இந்தியாவின் உளவு நிறுவனங்களும், வெளியுறவுத் துறையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற, நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகளை வழி நடத்தி வருகின்றன என்றே சொல்ல வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இந்தியாவை ஆட்சி செய்வது பார்ப்பனியம் தான். பார்ப்பனியத்தோடு கை கோர்த்து நின்றால் மட்டுமே, தங்களின் சுரண்டலை நடத்த முடியும் என்பதைப் புரிந்து கொண்ட - பனியாக்கள் பெரும் தொழில் நிறுவனங்கள் - பன்னாட்டு நிறுவனங்கள் - இதற்கு ஒத்திசைவாக தங்களது நடவடிக்கைகளை தகவமைத்துக் கொள்கின்றன. பெரும் தொழில் நிறுவனங்கள் உயர் பதவிகளில் பார்ப்பனர்களையே நியமித்துக் கொள்வதும், இந்தக் கண்ணோட்டத்தில் தான்.
இத்தகைய அதிகார அமைப்பில் பிரதமர்களாக வருபவர்கள் - பார்ப்பன பனியா - பன்னாட்டு - ஆளும் வர்க்க நலனோடு இணைந்து நின்றால்தான், தங்களது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் பிரதமர்கள் பலரும் பார்ப்பனியம் சுட்டும் பாதையிலேயே நடைபோடுகிறார்கள். இதற்கு மாறாக செயல்பட முடிந்தால் வீழ்ச்சியைத்தான் சந்திக்க வேண்டும். அப்படி பார்ப்பனியத்துக்கு எதிர் திசையில் - சமூகநீதி பாதையில் நடைபோட முயன்று வீழ்த்தப்பட்ட வெகு அபூர்வமான பிரதமர் வி.பி.சிங்! காவிரிப் பிரச் சினைக்கு நடுவர் மன்றம் அமைந்ததிலிருந்து, மண்டல் அமுலாக்கம் வரை அவர் பார்ப்பனிய கட்டமைப்புக்கு வெளியிலிருந்து, இயங்கிய பிரதமராகவே இருந்தார்.
இத்தகைய வி.பி.சிங்கை வீழ்த்தும் பார்ப்பனிய அணியில் தன்னையும் இணைத்துக் கொண்டவர்களில் ஒருவராகவே எம்.கே.நாராயணனும் இருந்திருக்கிறார் என்பதற்கான சான்றுகள் இருக்கின்றன.
ராஜீவ் மரணம் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி ஜெயின் ஆணையத்தின் பரிந்துரையில் இதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. இவற்றை ஆராய்வதற்கு முன் ஈழத் தமிழர் பிரச்சினையில் உளவு நிறுவனங்களின் பார்வை அன்று முதல், இன்று வரை எப்படி இருக்கின்றன என்பதைக் குறிப்பிட வேண்டும். இலங்கைப் பிரச்சினையில் - இந்தியாவின் தலையீட்டுக்கு அடிப்படையான உள் நோக்கம் உண்டு. தெற்கு ஆசியாவில் தன்னை வலிமையான சக்தியாக நிலை நிறுத்திக் கொள்வதே இந்தியாவின் அடிப்படை நோக்கம். மாலத் தீவு, நேபாளம், பூட்டான் போன்ற இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளின் வெளியுறவு ராணுவ ரீதியான கொள்கைகளைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்த இந்தியா, இந்தப் பட்டியலில் இடம் பெறாத, இலங்கையையும், அதில் இணைத்துக் கொள்ள விரும்பியது. அதுதான், இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் தலையீட்டுக்கான அடிப்படை நோக்கமாக இருந்தது.
அமெரிக்காவின் ‘டைம்’ பத்திரிகை (ஆசியா பதிப்பு 3.4.89) இது பற்றி விரிவாக வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், இவ்வாறு குறிப்பிட்டது:
“இலங்கையில் மைனாரிட்டி மக்களான தமிழர்களுக்கு இந்தியா ராணுவப் பயிற்சி அளித்து, ஆயுதங்களை வழங்கி, இலங்கைக்கு அனுப்பி, ஜெயவர்த்தனாவுக்கு எதிராக கொரில்லா யுத்தத்தை நடத்துமாறு பணித்தது. இதுநாள் வரை, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று இந்தியா மறுத்து வந்தாலும், இதில் பயிற்சி பெற்ற அமைப்புகளைச் சார்ந்தவர்களும், இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளும், இலங்கை உளவு நிறுவனமும் இதை உறுதிபடுத்துகின்றன. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு முதலும் முடிவுமான ஒரே காரணம் - இலங்கையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் என்று இந்திய அதிகார வட்டாரங்கள், உறுதியாகக் கூறின” என்று சுட்டிக்காட்டியது அந்த ஏடு!
மேலும் பல திடுக்கிடும் தகவல்களும் அதில் இடம் பெற்றிருந்தன. “1984-ல் இப்படிப் பயிற்சிப் பெற்ற ஈழப் போராளிகள் அமைப்புகள் இலங்கை ராணுவத்துக்கு எதிராக நடத்திய தாக்குதல்களில் தோல்வியே அடைந்தன. இதனால் சிங்களப் பொது மக்கள் மீது தாக்குதல்களைத் தொடருமாறு - ‘ரா’ உளவு நிறுவன அதிகாரிகள் வற்புறுத்தினர். ‘புளாட்’ என்ற அமைப்பின் தலைவர் உமா மகேசுவரன் கூறுகையில், “ஒரு ‘ரா’ அதிகாரி சிங்களர்களின் திரையரங்கு ஒன்றில், வெடிகுண்டு வீசுமாறும் அல்லது சிங்களர் கூடும் பேருந்து நிலையத்தில், வெடிகுண்டு வைக்குமாறும் எங்களிடம் கூறினார். நாங்கள் அதற்கு மறுத்து விட்டோம். சிங்கள பொது மக்களைக் கொன்றால், எங்களுக்கு ஏராளமாக பணம் தருவதாகவும் ‘ரா’ அதிகாரிகள் கூறினர்” என்று கூறினார்” - என்று எழுதியது, ‘டைம்’ ஏடு. இந்திய உளவு நிறுவனங்கள் - எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவை என்பதற்கு இது ஒரு உதாரணம்.
இதற்குப் பிறகு தான் அதுவரை ஆசியாவில் இந்தியாவுக்கு எதிர்ப்பான அரசியலை நடத்தி வந்த ஜெயவர்த்தனே, இந்தியாவிடம் இறங்கி வந்தார். (ஜெயவர்த்தனாவின் அரசியல் எதிரியும், அவருக்கு முன் அதிபராகவும் இருந்த திருமதி பண்டாரநாயகே. இந்தியாவின் பிரதமர் இந்திராவோடு நெருக்கமாக இருந்ததும், ஜெயவர்த்தனாவின் இந்திய எதிர்ப்புக்கு, முக்கிய காரணம்) ஜெயவர்த்தனாவைப் பணிய வைக்க - ஈழத்தில் போராளிகளுக்கு ராணுவப் பயிற்சியையும், ஆயுதங்களையும் தந்து அப்பாவி சிங்களர்களைக் கூட கொன்று குவிப்பதற்கு பச்சைக் கொடி காட்டிய உளவுத்துறை - அந்த முயற்சியில் வெற்றி பெற்ற பிறகு, தனது கவனத்தை போராளிகளைப் பணிய வைப்பதில் திருப்பியது.
போராட்டக் களத்தில் நின்ற விடுதலைப்புலிகளைக் கலந்து ஆலோசிக்காமல், ஜெயவர்த்தனாவோடு, ராஜிவ் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொண்டார்.
ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்திய ராணுவம் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டாலும், ஆயிரமாயிரமாய் தமிழ் மக்கள் இந்திய ராணுவத்தின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு பலியானார்கள். தமிழர் வாழும் வடக்கு கிழக்குப் பகுதியில், இந்திய உளவு நிறுவனம் தனது ‘பொம்மை’ ஆட்சி ஒன்றை உருவாக்கியது. வரதராஜப் பெருமாள் என்பவருக்கு முதலமைச்சர் மகுடம் சூட்டி உட்கார வைத்தார்கள். ஆனால், உளவு நிறுவனத்தின் அத்தனை முயற்சிகளும், படுதோல்வியில் முடிந்தன. அவமானமாக - இந்திய ராணுவம், ஈழத்திலிருந்து வெளியேறியது. இதுதான் வரலாறு.
ஜெயவர்த்தனாவைப் பணிய வைக்க, போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி தந்தது உளவுத் துறை. பிறகு போராளிகளைப் பணிய வைக்க இந்திய ராணுவத்தை அனுப்பி மூக்குடைபட்டது, உளவுத்துறை! 1991-ல் ராஜீவ் மரணத்துக்குப் பிறகு, இலங்கை அரசியலில் நேரடித் தலையீட்டிலிருந்து, இந்தியா ஒதுங்கிக் கொண்டாலும், இந்தியாவின் உளவுத்துறை, வெளியுறவுத் துறையைச் சார்ந்த அதிகார வர்க்கம் தொடர்ந்து திரை மறைவு செயல்களில் ஈடுபட்டே வந்திருக்கிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு.
2003 ஆகஸ்டு மாதத்தில் - ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் ஜெ.என்.தீட்சத், ஒரு கட்டுரை எழுதினார். அதில், “இலங்கையில் நடக்கும் சமாதானப் பேச்சு வார்த்தைகளை இந்தியா ஆதரித்துக் கொண்டே, இலங்கை அரசுக்கு அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும், தீவிரமான உதவிகளை செய்ய வேண்டும். அப்போதுதான், இலங்கை அரசு, பலமான நிலையிலிருந்து விடுதலை புலிகளோடு பேச முடியும்” (While supporting the peace process, india should strengthen the Srilankan Government in Political and logistical terms so that it can negotiate with the tigers from a position of strength) என்று எழுதினார். 2004 ஆம் ஆண்டு மே முதல் வாரத்தில் ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேட்டுக்கு அளித்த பேட்டியிலும் - ஜெ.என்.தீட்சித் இதையே வலியுறுத்தினார். ஜெ.என்.தீட்சித், வெளியுறவுத் துறையின் முக்கிய அதிகாரி. இலங்கையில் இந்தியாவின் தூதுவராகவும் இருந்தவர். ராஜீவ் காந்தியோடு நெருக்கமாக இருந்த பார்ப்பனர். ஆக - ஈழப் பிரச்சினையில் உளவுத்துறையின் தலையீடு, இந்த நோக்கத்தில்தான் இருந்தது. அது மட்டுமின்றி, இந்தியாவின் பிரதமர்கள், அமைச்சர்கள் எவரும் இப்பிரச்சினை பற்றி வாய்மூடி மவுனம் சாதித்தபோது, வெளியுறவுத் துறை அதிகாரிகளாக இருந்த பார்ப்பனர்கள் - இப்படி வெளிப்படையாகப் பேசி செயல்படுமளவுக்கு அதிகாரம் படைத்தவர்களாக திகழ்ந்தார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
இப்படி தன்னிச்சையாக, அதிகாரத்தைக் கையில் எடுத்து செயல்பட்ட மற்றொரு உளவுத்துறை அதிகாரிதான் எம்.கே.நாராயணன்.
ராஜீவ் கொலை செய்யப்பட்டபோது, இந்தியாவின் பிரதமராக இருந்தவர் சந்திரசேகர். தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல் செய்யப்பட்டிருந்தது. சந்திரசேகர் ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்தவர் - விடுதலைப்புலிகளை பரம எதிரியாகக் கருதும் பார்ப்பனர் சுப்பிரமணியசாமி. தமிழ்நாட்டில் நடந்து வந்த தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி செயல்பட்டவர் ஜெயலலிதா. 1988-89 ஆம் ஆண்டுகள் மட்டும் ஆட்சியிலிருந்த தி.மு.க. - சந்திரசேகர் ஆட்சியில் - கலைக்கப்பட்டதற்கு சொல்லப்பட்ட முக்கிய குற்றச்சாட்டு, தி.மு.க. ஆட்சி விடுதலைப்புலிகளோடு ரகசிய உறவு வைத்திருந்தது என்பது தான்!
இப்படி - தி.மு.க.வுக்கு எதிராக ஒரு அறிக்கையைத் தயாரித்துக் கொடுத்த ‘மகா’ மனிதர், இதே எம்.கே. நாராயணன் தான். இப்போது தமிழ்நாடு விடுதலைப் புலிகளின் ஆயுதக்களமாகப் பயன்படுகிறது என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்கிட திட்டமிட்டு காய்களை நகர்த்தி வரும் அதே எம்.கே. நாராயணன் தான், அப்போதும் தி.மு.க.வுக்கு எதிரான உளவு அறிக்கையைத் தயாரித்தார். இந்த உளவு அறிக்கை பற்றிய விவரங்களைக் காண்பதற்கு முன்பு, பிரதமராக இருந்த வி.பி.சிங், ஈழப் பிரச்சினையில் எத்தகைய பார்வையைக் கொண்டிருந்தார் என்பதையும் குறிப்பிட வேண்டும். காரணம், எம்.கே. நாராயணன் தயாரித்திருந்த உளவுத்துறை அறிக்கைக்கும், வி.பி.சிங் ஈழப் பிரச்சினையில் கொண்டிருந்த பார்வைக்கும் தொடர்பு உண்டு.
ராஜீவ் கொலை பற்றி விசாரிக்க மத்திய அரசு நியமித்திருந்த நீதிபதி ஜெயின் ஆணையம் முன் வி.பி.சிங், சாட்சியமளித்தார். (ஈழத்திலிருந்து இந்திய ராணுவத்தைத் திரும்பப் பெறும் முடிவை எடுத்தவர் அன்றைய பிரதமர் பொறுப்பில் இருந்த வி.பி.சிங் என்பது குறிப்பிடத்தக்கது)
வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதுதான் தமிழ்நாட்டில் நடந்த தி.மு.க. ஆட்சி - விடுதலைப்புலிகளோடு ரகசிய தொடர்பு கொண்டிருந்தது என்று உளவுத் துறை அறிக்கை தயாரித்திருந்தது. அந்த அறிக்கையைப் பற்றி, வி.பி.சிங் தனது கருத்துகளை ஆணையம் முன் பதிவு செய்தார். வி.பி.சிங் தனது வாக்கு மூலத்தில் தெரிவித்த முக்கிய கருத்துகள்:
ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் உருவான பிறகும், தமிழ்நாட்டில் அகதிகளாக வந்த 1,40,000 அகதிகளில் ஒரு லட்சம் பேர், ஈழத்துக்குத் திரும்ப முடியாத நிலைதான் நீடித்தது.
தமிழ்நாட்டில் ஈழப் போராளிகளுக்கான தார்மீக, ராணுவ ஆதரவு, 1985 களிலிருந்தே தொடங்கிவிட்டது. பிரதமர் இந்திரா ஆட்சியின் போதும், ராஜீவ் ஆட்சியின் போதும் இவை தொடர்ந்தன. தமிழகத்தின் மூலை முடுக்குகள்கூட போராளிகளுக்குத் தெரியும். அங்கே பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழ்நாட்டு மக்கள் உணர்வு பூர்வமாக வழங்கும் உடைகளையும், மருந்துகளையும், எப்படித் தடுக்க முடியும்? கடல் வழியாக கடத்தல் நடப்பது, கடந்த மூன்று அரசுகளிலும் நடந்திருக்கிறது.
விடுதலைப்புலிகளால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று கூறுவது பற்றி எனது கருத்து இது தான். ஜம்மு காஷ்மீரிலும், பஞ்சாபிலும், அசாமிலும் கூட தீவிரவாதிகள் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. அங்கே 100 சதவீத திருப்தியான நிலை வந்துவிடவில்லை. தமிழ் நாட்டைப் போலவே இதுவும் மத்திய அரசின் கவலைக்குரிய பிரச்சினைதான் தமிழக அரசியல் தலைவர்களோடு நான் தொடர்பு கொண்டிருந்தேன். அவர்கள் - தமிழ்நாட்டில், ஈழப் போராளிகளின் ராணுவ நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்று கூறினார்கள். அதே நேரத்தில், தீவிர வாதத்தைத் தடுக்கும் நடவடிக்கைகள் தமிழ்நாடு உட்பட, இந்தியாவின் வேறு பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே எனது கருத்து” என்றார் வி.பி.சிங்.
விடுதலைப்புலிகளை மட்டும் தனிமைப்படுத்தி, அவர்களை முற்றாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற உளவுத் துறையின் பார்ப்பனப் பார்வையிலிருந்து வி.பி.சிங், மாறுபட்ட - மனித உரிமைப் பார்வை கொண்ட மனிதராகவே இருந்தார் என்பதை வி.பி.சிங் தந்த வாக்கு மூலம் படம் பிடித்துக் காட்டுகிறது. பஞ்சாப், காஷ்மீர், அசாம் மாநிலங்களில் நடக்கும் தீவிரவாதத்தைப் போலவே, தமிழ்நாட்டையும் பார்க்க வேண்டும் என்பதே வி.பி.சிங்கின் கருத்து. ஆனால், விடுதலைப்புலிகள் பிரச்சினையை வைத்து, தமிழ்நாட்டில் நடந்த தி.மு.க. ஆட்சியைக் கலைத்துவிட பார்ப்பன உளவு நிறுவனங்கள் திட்டமிட்டிருந்தன. ஈழத் தமிழர் பிரச்சினைகள் தமிழ்நாட்டில் வலிமை பெற்றால் தமிழின எழுச்சி உருவாகி, அது பார்ப்பன எதிர்ப்பைத் தீவிரப்படுத்திவிடும் என்றே பார்ப்பன சக்திகள் நடுங்கின. இதுதான், விடுதலைப்புலிகள் பிரச்சினையில் பார்ப்பன சக்திகள் தீவிரம் காட்டுவதற்கான நோக்கமாகும்.
மற்றொரு முக்கிய கேள்வியும், வி.பி.சிங் இடம் கேட்கப்பட்டது. “தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கும், விடுதலைப் புலிகளுக்கும் ரகசிய தொடர்பு உண்டு என்று உளவுத்துறை, மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையைத் தாங்கள் பார்க்கவில்லையா?” என்பது கேள்வி.
“என்னுடைய பார்வைக்கு அந்த அறிக்கை கொண்டு வரப்படவில்லை. பிரதமர் அலுவலகத்துக்கும், அமைச்சரவை செயலாளருக்கும் அந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக இப்போது தான் தெரிகிறது. என்னுடைய பார்வைக்கு அதைக் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் கொண்டு வரப்படவில்லை” என்கிறார் வி.பி.சிங்.
அப்போது உளவுத்துறை இயக்குனராக இருந்தவர் எம்.கே. நாராயணன். அவர் தி.மு.க.வுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே தொடர்பு உண்டு என்று இரண்டு அறிக்கைகளை சமர்ப்பித்தார்.
1. DIB U.O.NO.1(14)89(11) - 2699 dated 26.6.1989 by Shri M.K.Narayanan, Director I.B.
2. I.B. U.O.NO.1(14)90(11) dated 8.5.90.
தமிழ்நாட்டில் தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள் விடுதலைப் புலிகளோடு தொடர்பு வைத்துள்ளார்கள் என்று அந்த அறிக்கை கூறியது. அதுமட்டுமல்ல, உணவுப் பொருள்களும், மருந்துகளும்கூட, ஈழத் தமிழர்களுக்கு அனுப்பப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கை வற்புறுத்தியது. எம்.கே.நாராயணனின் மனிதாபிமானத்துக்கு இது ஒரு உதாரணம்.
பிரதமராக வி.பி.சிங் பார்வைக்குப் போகாமலேயே ஒரு முக்கிய அறிக்கையை உளவுத்துறையும், பார்ப்பன அதிகார வர்க்கமும் மறைத்துவிட்டதோடு, அந்த அறிக்கையை செயல்பட வைக்கும் சூழ்நிலைக்குக் காத்திருந்தன என்பது தான் இதிலிருந்து தெளிவாகும் உண்மை. மக்கள் பிரதிநிதிகளை மிஞ்சிய அதிகாரம் படைத்த சக்திகளாக இந்த உளவுத் துறை வெளியுறவுத் துறை பார்ப்பன அதிகார வர்க்கம் செயல்படுகிறது என்பதற்கு இது மற்றொரு முக்கிய சான்று!
(தொடரும்)
- விடுதலை இராசேந்திரன்
http://www.keetru.com/periyarmuzhakkam/mar07/intelligence_dept_1.php
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக