திங்கள், 27 அக்டோபர், 2008

தீபாவளி தேவையா?

இத்தனை ஆண்டுகால அறிவியல் முன்னேற்றத்திற்கும் பின்னால்  நான் ஏன் தீபாவளி கொண்டாட வேண்டும் என்றுகூட கேள்வி கேட்கத் தெரியாமல் நிற்கும் நம் இனச்சகோதரர்களின் அறிவை என்னவென்று சொல்வது? நம் இனச்சகோதரர்கள் ஈழத்தில் தினம், குண்டுகளுக்கு மடிந்து கொண்டிருக்கும் பொழுது ஆரிய, பார்ப்பன புழுகு பண்டிகை நம்க்கு தேவைதானா?

 

எவனோ கொலை செய்யப்பட்டதற்கு பலகாரம் செய்து கொண்டாடினால் நாம் மனிதர்கள், மனித நேயம் கொண்டவர்கள் என்று சொன்னால் உலகம் எள்ளி நகையாடாதா?எதிரி வீட்டில் இழவு விழுந்தால்கூட நகைப்பதும், மகிழ்ச்சி கொண்டாடுவதும் மனித பண்பும் ஆகுமா?

 

நாட்டில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வறுமையில் உளன்று கொண்டிருக்க அவர்களை மேலும் கடனாளியாக்கும் கொடிய வழக்கம் அல்லவா இந்த பண்டிகை கொண்டாடுவது.

 

பறவைகளுக்கு இடைஞ்சல் செய்யக்கூடாது என்பதற்காகவே தீபாவளி கொண்டாத ஊர்கள் இந்நாட்டில்தானே உள்ளன?

 

வறுமையின் காரணமாக ஆண்டுக்கணக்கில் தீபாவளி கொண்டாடாமல் இருக்கும் ஊர்களும் இந்நாட்டில்தானே இருக்கின்றன?

 

இப்பண்டிகை கொண்டாட்டத்தினால், ஏற்கனவே விலைவாசி ஏற்றம் என்ற கொடிய நச்சால் நசிந்து போயிருக்கும் எத்தனை எத்தனை பெற்றோர்கள் மீண்டும் ஒருமுறை தம் குழந்தைகளின் முன்னால் தலைகுனிய நேரிடுகிறது என்பதை நாம் ஏன் நம் எண்ணத்தில் நிறுத்துவதில்லை. இப்படி எதை பற்றியும் கவலைப்படாமல், பண்டிகை கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்கும் உங்களை போன்றவர்கள் நாட்டில் ஊழல், வறுமை, கொலை, குண்டுவெடிப்பு என எதை பற்றியும் வருத்தப்படுவதற்கு அருகதை இருக்கிறதா? நமக்கு மட்டும் ஏன் வருத்தங்கள் வருகின்றது என்று வருந்தக்கூட யோக்கியதை இருக்கிறதா? என்று கொஞ்சம் உங்கள் உள்ளத்தை கேட்டு பதில் காணுங்கள்.

 

இதே தொனியில் மக்களுக்காவே சிந்தித்து வாழ்ந்த மாபெரும் தலைவர் பெரியாரின் கூற்றையும், அவருடைய பேரன்பையும் இந்த கட்டுரையில் காணுங்கள்.

 

 

ஏதாவது தத்துவார்த்தமோ, ‘சயின்ஸ்பொருத்தமோ - சொல்லுவதானாலும்
தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது? -
என்கின்றதான விஷயங்களுக்குச் சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.

தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய 20 கோடி(இன்றைய நிலையில் குறைந்தது 50 கோடிபேராவது கொண்டாடியிருப்பார்கள்) மக்களாவது பண்டிகை கொண்டாடி இருப்பார்கள். இவர்கள் பண்டிகை கொண்டாடியதன் பயனாய் சுமார் 10 கோடி(இன்றைய நிலையில் 100 கோடிக்கும்)ரூபாய்க்குக் குறையாமல் பாழ்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த
10
கோடியும் அனாவசியமாய் - துணி வாங்கிய வகையிலும், பலகாரங்கள் செய்த வகையிலும், பட்டாசு வாங்கிப் பொசுக்கிப் புகையும் கரியுமாக ஆக்கிய
வகையிலும் செலவாகி இருக்கும் என்பது மட்டும் அல்ல; பண்டிகை நாளில்
வருத்தமின்றிக் களித்திருக்க வேண்டும் என்பதைக் கருதி ஏழை மக்கள்கள்,
சாராயம், பிராந்தி, விஸ்கி, ஜின், ஒயின், பீர் முதலிய வெறி தரும் பானங்களைக் குடித்துக் கூத்தாடிய வகையிலும் ஏராளமான பணம் செலவழிந்திருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப் பண்டிகையினால் வெற்று நாளில் மறந்துபோயிருந்த-சாமிக்குப் படையல் போடத் தூண்டும் புராணக் கதை, மூட நம்பிக்கை மக்கள் மனதில் மறுபடியும் வந்து குடிபுகுந்ததோடு அவர்களுடைய செல்வமும் கொள்ளை போகும் நிலை ஏற்பட்டது.

இவ்வளவு மாத்திரமல்ல; தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை விட்டதன் பயனாய்த் தினக் கூலிக்கு வேலை செய்யும் ஏழை மக்கள் கூலியை இழந்ததோடல்லாமல், கடன் வாங்கி நஷ்டமடைந்தது எவ்வளவு? வேலை நடக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு அதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு? தீபாவளிக்கு முன் சில நாட்களும், தீபாவளிக்குப் பின் சில நாட்களும், தீபாவளியைக் கருதி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டுகளிலும், வேடிக்கைகளிலும் கவனம் செலுத்திய காரணத்தால் அவர்கள் படிப்புக்கு நேர்ந்த கெடுதி எவ்வளவு? அரசியல் காரியங்கள் நடைபெறுவதில் இதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு?

தந்தைபெரியார் - குடிஅரசு’, தலையங்கம், 22.11.1931

கருத்துகள் இல்லை: