ஒரு பழம்! உலகுக்கே உன்னதமான ஆராய்ச்சிகளை வழங்கிற்று.
சின்ன்ஞ்சிறு ஆப்பிள்! மரத்திலிருந்து விழுந்தது!! – அது தந்தது, அருமையான சிந்தனையை.
“ஏன், விழுந்தது?” – பழம் விழுந்ததை பார்த்தவன். கேட்டான், தன் உள்ளத்தை,
பிறரை பார்த்துக் கேட்டுருந்தால், “பழம்,ஏன் விழும்? பழுத்ததால், விழுந்திருக்கும்!” என்றே பதில் அளித்திருப்பர். இந்தப் பதில் பலரும் சொல்லக் கேட்டு, அவன் சலித்துப்போன பதில். ஆகவே, தன் மனதை கேட்டான். “விழுந்த பழம் நேரே, ஏன் பூமியை நோக்கி விழவேண்டும்?” கேள்வி, கிண்டலுக்கு ஆளாக்கும்,எவனாவது இன்னொருவனை கேட்டால், அவனோ, தன் சிந்தனையைக் கேட்டான்! சிறுகல்லை ஆகாயத்தில்; வீசி, அதுவிழும் வேகத்தைக் கணக்கிட்டான்!! உயரமான இடத்திலிருந்து ஒரு பொருளைப் போட்டு அது பூமியை நோக்கி வந்துசேரும் வினாடிகளை எண்ணினான்! விளைவு, விஞ்ஞான உலகுக்கு, விசித்திரமான உண்மை கிடைத்தது – நியூட்டன் – வரலாற்று மனிதனான் – பூமிக்கு, ஆகர்ஷண சக்தி உண்டென்று விளக்கினான். இது, அங்கே – இங்கிலாந்தில்!
ஒரு பழம் – உன்னதமான, உண்மையை, உலகுக்கு வழங்கிற்று.
இதோ ஒரு பழம்! பாராத பிரசங்கி, பக்தி பிரவாகத்தோடு விவரிக்கிறார் – பாண்டவர்கள் ஆரண்யவாசம் செய்தபோது, பாஞ்சாலி கேட்க, அர்ஜூன்ன் அறுத்துத்தந்தானாம். அது, முனிவர் ஒருவருடையதாம்! அவர் கண்டால் ஆபத்து என்றஞ்சி, இருந்த இடத்திலே அதைக் கொண்டு வைக்க தர்மரும், தம்பிகளும் சக்கரபாணியை துதித்தனராம் – நீலமேக சியாமள வர்ணன் வந்தாராம் – நெஞ்சத்து உண்மைகளை ஒவ்வொருவரும் சொன்னால், மரத்துக்கு பழம் போகும் என்றாராம். ஒவ்வொருவரும் உண்மைகளைச் சொல்ல, கீழே விழுந்த பழம், உயர நோக்கி ஓரிடத்தில் வந்து நின்றதாம் ! பாஞ்சாலி, உண்மையை மறைத்தாளாம் – உடனே பழம் பூமிக்கு வந்ததாம் – கண்ணன் சிரித்துக் கொண்டே, “ நீ பொய் சொன்னாய் திரௌபதா!” என்று சொல்ல, அவள் உண்மையைச் சொன்னாளாம் – “அய்வரின் பத்தினி நான்! இந்த அய்வர் எனக்கிருந்தாலும் கூட, உள்ளத்தின் ஒரு கோடியில் கர்ணன் மீதும் என் கண்கள் பதிந்திருக்கின்றன”, என்று பக்திரசம் சொட்ட வர்ணிக்கிறார், புராணிகர்!
“ அய்ம்புலன்களும்போல்
அய்வரும் பதிகளாகவும்
இன்னும் வேறொருவன்
எம்பெருங்கொழு தனாவதற்கு
உருகும் இறைவனே
எனது பேரிதயம்
அம்புலிதனில்
பெண் பிறந்தவர் எவர்க்கும்
ஆடவர் இலாமையினல்லா
நம்புதற்குளதோ
வென்றனள் வசிட்டனல்லற
மனைவியே யனையாள்”
இன்னம் வேறொருவன்! எம் பெருங்கொழுனாவதற்கு! கவனித்தீர்களா, கவிதையை? உருகுதாம் உள்ளக்ம்! புராணிகரும் மனம் உருகியே வர்ணிக்கிறார், இதனை! இந்த உண்மை கேட்டதும்...உடனே பழம்போய் ஒட்டிக்கொண்டதாம்!
ஒரு பழம் – விஞ்ஞான உண்மையை தர பயன்பட்டது, அங்கே
ஒரு பழம் – புராண பெருமையை விளக்கப் பயன்படுகிறது இங்கே
நியூட்டனுக்கு கோயில் கட்டி யாரும் கும்பிடவில்லை, அங்கே
வேதவியாசருக்கும், கண்ணபிராணுக்கும், ‘பத்தினி’ பாஞ்சாலிக்கும், விழாக்கள் குறைவில்லை இங்கே.
இரண்டும், கீழே விழுந்த பழங்கள் தான்! என்ன செய்வது! அறிவு நடைபோடுகிறது, அங்கே! மகாத்மீயம், பவனிவர முயல்கிறது, இங்கே!
‘திராவிட நாடு’ 5.12.1948
1 கருத்து:
நியூட்டன்- இந்தியாவில் மட்டும் பிறந்திருந்தால் கோவில் என்ன, பெரிய பெரிய கும்பாபிஷேகங்களை செய்யாமலா விடுவார்கள் நம்மவர்கள்?!
கருத்துரையிடுக