ராஜீவ் கொலையின் உண்மைச் சதி குறித்து இந்தியாவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமியிடம் நார்கோ அனாலிசிஸ் எனப்படும் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமியின் ஜனதா கட்சியின் முன்னாள் அகில இந்திய செயலாளர் திருச்சி வேலுச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் திருச்சி வேலுச்சாமி எழுதியிருக்கும் கடிதம்:
அன்பு நண்பர் சுப்பிரமணியன் சுவாமி அவர்களே.. குமுதம் ரிப்போர்ட்டரில் நீங்கள் கொடுத்திருக்கும் பேட்டியைப் படித்தேன். எனக்கு அழுவதா? சிரிப்பதா? என்றே தெரியவில்லை.
முதலில் ஜெயலலிதாவும் நீங்களும் நெருங்கிய நண்பர்கள் என்று சொல்கிறீர்கள். அவரைப் பார்க்க வேண்டும் என்று நீங்கள் சொன்னபோது, நான்தான் உங்கள் இரண்டு பேரையும் சந்திக்க ஏற்பாடு செய்து அறிமுகப்படுத்தி வைத்தேன். அப்படிப்பட்ட எனக்கில்லாத அளவுக்கு ஜெயலலிதாவுடன் உங்களுக்கு நட்பு என்றால் அது எப்படி என்பது எனக்குப் புரிகிறது.
1991 ஆம் வருடம் மே மாதம் 21 ஆம் நாள் இரவு பத்து மணிக்கு ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகுதான் இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் தலைவர்களின் புரோகிராம்களும் மாறின. ஆனால் அதற்கு முன்பே, தேர்தல் புரோகிராமை மாற்றியவர்கள் இரண்டே இரண்டு அரசியல் தலைவர்கள்தான். அதில் ஒருவர் நீங்கள். இன்னொருவர் ஜெயலலிதா. அந்த விதத்தில் நீங்கள் இரண்டு பேரும் ரொம்ப நெருக்கம் என்று எனக்குப் புரிகிறது.
அப்படிப்பட்ட நெருங்கிய நண்பர் (ஜெ.), சென்னை ஐகோர்ட்டுக்கு நீங்கள் போனபோது உங்களுக்கு அளித்த வரவேற்பை எந்த நண்பருமே கொடுத்திருக்க மாட்டார்கள். அதைப் போலவே நண்பர் என்ற முறையில் நீங்களும் அவருக்குச் செய்தது போல எந்த நண்பரும் செய்திருக்க முடியாது. உங்கள் நண்பர், உயிர்த்தோழி இன்றைக்கும் மீள முடியாமல் போராடிக் கொண்டிருப்பது பெங்களூர் ஸ்பெஷல் கோர்ட்டில் நடக்கிற சொத்துக்குவிப்பு வழக்கில்தானே? அதற்குக் காரணமான புகாரை எழுதிக் கொண்டு போய் கவர்னரிடம் கொடுத்தவர் நீங்கள்தானே? அது சரி, உங்களுடன் உட்கார்ந்து அதை அப்போது எழுதியவர் பொன்னையன். இன்றைக்கு அவர் அந்த அம்மாவுக்கு அரசியல் ஆலோசகராக இருக்கிறார். வி.வி.சுவாமிநாதன், பி.ஹெச்.பாண்டியன் எல்லோரும்கூட அப்போது வந்து ஆலோசனை தந்தார்களே? மறைந்த முன்னாள் சபாநாயகர் க.ராசாராம் வீட்டில் உட்கார்ந்துதானே அந்தப் புகாரைத் தயார் செய்தீர்கள்? அப்போது நானும் அங்கே இருந்தேனே. அதை மறந்து விட்டீர்களா? நாம் எப்படியெல்லாம் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் பார்த்தீர்களா? இந்த உண்மையெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிந்தால் அவர்கள் வாயால் சிரிக்க மாட்டார்கள்.
நீங்கள் கொஞ்ச நாளைக்கு முன் எழுதிய ‘விடை தெரியாத வினாக்கள்’ என்கிற புத்தகத்தில், பக்கம் முப்பதில் ‘இலங்கையில் இருக்கக்கூடிய சிங்களர்கள் பீஹாரில் இருந்து குடிபெயர்ந்து போன ஆரிய வம்சாவளியினர்’ என்று சொல்லியிருக்கிறீர்கள். அந்த சிங்களவர்களுக்கு எதிராக இருக்கக் கூடிய தமிழர்களை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள் என்பது இப்போதுதான் புரிகிறது. அந்தச் சந்தேகம் உறுதியானதற்கு உங்கள் பேட்டியிலேயே காரணம் இருக்கிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இனத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கிற, தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற இளைஞரான திருமாவளவனை இவ்வளவு கொச்சையாகவும், கேவலமாகவும் நீங்கள் பேசும்போதுதான் உங்கள் மனதில் இருக்கும் நஞ்சு என்ன என்பது புரிகிறது. நான் இந்த நேரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கையாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். தமிழ்நாட்டில் ஓர் ஆரிய- திராவிட வர்க்கப் போர் உருவாகி விடுமோ என்று நான் அச்சப்படுகிறேன். இதில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா மக்களும் ஒன்று சேர்ந்து உங்களை தமிழ்நாட்டில் நுழைய விடாமல் விரட்ட வேண்டும்.
திருமாவளவன் புலிகளிடம் காசு வாங்கினார் என்று சொல்கிறீர்களே… புலிகள் அவர்களுடைய வாழ்க்கைக்கும், போராட்டத்துக்குமே திண்டாடுகிற நிலையில், அவர்கள் எங்கே இவருக்குப் பணம் கொடுக்கப் போகிறார்கள்? ஆனால் உங்களுக்கு அமெரிக்காவின் சி.ஐ.ஏ.விடம் இருந்து கோடி கோடியாக பணம் வருவதாகச் சொல்கிறார்களே? அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள். இல்லையென்றால் உங்கள் அப்பா தந்த சொத்து என்ன? நீங்கள் சம்பாதித்த சொத்து என்ன? என்று பட்டியல் போடுங்கள் பார்க்கலாம். அமெரிக்கா போகிறேன், ஜெர்மனி போகிறேன், லண்டன் போகிறேன் என்று சுற்றிக் கொண்டு இருக்கிறீர்களே, அதற்குப் பணம் எங்கே இருந்து வந்தது? இதைச் சொல்லிவிட்டு அதன் பிறகு அல்லவா நீங்கள் எங்கள் இளவல் திருமாவிடம் கேள்வி கேட்க வேண்டும்.
திருமாவளவன் ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். அவர் ஒரு தேச பக்தர், மனிதாபிமானி. ஆனால் நீங்கள் தேசபக்தர் இல்லை என்பது மற்றவர்களைவிட உங்களுக்கும் எனக்கும் பட்டவர்த்தனமாகத் தெரியுமே!
நீங்கள் இந்தியாவில் இருந்தாலும் இந்தியாவுக்கா விசுவாசமாக இருக்கிறீர்கள்? இல்லையே. ராஜீவ் காந்தியை நண்பர் என்று சொல்கிறீர்கள். ஆனால், ராஜிவ் காந்தி செத்ததால் லாபமடைந்த முதல் மனிதர் நீங்கள் தானே? நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது காங்கிரசுக்குத் துளிகூட சம்பந்தமில்லாத உங்களை எப்படி ‘டங்கல் காட்’ ஒப்பந்தக் கமிட்டிக்குத் தலைவராகப் போட்டார்கள்? அதில் முன்னால் நின்று ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டவர் நீங்கள்தானே? அதுவரை அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த ராஜீவ் காந்தியின் மரணத்துக்குப் பிறகுதானே இந்தியச் சந்தை அவர்களுக்குத் திறந்து விடப்பட்டது?
உலகத்தில் எந்த ஒரு கொலை நடந்தாலும் என்ன மோடிவ்? அல்லது யார் பயனாளி என்று பார்ப்பார்கள். அப்படிப் பார்த்தால் ராஜீவ் கொலையில் கண்ணை மூடிக்கொண்டு உங்களைக் கை காட்டலாம். ஆனால், இந்த நாட்டின் துரதிருஷ்டம், உங்களை இன்னும் தீவிரமாக விசாரிக்கவில்லை. அதை வலியுறுத்தித்தான் நாங்கள் இந்தப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம்.
பாமரர்கள் எல்லாம் வாய்க்கும் வயிற்றுக்கும் போராடிக் கொண்டிருக்கிறபோது, உங்களுக்கு லட்சக்கணக்கில் செலவு பண்ணி பாதுகாப்புத் தருவதால் எங்களுக்கு அவர்கள் (மத்திய அரசு) மேலேயே சந்தேகமாக இருக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. காங்கிரஸ்காரர்கள் எல்லாம் டூப்ளிகேட் என்று சொல்லியிருக்கிறீர்களே… எங்கள் கிராமத்தில் சொல்வார்கள் ‘காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்’ என்று. அதுபோல நீங்கள் டூப்ளிகேட் என்பதால்தானே பார்க்கிறவர்கள் எல்லாம் உங்களுக்கு டூப்ளிகேட்டாகத் தெரிகிறார்கள்.
நீங்கள் ராஜீவ் காந்தி கொலையில் பல விஷயங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள். உங்களுடைய நண்பன் நான். ஜெயின் கமிஷனில் உங்கள் மேலேயே குற்றம் சொன்னேனே? உங்களைக் கூண்டில் நிற்க வைத்துக் கேள்வி கேட்டேனே. நீங்கள் கைகால் வெலவெலத்துப் போய் வேர்த்து விறுவிறுத்து ஸ்தம்பித்து நின்றீர்களே… அந்த கமிஷனே அதற்குப் பிறகு ஒன்றும் சொல்லாமல் ஒத்தி வைக்கப்பட்டதே. மறந்து விட்டீர்களா? அந்த கமிஷனிலேயே நீங்கள்தான் கொலைக்குற்றவாளி என்று சொல்லியிருக்கிறேனே.
உங்களுக்கு ‘நார்கோ அனாலிசிஸ்’ என்கிற உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்தினால், ராஜீவ் கொலையின் உண்மைச் சதி என்ன? பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்பது உலகத்துக்கே தெரிய வந்துவிடும். இதனைச் சொல்கிற நேரத்தில் ‘நீயும் இந்த டெஸ்ட்டுக்கு ரெடியா?’ என்று நீங்கள் கேட்கக்கூடும். முதலில் என்னை டெஸ்ட் செய்துவிட்டு, அப்புறம் உங்களை டெஸ்ட் செய்யட்டும். உங்களுடைய இந்த ஏமாற்று வேலை தமிழகத்தில் இனிமேல் எடுபடாது.
இப்படிக்கு,
உங்களை உள்ளும் புறமும் புரிந்த ஒரே நண்பன்
வேலுச்சாமி.
1 கருத்து:
சு.சுவாமியும்,சந்திர சுவாமியும் என்னென்னெ செய்தார்கள்,என்னென்ன
தொலை பேசியில் பேசினார்கள் என்பதெல்லாம் வெளியே வரவேண்டும்
சு.சுவாமியின் வீட்டில் என்னென்ன இருக்கிறது,அவை எப்படி வந்தன்,அவரது சொத்துக்கள் இவற்றிற்கு உச்ச நீதி மன்றத்தில் வழக்குகள் போட்டு உண்மைகளை வெளியே கொண்டு வரவேண்டும்.
அமெரிக்க,இசுரேல் உளவு நிறுவனங்களுக்கு இவர் என்ன செய்துள்ளார் என்பது வெளியே தெரிய வேண்டும்
கருத்துரையிடுக