திங்கள், 2 ஜூன், 2014

பிச்சையிடப்பட்டதல்ல தலித் மக்களின் உரிமை!

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கள்ளர்கள் 1930 டிசம்பரில் தீண்டப்படாதவர்களுக்கு எட்டுத் தடைகளை விதித்தனர். இந்தத் தடைகள் மீறப்பட்டதால் தீண்டப்படாதவர்களுக்கு எதிராக கள்ளர்கள் கடும் வன்முறையைப் பயன்படுத்தினர். தீண்டப்படாதவர்களின் குடிசைகள் தீவைத்து சுட்டெரிக்கப்பட்டன; அவர்களுடைய களஞ்சியங்களும் சொத்துக்களும் நாசமாக்கப்பட்டன; அவர்களது கால்நடைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கள்ளர்கள் தீண்டப்படாதவர்களுக்கு விதித்த தடைகள் வருமாறு:
  1. ஆதி-திராவிடர்கள் தங்க நகைகளையோ வெள்ளி நகைகளையோ அணியக் கூடாது.
  2. ஆண்கள் முழங்காலுக்குக் கீழேயோ, இடுப்புக்கு மேலேயோ எந்த ஆடைகளையும் அணியக் கூடாது.
  3. ஆண்கள் கோட்டுகளையோ, சட்டைகளைய, பனியன்களையோ உடுத்தக் கூடாது.
  4. எந்த ஆதி-திராவிடரும் சிகை அலங்காரம் செய்துக் கொள்ளக் கூடாது.
  5. ஆதி-திராவிடர்கள் தங்கள் வீடுகளில் மண்பாண்டங்கள் தவிர வேறு எந்தப் பாத்திரங்களையும் பயன்படுத்தக் கூடாது.
  6. பெண்கள் ரவிக்கைகளோ, தாவணிகளோ அணிந்து தங்கள் உடலின் மேற்பகுதியை மூடிக்கொள்ளக் கூடாது.
  7. பெண்கள் தலையில் பூ வைத்துக் கொள்ளக் கூடாது; நெற்றியில் குங்குமப் பொட்டு இட்டுக் கொள்ளக்கூடாது.
  8. ஆண்கள் வெயிலுக்கோ, மழைக்கோ குடைகளைப் பயன்படுத்தக் கூடாது; கால்களில் செருப்புகள் அணியக் கூடாது.
இந்த எட்டுத் தடைகளும் திருப்திகரமாக நிறைவேற்றப்படாததால் 1931 ஜூனில் கள்ளர்கள் ஒன்றுகூடி மேலும் பதினோரு தடைகளை விதித்தனர். இந்தக் தடைகளை அவர்கள் செயல்படுத்த முற்பட்டபோது வன்முறை முன்னிலும் கொடிய முறையில் தலைவிரித்துத் தாண்டவமாடிற்று. இப்போது கள்ளர்கள் விதித்த பதினோரு தடைகள் வருமாறு:
  1. ஆதிதிராவிடர்களும் தேவேந்திர குல வேளாளர்களும் முழங்கால்களுக்குக் கீழ் வேஷ்டி கட்டக்கூடாது.
  2. மேலே கண்ட தாழ்த்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த ஆடவரும், பெண்டிரும் தங்க நகைகளை அணியக் கூடாது.
  3. பெண்கள் மண்குடங்களில்தான் தண்ணீர் எடுத்து வர வேண்டும்; பித்தளை அல்லது வெண்கலப் பாத்திரங்களில் தண்ணீர் எடுத்து வரக்கூடாது. தண்ணீர்க் குடங்களைத் தலையில் வைத்து சுமந்து வருவதற்கு அவர்கள் வைக்கோல் சும்மாடைப் பயன்படுத்த வேண்டுமே தவிர, துணி சும்மாடைப் பயன்படுத்தக் கூடாது.
  4. அவர்களுடைய குழந்தைகள் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளக்கூடாது.
  5. குழந்தைகளை மிராசுதாரர்களின் கால்நடைகளை மேய்க்கும்படி கூற வேண்டும்.
  6. ஆண்களும், பெண்களும் மிராசுதாரர்களின் பண்ணைகளில் அடிமைகளாக வேலை செய்ய வேண்டும்.
  7. அவர்கள் மிராசுதாரர்களுக்கு வாரத்துக்கோ, குத்தகைக்கோ நிலத்தை சாகுபடி செய்யக்கூடாது.
  8. அவர்கள் தங்கள் சொந்த நிலங்களை மிராசுதாரர்களுக்குக் குறைந்த விலைக்கு விற்று விட வேண்டும்; அவ்வாறு செய்யத் தவறினால் அவர்களது நிலங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட மாட்டாது. மழை பெய்து ஏதோ சிறிது விளைந்திருந்தாலும் அது இரவோடு, இரவாக களவாடப்படும்.
  9. அவர்கள் மிராசுதாரர்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை செய்ய வேண்டும்; ஆண்களுக்கு 4 அணாவும், பெண்களுக்கு 2 அணாவும் கூலியாகத் தரப்படும்.
  10. மேலே கூறிய வகுப்பினர் தங்கள் வீட்டுத் திருமணங்களின் போதோ, வேறு விசேஷங்களின் போதோ மேளவாத்தியத்தை பயன்படுத்தக் கூடாது.
  11. திருமணத்தில் தாலி கட்டுவதற்கு முன்னர் குதிரை மீது ஊர்வலம் வருவதை அவர்கள் நிறுத்த வேண்டும்; கல்யாண ஊர்வலங்களுக்கு தங்கள் வீட்டு கதவுகளையே பல்லக்குகளாக பயன்படுத்த வேண்டும்; எந்த காரியத்துக்கும் வாகனங்களை உபயோகிக்கக் கூடாது. ( அண்ணல் அம்பேத்கர் தொகுதி 10, பக்கம் 238-240)
மனு எங்கே நடைமுறையில் உள்ளது? இந்து மதத்தை மனுவை வைத்து மதிப்பிடக் கூடாது என்று முட்டுக் கொடுக்கும் இந்துத்வாதிகள். என்ன பதில் சொல்வார்கள் கள்ளர்கள் இந்துக்கள் இல்லையென்றா? அவர்கள் பார்ப்பனியத்திற்கு எதிரானவர்கள் என்றா?
ambமேற்கண்ட கொடுமைகளை சில கள்ளர்கள், அதுவும் வளம் படைத்த நிலச்சுவந்தார்கள்தான் முன்னின்று இதை நடைமுறைப்படுத்தினார்கள் என்று உழைக்கும் ஏழை கள்ளர்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பு கூறி சாதிவெறியை நியாயப்படுத்தலாம். நானும் அந்த ஏழை உழைக்கும் கள்ளர்கள்தான் குற்றவாளிகள் என்று சொல்லவில்லை. மேல்மட்டத்தில் இருக்கும் வளம் படைத்தவர்கள் செய்யும் வன்கொடுமைகள், சாதிவெறி கொண்டு செய்யும் திமிர்த்தனங்களை சகித்துக் கொண்டிருப்பதோடு, அதை எதிர்த்துக் கேள்வி கேட்காமல், ஏதோ ஒரு வகையில் ‘ஆழமனதை’( நீயா நானா Effect) திருப்திப்படுத்திக் கொள்வதோடு, தன்னை மேலானவர் என்ற அங்கீகாரம் தருகின்றது என்ற அந்த வளம் படைத்தவர்களின் மேலாதிக்கம் நீடிக்கும்படிக்கு சாதி கட்டமைப்புக்கு காவலாக நிற்கும் காவல்காரர்களாக கள்ளர்களை போன்றே பிற உழைக்கும் சாதி இந்துக்கள் நிற்கின்றார்கள் என்ற உண்மைதான் சுடுகின்றது .
வளம் படைத்த அயோக்கியவர்கள் தீண்டப்படாத மக்களை மட்டுமல்ல, தம் சொந்த சாதி உழைக்கும் மக்களையும் சுரண்டுகிறார்கள். அந்த சுரண்டலை எதிர்த்து போராடுவதற்கு, தீண்டப்படாத சாதிகளின் உழைக்கும் மக்களோடு இணைந்து போராட வேண்டுமென்ற விழிப்புணர்வு இல்லாமல் தேங்கி நிற்கின்றார்கள். தங்கள் தேக்கத்தை இயலாமையை சாதி மேலாதிக்கம் தரும் போதையில் மீசையை தடவிக் கொண்டே குப்புற விழுந்து கிடக்கின்றார்கள்.
மேற்கண்ட விசயங்களெல்லாம் இன்று மாறிவிட்டதே, இப்பொழுது ஏன் இதைபற்றியெல்லாம் பேசுகின்றீர்கள்? உங்களுக்கு மக்கள் பிளவுண்டு கிடக்க வேண்டுமென்ற ஆவலால்தான் இப்படியெல்லாம் பேசுகின்றீர்கள். தமிழ்த்தேசிய இனமென்று பெருமை கொண்ட இனத்திற்குள் பிளவு ஏற்படுத்த முயல்கிறீர்கள். அம்பேத்கர் வடநாட்டுக்காரர், இந்தியை ஆதரித்தாரென்று என்று அவசர, அவசரமாக உள்ளூர இருக்கும் வெறுப்பை உமிழ்ந்துவிட்டு போகின்றார்கள்.
மாற்றம் என்பது சாதி இந்துக்களின் அப்பனாத்தாவோ, பாட்டன் – பாட்டியோ மனமிறங்கி பெரும் இழிவுக்கு உள்ளான மக்களுக்கு பிச்சையிட்டதில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வில் சந்தித்த மாற்றங்களுக்கு காரணம் அந்த மக்களின் போராட்டங்கள்தான் காரணம். அதற்கு சில பொதுவுடமை இயக்கங்களோ, பெரியாரிய இயக்கங்களோ, தலித் அமைப்புகளோ உரிமைகள் கோரலாம். இவற்றில் தலித் மக்களின் போராட்டமும் முதன்மையான காரணம். அதேவேளையில், தங்களுடைய சாதி சட்டகத்தை களைந்துவிட்டு தலித் மக்களோடு கைகோர்த்து போராடிய தலித் அல்லாத தோழர்களின் பங்கும் மறுக்கத்தக்கதல்ல.
ஆனால், அந்த போராட்டங்கள் முழு எல்லையை தொடுவதற்கான வேலைகள் இன்னும் மீதமிருப்பதால் சாதியம் பழைய கடுமையை கொஞ்சம் தளர்த்திக் கொண்டு, நவீன தொழில்நுட்பங்கள் துணையோடு பல்வேறு தீண்டாமை வடிவங்களை இன்னும் நடைமுறைப்படுத்தத்தான் செய்கின்றன. நாம் இப்படி பேசிட்டிருந்தா ஒரு டீம் வந்து தலித் மக்கள் நடுவில் தீண்டாமையில்லையா? சாதி வேறுபாடுகள் இல்லையா? என்று எதிர்கேள்வி கேட்கலாம்.
அதற்கு நம் மொழியில் பதில் சொல்வதற்கு முன் அண்ணல் அம்பேத்கரின் வரிகளை அவர்களுக்கு நினைவுப்படுத்துவோம்.
“சாதிமுறை முக்கியமாக, இந்துக்களின் மூச்சுக்காற்று என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்துக்கள் அந்த மூச்சுக்காற்றால் சுற்றிலும் உள்ள காற்று முழுவதையும் கெடுத்துவிட்டார்கள். அதன் மூலம் சீக்கியர், முஸ்லீம், கிறிஸ்துவர் உள்ளிட்ட அனைவரும் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.” (தொகுதி 1, பக்கம் 118)
வேற்று மதத்தினருக்கும் தங்கள் மதத்தினருக்கு பிடித்திருக்கும் நோயை கடத்திக் கொண்டு போகும் ஆற்றலை பெற்ற பார்ப்பனிய இந்து மதம் தலித் மக்கள் நடுவில் சாதி என்னும் தொற்று நோயை பரப்புவது கடினமான காரியமா என்ன? எப்படி பிறசாதி உழைக்கும் மக்கள் தாங்கள் பின்பற்றும் சாதியம் தங்கள் சுதந்திரத்திற்கும் எதிரானது என்பதை உணராது சாதியத்திற்கு காவல் காக்கின்றார்களோ, அதுபோல தங்களது முதல் எதிரியான சாதியத்திற்கு விழிப்புணர்வு பெறாத தலித் மக்கள் தங்களுக்குள் இருக்கும் உட்சாதிகளிடையே சாதிய பிளவுகளை பிறாண்டி பார்க்கின்றார்கள்.
ஆனால், ஒன்று இங்கே கவனிக்கத்தக்கது எப்படி இஸ்லாமியர்களையோ, கிருத்துவர்களையோ சாதி இந்துக்கள் எதிர்க்கின்றார்களோ அதேபோலவே, தம்மை போலவே இந்து பண்பாட்டை பின்பற்றினாலும் தலித் மக்களை வெறுக்கும் வாய்ப்பை சாதி இந்துக்கள் தவற விடுவதேயில்லை.
இதெல்லாம் நல்ல வக்கனையா பேசுறீங்க. எதுக்குய்யா இட ஒதுக்கீடு கேக்குறீங்க என்று பழைய மொன்னையான கேள்வியை இன்னும் முன்வைத்து தலித் மக்களின் முன்னேற்றத்திற்கு எதிரான தங்கள் ஆழ்மனதுக்கு ஆறுதல் தேடிக் கொள்கிறார்கள் ஆதிக்கசாதிகள். ஆனால், இட ஒதுக்கீடு சாதி வளர்க்கின்றது என்பது சுத்த பேத்தலான வாதமென்பதை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென்பதற்காக, மீண்டும் ஒருமுறை இந்த கேள்விக்கு விரிவாக பதிலளிக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். அதற்கு முதலில் இட ஒதுக்கீட்டால் தலித் மக்கள்தான் அதிகம் பலனடைந்தார்கள் என்று உளறிக் கொண்டு திரியும் அறிவுஜீவிகள்(?), தலித் மக்கள் இந்த சுதந்திர இந்தியாவில் சாதி இந்துக்களை விட கூடுதலாக அடைந்த பலன்கள் என்னென்ன என்பதை பட்டியலிடுங்கள். அதோடு, இட ஒதுக்கீட்டல் சாதி இந்துக்கள் பெற்ற பலன்கள் தலித் மக்களைவிட குறைவானவை என்பதை தரவுகளோடு உணர்த்துங்கள். அதுவரை, உங்கள் பல்லிடுக்கின் நடுவில் இருக்கும் தலித் வெறுப்பு என்னும் சாதிவெறி நஞ்சை ஒடுக்கப்பட்டு மக்கள் எளிதில் கண்டுகொள்வார்கள் என்ற எச்சரிக்கை உணர்வோடு காவி கோவணத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

சனி, 5 ஏப்ரல், 2014

மரம்வெட்டிகளின் பங்காளிகள் மரம்வெட்டிகளே!

மாசுபட்ட சபர்மதி ஆறு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான 22 மார்ச் 2010 அன்று டி.என்ஏ நாளிதழில் வெளியான ஆவணமொன்று  இந்தியாவிலேயே அதிகமாக மாசுபட்ட மாநிலமாக குஜராத்தை அறிவிக்கின்றது,  அந்த ஆவணத்தில்,
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகவும் ஆபத்தான கழிவுகளில் மிக அதிகபட்சமாக 29% குஜராத்தே வெளியேற்றுகின்றது, அதற்கு அடுத்தப்படியாக மகாராஷ்டிரா 25% ஐ வெளியேற்றுகின்றது. மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் குஜராத்தை மிக அதிகமாக மாசுபட்ட மாநிலமாக அறிவிக்கின்றது. தொடர்ந்து அபாயமான கழிவுகளை வெளியேற்றுவது தொடர்ந்து அதிகரித்து வருவதிலிருந்து இந்த முடிவு எட்டப்பட்டது.

குஜராத்தில் இயங்கும் பெரும்பாலான தொழிற்சாலைகள் மாசுகட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியின்றியோ அல்லது சுரங்கம் தோண்டுவது போன்றவற்றில் சட்டத்திற்கு புறம்பாகவும் செயல்பட்டு வருகின்றன. மோடியின் அமைச்சரவை சகா பாபுபாய் போக்ரியா சட்டத்திற்கு புறம்பான சுரங்க பணிகளுக்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அதேபோல மோடி பாலூற்றி வளர்த்த மக்கள் விரோத நச்சுப்பாம்பான  அதானி மாசுக்கட்டுபாடு வாரியத்தின் அனுமதியின்றியே தமது முக்கியமான தொழில்களை நடத்தி வருகின்றார் என்பதை வாசிப்பவர்கள் ஆழ்ந்து தம் கவனத்தில் இருத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும். அதானி கும்பலின் இந்த மோசடியை 13, ஜனவரி 2014 அன்று குஜராத் உயர்நீதிமன்றம் உறுதி செய்ததோடு, அதானி கும்பலின் சிறப்பு பொருளாதார மண்டலங்களை (APSEZ) மூட  உத்தரவிட்டது. நைவால் கிராம மக்கள் சார்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த பாஸ்கர் பட்டாச்சார்யா தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. (இணைப்பு)

இந்த பொதுநல வழக்குகள் விசாரிக்கப்படுவதற்கு முன் சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சகம் சுனிதா நாரெய்ன் தலைமையில் நிபுணர் குழு அமைத்தது.அதானியின் சிறப்பு பொருளாதார மண்டலம்  ‘75 ஹெக்டர் மாங்க்ரோவ் காடுகளுக்கு கடுமையான தீங்கை செய்திருப்பதாக’ தமது அறிக்கையில் அந்த குழு குற்றம் சுமத்தியது.  
இந்த காவி கும்பல்தான் நமக்கு முன்னேற்றம் பற்றி வகுப்பெடுக்கின்றது. அனைத்து உயிர்களையும் வணங்குவதுதான் இந்து மதத்தின் சுபாவம் பீற்றித் திரியும் இந்த கும்பல், வனங்களை மட்டும் முதலாளிகளின் காலடியில் வைப்பதன் மர்மமென்ன? ஒருவேளை இந்த காவி கும்பல் வணங்கும் உற்சவ மூர்த்தியே முதலாளிகள்தானோ?
நம் மூதாதையர்கள் வாழ்ந்து பாதுகாத்த பூமியை, அடுத்த தலைமுறைக்கு விட்டு வைக்காமல், பணத்தாசை பிடித்து தெரியும் இந்த பெருமுதலாளிகளுக்கு தாரை வார்த்துவிட்டு தனது தேர்தல் பிரச்சாரத்தில் இந்த மோடி என்னும் பொய்யர் என்ன  உளறியிருக்கின்றார் தெரியுமா? சுற்றுச்சூழல் குறித்து கிஞ்சித்தும் அக்கறையில்லாத இந்த நரமாமிச மோடி மரங்களையும் வெட்டி வீழ்த்தி காடுகள் அழிய துணை போன எப்படி தன்னை மீட்பர் போல கட்டமைக்கின்றார் தெரியுமா?
தனது கோவா பிரச்சாரத்தில்,
“நாங்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்.”
“ஜெயந்தி நடராஜன் அமைச்சராக இருந்தபோது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்தில்  பணத்தை கொடுக்காமல் எந்த கோப்புகள் விரைவாக நகர்ந்ததே இல்லை. ”
இது மட்டுமில்லாமல், தனது ட்வீட்டர் கணக்கில்
“கோவா மக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பதற்கான உறுதிமொழியை வழங்கினேன்” என்று வேறு  எழுதி தொலைத்திருக்கின்றார்.
            பொய் சொல்வது பாசிஸ்டுகளுக்கு வெட்கமாயிருக்காதுதான். ஆனால்,  இந்த    பொய்களை நம்புபவர்களுக்கு  வெட்கம் வர வேண்டாமா?
[ஜெயந்தி நடராஜனுக்கு பிறகு 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு பெரிய தடையேதுமில்லாமல் ‘தடையில்லை’ ஆவணத்தை வழன்கும் மொய்லி அமைச்சராக இருப்பதையும், அந்த ஆளை பற்றி மோடி வாய்  திறக்கவில்லை என்பதையும் நினைவில் கொள்க]

மன்மோகன் கும்பல் மக்கள் நலனில் கரைதேர்ந்தவர்கள் என்றோ, மிகவும் நேர்மையானவர்கள் என்றோ நாம் கூறவில்லை. அவர்கள் உலக மகா திருடர்களே. ஆனால், மன்மோகனுக்கு மாற்று மோடி கும்பல் என்பது முட்டாள்தனத்தின் உச்சம். காங்கிரஸ் திருடர்கள் சுற்றுச்சூழல் விசயத்திலும் தேர்தல் நெருங்க, நெருங்க கார்ப்பரேட்டுகளுக்கு வேக, வேகமாக உரிமம் வழங்கியதை நாம் அறிவோம்.

ஆனால், அப்படி உரிமம்  வழங்குவதற்கு எதிராக ஒற்றை கேள்வியை இந்த கொலைக்கார கும்பல் கேட்டிருக்குமா? கேட்காது. 
ஏனென்றால், பிச்சைக்காரனுக்கு செக்யூரிட்டி பிச்சைக்காரனே.

நன்றி : இணைப்பு

வியாழன், 6 பிப்ரவரி, 2014

வைகோ + காவி கும்பலின் ஈழ ஆதரவு லட்சணம்

இலங்கையை இந்தியாவோடு இணைக்கும் தீர்மானத்தை இலங்கை தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். – சு.சாமி (1-5-2000)

தீர்வுக்கான எந்த உத்தரவாதமும் பெறாமல் இலங்கை அரசுக்கு உதவி செய்வதன் மூலம், ஈழத்தமிழர்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்கின்றது. சு.சாமி 3-5-2000

“சிலர் தனி ஈழம் கோருகின்றார்கள், எங்கே இருக்கின்றது ஈழம்? புலிகளே அதை இன்னும் அறிவிக்கவில்லையே” – கிருஷ்ணமூர்த்தி ( பாஜக, துணைத்தலைவர்) தில்லியில் 6-5-2000

திமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகளின் ஈழம் தொடர்பான நிலைப்பாடு, மத்திய அரசின் நிலைப்பாட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. – பிரமோத் மகாஜன்

ஈழத்தை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை. – 8/05/2000 அன்று வாஜ்பாய் (அண்ணன் வைகோவின் அண்ணன்)

அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. அதில் நார்வோ, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பங்கும் இருக்கின்றது. - லட்சுமண் கதிர்காமர் 22-5-2000

இலங்கை தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் முடிவுகளுக்கு பாமக கட்டுப்படும் – ராமதாஸ் (2-6-2000)

நீண்டகால நண்பனான இந்தியாவை புரிந்து கொள்வதுதான் இலங்கை பிரச்சினையை தீர்க்க உதவி புரியும். – திருச்சியில் ஆறுமுக தொண்டைமான், முன்னாள் இலங்கை அமைச்சர், 2-6-2000

இந்திய அரசு தற்போதைய சூழலை பயன்படுத்தி, பிரபாகரனையும், பொட்டுஅம்மானையும் கைது செய்ய வேண்டும். – சு.சாமி (2-6-2000)

செக் – ஸ்லோவேகியா போல இலங்கை பிரிக்கப்பட வேண்டும். கலைஞர் கருணாநிதி 4-6-2000

இந்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. 5-6-2000

செக்-ஸ்லோவேகியா பாணியில் என்று கருத்து கூறிய கருணாநிதி குழம்பி போயிருக்கின்றார். ஜி.கே.முப்பனார் (7-6-2000)

பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியினர் புலிகளின் மீதான தடையை நீக்க கோரிக்கை வைத்திருப்பது தொடர்பான தகவல்கள் பாஜகவுக்கு தெரியாது. அப்படியே, கோரிக்கை வைக்கப்பட்டாலும், புலிகள் மீதான தடையை நீக்க முடியாது. – வெங்கையா நாயுடு (11-5-2000)

புலிகள் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டிருப்பதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். - அத்வானி (14-5-2000)

அவர்களை தனி ஈழத்தையும் காண விரும்பவில்லை, இலங்கை அரசுக்கும் உதவ விரும்பவில்லை. தற்போதைய நிலையில் இந்தியாவின் நிலை குழப்பத்திற்குரியதாகவே இருக்கின்றது. - தர்மலிங்கம் சித்தார்த்தன், கொழும்புவில் (28-5-2000)

நான் இந்துத்வ சக்திகளை எதிர்க்கிறேன். நான் சிறையிலிருந்த பொழுது, அவர்கள் தங்களது ரகசிய செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்வதை அறிந்தேன். திராவிட இயக்கத்தை வலுப்படுத்த, பாஜகவை எதிர்ப்பது என் முதன்மை கடமையாகின்றது. காங்கிரஸை பொறுத்தவரை அது ஒன்றிரண்டு தவறிழைத்திருந்தாலும், அது மதச்சார்பின்மையை உறுதியாய் பேணுவதில் அக்கறையோடு இருக்கின்றது. ஆகவே, நாட்டின் நலன் கருதி நான் காங்கிரஸை ஆதரிக்கிறேன். - வைகோ (2004)

--------------------------------------------------------------------------------
8 ஜனவரி 2011 ஆம் ஆண்டு கௌகாத்தியில்(அஸ்ஸாம்) பாஜகவின் தேசிய செயற்குழுவில் பேசிய நிதின் கட்கரி...

"புலிகளை தோற்கடித்த போருக்கு பிறகு, இலங்கை தன்னை மீண்டும் கட்டமைத்து வருகின்றது. மக்கள் மீள் குடியிருப்பிற்காக காத்திருக்கின்றார்கள். அவர்கள் சுயமரியாதையோடு மைய நீரோட்டத்திற்கு அழைத்து வரப்பட வேண்டும்."

யாழ் கோட்டையில் புலிகள் முற்றுகையிட்டிருந்த போது..மே மாதம் 4 (4-5-2000) ஆம் தேதி ஜஸ்வந்த் சிங், பாஜக அமைச்சரவையின் வெளியுறவு துறை அமைச்சர் ராஜ்யசபையில் உரையாற்றும் போது

" இலங்கையில் நிகழ்ந்து வரும் மாற்றம் எங்களுக்கு வருத்தம் தருவதாக இருக்கின்றது. நாங்கள் இலங்கையோடு தொடர்பில் இருக்கின்றோம். ஒன்றுபட்ட இலங்கைக்குள் அமைதியான வழியில் தீர்வையெட்ட இந்திய அரசு முயற்சியை மேற்கொள்ளும்" என்று தெரிவித்தார்

ஆக, புலிகள் வலுவாக இருந்த போதும், புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதும்...காவி, பாஜக கும்பல் தனி ஈழத்தை ஆதரிக்கவில்லை...

காவிகளுக்கு சொம்பு தூக்கி கொண்டு கருப்புத் துண்டோடு...ஈழ வியாபாரம் செய்ய வருபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று மக்களே முடிவு செய்யுங்கள்..

மோடி இஸ்லாமிய மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை