செவ்வாய், 24 டிசம்பர், 2013
பெரியாரின் நினைவு நாளில்....24/12/2013
பார்ப்பனரல்லாத கட்சி புதியதாக ஒன்றும் செய்துவிடவில்லை. மனு ஸ்மிருதியை தலைகீழாக மாற்றினர். அதை தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டனர். மனு சூத்திரர்களுக்கு எந்த இடத்தை கொடுத்தாரோ அந்த இடத்தை பார்ப்பனர்களுக்கு கொடுத்தார்கள்.
ஒருவன் பார்ப்பனன் என்பதற்காக மனு அவனுக்கு சலுகைகள் அளிக்கவில்லையா?
சூத்திரர்கள் உரிமைகள் பெற தகுதி பெற்றிருந்தும் மனு அந்த உரிமைகளை மறுக்கவில்லையா? இப்பொழுது சூத்திரர்கள் என்பதற்காகவே சில சலுகைகள் அளித்தால் அதைப் பற்றி குறை கூற முடியுமா? அது அபத்தமாக தோன்றலாம்.
ஆனால், இந்த விதிக்கு முன்னுதாரணங்கள் இலலாமலில்லை. மனு ஸ்மிருதி தான் அந்த எடுத்துக்காட்டு.
பார்ப்பனர்கள் அல்லாத கட்சியின் மீது யார் கல்லெறிய முடியும். பார்ப்பனர்கள் பாவம் செய்யாமிலிருந்தால் அவர்களால் முடியும். ஆனால், மனு ஸ்மிருதியை உயர்த்தி பிடிக்கும், வணங்கிப் போற்றும் அவர்கள் பாவிகள் இல்லையென்று சொல்ல முடியுமா? - அண்ணல் அம்பேத்கர் தொகுதி 25, (மனுவும் சூத்திரர்களும், பக்கம் 83)
அண்ணல் அம்பேத்கர் கூறியது போல பார்ப்பனரல்லாத இயக்கம் எதை சாதித்தது என்றால், பார்ப்பனிய இந்து மத வெறிகள் சூத்திரர்களுக்கு மறுத்திருந்த உரிமைகளுக்கு பெற்றுத் தரபோராடி பார்ப்பனரல்லாத சூத்திர மக்களை அதிகாரப் படுத்தியது.
ஆனால், அப்படி அதிகாரத்திற்கு வந்தவர்கள் பெரியாரை மறந்ததோடு மட்டுமில்லாமல், பெரியாரை படமாக்கி மூலையில் போட்டு விட்டு, அந்த அதிகாரத்தை தலித் மக்களுக்கு எதிராக தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே இதுகாறும் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.
இந்த நவீன சூத்திர பார்ப்பனர்கள் பெரியாருக்கு துரோகம் செய்வதோடு மட்டுமில்லாமல்...பெரியாரை எதிர்த்து வலதுசாரிகளோடு கூட்டு வைத்துக் கொண்டு, தங்களுடைய தலித் விரோத நிலைப்பாட்டால், பெரியாரை தலித் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தியிருக்கின்றார்கள்.
பெரியார் கிராம பொருளாதாரம் என்பதை மிகக்கடுமையாக எதிர்த்திருக்கிறார். ஊர் - சேரி கட்டமைப்பு தகர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், அவரது காலத்திலும், அதற்கு பின்னும் இன்றுவரை நடைமுறைப்படுத்த முடியவில்லை.
ஊர்- சேரி கட்டமைப்பை கட்டிக்காக்கும் பொருளாதாரம்சார் சிக்கல்களை ஆய்ந்து, அந்த கட்டமைப்பை தகர்க்கும் வேலைதிட்டத்தோடு அடுத்த கட்டத்திற்கு நகர்வதையே...பெரியார் ஓருவேளை தொடர்ந்து வாழ்ந்திருந்தால் செய்திருப்பார்.
அப்படியல்லாமல் தற்போதைய நிலையே தொடருமானால், பெரியாருக்கு தொடர்ந்து இழுக்கை தேடிக் கொடுப்பதோடு, இந்துத்வ கும்பல் உழைக்கும் மக்களை பிளவுப்படுத்தி தங்கள் நலன்களுக்கான வெற்றிகளை ஈட்டுவதற்கான சூழலே உருவாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக