வெள்ளி, 11 ஜூலை, 2008

ஈழத் தமிழரைக் கொல்லவா இந்தியா ரூ.400 கோடி உதவி? அருகோ

இலங்கைச் சிங்கள அரசுக்கு இந்தியா 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை, ஏறத்தாழ ரூ.400 கோடியை, அது விருப்பப்பட்ட நாட்டிலிருந்து படைக் கருவிகளைக் கொள்முதல் செய்து கொள்வதற்காக வழங்கியிருக்கிறது. அதையொட்டி ஆயுதங்கள் வாங்குவதற்காகவே அதன் படைத்தலைவர் பொன்சேகா பாகிஸ்தான் சென்றார். ச்இத்தனைக்கும் மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்கள் தலைமையில் உள்ள இன்றைய மத்திய அமைச்சரவையில் தி.மு.க. பா.ம.க. ஆகிய தமிழ்நாட்டுக் கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

நீண்டகாலக் கோரிக்கை

உள்ளபடி 2004ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40ம் வென்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே. அதாவது மத்திய ஆளும் கூட்டணி 100க்கு 100 வெற்றி பெற்றது தமிழ்நாட்டில்தான். அதனால்தான் தமிழ் மக்களின் 150 ஆண்டுகாலக் கோரிக்கைகளான சேது கால்வாய் திட்டமும், தமிழைச் செம்மொழியாக அறிவிப்பதும் நடுவணரசால் நடுக்கின்றி மேற்கொள்ளப்பட்டன. (அவை அரைக் கிணறு தாண்டிய கதையாக நிற்கின்றன என்பது வேறு விடயம்.)

ஈழத்தமிழர் உரிமையை இந்தியா பெற்றுக் கொடுக்க வேண்டுமென்பதும் தமிழ்நாட்டு மக்களின் நீண்டகாலக் கோரிக்கைதான். ஆனால், அது மட்டும் ஏனோ இந்திய அரசால் செவிசாய்க்கப்படாமலே உள்ளது.

ஏறி மேய்க்கும் சிங்கள ராணுவம்

திருமதி. சோனியாகாந்தி அவர்கள் தலைமையில் உள்ள மத்திய ஆளும் முற்போக்குக் கூட்டணியில் முதலில் இடம்பெற்றிருந்த ம.தி.மு.க.வும் திரு. வைகோவும் சிங்கள அரசுக்கு இந்தியா உதவி செய்வதை எவ்வளவோ எதிர்த்தும், அப்படி உதவி செய்வது ஈழத் தமிழ்மக்களைக் கொன்று குவிக்கவே பயன்படுத்தப்படும் என்பதை எத்தனையோ எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியும் இந்திய நடுவணரசு ஏறிட்டும் பார்க்க முன்வராதது வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

இவ்வளவுக்கும் இந்தியாவின் மூத்த தலைவர் என்று பிரதமர் மன்மோகன் சிங் அவர்களாலும் சோனியா அம்மையார் அவர்களாலும் போற்றப்படுகின்ற ஆற்றல் மிகுந்த தமிழக முதல்வர் ஐந்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், இலங்கைப் பிரச்சினை என்பது தந்தை செல்வா காலத்திலிருந்து அங்கு நடைபெறுகிற உரிமைப் போராட்டம் என்று தமிழகச் சட்டமன்றத்திலேயே குறிப்பிட்டதோடு, சிங்கள இராணுவம் நம்மை ஏறி மேய்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்று வருத்தத்துடன் பேசியிருக்கிறார்.

ஒருமனதான தீர்மானம்

இதனுடைய உட்கருத்து இந்திய அரசுக்குப் புரியும் என்று நம்புகிறோம். அதாவது இந்தியாவினுடைய அரவணைப்பு இல்லை என்றால், சிங்கள இராணுவம் இப்போது முன்னேறி வருகிறோம் என்று சொல்கிறதே அது முள்ளின் முனையளவுகூட நடந்திருக்காது. ஈழப் போராளிகளால் முறியடிக்கப்பட்டிருக்கும்.

எனவேதான் முதலமைச்சராலேயே கொண்டு வரப்பட்டு, 23-04-2008 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கையில் அமைதியை ஏற்படுத்த அங்கே மோதலில் ஈடுபட்டு வரும் இரு பிரிவினரிடையே அமைதியை ஏற்படுத்த முறையான அரசியல் தீர்வை எட்ட பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

அத்தீர்மானம் நிறைவேறிய கூட்டத் தொடர் முடிவதற்கு முன்பே மேற்கண்டவாறு இராணுவ தளவாடங்கள் வாங்கிக் கொள்ள சிங்கள அரசுக்கு இந்தியா ரூ.400 கோடி வழங்கும் என்ற அறிவிப்பு ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களையும் உதாசீனம் செய்வதே ஆகும்.

இந்தியாவில் சிங்கள மாநிலம் என்று எதுவுமில்லை. சிங்களம் பேசும் இந்தியரும் இல்லை. ஆனால், தமிழ்நாடு முகாமையான மாநிலமாக விளங்குகிறது. தமிழ் பேசும் மக்கள் இந்தியா முழுவதும் வாழ்கிறார்கள். தலைநகர் தில்லியிலேயே அதன் மக்கள் தொகையில் 14 விழுக்காடு தமிழர்கள் இருக்கிறார்கள். இருந்தும் தமிழ்மக்களுக்கு எதிராக, சிங்களவருக்கு ஆதரவாக இந்திய அரசாங்கம் இலங்கை விவகாரத்தில் நடந்து கொள்வது அவர்கள் கூறும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஏற்புடையதல்ல.

இந்தியாவால் தோன்றிய இன்னல்

சொல்லப்போனால் இலங்கை இனப்பிரச்சினை என்பதே இந்தியாவால் தோன்றியதுதான் என்றால் அது மிகையாகாது. ஆம்; இந்திய விடுதலையின் எதிரொலியாகவே இந்தியா விடுதலை பெற்ற மறு ஆண்டு 1948ல் இலங்கைக்கு விடுதலை கிடைத்தது. விடுதலைக்கு முன்பு வெள்ளையராட்சியின் கீழ் கடைசியாக நடந்த இலங்கைத் தேர்தல் முடிவில் அமைந்த அதன் நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியினர்என்று சொல்லப்படுகிற மலையாக தமிழர் மத்தியிலிருந்து, அதாவது மத்திய மாகாணத்திலிருந்து 8 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், 2 பேர் செனட் சபை உறுப்பினர்களாகவும் இடம்பெற்றிருந்தனர். அத்துடன் மேலும் 10 தொகுதிகளிலிருந்து அவர்களின் ஆதரவு பெற்றவர்களே நாடாளுமன்றத்தில் இடம் பெற்றிருந்தனர்.

இவர்களுடன் பூர்வீகத் தமிழ்ப் பகுதிகளை வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்தும் தமிழர் பிரதிநிதிகளே தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருந்ததால் தமிழ் உறுப்பினர்கள் கணிசமாக இருந்தனர்.

நாடற்றோராக்கிய நச்சு எண்ணம்

இதை சிங்களவரான அன்றைய இலங்கைப் பிரதமர் டி.எஸ். சேனநாயகாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதை எப்படி மாற்றலாம் என்று சிங்கள இனவெறியர்களோடு, கலந்தாலோசித்த அவர். சுதந்திரம் கிடைத்த ஆறாவது மாதமே தமிழர்களின் சுதந்திரத்தைப் பறிக்கத் திட்டமிட்டு, 10 இலட்சம் மலையகத் தமிழ்மக்களின் குடியுரிமை - வாக்குரிமைகளைப் பறித்து அவர்களை நாடற்றோராக்கினார்.

இதன் காரணமாக நேருவால் தோற்றுவிக்கப்பட்ட இலங்கை இந்தியத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே பதவி இழந்தும், இந்திய அரசு வெறுமனே கண்டனம் தெரிவித்ததே ஒழிய, அதைத் தடுக்கும் கடுமையான முயற்சியில் ஈடுபடவில்லை. முயன்றிருந்தால் சிங்கள அரசு அதைத் திரும்பிப் பெற்றிருக்கும்.

தமிழக உரிமை பறிப்புக்கு இந்திய அங்கீகாரம்

இதனால் அதே இனவாதத் தடத்தில் சென்று எல்லாத் தமிழர்களையுமே இலங்கையிலிருந்து துரத்திவிட்டு, அதைத் தனிச் சிங்கள நாடாக ஆக்கிவிடலாம் என்ற தைரியம் சிங்களப் பேரினவாதிகளுக்கு ஏற்பட்டது. அதனுடைய தொடர்ச்சிதான் இன்றும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடக்கும் இனவெறிப் போராகும். இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும்.

லால் பகதூர் இந்தியப் பிரதமராக இருந்த காலத்தில் அப்போது நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரில் இலங்கையின் ஆதரவைப் பெறுவதற்காக வேண்டி அங்கு நாடற்றோராக்கப்பட்ட 10 இலட்சம் தமிழர்களில் பாதிப்பேரை நாடு திரும்புவோர் என்ற பெயரில் இந்தியா ஏற்றுக் கொள்ள முன்வந்து, பன்னாட்டுச் சட்டத்திற்கு எதிரான அந்த இலங்கையின் நடவடிக்கைக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்கியது. அதாவது தமிழீழத்தை அங்கீகரிக்க மறுக்கும் இந்திய அரசு தமிழரை நாடற்றோராக்கும் சிங்களர் அதிகாரத்தை அங்கீகரித்தது.

ஆகவேதான் டி.எஸ். சேனநாயகாவின் அக்கொடிய சட்டத்தைப் பூர்வீகத் தமிழர்களின் சார்பில் கடுமையாக எதிர்த்த தந்தை செல்வா, இன்று இந்திய வம்சாவளித் தமிழர்கள் கழுத்தில் வைக்கப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்று கேட்டு விட்டு இலங்கைவாழ் தமிழ் மக்களையெல்லாம் ஒருங்கிணைக்கத் தமிழரசுக் கட்சியைத் தொடங்கினார். இங்கே அறிஞர் அண்ணாவால் தி.மு.க. தொடங்கப்பட்ட அதே 1949ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில்தான் அங்கே தமிழரசுக் கட்சியும் தொடங்கப்பட்டது. எனினும் அது பெடரல் கட்சி (Federal Party) என்றே அழைக்கப்பட்டது.

பண்டாரநாயகா

காரணம், இலங்கையை ஒற்றையாட்சி நாடாக இல்லாமல் கூட்டாட்சி நாடாக்கி, தமிழர் வாழும் பகுதிகளை ஒரே மாநிலமாக்கி, அதற்குச் சுயாட்சி உரிமை வழங்க வேண்டும் என்று கோரினார். அன்று சிங்கள மக்களுக்குள்ளும் கரையோரச் சிங்களவர், கண்டிச்சிங்களவர் என்ற பாகுபாடு இருந்ததால், பிரதமர் டி.எஸ். சேனநாயகா முதலிய முக்கிய தலைவர்களெல்லாம் கரையோரச் சிங்களவராகவே இருந்ததால், பின்னர் பிரதமராக வந்த சாலமன் பண்டார நாயகா போன்றவர்களே அதை ஆதரித்தனர். இலங்கையைக் கூட்டாட்சி நாடாக்கிடக் குரல் கொடுத்தனர்.

உள்ளபடி அதற்கேனும் இந்திய அரசு ஆதரவு கொடுத்திருக்குமெனில், இலங்கை கூட்டாட்சி நாடாக அமைந்து தமிழர் உரிமைகள் காப்பாற்றப்பட்டிருக்கும்.

தமிழரோடு தமிழராக...

ஆம், டி.எஸ். சேனநாயகாவால் நாடற்றோராக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்கூட வாழ்வு பெற்றிருப்பர். எப்படியெனில், மற்ற மாகாணங்களில் குடியுரிமை வாக்குரிமையற்றிருந்த அவர்கள், வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழரோடு தமிழராகக் கலக்கும்பொழுது அதைப் பெறக்கூடிய வாய்ப்பு எளிதாக இருந்தது.

ஆனால், தொடக்கத்தில் தந்தை செல்வாவின் கூட்டாட்சிக் கோரிக்கையை ஆதரித்த பண்டார நாயகா, தானே ஆட்சிக்கு வந்த போது, சிங்களம் மட்டும் என்பது போன்ற சட்டங்களைக் கொண்டு வந்து தமிழர்களை ஓரங்கட்டுவதில், சேனநாயகாவையும் விஞ்சியே நடந்து கொண்டார் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

டட்லி சேனநாயகா

ஆமாம்; தமிழ்மக்களுக்குக் குறைந்தபட்ச உரிமைகளை வழங்குவதாகத் தந்தை செல்வாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தார். எனினும், இனவெறி கொண்ட ஒரு சிங்களப் புத்த பிட்சுவால் சுட்டுக் கொல்லப்பட்டார் பண்டாரநாயகா.

அடுத்து, முதலாவது பிரதமர் டி.எஸ். சேனநாயகாவின் மகன் டட்லி சேனநாயகா பிரதமராக வந்தபோது, அவரும் தந்தை செல்வாவுடன் தமிழ்மக்களுக்குக் குறைந்தபட்ச உரிமைகளை வழங்குவதாகச் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாகவே கைவிட்டார்.

ஈழத்து காந்தி

தந்தை செல்வா, தமிழ் மக்களைக் காந்தியவழியில்தான் வழிநடத்தினார். சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் அரசோச்சிய ஐக்கிய தேசிய கட்சி (U.N.P) சிறீலங்கா சுதந்திரக் கட்சி (S.L.F.P) ஆகிய இருகட்சிகளின் மாறிமாறி வந்த ஆட்சிகளால் ஏமாற்றப்பட்டும் அவர் வன்முறைப் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. சாத்வீகப் போராட்டங்களின் மூலம்தான் தமிழர் உரிமைகளை வென்றெடுக்க உழைத்தார். அதனால் ஈழத்துக் காந்தி என்றே அவர் போற்றப்பட்டார்.

ஆயினும், 1949 முதல் 1976 வரை அவர் நடத்திய சாத்வீகப் போராட்டங்கள் பயனற்றுப் போனாலும், 1961ஆம் ஆண்டு அவர் தலைமையில் நடந்த சத்தியாக்கிரகத்தினால் இலங்கைத் தமிழ்ப் பகுதிகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக அரசாங்கமே இயங்க முடியாத நிலை ஏற்பட்டு, அரசுப் பணிகளைத் தமிழரசுக் கட்சித் தொண்டர்களே ஆற்றும் அளவுக்கு சாதனை படைத்தும், எதிர்பார்த்தது நடக்காததாலும், 1976ஆம் ஆண்டு மே மாதம் வட்டுக்கோட்டை என்னும் இடத்தில் தமிழர் அமைப்புகளையெல்லாம் ஒன்றிணைத்து நடத்திய மாநாட்டிலேயே தனித்தமிழ் ஈழம் என்ற கொள்கையை ஈழத் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அவர் பிரகடனப்படுத்தினார்.

சந்துமுனையில் நின்று சிந்து பாடியதே தமிழீழம் என்றில்லாமல் இலங்கை நாடாளுமன்றத்திலேயே நானிலமறிய அதை வலியுறுத்திப் பேசிய தந்தை செல்வா, சிங்களவருடன் கூடிவாழ்ந்தே தமிழர் உரிமைகளை நாடிப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் இதுநாள்வரை போராடினோம். அது கைகூடாததால் தனிநாடு என்ற முடிவுக்கு வந்துள்ளோம் தனி நாடு பெறுவது என்பது வில்லங்கமானதுதான் ஆனால் அதில் நாங்கள் வெற்றி பெறுவோம் அல்லது அந்த முயற்சியில் அழிவோம் ஒன்று மட்டும் நிச்சயம். எங்கள் போராட்ட வழி சாத்வீகமாகவே இருந்தது. ஆனால், எங்கள் எதிர்காலச் சந்ததியினரும் அந்த வழியிலேயே தொடர்ந்து செல்வார்கள் என்று சொல்ல முடியாது என்று தொலைநோக்கோடு முழங்கினார். துரதிர்ஷ்டவசமாக அடுத்த ஆண்டே அவர் இயற்கை எய்திவிட்டார்.

இருந்தாலும் “1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலில்அவரால் நிறுவப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணி, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையே தேர்தல் அறிக்கையாக வைத்துப் போட்டியிட்டது. மொத்தமிருந்த 32 தமிழ்த் தொகுதிகளில் 31 தொகுதிகளில் வென்றது அதன் மூலம் தமிழீழம் என்பது தமிழ்மக்களின் தேர்தல் தீர்ப்பாகவே வெளிப்பட்டது. (இலங்கையே ஒரு குட்டித் தீர்வு. அதற்குள்ளே தமிழீழத் தனிநாடா? என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால், பாலஸ்தீனத்தில் அமைந்திருக்கும் இஸ்ரேல் என்னும் தனிநாடு பரப்பளவிலும், மக்கள் தொகையிலும், இயற்கை வளத்திலும் தமிழீழத்தை விடக் குறைந்ததாகும்.)

83
ஆம் ஆண்டில் தமிழீனப் படுகொலை

அத்தேர்தலில் ஜெயவர்த்தனாவின் கட்சியே நான்கில் மூன்று பங்கு இடங்களைப் பெற, வேறு சிங்களக் கட்சிகள் சொல்லிக் கொள்ளும்படி வெற்றி பெறாததால், தமிழர் விடுதலைக் கூட்டணியே நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாயிற்று, அதனால் தமிழ்மக்களின் ஏகோபித்த முடிவு தமிழீழம்தான் என்பது தரணி முழுதும் எதிரொலித்தது. அதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஜெயவர்த்தனா அரசு 1983ல் இனக்கலவரம் என்ற பெயரில் திட்டமிட்டே தமிழினப் படுகொலை நடத்தியது. அதற்குப் பதிலடி கொடுக்கவே தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இராஜபக்ச அரசின் ராணுவ வெறி

இன்று அதைப் பயங்கரவாதப் போராகச் சித்தரித்துக் கொண்டு சிங்களப் பேரினவாத இராஜபக்ச அரசு, அனைத்து நாடுகளிலிருந்தும் ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டு, ஒரு பகை நாட்டைப் படையெடுத்துச் சென்று தாக்குவது போல இலங்கையின் ஒரு பகுதி என்று அவர்களால் சொல்லிக் கொள்ளப்படும் தமிழீழப் பகுதி மீது முப்படைகளையும் கொண்டு தாக்குதல் நடத்துகிறது. கூடவே தமிழக மீனவர்களையும் கொன்று குவிக்கிறது.

சமாதானப் பேச்சுவார்த்தை மூலம்தான் இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்று சொல்லிக் கொண்டே இந்தியாவும் அதற்கு உதவுகிறது என்றால், இது எந்த நியாயத்தோடு சேர்ந்தது என்று தெரியவில்லை.

என்ன செய்தது இந்திய அரசு?

சரி, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அடிப்படையாகத் தமிழ் மக்களுக்கு இன்ன இன்ன உரிமைகளைத் தருவோம் என்று சிறீலங்கா அரசு இதுவரை அறிவித்திருக்கிறதா? என்றால் அதுவுமில்லை. மாறாக, இந்திய - இலங்கை உடன்பாட்டின் மூலம் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு ஒரே தமிழ் மாகாணம் இலங்கையில் தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகம் என்று ஒப்புக் கொள்ளப்பட்டதைக்கூட நீதிமன்றத் தீர்ப்பைச் சாக்காக வைத்து மீண்டும் தனித்தனியே பிரித்ததுடன், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தையே தமிழர்க்குரியதல்ல என்றாக்கும் சதியை அரங்கேற்றுகிறதே! அதைத் தடுக்க இந்திய அரசாங்கம் என்ன செய்தது?

இந்தியாவும் பாகிஸ்தானும்

ஆக, இலங்கை இனப்பிரச்சினை என்பது தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்ல, இந்தியாவுக்கு எதிராகத் தோற்றுவிக்கப்பட்ட ஒரு பிரச்சினையே ஆகும். ஆம், இலங்கைத் தமிழ் மக்களில் ஒரு பிரிவினரை நாடற்றோராக்கிய அந்தச் சட்டத்தின் பெயரே இந்திய - பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம் என்பதுதான். என்றாலும், அதனால் பாதிக்கப்பட்டோர் - பாதிக்கப்படுவோர் தமிழர்களே என்பதால், இந்தியாவும் பாகிஸ்தானும் சிங்கள அரசுக்குப் போட்டி போட்டுக் கொண்டு உதவுகின்றன.

தொப்புள் கொடி உறவு

ஆனால், இலங்கைத் தமிழர்களோடு தொப்புள் கொடி உறவுள்ள தமிழ்நாடு பாகிஸ்தான் மாநிலமாக அல்ல, இந்தியாவின் மாநிலமாகத்தான் உள்ளது. எனவே, தமிழ்நாட்டுக்காக அதனுடன் தொப்புள் கொடி உறவுள்ள ஈழத் தமிழர்களுக்கு உதவ வேண்டிய தார்மீகக் கடமை இந்தியாவுக்கே இருக்கிறது.

என்ன செய்யப் போகிறது தமிழ்நாடு

தனது வம்சாவழி மக்கள் அர்ஜன்பீனாவில் பாதிக்கப்படுகிறார்கள் என்றதும் ஐரோப்பாவில் உள்ள பிரிட்டன், அமெரிக்காவில் உள்ள அர்ஜண்டீனா மீது படையெடுத்து அதை முறியடித்தது. இலங்கையில் சிங்களப் பேரினவாத ஆட்சியாளரால் தமிழ் மக்கள் மீது போர் தொடுக்கப்பட்டு, அன்றாடம் அவர்கள் அழிகிற நிலையில், இந்தியா பாராமுகமாக இருப்பது ஒருபுறமிருக்க, சிங்களப்படைகளுக்கு உதவுவதென்பது தமிழ்நாட்டைக் கிள்ளுக்கீரையாக மதிப்பதே ஆகும். தமிழ்நாட்டுச் சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் அதையே தொடர்வது தமிழ்நாட்டை அவமதிப்பதுமாகும். என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு

கருத்துகள் இல்லை: