வியாழன், 26 டிசம்பர், 2013

அம்பேத்கரை ஆதரிப்பது ஒவ்வொரு சுயம‏ரியாதைக்காரரின் கடமை - பெரியார்

எந்த விஷயத்துக்கும் கொள்கைகளுடன் அனுபவ ஞானமும் இருந்தால்தான் அதை மனிதத்தன்மை என்று சொல்லலாமே ஒழிய, மற்றபடி அனுபவ சாத்தியத்துக்கு இணங்காத கொள்கைகள் எதுவானாலும் அதைப் புஸ்தகப் பூச்சி என்றுதான் சொல்ல வேண்டும்; அல்லது வெறும் அபிப்பிராயத்துக்கு மாத்திரம் பெறுமானவர்களே ஒழிய, காரியத்திற்குப் பெறுமானவர்கள் அல்ல என்று சொல்ல வேண்டும்.

வெளிப்படையாய் நாம் பேசுவதானால், அம்பேத்கரும், அவரைப் பின்பற்றுவோரும் நாஸ்திகர்களாவதற்கும், மதமில்லாதவர்கள் ஆவதற்கும் இஷ்டமில்லாமல், அவர்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்காக முகமதியராகி விடலாம் என்று அவர்கள் கருதினால், அதில் நமக்கு இருக்கும் ஆட்சேபனை என்ன என்று கேட்கின்றோம்.

முகமதிய மதத்தில் பல கெடுதிகள் இருக்கலாம்; கோஷம் இருக்கலாம்; கடவுள் இருக்கலாம்; மூடநம்பிக்கை இருக்கலாம்; மதச் சின்னம், மதச் சடங்கு இருக்கலாம்; சமதர்மமில்லாமலும் இருக்கலாம். இதெல்லாம் யாருக்குக் கூடாது? சுயமரியாதைக்காரருக்கு கூடாததாய் இருக்கலாம். மற்றும் பெண்ணுரிமை மாத்திரம் பேணுவோருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; மூடநம்பிக்கை அனுஷ்டிக்காதவர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; மதவேஷமும் பயனற்ற சடங்கும் வேண்டாதவருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; நாஸ்திகர்களுக்கும், பகுத்தறிவுவாதிகளுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; சமதர்மவாதிகளுக்கும், பொதுவுடைமைக்காரர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்.

ஆனால், தீயர்கள், பறையர்கள், புலையர்கள், நாயாடிகள் என்று அழைக்கப்படுகின்ற ஒதுக்கப்பட்டிருக்கின்ற, தாழ்த்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு, நாயிலும், மலத்திலும், புழுத்த விஷக்கிருமிகளிலும் கேவலமாக மதிக்கப்பட்டு வருகிற மக்களிடம் தங்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிந்தால் போதும் என்று கருதிக்கொண்டிருக்கும் மக்களிடம் நமக்கு வேலை உண்டா இல்லையா என்று கேட்கின்றோம்.

ஏனெனில், அவன் கிறிஸ்தவனாகி, கிறிஸ்தவப் பறையன், கிறிஸ்தவச் சக்கிலி, கிறிஸ்தவ பிள்ளை, கிறிஸ்தவ நாய்க்கன் என்று தீண்டாதவனாகவே இருப்பதைவிட, பறத்துலுக்கன் என்றோ, சக்கிலிய முகமதியன் என்றோ, தீய முஸ்லிம் என்றோ அழைக்க இடமில்லாமலும் அழைக்கப்படாமலும் இருக்கும்படியான நிலையிலும் மற்றசமூகக்காரர்களோ மதக்காரர்களோ அவ்வளவு சுலபமாக இழிவுபடுத்தவோ, கொடுமையாய் நடத்தவோ முடியாத சுயமரியாதை அனுபவமும் உள்ள நிலையிலும் இருக்கும் ஒரு மதத்திற்கு, "எப்படியாவது தீண்டாமையை ஒழித்துக் கொள்ள வேண்டும்'' என்கின்றவன் போனால், இதில் சுயமரியாதைக்காரனுக்கு என்ன நஷ்டம் என்று கேட்கின்றோம். அன்றியும், "சரி, எப்படியாவது சீக்கிரத்தில் தீண்டாமையை ஒழித்துக் கொள்'' என்று சொல்வதிலும் என்ன தப்பு என்றும் கேட்கின்றோம்.

நமக்குக் கடிதம் எழுதின நண்பர், "இந்து மதத்தில் தீண்டாமை இருக்கிறது; இஸ்லாம் மதத்தில் பார்க்காமை இருக்கிறது; பெண்களுக்கு உறை போட்டு மூடிவைத்து இருக்கிறார்கள்'' என்று எழுதி இருக்கிறார். அது (உறை போட்டு வைத்திருப்பது) உண்மை என்றும், தவறானது என்றுமே வைத்துக் கொள்ளுவோம். இது, பெண்ணுரிமை பேணுவோர்கள் கவனிக்க வேண்டிய காரியமே ஒழிய, தீண்டாமை விலக்கு மாத்திரம் வேண்டும் என்று கருதுகின்றவர்கள் யோசிக்க வேண்டிய காரியம் அல்ல என்பது நமது அபிப்பிராயம்.

இந்து மதம் சீர்திருத்தம் அடைந்து வருகிறது என்றும், தீண்டாமை ஒழிக்கப்பட்டு வருகிறது என்றும், சில மூடர்களும், சூழ்ச்சிக்காரர்களும் சொல்லுகிறார்கள். அதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்து மதம் சீர்திருத்தமடைந்து வரவில்லை; இந்து மதம் ஒழிந்து வருகின்றது என்றுதான் சொல்லுவோம். இந்து மதத்தில் சீர்திருத்தத்திற்கு இடமில்லை; அதைச் சீர்திருத்தம் செய்ய யாருக்கும் அதிகாரமும் இல்லை. இந்து மத ஆதாரங்கள் என்பவை அம்மத வேதம், சாஸ்திரம், புராணம் என்று சொல்லப்படுபவைகளைப் பொறுத்ததே ஒழிய, சாமிகள் என்றும், மகாத்மாக்கள் என்றும், தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொள்ளும் சில விளம்பரப் பிரியர்களைப் பொறுத்தது அல்ல.

இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு அனுகூலம் செய்ய, சில தீவிர சுயமரியாதைக்காரர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளுகின்றவர்கள், அம்பேத்கர் வேறு மதத்துக்குப் போவதை அனுமதிக்கக் கூடாது என்றால் அது நியாயமாகுமா? அல்லது ஒன்றும் பேசாமல் சும்மா இரு என்பதுதான் நியாயமாகுமா? ஆதலால், அம்பேத்கருடைய முடிவை நாம் மனமார ஆதரிப்பதுடன், அம்முடிவுப்படி சரியான செயலுக்கு நம்மாலான உதவியளிக்க வேண்டியதும் ஒவ்வொரு சுயமரியாதைக்காரருடையவும் கடமையாகும் என்பது நமது அபிப்பிராயம்.
(17.11.1935 "குடி அரசு' இதழில் எழுதிய தலையங்கம்)

நன்றி : கீற்று

செவ்வாய், 24 டிசம்பர், 2013

பெரியாரின் நினைவு நாளில்....24/12/2013



பார்ப்பனரல்லாத கட்சி புதியதாக ஒன்றும் செய்துவிடவில்லை. மனு ஸ்மிருதியை தலைகீழாக மாற்றினர். அதை தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டனர். மனு சூத்திரர்களுக்கு எந்த இடத்தை கொடுத்தாரோ அந்த இடத்தை பார்ப்பனர்களுக்கு கொடுத்தார்கள்.

ஒருவன் பார்ப்பனன் என்பதற்காக மனு அவனுக்கு சலுகைகள் அளிக்கவில்லையா? 
சூத்திரர்கள் உரிமைகள் பெற தகுதி பெற்றிருந்தும் மனு அந்த உரிமைகளை மறுக்கவில்லையா? இப்பொழுது சூத்திரர்கள் என்பதற்காகவே சில சலுகைகள் அளித்தால் அதைப் பற்றி குறை கூற முடியுமா? அது அபத்தமாக தோன்றலாம்.

ஆனால், இந்த விதிக்கு முன்னுதாரணங்கள் இலலாமலில்லை. மனு ஸ்மிருதி தான் அந்த எடுத்துக்காட்டு. 

பார்ப்பனர்கள் அல்லாத கட்சியின் மீது யார் கல்லெறிய முடியும். பார்ப்பனர்கள் பாவம் செய்யாமிலிருந்தால் அவர்களால் முடியும். ஆனால், மனு ஸ்மிருதியை உயர்த்தி பிடிக்கும், வணங்கிப் போற்றும் அவர்கள் பாவிகள் இல்லையென்று சொல்ல முடியுமா? - அண்ணல் அம்பேத்கர் தொகுதி 25, (மனுவும் சூத்திரர்களும், பக்கம் 83)

அண்ணல் அம்பேத்கர் கூறியது போல பார்ப்பனரல்லாத இயக்கம் எதை சாதித்தது என்றால், பார்ப்பனிய இந்து மத வெறிகள் சூத்திரர்களுக்கு மறுத்திருந்த உரிமைகளுக்கு பெற்றுத் தரபோராடி பார்ப்பனரல்லாத சூத்திர மக்களை அதிகாரப் படுத்தியது.

ஆனால், அப்படி அதிகாரத்திற்கு வந்தவர்கள் பெரியாரை மறந்ததோடு மட்டுமில்லாமல், பெரியாரை படமாக்கி மூலையில் போட்டு விட்டு, அந்த அதிகாரத்தை தலித் மக்களுக்கு எதிராக தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே இதுகாறும் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். 

இந்த நவீன சூத்திர பார்ப்பனர்கள் பெரியாருக்கு துரோகம் செய்வதோடு மட்டுமில்லாமல்...பெரியாரை எதிர்த்து வலதுசாரிகளோடு கூட்டு வைத்துக் கொண்டு, தங்களுடைய தலித் விரோத நிலைப்பாட்டால், பெரியாரை தலித் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தியிருக்கின்றார்கள். 

பெரியார் கிராம பொருளாதாரம் என்பதை மிகக்கடுமையாக எதிர்த்திருக்கிறார். ஊர் - சேரி கட்டமைப்பு தகர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், அவரது காலத்திலும், அதற்கு பின்னும் இன்றுவரை நடைமுறைப்படுத்த முடியவில்லை.

ஊர்- சேரி கட்டமைப்பை கட்டிக்காக்கும் பொருளாதாரம்சார் சிக்கல்களை ஆய்ந்து, அந்த கட்டமைப்பை தகர்க்கும் வேலைதிட்டத்தோடு அடுத்த கட்டத்திற்கு நகர்வதையே...பெரியார் ஓருவேளை தொடர்ந்து வாழ்ந்திருந்தால் செய்திருப்பார்.

அப்படியல்லாமல் தற்போதைய நிலையே தொடருமானால், பெரியாருக்கு தொடர்ந்து இழுக்கை தேடிக் கொடுப்பதோடு, இந்துத்வ கும்பல் உழைக்கும் மக்களை பிளவுப்படுத்தி தங்கள் நலன்களுக்கான வெற்றிகளை ஈட்டுவதற்கான சூழலே உருவாகும்.

புதன், 6 மார்ச், 2013

நான் ஏன் பேசக்கூடாது - 1


தடிகளை கைகளில் ஏந்தி பத்துப் பன்னிரெண்டு பார்சிகள் வரிசையாக என் முன் அச்சுறுத்தும் முறையில் நின்று கொண்டிருந்ததும், கருணையை வேண்டியும் அஞ்சிய பார்வையுடன் அவர்கள் முன் நான் நின்றிந்ததுமான காட்சி 18 நீண்ட ஆண்டுகள் கழிந்த பின்னும் என் மனத்திரையிலிருந்து மறையவே இல்லை. இன்று கூட அந்த நிகழ்ச்சியை  என்னால் நினைவுப்படுத்திப் பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் அதை நினைவுப்படுத்தி பார்த்த எந்த ஒரு நேரத்திலும் என் கண்கள் கலங்காமல் இருந்ததில்லை. (விசாவுக்காக காத்திருக்கிறேன் நூலில் அண்ணல் அம்பேத்கர்)

மேலே இருக்கிற வரிகளுக்கு சொந்தக்காரர் அம்பேத்கர் மட்டுமல்ல, தீண்டாமை கொடுமையை பல நூற்றாண்டுகளாக அனுபவித்து வரும் தலித் மக்களின் உள்ளத்தில் ஆழ்ந்து உரைந்து கிடக்கும் வலி அது. உலகத்தின் மிக உயரிய பட்டங்களை பெற்ற மாமேதைக்கே கண்ணீர் முட்டுகிறதென்றால், என்னை போன்ற சாதாரணர்களுக்கு கண்ணீர் ஒன்றும் எட்டாத தூரமல்ல. எங்கள் வலி  எமக்கு கண்ணீரை தரும், நாங்கள் புலம்புவோம், அரற்றுவோம்.

சாதி நீண்டகால பழக்கம், அதை உடனடியாக துறக்க முடியாது என்கிறார்கள். இதையேதான் காந்தி சொன்னார். காத்திருக்கச் சொன்னார். சாதிய விதிகளை மீறுவது குறித்தும் அவருக்கொன்று அபாரமான தலித் ஆதரவு மனநிலை இருந்ததில்லை. இருந்ததெல்லாம் அப்பட்டமான வர்ணாசிரம ஆதரவு மனநிலையே..சாதியை மீறி இயங்குவது குற்றமே  என்ற மனநிலையில்தான் அவர் கீழ்க்கண்ட சொற்களை உதிர்த்திருக்க வேண்டும். இல்லை, காந்தி சொன்ன காலக்கட்டத்தை பாருங்கள்  என்று ஓடோடி வந்து வக்காலத்து வாங்கக் கூடும், அவருடைய இறுதி நாட்களில் அவர் செய்த துரோகம் ’வக்காலத்துகளுக்கு’ பதில் சொல்லும்.

”நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு மரத் தச்சரின் மகன் தான் ஒரு வக்கீலாக வேண்டும் என்று ஒரு போதும் விரும்பியதில்லை.ஆனால் இன்று ஒரு தச்சரின் மகன் வக்கீலாக வேண்டும் என்று விரும்புகிறார். ஏனெனில், பணம் திருடுவதற்கு, அந்தத் தொழில்தான் மிக்க எளிதான வழி என்பதை அவர் அறிந்து கொண்டிருக்கின்றார். (மகாத்மா காந்தி நூல்கள் தொகுப்பு -7, பக்கம்89,90,91)

ஒடுக்குதலின் வலி கொஞ்சமும் புரியாமல், ஒரு தீர்வை முன்வைக்கும் காந்தியின் அயோக்கியத்தனத்தின் முன் அண்ணல் அம்பேத்கரின் வலிமிகுந்த அனுபவம் எப்படி வெளிப்படுகின்றது பாருங்கள்.  தீர்வை  எவன் முன்வைக்க முடியுமென்று தெரியும்.

“ஒரு தோட்டிப் பெண் ஒரு குழந்தையை ஈணும்போது எங்கு தோட்டி வேலை காலியாக இருக்கிறது என்றுதான் அவருடைய கண்கள் தேடுகின்றன. இத்தகைய விசித்திரமான, வேதனையான, வாதனையான அமைப்புமுறை நிலவுவதற்கு இந்து மதத்தின் வருண-அமைப்பு முறையே காரணம். இதிலிருந்து எந்த முன்னேற்றத்தை நாம் காண முடியும். " – அம்பேத்கர் (தொகுதி 37, பக்கம் 691)

பெண்கள் பிரசவிக்கும் பொழுது ஆணா, பெண்ணா என்ற தயக்கம் இருக்கும் கட்டமைப்பு இது. மேற்சொன்ன வகையிலான வலி உலகம் முழுக்க இருக்கின்ற வேறெந்த பெண்ணுக்கும் வந்துவிடாது.

என் தாய் கேட்டார் “ ஏண்டா, நீ ஒத்தை ஆளா சாதிய ஒழிச்சிடுவியா?”
”ஏன் முடியாதா?” என்றேன்..
“எத்தனையோ தலைவருங்க வந்துட்டு போய்ட்டாய்ங்க, கொஞ்சம்..கொஞ்சமா மாறிடும்.” என்றார் அவர்.
”மாறிடுச்சின்னா, ஒரு ஊர்த்தெரு பொண்ணை அவங்க வீட்ல போய் பொண்ணு கேட்டு கட்டி வச்சிடு. அப்புறம் நான் இதை பேசலை…என்னை ஒரு கும்பல் மனுசனாவே மதிக்கலைங்கிற வலிதாம்மா இது, நீ என்ன மனுசனாத்தானே பெத்தே…ஏன் இன்னும் இந்த சமூகம்  என்னை மனுசனா பார்க்க மறுக்குது.”  என்றேன்..

இந்த உரையாடல் கண்டிப்பாக ஒரு சேரி வீட்டில்தான் நடக்கும். சாதி மறுப்பு எங்களது அவசியம் எங்களுக்கு எவரும் கற்றுத் தர வேண்டியதில்லை. பிறருக்கு அது…?

காந்தி காத்திருக்கச் சொன்னாரென்று சொன்னேனல்லவா? இன்றும் கூட காத்திருக்கச் சொல்கிறார்கள், அதைச் சொல்லும் போது அவர்கள் உண்மையாகவே வலிகளை உணர்ந்து சொல்வது போல தோன்றும்,

”ஆமா காயப்பட்டுட்டே, அதுக்கு இப்ப இன்னாங்குறே, உடனே எல்லாம் மாறிடுமா? அவங்களும் பழகிட்டாங்க இல்ல, அவங்களை கொல்லச் சொல்றியா? கத்திக்கு, கத்தி தீர்வாகுமா? கொஞ்சம் காத்திரு, புரட்சி வரும், தமிழ்த்தேசியம் வரும்….”

இப்படியாக பல வியாக்யானங்கள் நீளும்.   இறுதி நாட்களில் புலிகளிடம் கப்பல் வரும்  என்று கூறி  ஏமாற்று வித்தை காண்பித்தது போல…

நாங்கள் யாரையும் கொல்லச் சொல்லவில்லை,  எங்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களை வேண்டுமானால் கத்தி கொல்லலாம், நடைபிணங்களாய் வாழ பணிக்கப்பட்டிருக்கும் எம்மை கொல்லை சொற்களே போதும், இதுகாறும் கொன்றிருக்கிறது, இன்னும் உங்கள் சொற்களுக்கு வலிமை இருக்கிறது, கூர்மை மழுங்கிவிட வில்லை.

”ஏண்டா பறப்பயலே, பறப்பய மாதிரி திரியாதே, சக்கிலியன் மாதிரி ட்ரெஸ் போட்டிருக்கே,”

இவை சொற்கள் மட்டுமல்ல….வலிகளை தூவும் விதைகள், சில நேரங்களில் வன்மத்தை கூட தூவிடும். தூவிய கைகளையும், தூவப்பட்ட விதைகளையும் விட்டு, விட்டு துளித்த தளிரை மட்டும் குற்றம் சொல்லி கடந்து போவது , இந்த சமூகத்திற்கு  எளிதுதான்.

காத்திருக்கச் சொன்ன காந்தியை ”எத்தனை காலத்துக்குடா காத்திருப்பது, என்னையாடா காத்திருக்கச் சொல்றே?” என்று சினம் கொண்டு காந்தியை நாங்கள் கொல்லவில்லை. எங்களுக்கு துரோகம் செய்த காந்தியின் உயிரை காக்க, இந்த கேடுகெட்ட தேசம் கொண்டாடிய காந்தியின் உயிரை காக்க, இரட்டை வாக்குரிமையை விட்டுக் கொடுத்து, காத்திருக்க ஒத்துக் கொண்டோம். ஆனால், காந்தி இரண்டகம் செய்தார். அப்பொழுதும், நாங்கள் அவரை கொல்லவில்லை. காத்திருந்தோம்.  எவன் கொன்றான்  என்று ஊருக்கே தெரியும். (கோட்சே  என்னும் பார்ப்பான் கையில் ’இஸ்மாயில்’ பெயரை பச்சை குத்திக் கொண்டே காந்தியை கொலை செய்தான்.)

கோபத்தை இத்தனை காலமும் சொற்களில்தான் வெளிப்படுத்தியிருக்கிறோம். ஒருவேளை நடைமுறையில் தவறிழைக்கிறோமோ என்ற அச்சம் அவ்வப்போது வந்துதான் போகிறது. அந்த முரண்பாடுகள் சில நேரங்களில் வேறு பாதையை சிந்திக்கும் திசையையும் காண்பிக்கிறது. எங்கள் ரத்தத்தால் சிவந்த மண் மீண்டும் சிவந்தால் என்ன  என்று கூட மனம் கேட்கிறது. ஆனால், கண்டிப்பாக தற்காலிக விடுதலைக்கு இனியும் தயாராக இல்லை  என்ற காரணத்தினாலேயே உங்கள் கைகோர்க்க காத்து நிற்கிறோம். எங்கள் கைகளை தள்ளிவிடும் வசதி உங்கள் கைகளுக்கு இருந்தாலும், உங்களை கைகளை பற்றிக் கொள்ளத்தான் துடிக்கிறோம். எங்கள் சிந்தையை சிவக்க வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

அண்ணல்  எங்களுக்கு கீழ்க்கண்டதைத்தான் போதித்தார். அத்தனை கொடுமைகளை இழைத்த கூட்டத்தை முதன்மை குற்றவாளியாக்காமல், அவர்களையும் அரவணைத்து பொது எதிரியை வீழ்த்தச் சொல்லியிருக்கிறார். இந்து  ஏகாதிபத்தியத்தை வீழ்த்தச் சொல்லியிருக்கிறார்.

 “நீங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி – சாதியைக் கடைப்பிடிக்கும் மக்கள் அல்ல; சாதிகளின் மதமான இந்து மதத்தை மக்களுக்குக் கற்றுத் தந்திருக்கிற சாஸ்திரங்களே உங்கள் பயங்கர எதிரி.” – அண்ணல் அம்பேத்கர்

இந்த அணுகுமுறையைத்தான் நாங்களும் விரும்புகிறோம். ஆனால், சக மனிதர்களையே   எதிரியாக கருதி, முன்னேற்றத்திற்கு தீ வைக்கும் கும்பல், எம் மக்கள் தீப்பெட்டி வாங்கவோ, பெட்ரோல் வாங்கவோ வக்கற்று இல்லை  என்பதை மறக்கிறார்கள்.

எமது மக்களின் பண்பும் இன்னும் சொல்லப் போனால், பொது புத்தியில் படிந்திருக்கும் சொல்லின் எல்லைக்குள் நின்று சொல்ல வேண்டுமானால் “சாதி புத்தி”யில் நாங்கள் யாரையும் பழிவாங்கியே ஆகவேண்டும்  என்ற நிலைத்த நிலைப்பாடில் நின்று கொன்று குவிக்க வில்லை. ஆனால், வன்மம் இருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் குறிப்பிடும் அந்த 18 ஆண்டுகாலம் போல நீண்ட காலமாக நாங்கள் பட்ட ரணத்தின் சுவடுகள் இருக்கிறது. அதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். அதேவேளையில், எங்கள் வலிகளும் அத்தனை எளிதாக கடந்து போகக் கூடியது அல்ல.

ஆனால், இதை சொற்களில் வெளிப்படுத்தினாலோ,  எதிர்த்தியங்கினாலோ எங்களுக்கு பெயர் முரடர்கள், திருடர்கள்….நாங்கள் பழிவாங்க கிளம்பியிருக்கிறோம். சமூகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க கிளம்பியிருக்கிறோம். வன்மத்தோடு திரிகிறோம்.  என்றே எம்மை வரையறுக்கிறார்கள்.

முரடர்களாக இருக்கிறார்கள், பண்படாது இருக்கிறார்கள் ஆகவே இந்து மதத்திற்கு தகுதியானவர்களாக மாற்றத்தான் அண்ணல் அம்பேத்கர் பௌத்தம் தழுவினார்  என்று ”தமிழ் இந்து தளம்” கக்கும் வன்மத்திற்கு நிகரான வன்மமன்றி வேறென்ன?

”கலந்து வாழ விருப்பமில்லை என்பதற்காக, அவர்கள் தண்டிக்கப்படவில்லை. இந்துக்களுடன் ஒன்றாக சேர்ந்து இருக்க வேண்டும் என்று விரும்புவதால்தான் அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.” – (அண்ணல் அம்பேத்கர், ஆங்கில தொகுப்பு 5)

  உங்கள் கைகளுக்காக காத்திருக்கிறோம்.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

மார்க்ஸ் - ஜென்னி




உன்னுடைய நிரந்தர இருப்புக்காக எனது இதயம் எப்படி ஏங்குகிறது தெரியுமா?ஆசையாலும், மகிழ்ச்சியாலும் எவ்வளவு துடிக்கிறது தெரியுமா? நீ எங்கே செல்கிறாயோ அங்கெல்லாம் எவ்வளவு ஆவலாக பின் தொடர்ந்து செல்கிறது தெரியுமா? நான் உன்னோடு வருவேன் முன்னேறிச் செல். பின்னாலேயே நான் வருவேன் உனது பாதைகளில் உள்ள தடைகளை எல்லாம் அகற்றி, அதை சுகமானதாக்க முடிந்தால் இன்னும் மகிழ்வேன் - ஜென்னி 

அனைவருக்கும் பைத்தியம் பிடித்துவிட்டதாகத் தெரிகிறது. இதைப் பற்றி என்ன நினைப்பது? எதிலும் ஒரு தீவிரம் என்பதை நல்லபடியாக எடுத்துக் கொள்வதா? அல்லது நமது லட்சியத்தை அடைய இன்னும் வெகுதூரம் நாம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்பதா?”- ஜென்னி, மக்கள் மத்தியில் நிலவும் மூடநம்பிக்கைகள் தொடர்பாக…. 

"வாழ்வதற்கும் எழுதுவதற்கும் எழுத்தாளன் சம்பாதிக்க வேண்டும் என்பது உண்மையே. ஆனால், சம்பாதிப்பதற்காகவே அவன் வாழவோ, எழுதவோ கூடாது. எழுத்தாளனுக்கு அவனது எழுத்து கருவி அல்ல. அது தன்னளவிலேயே முடிந்த ஒரு இலக்கு. தேவைப்பட்டால் எழுத்து ஜீவித்திருக்க தனது ஜீவிதத்தையும் அவன் தியாகம் செய்வான்." – மார்க்ஸ்

"மரம் பற்றி சட்டம் இயற்றும் போது இவர்கள் மரத்தைப் பற்றி மட்டுமே யோசிக்கிறார்கள். ஒவ்வொரு பொருளியல் பிரச்சினையையும் அரசியல் ரீதியாக தீர்க்க மாட்டேன் என்கிறார்கள். பிரச்சினையை அதன் ஒட்டுமொத்தமான சிவில் சமுதாய நோக்கு மற்றும் ஒழுக்கவியலில் இருந்து தீர்க்க மாட்டேன் என்கிறார்கள்." – மார்க்ஸ்

இந்த வாழ்க்கை எனக்கு மிகவும் நிறைவைத் தந்திருக்கிறது கார்ல். சக மனிதனின் உயர்வுக்குப் பாடுபடுபவனே சிறந்த மனிதன். அதுபோன்ற வேலையில் கிடைக்கும் சந்தோஷமும் நிம்மதியும் வேறு எதிலும் கிடைக்காது என்று நீதானே சொல்லியிருக்கிறாய். நாம் இருவரும் அந்த வாழ்க்கையைத்தானே விரும்பி வாழ்ந்திருக்கிறோம். – ஜென்னி