே ஆணுறை இருந்தது. கழிவறைக்குச் செல்வதாக சொல்லிச் சென்றவள், சிறுது நேரத்தில் வந்து அறைக் கதவை தாழிட்டாள்.
அறையை மெல்லிய மின்விளக்கின் வெளிச்சம் பரப்பி நின்றது. நானும் புகைத்து முடித்தேன். அருகில் அமர்ந்திருந்தவளிடம் “அப்புறம் என்ன?” என்றதும்,
தம் உடையை கழற்றத் தொடங்கினாள். நான் பதறிப் போய்,
“ஏய் நான் சும்மா சொன்னேன். நாம் அமர்ந்து பேசலாம்.” என்றேன்.
“என்ன பேசவேண்டும்?” என்று நமட்டு சிரிப்போடு தலையை கீழே கவிழ்த்தபடி அமர்ந்தாள்.
“ நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன், நான் இங்கே வந்தது தெரிந்தாள் கொன்றுவிடுவாள். நீங்கள் யாரையாவது காதலிச்சிருக்கீங்களா?” என்றேன். பொதுச்சமூகத்தில் உலவுகின்ற திமிர் கண்டிப்பாக அந்த சொற்களில் தொனித்திருக்கும் என்றே நம்புகிறேன். சட்டென வந்தது அவளிடமிருந்து ஒரு பதில்.
“அதென்ன, காதலிச்சிருக்கீங்களா? நான் காதலிக்கிறேன், இப்பவும். நான் சென்னை பொண்ணு, கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிட்டு இருந்தேன். திடீர்னு அப்பா தவறிட்டார், பெருத்த பொருளாதார சிக்கல், ஒரே தம்பி அவனும் படிக்கணும், ஆக, நான் படிப்பை நடுவில் நிறுத்திட்டு வேலைக்கு போகத் தொடங்கினேன், அங்கேதான் அந்தப் பையனை சந்திச்சேன், ரொம்ப நேசிச்சோம், அந்த வேளையில் பெங்களூர்ல வேலை இருக்கிறதா ஒரு பொண்ணு சொல்லி பெங்களூர் போனேன், அங்கேயிருந்து ஒரு கும்பல் என்னை இங்கே கடத்திட்டு வந்திடுச்சு, ரெண்டு வருசமா இங்கேதான் இருக்கேன், நான் நேசிக்கிறவனுக்கு நான் தகுதியுள்ளவளா நான் என்னை கருதலை, அதனால், அவனைவிட்டு விலகிவிட்டேன், அவன் நான் அவனை ஏமாற்றிவிட்டதாக கருதிக் கொண்டிருக்கிறான். இன்றும், எனது நண்பர்களுக்கு வாரம் ஒருமுறை அழைத்து, அவன் எப்படியிருக்கிறான் என்று விசாரிக்கத்தான் செய்கிறேன். ஆக, நான் இப்பவும் காதலிக்கத்தான் செய்கிறேன்.”
அதெல்லாம் சரி, “இவ்வளவு பேசுற நீங்க ஏன், முகத்தை கீழே வச்சிக்கிட்டு பேசுறீங்க, என்னை பாத்து பேசுறதுக்கு அளவுக்கு கூட எனக்கு தகுதியில்லையா?” என்றேன்.
“அப்படியில்லை, நான் சென்னைப் பொண்ணு. வேற மொழிக்காரங்க வருவாங்க, வாய்ல வெற்றிலை எச்சிலோடு வருவாங்க, வாய்நிறைய மதுநாற்றத்தோடு வருவாங்க, அப்பல்லாம் வராத குற்றவுணர்வு,கோபம், கழிவிரக்கம், இங்கே யாராவது தமிழர்கள் வந்தால் எனக்கு வந்துவிடும், உடலெல்லாம் கூசுவது போல இருக்கும், அதனால்தான் உங்கள் முகத்தை பார்த்து பேச முடியவில்லை.” என்றாள்.
என்னால பேசவே இயலவில்லை, நான் பேசுகின்ற மொழி, முடிந்தளவு தூயத்தமிழில் பேச முயற்சிப்பது பிறருக்கு மகிழ்ச்சியைத் தரும் என்றுதான் நினைத்திருந்தேன், தேமதுர தமிழோசை கேட்டிடல் இன்பமென்றுதான் நினைத்திருந்தேன், ஆனால், அது அப்படியில்லாதிருக்கக் கூடும், அது துன்பம் தரக்கூடியதாகவும் இருக்குமென்று அன்றுதான் உணர்ந்தேன்.
மெல்ல அவளது கைகளைப் பற்றிக் கொண்டு, முகத்தை மறைக்க முன் வந்து விழுந்திருந்த முடியை விரல்களால் நீக்கி, உன்னிடம் கடைசியாக யாராவது அன்பாக பேசி எத்தனை ஆண்டுகள் கடந்திருக்குமென்றேன், இரண்டு கண்ணீர் துளிகளை மட்டும் பதிலாய் தந்தாள். வெற்று அமைதி மட்டும் அங்கே நிலவியது மொழி அங்கே தேவைப்பட வில்லை.
“என்னை உன் நண்பனா நினைச்சுக்கோ, என் வீட்டுக்கு வா, புது உறவுகளை அறிமுகப்படுத்தி வைக்கிறேன், எவருக்கும் நீ யாரென்று தெரியாது, நானும் சொல்ல மாட்டேன்” என்றேன்.
“என்னால் இயலாது. மும்பையில் நடமாடுவதற்கு எனக்கு லைசன்ஸ் இன்னும் தரப்படவில்லை. அதோடு நான் இன்னாரென்று அறிந்து கொள்வதற்கு சிரமப்படும் உலகத்தோடு உறவாடி நான் எதை சாதிக்கப் போகிறேன்.” என்று சொன்னாள்.
“சரி, கிளம்புகிறேன், வாய்ப்பிருந்தால் என் எண்ணிற்கு தொடர்பு கொண்டுவிட்டு தாராவிக்கு வா” என்று கூறிவிட்டு எழும் பொழுது, அருகில் வந்தவள் நெற்றியில் முத்தமிட்டாள்.
“இந்த முத்தம் உன் அன்பிற்கு” என்று என்னை வழியனுப்பி வைத்தாள்.
அந்த முத்தத்தை தமிழுணர்வாளர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன், தன் முத்தத்தை விலைக்கு விற்க நிர்பந்திக்கப்படும் பல்-தேசிய இனப் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை களைய ஏதேனும் செயல்திட்டம் வகுக்க கோருவதற்கு நான் கொடுக்கும் லஞ்சமாகக் கூட அந்த முத்தத்தை நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.
வெள்ளி, 18 மே, 2012
தாராவி – உண்மை முகத்தின் சிறு அறிமுகம்
தாராவி, குட்டி தமிழ்நாடு. தமிழகத்தின் அனைத்துக் கட்சி, அரசியல் அமைப்புகள், இயக்கங்களின் கிளைகள், பொருட்கள் என அனைத்தையும் இங்கே காணலாம். சாதியை தமிழன் இங்கேயும் தூக்கி சுமப்பதும், அதனூடாக சண்டைகள் மாணவர் மட்டம் வரைக்கும் சில நேரங்களில் நீளுவதும் தமிழின வரலாற்றில் நீண்டகாலமாக கெடுவாய்ப்பு. தாராவியில் பார்ப்பனர்களை காணவே முடியாது. அவர்கள் தமது குடியிருப்பை தாராவியை சுற்றியுள்ள மாதுங்கா, சயான் போன்ற உயர்தட்ட பணக்காரர்களுக்கு நடுவில் அமைத்துக் கொண்டனர்.
தன்னகத்தே உழைக்கும் மக்களின் வாழ்க்கையை ஒரு வரலாறாக கொண்டிருக்கும் தாராவியை பற்றிய ஒரு சுறுக்கமான அறிமுகம்தான் இக்கட்டுரையின் நோக்கம்.
18 வது நூற்றாண்டில் தாராவி தீவாகவே இருந்தது. சிம்னாஜி அப்பா என்னும் இராணுவ தளபதி வசாய் என்னும் பகுதியை கைப்பற்றினார். அதற்கு முன்பாக தாராவியை கைப்பற்றியிருந்தார். 19 ம் நூற்றாண்டில் இறுதிக்கும் முன்வரை தாராவியின் தற்கால நிலப்பரப்பு பெரும்பாலும் சதுப்பு நிலப்பகுதியாக இருந்த கால கட்டத்தில் ‘கோலி’ என்று அறியப்படுகிற மீனவ மக்கள் குடியேறினார்கள். ஆனால், மீன்பிடி தொழ்ல் அந்த பகுதியில் குடியேற்றங்களுக்காக நிரப்பட்ட பொழுது வழக்கொழிந்து போனது. தாராவிக்கு அடுத்தாற்போம் உள்ள சயான் பகுதியில் வந்த அணைக்கட்டு தீவுப்பகுதியாக இருந்த தாராவியை மும்பை என்னும் தீவு நகரத்தோடு இணைக்கும் பணியை விரைவாக செய்து முடித்தது.
தாராவி தன் மரபு சார்ந்த மீன்பிடி தொழிலை இழந்தது. அதுவே, பிழைப்பு தேடி வரும் புதிய சமூங்களுக்கான குடியேற்றமாக மாறுவதற்கான வாய்ப்பாக அமைந்தது. குசராத்திலிருந்து குடியேறிய மக்கள் மண்பாண்டம் செய்வதை தொழிலாக கொண்டனர். தமிழகத்திலிருந்து குடியேறியவர்கள் பெரும்பாலும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் தங்கள் வாழ்வாதரத்தை அமைத்துக் கொண்டனர். இவர்களோடு மராத்தியத்தை சார்ந்த ‘சமார’என்று அறியப்படுபவர்களும் இணைந்து தோல் பதனிடும் தொழிற்சாலைகளை நிறுவினர். உத்திரபிரதேசத்திலிருந்து குடியேறியவர்கள் எம்ப்ராய்டரியை தமது தொழிலாக கொண்டனர்.
தமிழகத்திலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் குடியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் இஸ்லாமியர்கள், ஆதி திராவிடர்கள் மற்றும் நாடார் சமூகத்தை சார்ந்தவர்களாகவே இருந்தனர்.1920 க்கு பிறகு இவர்களது வரவு எண்ணிக்கை அளவில் அதிகரித்தது. மும்பையின் முதல் தமிழ் பள்ளியும், இவர்கள் வருகைக்கு பின் 1924 இல் நிறுவப்பட்டது. அடுத்த 40 ஆண்டுகளில் தாராவியில் இருந்த ஒரே தமிழ் பள்ளியாகவும் இதுவே திகழ்ந்தது. இன்று வரை மும்பையின் மேற்கு பகுதிக்குச் செல்ல மக்கள் தேர்வு செய்யும் ரயில் நிலையமாகிய மாகிமிற்கு ஒத்தையடி வழித்தடம் மட்டும்தான் முதலில் இருந்தது. தாரவியின் சதுப்பு நிலத்தின் பஞ்சம் பிழைக்க வந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அன்றைய காங்கிரசை சார்ந்த சமூக நல ஆர்வலர், பின்னர் சுயமரியாதை இயங்கிய தோழர் எம்.வி.துரைசாமியின் (http://shrimvduraiswamy.blogspot.in ) முன் முயறிசியில்தான் 1960 இல் தாராவி கூட்டுறவு குடியிருப்பு சங்கம் நிறுவப்பட்டது. அதன் கீழ் 338 குடியிருப்புகளும், 97 கடைகளும் உருவாக்கப்பட்டன. அந்த குடியிருப்புக்கு டாக்டர்.பாலிகா நகர் என்று பெயரிடப்பட்டது. தாராவியில் குடியிருப்புகள் உருவாக்குவதில், மும்பை பெருநகரத்தின் நடுவே தமிழர்களும், இன்னபிற சமூகத்தினரும் அவலமான சூழ்நிலையில் வாழும் சூழலை போக்க முன்முயற்சி எடுத்த துரைசாமி அவர்கள் தம் பெயரை முன்னிலைப்படுத்தாது, தாராவியில் சுகாதரமற்று வாழ்ந்து வந்த மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கிய மருத்துவர் பாலிகாவின் பெயரையே சூட்டியது, பெயருக்காக சண்டை போடும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ள வேண்டிய நற்பண்புகளில் ஒன்று.
தாராவியில் பெரும்பகுதி தமிழ் மக்கள் தொகையை பறையர் சமூகத்தவர்களே ஆட்கொள்கிறார்கள். இவர்களின் முன்னோர்கள் நிறுவிய மும்பை தென்னிந்திய ஆதி-திராவிட மகாஜன சபையின் சார்பாக தமக்கான பிள்ளையார் கோவிலை நிறுவியிருக்கிறார்கள். மும்பை வழக்கப்படி கொண்டாடப்படும் பிள்ளையார் சதுர்த்தி இந்த சங்கத்தினால் நூறாவது முறையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த அமைப்பின் சார்பாக ஒரு பள்ளிக்கூடமும் மிகச் சமீபத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த சமூகம் மட்டுமில்லாமல் மும்பையில் தக்ஷிணமாற நாடார் சங்கம் ஒன்றும் உள்ளது. இந்த அமைப்பின் சார்பாக தொடங்கப்பட்டுள்ள “காமராசர் உயர்நிலைப் பள்ளி” ஏழை தாராவி மாணவர்களின் கல்வியின் ஏற்றத்தின் பெரும்பங்கு வகித்த்து என்றால் மிகையாகாது. இந்த கட்டுரையின் தொகுப்பாளனான நான் அந்த பள்ளியில்தான் படித்தேன். அதனூடாக தமிழ் உள்பட நான்கு மொழிகள் கற்கும் வாய்ப்பு கிட்டியது.
கூடுதலாக மரபுசார் மண்பாண்டம், மற்றும் நெசவுத்தொழில், ப்ளாஸ்டிக் மீள் உற்பத்த்தி என்பதோடு மட்டுமில்லாமல் கழிவுகளை மீளுறபத்தி செய்யும் தொழிற்சாலைகளும் பரவலாக இங்கு உள்ளன. இங்கு 5000 வகையான வணிக வாய்ப்புகளும் ஒற்றை அறை தொழிற்சாலைகளும் நிரம்ப உள்ளன.
மீள்கட்டமைப்பு திட்டங்கள்
1997 முதல் ஹாங்காங்கில் உள்ள தய் ஹாங் என்ற குடிசைபகுதி மீள்கட்டமைப்பு செய்யப்பட்டதை முன்மாதிரியாக கொண்டு தாராவியை மீள்கட்டமைப்பு செய்வதற்கான பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. 2004 இல் மீள் கட்டமைப்பிற்கான திட்ட மதிப்பீடு 5000 கோடியை தாண்டிவிட்டது. 2010 இல் இதே மதிப்பீடு 15000 கோடியை தாண்டியிருக்கிறது, முன்னேற்றமும், மீள்கட்டமைப்பும் அங்கங்கே, அவ்வப்போது எட்டி, எட்டி பார்க்கிறது என்பதுதான் எதார்த்தம்.
தாராவியின் முன்னேற்றம் என்பதாக முன்வைக்கப்படும் திட்டங்களுக்கு உலக அளவிலான நிறுவனங்கள் ஏலத்தில் பங்கெடுக்கின்றன. இதில் லெஹ்மன் பிரதர்ஸ் நிறுவனமும் அடக்கம். இது ஒரு பங்கு தரகு நிறுவனம்., இந்த நிறுவனம் தாக்கல் செய்த கூடுதலாக மதிப்பிடப்பட்ட பத்திரங்களை தன்னுடைய கணக்கு புத்தகங்களில் காலாண்டு இறுதிநிலை அறிக்கையில் அதன் உண்மையான கடன்தன்மையை மறைத்த விதத்தில் திரித்து தயாரித்தது. இதை நம்பி முதலீடு செய்தவர்கள் லெஹ்மன் பிரதர்ஸ் நிறுவனம் திவாலாகும் பொழுது பெரும் நெருக்கடிக்கு உள்ளாயினர். இந்த நிறுவனம் திவாலாகும் கட்டத்தில் அமெரிக்க அரசு 900 பில்லியன் டாலர் மக்கள் வரிப்பணத்தை கொடுத்து அந்த நிறுவனத்தை நெருக்கடியிலிருந்து மீட்டிருக்கிறது. இப்படியான மோசடித்தனமான நிறுவனம் தாராவிக்குள் முன்னேற்றம், மீள்கட்டுமானம் என்ற பெயரில் நுழைய முயற்சிப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. காலம், காலமாக வாழவே தகுதியற்றிருந்த மண்ணை வாழ பண்படுத்திய மக்களை முன்னேற்றம், மீள்கட்டமைப்பு போன்ற திட்டங்கள் மக்களுக்கு பங்களிப்பது போல தோற்றம் கொண்டிருந்தாலும் கண்டிப்பாக, அது தாராவி வாழ் மக்களை மெல்ல வெளியேற்றி பன்னாட்டு நிறுவனங்கள் ஆக்கிரமிப்பதற்காகவே அமையும் என்பதை உலகமயமாதலின் வரலாறறிந்தவர்களால தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
மிகச்சமீபத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் மீள்கட்டமைப்பு திட்டம் அமெரிக்க வாழ் முகேஷ் மேஹ்தாவால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின்படி தாராவியில் வசிக்கும் 57,000 குடும்பத்திற்கு சேவை செய்யும் பொருட்டு 3,00,00,000(மூன்று கோடி) சதுர அடிக்கு குடியிருப்பு, பள்ளி, விளையாட்டு திடல், சாலை போன்றவை அமைக்கப்படும். ஆனால், விற்பனைக்காக கட்டப்படப் போகும் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களுக்காக இன்னபிற வசதிகளுக்காக பயன்படுத்தப்படப் போகும் நில அளவு எவ்வளவு தெரியுமா? 4,00,00,000( நான்கு கோடி). வாழ பண்படுத்திய மக்களுக்கு 3 கோடி சதுர அடி, பணம் வைத்திருக்கும் ஒரே காரணத்திற்காக தாராவி பக்கம் வரவே முகம் சுழிக்கும் மக்களுக்காக 4 கோடி சதுர அடி.. ஆக, மக்களுக்கு வசதிகள் செய்து தரப்போகிறோம் என்கிற பெயரில் கொள்ளையடிக்கப் போவது சில நிறுவனங்களும், அரசு அதிகாரிகளும், முதலாளிகளும்தான். காலப்போக்கில் விலைவாசி ஏற்றம், வசதி வாய்ப்பு பணக்காரர்களுக்கான தாராவியாக மாறும் பொழுது மூன்று கோடி சதுர அடியும் பிடுங்கப்படும் அல்லது மக்களே விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை இயல்பாக உருவாகும் என்பதையும் நாம் இந்நேரத்தில் நினைவில் கொள்ளுதல் நலம்.
இதில் இரண்டாயிரமாவது ஆண்டிற்கு முன்பு குடியிருந்தவர்களுக்குதான் வீடுண்டு. இத்தனை ஆண்டுகாலமாக சொந்த வீடில்லாது, வாடகை வீட்டிலேயே 10-15 ஆண்டுகளை ஓட்டிவிட்ட, வறுமையில் வாடும் குடும்பத்திற்கு வீடு கிடையாது. வீடு கிடைப்பவர்களுக்கும் எத்தனை சதுர அடியை அரசு முன்வைத்திருக்கும் திட்டத்தின்படி தருவதாக கூறியிருக்கிறார்கள் என்றால் 225 சதுர அடி. இந்த 225 சதுர அடி என்னும் அநீதிக்கு எதிராக மக்களிடையே கடும் எதிர்ப்பு இருந்து வருவது கள நிலவரம். அதோடு, இத்தனை ஆண்டுகாலமாக சிறு பெட்டிக்கடை, மளிகைக்கடை மட்டுமில்லாமல் கடலை, மிக்சர், சிப்ஸ் போன்றவை தயாரிக்கும் சிறு நிறுவன்ங்கள் வைத்து தம் பிழைப்பை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு தமது கடையும், பிழைப்பதற்கான வாய்ப்பும் மீண்டும் அமையும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
இது போன்ற ஐயங்களுக்கு அரசின் பதில் என்னவென்றால் சுற்றுசூழலை மாசுபடுத்தாத வணிக நிறுவனங்களை மீண்டும் சட்டபூர்வமாக இடமாற்றம் செய்து தருமாம். ஏழைகளிடம் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதென்றால், அரசுக்கு அலாதி பிரியம். ஆனால், சுற்றுசூழலை மாசுபடுத்தும் பெரும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுக்கும் பொழுது அந்த அக்கறை, அக்கரைக்கு சென்றுவிடுவதற்கு நாம் யாரை நொந்து கொள்வது.
தாராவி அதன் தொடக்க காலம் தொட்டு சந்தித்து வரும் பிரச்சினைகளில் முக்கியமான பிரச்சினை சுகாதாரம் தொடர்பானது. கழிவறை வசதி இன்றுவரை நேர் செய்யப்படவில்லை. இருக்கும் கழிவறைகள் சுத்தப்படுத்தப்படுவதில்லை. சுத்தப்படுத்தப்படுவதற்கு வழக்கம்போல் இந்தியாவெங்கும் உள்ளபடி தாழ்த்தப்பட்டவர்களைத்தான் அரசு அங்கே பணித்திருக்கிறது. அதுவும் போதுமான அளவில் ஊழியர்கள் கிடையாது. நவம்பர் 2006 இன் படி 1440 நபர்களுக்கு ஒரு கழிவறை என்ற விகிதத்தில்தான் தாராவியில் கழிவறைகள் உள்ளன. இன்றளவும் திறந்தவெளி கழிப்பிடங்களாக மக்களால் பயன்படுத்தபடுகின்றன. அதனூடாக தொற்றுநோய் பரவல் என்பது விரைவாக நடக்குமிடமாக இன்றளவும் தாராவி உள்ளது. தண்ணீரை பொறுத்தவரை தண்ணீர் விநியோகம் சீராக கிடையாது. அப்படியே வரும் தண்ணீர் குழாய்கள் சாக்கடைகள் வழியாக வருவது, அந்த குழாய்கள் துருப்புடித்து, ஓட்டை விழுந்து சாக்கடை நீர் கலந்து வரும் நீரையே மக்கள் பயன்படுத்தும் சூழல் இன்றளவும் நிலவுகிறது. தண்ணீரை தனியார்மயமாக்குவது, பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீர் தொழிலில் முதலீடு செய்வது, அரசு சுகாதரமற்ற நீரை வழங்குவது போன்றவற்றை வாசகர்கள் இவ்விடத்தில் பொருத்தி பார்த்தால் கூடுதல் விளக்கங்களும், தெளிவும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது
====================================================================================
வோல் ஸ்ட்ரீட்டின் குற்றத் தன்மையை லெஹ்மன் திவால் அறிக்கை அம்பலப்படுத்துகிறது
http://www.wsws.org/tamil/articles/2010/mar/100319_lehman.shtml
http://www.sra.gov.in/htmlpages/Dharavi.htm
http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4147:2008-09-27-07-54-49&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50