உலகில் 135 நாடுகள் தூக்குத் தண்டனையை ஒழித்துவிட்டன. 62 நாடுகளில் மட்டுமே தூக்குத் தண்டனை அமுலில் உள்ளது. அதில், இந்தியாவும், பாகிஸ்தானும் அடங்கும். 2006 ஆம் ஆண்டில் 25 நாடுகளில் 1591 பேருக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது. இதில் 91 சதவீத தூக்கு, 6 நாடுகளில் மட்டும் போடப்பட்டுள்ளது. சீனா, ஈரான், ஈராக், சூடான், அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகியவைகளே இந்த 6 நாடுகள். சர்வதேச மனித உரிமை அமைப்பு இந்த தகவலைத் தெரிவித்துள்ளது. தூக்குத் தண்டனை அமுலில் உள்ளதாலேயே குற்றங்கள் குறைந்து விடவில்லை. அதே நேரத்தில் 1976 இல் கனடா தூக்கு தண்டனையை ஒழித்த பிறகு அந்நாட்டில் கொலைக் குற்றங்கள் 40 சதவீதம் குறைந்துள்ளன. உலகம் முழுதும் அனைத்து நாடுகளும், தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும் என்று, டிசம்பர் 18, 2007 இல் அய்.நா. பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றியது. இது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
அப்பாவிகள் தூக்குத் தண்டனைக்கு உள்ளாக்கப்படும்போது, அவர்கள் உயிர் மீண்டும் வந்துவிடுமா? நிச்சயம் வராது. அமெரிக்காவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 126 பேர் - பிறகு குற்றமற்றவர்கள் என்று, விஞ்ஞான பூர்வமாகக் கண்டறியப்பட்டு, விடுதலை செய்யப்பட்டனர். பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் வழக்குகளும், விசாரணைகளும், எந்த நிலையில் நடக்கிறது என்பது தெரிந்ததுதான். இதனால் தான் வி.ஆர். கிருஷ்ணய்யர் போன்ற ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதிகள், தூக்குத் தண்டனையை எதிர்க்கிறார்கள். மறைந்த பாகிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதி தோரப்பட்டேல் என்பவர், தாம் மீண்டும் நீதிபதியானால், ஒருவருக்கும் தூக்குத் தண்டனை தரமாட்டேன் என்று கூறினார். அவர் கூறும் காரணம் - சட்டமும் நீதியும், ஏழைகளுக்கு எதிராகவே இருக்கின்றன என்பதுதான்.
ராணுவ தளபதியாக இருந்த ஜியாவுல் ஹக் - பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி பிரகடனம் செய்தபோது, அதை எதிர்த்து 1981 இல் தனது உச்சநீதிமன்ற நீதிபதி பதவியைத் தூக்கி எறிந்தார் இந்த நீதிபதி. பாகிஸ்தான் மனித உரிமை ஆணையம் என்ற மனித உரிமை அமைப்பை அவர்தான் தொடங்கினார். பாகிஸ்தானில் அவர் தூக்குத் தண்டனைக்கு எதிராக தனது வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்தவர்.
பாகிஸ்தானைப் போல் இந்தியாவும் தூக்குத் தண்டனையை ஒழிப்பதில் பிடிவாதம் காட்டி வருகிறது. இந்தியாவும் இந்த மனித உரிமைக்கு எதிரான தண்டனையை ரத்து செய்ய தயங்குகிறது. பாகிஸ்தானில் தீவிரவாதக் குற்றம் சாட்டப்பட்ட இந்தியாவைச் சார்ந்த சுராப்ஜித் சிங், தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் இந்தியா, தனது நாட்டில், தூக்குத் தண்டனையை ஒழிக்க வேண்டாமா? அதற்கு முன் நிபந்தனையாக, தூக்குத் தண்டனைக்கு உள்ளாகியுள்ளவர்களுக்காகவாவது, அதை ரத்து செய்ய வேண்டாமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக