செவ்வாய், 4 நவம்பர், 2008

நூற்றாண்டுகால தனிமையும் தொடரும் துரோகமும்....-பொன்னிலா

இன்றைய அறிக்கை நாளைய ஆவணம். தமிழகத்தின் தமிழினத் தலைவர்களின் அறிக்கைகள் கூட எதிர்கால இளம் தலைமுறையினருக்கு கடந்த காலத்தின் சாட்சியமாய் இருக்கும். துரோகமும் பெருந்துரோகமுமாய் கொந்தளிப்பாய் நம்மை இதுவரை கடத்தி வந்த தலைவர்களின் வாக்குமூலங்களாய் அவைகள் பல்லிளிக்கக் கூடும். முன்னெப்போதையும் விட கடந்த பத்து நாட்களில் தமிழக அரசியல் அறிக்கைகளால் ஆனதாய் மாறியிருக்கிறது. வாழும் காலத்தில் காந்திகளாகவும் மடிந்த பிறகு ஹிட்லர்களாகவும் தலைவர்களை வரலாறு புரட்டிப் போட்டிருக்கிறது. ஆனால் இவர்கள் மகாத்மாக்களா? ஹிட்லர்களா என கணிப்பதே சிரமமாக இருக்கிறது. இந்த அம்மணமான அவமான அரசியலுக்கு அவர்கள் வைத்துக் கொண்ட பெயர் அரசியல் ராஜதந்திரம். நாமோ அதை “தொடரும் துரோகம்” என்கிறோம்.

Karunanidhi“கொடுங்கையூரில் ராஜீவ்காந்தி சிலை உடைக்கப்பட்டதன் மூலம் தமிழகத்தில் புலிகளின் நடமாட்டம் இருப்பது உறுதியாகி இருக்கிறது” இப்படி ஒரு அறிக்கையை அண்மையில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு விட்டிருந்தார். படித்த உடன் கண்ணைக் கட்டியது. இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த மக்கள் தலைவர் ஒருவரின் சிலையை அல்லவாஉடைத்திருக்கிறார்கள். ஆனாலும் புலிகள் இப்படி கொடுங்கையூருக்கு வந்து ராஜீவ்காந்தி சிலையை உடைத்திருக்கக் கூடாது என்பதே என் கருத்து. அதுவும் கிளிநொச்சி சிங்கள ராணுவத்தின் முற்றுகையில் இருக்கும்போது தமிழ் மக்களைப் பாதுகாப்பதை கைவிட்டு கொடுங்கையூருக்கு தங்களின் பிரதான தளபதிகளை சிலை உடைக்க அனுப்பி வைத்ததை மானமுள்ள, தேசபக்தி உள்ள, பாரத மாதாவின் உண்மை புத்திரர்கள் யாரும் கண்டிக்காமல் இருக்க முடியாது. ஆகவே புலிகளை நானும் கண்டிக்கிறேன் ராஜீவ்காந்தியின் சிலையை உடைத்ததற்காக.

இன்னும் எதைக் கண்டிக்க வேண்டும், எதைப் பாராட்ட வேண்டும்? “ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்தியாவே மௌனசாட்சி என்றும் இந்தியா கொடுக்கிற ஆயுதங்களில் தான் ஈழ மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்றும் சொன்ன ஜெயலலிதாவைப் பாராட்டுவதா? அல்லது மறுநாளே.”இலங்கைப் போரை நிறுத்தச் சொல்லும் அதிகாரம் இந்தியாவுக்குக் கிடையாது. புலிகள் பயங்கரவாதிகள் அவர்கள் என்னை கொல்லத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்” என்று சொன்ன ஜெயலலிதாவைக் கண்டிப்பதா?

இரண்டு நாள் கழித்து, டில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் “விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் அல்ல. தமிழர்களின் விடுதலைக்காக போராடும் இயக்கம்” என்று சொன்னதை பாராட்டுவதா? இல்லை மறுநாளே பாட்டாளி மக்கள் கட்சியின் ஜி.கே.மணி “புலிகள் பற்றி மருத்துவர் ராமதாஸ் சொன்னது வருத்தத்திற்குரியதுதான். புலிகளை நாங்கள் பார்த்தது கூட கிடையாது. (நல்ல வேளை ஈழம் என்பது எங்கிருக்கிறது என்பது கூடத் தெரியாது என்று சொல்லாமல் விட்டாரே) மருத்துவர் அப்படி (போராளிகள் என்று) சொல்லியிருக்கக் கூடாது” என்று சொன்ன மணியைக் கண்டிப்பதா?

அடுத்து அதிரடியாக காட்சிக்கு வந்தார் கருணாநிதி.

“இதோ, இன்று வெளிவந்துள்ள "ஹிந்துஸ்தான் டைம்ஸ்" ஆங்கிலப் பத்திரிகையில் ஜெயலலிதா நம்முடைய அனைத்துக் கட்சி தீர்மானத்திற்குப் பதிலாக வெளியிட்ட மறுப்பறிக்கையை பாராட்டி, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் மூத்த ஆலோசகர் பசில் ராஜபக்ச என்பவர் கொடுத்த பேட்டி வெளிவந்துள்ளது. அதில் அவர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?. ‘நிலைமையை நாங்கள் கவனித்து வருகிறோம். இந்திய அரசு ஏதாவது அறிக்கை வெளியிடுகிறதா என்பதை நாங்கள் பார்ப்போம். அது மாத்திரமல்ல, கருணாநிதிக்கு எதிராக ஜெயலலிதா பேசியிருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.’ இந்த அளவிற்கு சிங்கள அரசுக்கு ஆதரவாக ஜெயலலிதா இருப்பதை அவர்களே ஒத்துக்கொண்டு சொல்லியிருப்பதைப் படிக்கும்போது, தமிழா, இப்போதாவது புரிகிறதா?. உண்மையில் காட்டிக் கொடுக்கின்ற கபட நாடகம் ஆடுவது யார் என்று?” என்று கருணாநிதி சொன்னதை உணர்ச்சிவசப்பட்டு பாராட்டுவதா...

இல்லை இப்போது போர் நிறுத்தக் கோரிக்கையை தூக்கி ஓரமாக வைத்து விட்டு ‘நாற்பதாண்டு காலப் போரை நான்கு நாளில் முடிவுக்கு கொண்டு வர முடியாது.’ என்கிற பிரணாப் முகர்ஜியின் கருத்தையே வழிமொழிந்து “இவ்விஷயத்தில் மத்திய அரசுக்கு திமுக எவ்வித நெருக்கடிகளையும் கொடுக்காது” என்கிற கருணாநிதியைக் கண்டிப்பதா?

நம்மை வழிநடத்திச் செல்கிற, செல்லப்போகிற அய்யாக்களையும், அம்மாக்களையும், புரட்சிப் போராளிகளையும் சரியாக கணித்த ஒருவர் இருக்கிறார். அவரை பாராட்டியே ஆக வேண்டும். போர் வெறிபிடித்த பாசிச இலங்கை அரசின் ஊடகத்துறை அமைச்சராக இருக்கும் லஷ்மன் யாப்பாதான் அவர். தமிழகத்தில் எழுந்த ஈழத் தமிழர் ஆதரவுக் கொந்தளிப்புகள் தொடர்பாக ஊடகத்துறையினரிடம் பேசிய அவர். “இந்தியாவில் தேர்தலொன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் எழுந்திருக்கும் இந்த சூடான நிலைமை, தேர்தல் முடிவடைந்த பின்னர் தணிந்து விடும். இதை கண்டு கொள்ளத் தேவையில்லை” என்றிருக்கிறார். நமது தமிழினத் தலைவர்களை நம்மை விட நமது எதிரி எவ்வளவு துல்லியமாக கணித்திருக்கிறார். அந்த பாசிச அரசின் பிரதிநிதியை பாராட்டாமல் என்ன செய்ய? அவர் தேர்தல் முடிந்த பிறகு தணிந்து விடும் என்றார். மத்தியில் தேர்தல் வர இன்னும் ஆறு மாதங்கள் இருக்கிறது. அதற்குள்ளாகவே முடிந்து போய் விட்டதே.

இரண்டு வார காலத்திற்குள் இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட இந்தியா வழியேற்படுத்தாவிட்டால் தமிழகத்தின் நாற்பது எம்பிக்களும் தங்களின் ராஜிநாமா கடிதங்களை மத்திய அரசுக்கு அனுப்புவார்கள் என்ற முடிவு அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து எடுத்த முடிவு. திமுகவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடிதமும் கருணாநிதியின் கைக்குப் போனது. முடிவுகள் முடிவுகளாக இருந்தன. பாட்டாளி மக்கள் கட்சியோ தங்கள் கட்சி எம்பிக்களின் ராஜிநாமா குறித்து கருத்துச் சொன்ன போது “ராஜிநாமாவை தி.மு.க. தலைவர் அனுப்பினால் நாங்களும் அதனைப் பின்பற்றுவோம்.” என்றார் ராமதாஸ்.

திமுக தனது ராஜிநாமா கடிதங்களை மத்திய அரசுக்கு அனுப்பாவிட்டாலும் பாட்டாளி மக்கள் கட்சி எம்.பிக்கள் தங்களின் ராஜிநாமா கடிதங்களை மக்களவைத் தலைவருக்கு அனுப்புவார்கள் என்று சொல்ல பாட்டாளி மக்கள் கட்சிக்கு கசக்கிறது.

ஓட்டுச் சீட்டு அரசியலையும் பாராளுமன்ற பதவிகளையுமே பிரதானமாக நினைக்கும் இவர்கள் அரசியலற்ற அரசியல் நடத்துகிறார்கள். மக்களையும் அரசியலற்ற அரசியலுக்குத் தூண்டுகிறார்கள். உண்மையில் இந்தக் கொந்தளிப்பை நீங்கள் உருவாக்கவில்லை. அது தமிழக மக்களிடம் தன்னெழுச்சியாய் உருவான ஒன்று. அதை அறுவடை செய்யலாம் என தமிழினத் தலைவர்கள் முயன்றார்கள். காங்கிரஸ் கட்சி ஈழ மக்களுக்கு ஆதரவான போர் நிறுத்தக் கோரிக்கையை விடுதலைப் புலிகளின் பிரச்சனையாக மாற்றியது. திமுக தன் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வன்னிப் போர் முனையில் சிக்கியுள்ள பல லட்சம் மக்களின் வாழ்க்கையை பலிகடாவாக்கியிருக்கிறது.

நாடகங்கள் வெகு வேகமாக அரங்கேறின. இந்தியத் தரப்பில் இருந்து போரை நிறுத்தக் கோரி எவ்விதமான கோரிக்கைகளும் இலங்கை அரசுக்கு விடப்படவில்லை. இலங்கை இனப்பிரச்சனைக்கு ராணுவத் தீர்வின் மூலம் முடிவு காண முடியாது என்கிற மட்டில் கருத்துச் சொன்னார்கள். அவைகள் முடிவுகள் அல்ல கருத்துகள். அதே சமயம் இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்குவதாக எடுக்கப்பட்டது கருத்தல்ல முடிவு. அந்த முடிவுகளை இந்திய அரசாங்கம் செயல்படுத்தியது. இலங்கை கடற்படையோடு சேர்ந்து கூட்டு ரோந்து என்பதும் கருத்தல்ல முடிவு. இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சியளிப்பதாக எடுக்கப்பட்டதும் கருத்தல்ல முடிவு.

இந்நிலையில் தான் தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்று சேர்ந்து இலங்கையில் போர் நிறுத்தம் என்ற கோரிக்கையை தமிழகத்தின் முடிவாக எடுத்து அதை மத்திய அரசுக்கு கோரிக்கையாக அனுப்பி வைத்தார்கள். இரண்டு வாரகாலத்திற்குள் இந்தியா தலையிட்டு போர் நிறுத்தம் அறிவிக்காவிட்டால் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என்பதுதான் அந்த முடிவு. ஆமாம் தமிழகத்தின் முடிவு. மத்திய அரசுக்கோ அது ஒரு கோரிக்கை அவ்வளவுதான்.

Jayalalithaகடந்த ஐம்பதாண்டுகால ஈழத் தமிழரின் மீதான துரோக வரலாற்றில் இதுவரை தமிழகம் கை நனைக்காமலேயே இருந்து வந்தது. அதை மட்டும் விடுவானேன் அதையும் செய்து விடுவோம் என்று நினைத்தார்களோ என்னவோ ஒரு இன அழிப்பின் மீதான இந்தியத் தீர்ப்புக்கு இவர்கள் குறிப்பாக அதிமுகவும், திமுகவும், பாட்டாளி மக்கள் கட்சியும் குறிப்பெழுதிக் கொடுத்து விட்டார்கள். அதனால்தான் கருணாநிதி இலங்கை தொடர்பாக இந்தியா எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கிறார். அதாவது போர் தீர்வல்ல என்று கருத்துச் சொல்கிறவர்களை பாராட்டுகிறார்.

சூழலை ஆனது ஆனபடி ஒப்பேற்றியபடி இனவெறியன் பசில் ராஜபட்சேவோடு விருந்து உண்ட கையோடு வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னைக்கு வந்து கருணாநிதியைச் சந்தித்தார். இந்தியா 800 டன் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு அனுப்பும் என்றும் இதை முறைப்படி இலங்கை அரசே தமிழ் மக்களுக்கு வழங்கும் என்றும் நாற்பதாண்டு காலமாக நடக்கிற போரை நான்கு நாட்களில் முடிவுக்கு கொண்டு வர முடியாது என்றும் நார்வேயின் தலைமையில் அமைதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், கிழக்கு மக்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதன் மூலம் அங்குள்ள மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும் என்றும் கலந்து கட்டி இலங்கை அதிபர் ராஜபட்சேயின் கருத்துக்களை சென்னையில் திமுகவின் ஆதரவோடு கொட்டிக் கொண்டிருந்தார் பிரணாப் முகர்ஜி.

இதில் வேடிக்கையான ஒன்று தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்ததான ஒன்றும் இருந்தது. இனி இலங்கை அரசு கடல் எல்லையை அளந்து இந்தியாவிடம் சொல்லுமாம். அதன்படி அங்கீகரிக்கப்பட்ட படகுகளில் எல்லை தாண்டிச் செல்லும் மீனவர்களை பத்திரமாக இலங்கை திருப்பி அனுப்புமாம். அப்படி இலங்கை அரசு சொன்னபோது 2005ல் இலங்கை அரசோடு போடப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றும்படி இந்தியா கேட்டுக் கொண்டதாம்.

2005ல் போடப்பட்ட இலங்கை இந்திய ராணுவ ஒப்பந்தம் என்பது தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை ஒட்டு மொத்தமாக இலங்கை அரசிடம் அடகு வைக்கிற ஒப்பந்தம். தவிரவும் இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் சேர்ந்து நிகழ்த்தும் கூட்டு ரோந்து என்கிற முடிவு இருக்கிறதல்லவா? அந்த முடிவும் இந்த ராணுவ ஒப்பந்தத்தின் கீழ்தான் வருகிறது.

இதில் தமிழகம் வைத்த போர் நிறுத்தக் கோரிக்கை எங்காவது வந்ததா? அதற்குப் பதில் மத்திய அரசு என்ன செய்திருக்கிறது என்று பார்த்தால், இது வரை தமிழகத்தில் எழுந்த அரசியல் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைத்திருந்த கூட்டு ரோந்து, ராணுவ ஒப்பந்தம் போன்ற விஷயங்களை மிகவும் தந்திரமாக மாநில முதல்வரிடம் ஒப்புதல் வாங்கிச் சென்றிருக்கிறது. இதில் வெற்றி தோல்வி யாருக்கு என்று பார்த்தால் தோல்வி தமிழக மக்களுக்கும் ஈழ மக்களுக்கும்தான், இம்முறையும் வெற்றி சிங்களர்களுக்குத்தான். எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பசில்ராஜபட்சே எரிகிற தீயில் தண்ணீரை ஊற்றி அணைத்து விட்டு வெற்றியோடு கொழும்புக்குச் சென்றிருக்கிறார். இவர்களோடு கூட்டு சேர்ந்த தமிழக தலைவர்கள் டில்லி காங்கிரஸ்காரர்களோடு சேர்ந்து தமிழகத்துக்கு பட்டை நாமம் போட்டு விட்டுப் போய் விட்டார்.

இலங்கையின் முன்னாள் அதிபரும் பாசிச தலைவருமான ஜெயவர்த்தனே விரித்த வலையில் எப்படி ராஜீவ்காந்தி சிக்கிக் கொண்டாரோ அப்படி அண்ணனும் தம்பியுமான ராஜபக்ஷேவும், பசில்ராஜபக்ஷேவும் விரித்த வலையில் மன்மோகன் சிங் வகையாக சிக்கிக் கொண்டிருக்கிறார். இப்போது தமிழினத் தலைவர் கருணாநிதி என்ன சொல்கிறார் என்றால், “கிட்டத்தட்ட அவர் (பிரணாப் முகர்ஜி) சொல்கிற மாதிரி 40 ஆண்டுகளாக நீடிக்கிற யுத்தம் நான்கு நாட்களில் முடியாது. நாம் போர் நிறுத்தம் வேண்டும் எனச் சொன்னது பொது மக்களை இன்னல்களில் இருந்து காப்பற்றத்தான். இப்பொழுது இலங்கை அரசு நாங்கள் பொதுமக்களை நிச்சயம் தாக்க மாட்டோம் என்ற உறுதி மொழியை அளித்திருக்கிறது” என்கிறார்.

நண்பர்களே, இந்திய அரசின் அக்கிரமமான இந்த முடிவை கருணாநிதி ஆதரிக்கிற போது ‘நாம்’ என்ற சொல்லை பயன்படுத்துகிறார். அதாவது அனைத்துக் கட்சித் தலைவர்களும் போர் நிறுத்தம் என்று சொன்னது மக்களை இன்னல்களில் இருந்து காக்கத்தான் என்பதை தந்திரமாக சுருக்கிக் கதைக்கிறார். ஈழ மக்களை சோற்றால் அடித்தால் விழும் பிண்டங்கள் என நினைக்கிறார். அதனால்தான் யுத்த முனையில் வன்னிக்காடுகளில் பாம்புக்கும் தேளுக்கும் மத்தியில் குண்டு மழைக்கு செத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு தயிர்சாதமும் புளி சாதமும் போடக் கேட்கிறார்.

இவர்களின் இந்தக் கூட்டு சதியை கூட்டு நாடகத்தை மருத்துவர் ராமதாஸ் மத்திய அரசு இறங்கி வந்து விட்டதுபோலப் புகழ்கிறார். அவர்கள் தமிழ் மக்களுக்கு வீசி வைத்திருக்கும் வலையைப் புரிந்து கொண்டே இவர்கள் இந்த நூற்றாண்டு கால துரோகத்தைச் செய்கிறார்கள். சரி இலங்கை அரசு ஒப்புக் கொண்டபடி வன்னிப் பகுதிக்கு உணவுப் பொருட்களை அனுப்புமா? என்றால் அனுப்பும்; உணவோடு கூடவே ராணுவத்தினருக்குத் தேவையான தளவாடங்களையும் சேர்த்தே அனுப்பும். தற்காப்புத் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் புலிகளோ ஆயுதம் வரும்போது அதை தாக்கக் கூடும். உடனே “இதோ பாருங்கள் இந்தியா கொடுத்த உணவுப் பொருட்களை நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினோம். ஆனால் புலிகள் அதை தாக்கியழித்து விட்டார்கள்” என்று இலங்கை பிரச்சாரம் செய்யும்.

தமிழகத்தில் எப்போதெல்லாம் கொந்தளிப்புகள் எழுந்து வந்தனவோ அப்போதெல்லாம் அதை தங்களுக்கு சாதகமாக மாற்றுவதுதான் போர் வெறி பிடித்த இலங்கை அரசின் யுத்த தந்திரம். அப்படி மக்களின் எழுச்சியை போருக்கு பலியாக்குகிற அளவுக்கு நமது தமிழக தலைவர்கள் இருந்தார்கள்; இன்றும் இருக்கிறார்கள். அதி வேகத்தில் தமிழகத்தில் எழுந்த ஈழ ஆதரவு அலை ஓய்ந்து விட்டதா? என்றால் இல்லை. அது எளிய மக்களிடம் பெரும் கொந்தளிப்பாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சிதான் இந்த எழுச்சியை புலிகள் பிரச்சனையாக மாற்றுகிறது. எழுகின்ற ஆதரவு அலையை விட அதிக சத்தம் கேட்கும்படியாக இந்த ஆதரவோடு விடுதலைப் புலிகளை முடிச்சுப் போட்டு பேசுகிறவர்களின் வாயை அடைக்கிறது.

தேர்தல் நெருங்கி வரும் போது கூட்டணியைக் கணக்கிட்டே இந்த துரோகங்கள் அரங்கேறுகின்றன. திமுகவைத் தவிர்த்து விட்டு காங்கிரஸ் தலைமையில் அணிசேர வேண்டும் என நினைக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. அடுத்தவன் முதுகில் ஏறியே இது வரை சவாரி செய்த காங்கிரஸோ விஜயகாந்தோடும் ரகசிய பேரத்தை நடத்தி முடித்திருக்கிறது. ஒரு வேளை இன்னும் மீதியிருக்கிற ஆறு மாத காலத்தை முழுவதுமாக காங்கிரஸ் அரசு பூர்த்தி செய்து பின்னர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் என்றால் - தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும் பட்சத்தில் - அதிமுக பிஜேபியோடு கூட்டணி சேரும் பட்சத்தில் - கம்யூனிஸ்டுகள் தனித்தோ விஜயகாந்துடனோ சேர்ந்து தேர்தலைச் சந்திக்கும் பட்சத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கருணாநிதி நினைக்கிற மாதிரி இருக்காது.

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைய வாய்ப்பே இல்லை. மக்கள் விரோத காங்கிரஸ் கட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள். பாசிச பிஜேபி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். ஆனால் மாநிலத்தில் ஆளும் திமுக காங்கிரஸ் தயவில் இன்னும் இரண்டரை ஆண்டுகளை ஒட்டியாக வேண்டும் என்கிற சூழலில் - நண்பர்களே இதை முடிந்தால் நினைவில் வையுங்கள் - திமுக அரசை காங்கிரஸ் கவிழ்த்து விடும். காரணம் காங்கிரஸ் விஜயகாந்தின் முதுகில் குதிரை ஏறப் போய்விடும். துரோகம் என்றால் அதற்கு மறுபெயர் காங்கிரஸ் இது கருணாநிதிக்கும் தெரியும்.

Ramadossகாங்கிரஸ்காரர்கள் ஏன் ஈழ மக்கள் மீது இவ்வளவு வன்மத்தோடு நடந்து கொள்கிறார்கள் என்றால் ராஜீவ்காந்தியைக் கொன்று விட்டார்கள் என்கிறார்கள். ஆமாம் கொன்று விட்டார்கள். கடந்த பதினைந்து ஆண்டுகளாக இந்தக் கொலையை கண்டித்தாயிற்று. ஏராளமாய் அழுதாயிற்று இப்போது வேண்டுமானால் மீண்டும் கண்டிக்கிறேன். ராஜீவ்கொலை படுபாதகம். இந்தியாவுக்கு மட்டுமல்ல அமெரிக்கா, அய்ரோப்பா, ஆப்ரிக்கா போன்ற அகில உலகத்துக்கே அது பேரிழப்பு. ஏனென்றால் உலகின் சகல பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் வல்லமையும், சாதுரியமும் உடையவர் அல்லவா? அவர் இல்லாமல், அகில உலகமும் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது, குறிப்பாக ராகுல் காந்தியும், ப்ரியங்காவும் தகப்பனை இழந்து போதிய வருவாய் இல்லாமல் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகத்தான் இருக்கிறது. ஆகவே நானும் ராஜீவ்கொலையைக் கண்டிக்கிறேன்.

சரி, கண்டனங்கள், காரியங்கள், அரசியல் விளையாட்டுகள், கைதுகள் எல்லாவற்றையும் கடந்து இரு கேள்விகள் பாக்கியிருக்கின்றன. அது...

அமீரும் சீமானும் ஏன் கைது செய்யப்பட்டார்கள்? கலைஞர்களின் (Freedom Of Expressions) உணர்வுகளுக்கு சுதந்திரம் உண்டா இல்லையா?

இந்த இரண்டாவது கேள்வியை இவர்களிடம் கேட்பதே அபத்தம். முதலாவது கேள்விக்கு அவர்களில் ஒருவர் பிரிவினைவாதம் பேசினார். இன்னொருவர் புலிகளை ஆதரித்தார். ஆகவே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். புலிகளை ஏன் ஆதரிக்கக் கூடாது என்றால் அவர்கள் ராஜீவைக் கொன்று விட்டார்கள் என்பது பதில். அவர்கள் ஏன் ராஜீவைக் கொல்ல வேண்டும் என்ற நமது இரண்டாவது கேள்வியைக் கேட்டால் அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கிற கேள்வி என்கிறார்கள். ஆனால் பதில் தெரிந்தாக வேண்டிய கேள்வியல்லவா? ஒரு இளம் தலைவனை நாம் ஏன் இழந்தோம் என்று எனது குழந்தை கேட்டால் நான் என்ன பதில் சொல்வது?

இந்திராகாந்தியை அவரது சீக்கிய மெய்ப்பாதுகாவலர்கள் ஏன் கொன்றார்கள்? என்று ஒரு இந்தியக் குழந்தை கேட்டால் மன்மோகன்சிங் பிரதமராக இருப்பதால் இம்மாதிரி கேள்விகளெல்லாம் கேட்கக் கூடாது என்று காங்கிராஸ்காரர்கள் சொல்ல முடியாது. கேட்கிற உரிமையையும் அதை அறிந்து கொள்கிற உரிமையையும் இந்திய அரசியல் சாசனம் எனக்கும் என் சந்ததிக்கும் வழங்கியிருக்கிறது. ஆக, ராஜீவ்காந்தி ஏன் மனித வெடிகுண்டின் மூலம் கொல்லப்பட்டார் என்றால் அதற்கான பதிலை ஈழத்தில்தான் தேட வேண்டும்.

ராஜீவ்காந்தி எதற்காக கொல்லப்பட்டார் என்பதை இன்னொரு கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம். இந்திராவைப் பற்றி உங்களிடம் யாராவது கேட்டால் நீங்கள் கூட எழுதலாம். சரி காங்கிரஸ்காரன் பிரச்சனை புரிகிறது. நமது தமிழினத் தலைவர்களுக்கு என்னதான் பிரச்சனை என்றால் ஒன்றே ஒன்றுதான். அது சென்னை ஜார்ஜ் கோட்டையிலே இருக்கிற மாநில முதல்வர் நாற்காலி என்பதுதான். அதில் யாராவது ஒருவர்தான் அமர முடியும். அதுதான் இவர்களின் பிரச்சனை. இந்திய அரசு இப்படி ஒரு முடிவு எடுக்கிறது என வைத்துக் கொள்வோம். அதாவது ஒரு மாநிலத்தை இரண்டு முதல்வர்கள் ஆளலாம். அதாவது இனி மாநில முதல்வர் நாற்காலி என்பது இரண்டு நாற்காலியாக இருக்கும் என்று முடிவெடுக்கிறது என வைத்துக் கொள்வோம். இவர்களின் பிரச்சனை முடிந்தது. ஜெயலலிதாவும் கருணாநிதியுமே கூட்டணி வைப்பார்கள். ராமதாசும் விஜயகாந்தும் கூட ஒன்றாக இணையும் வாய்ப்பு உண்டு.

ஆக உங்களின் பிரச்சனை உங்களோடு இருக்கட்டும். மக்களை மந்தைகளாக்காதீர்கள். அவர்களை அரசியலற்ற வெற்று வெடிகளாக்கி வேடிக்கை காட்டாதீர்கள். எண்பதுகளில் எழுந்த ஈழ ஆதரவு அலையை பயன்படுத்தித்தான் இந்திராவும் அதன் பின்னர் ராஜீவும் ஈழத்தில் தலையிட்டு வேண்டாத நிகழ்வுகளை உருவாக்கிக் கொண்டார்கள். உங்களின் தலையீடு இலங்கையில் அவசியம்தான். அது ஈழ மக்களுக்கு ஆதரவாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே பயனளிக்கும். அதுவல்லாமல் கூலிக்கு மாரடிக்கிற ராணுவத்தையும் கொள்கைக்காகப் போராடுகிற ஈழ மக்களையும் ஒன்றாக வைத்து அளவிட வேண்டாம். உங்களின் கோஷங்கள் தமிழனத்தின் தலைமைக்கான அறைகூவலகள் எல்லாவற்றையும் உங்கள் மட்டில் மேடைகளில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். மக்கள் உங்களை விட மகாத்தானவ்ர்கள். அவர்கள் எப்போதும் போராளிகளை ஆதரிக்கிறார்கள். போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு துளி கண்ணீரேனும் சிந்துவார்கள்.


http://www.keetru.com/literature/essays/ponnila_1.php

கருத்துகள் இல்லை: