கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் தமிழிலிருந்து பிறந்து வளர்ந்தவை. இந்த உறவை ஏற்றுக் கொள்ளாமல் தமிழைத் தாழ்த்திப் பேசித் தம் வடமொழி உறவைப் பெரிதாகக் கொண்டாடிய கன்னடமும் தெலுங்கும் தமக்குத் திராவிடத் தனித்தன்மை இருப்பதாகக் காட்டிக் கொள்கின்றன. தொன்மையைக் காட்ட தனித்த இலக்கிய வளம் காட்ட முடியாத நிலையில் பழமை பேசிக் கல்வெட்டுச் சொற்களைத் தோண்டித் துருவிக் கொண்டிருக்கின்றன. எப்படியேனும் செப்படி வித்தை செய்து செம்மொழித் தகுதி பெற வேண்டும் என்னும் ஆசையால் துடிக்கின்றன.
செம்மொழித் தகுதி இதுவரை 2000 ஆண்டுத் தொன்மையுடைய மொழிகளுக்குத்தான் தரப்பட்டுள்ளன. ஈராயிரம் ஆண்டுத் தொன்மையும் பிறமொழிச் சார்பின்றித் தனித்தியங்கும் தன்மையும் செவ்விய தொன்மை இலக்கிய வளமும் உடையனவா என்னும் தகுதிகள் முதன்மையாகக் கருதப்பட்டன.
தம் எழுத்துக்களையே திராவிடச் சார்பினவாக அமைத்துக் கொள்ளத் தெரியாமல் முற்றிலும் சமற்கிருத எழுத்தமைப்பை ஏற்றுக் கொண்ட கன்னடமும் தெலுங்கும் செம்மொழித் தகுதிக்கு ஆசைப்படுவது முற்றிலும் பொருந்தாது. இவை தமக்கு எள்ளளவும் தேவைப்படாத வடமொழி வருக்க எழுத்துகளை அறவே நீக்கிக் கொண்டால்தான் தமக்கே உரிய தனிப்பாங்கினைக் காட்ட முடியும். அப்படி விலக்கிக் கொண்டால் அது தமிழாகி விடும். இப்படி இரண்டும் கெட்டான் நிலையில் இருந்து கொண்டு தம் தனித்தன்மையை எப்படிக் காட்ட முடியும்?
செம்மொழி என்பது தகுதி நோக்கித் தரப்படும் நோபல் பரிசு போன்றது. போராடிப் பெறும் நாட்டு விடுதலை போன்றதன்று. இதனைக் கருநாடக ஆந்திர அரசியல் கட்சியினர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மக்களிடம் வாக்குக் கணிப்பு எடுப்பதன் வாயிலாகவும் சட்டமன்றத் தீர்மானம் வாயிலாகவும் உலகில் எந்தமொழியும் செம்மொழியாக அறிவிக்கப்படவில்லை. உலக மொழி நூல் அறிஞர்கள் முடிவு செய்ய வேண்டியவற்றை அரசியல் கட்சிகளும் கல்வெட்டு படிப்பவர்களும் தம் பணியாக ஏற்றுக் கொள்வது தவறு. மருத்துவர் பணியை ஒரு அரசியல் கட்சிக்காரர் ஏற்க முன்வந்தால் அது நகைப்புக்கு இடமாகிவிடும்.
சமற்கிருதச் செல்வாக்கைத் தம் செல்வாக்காக எண்ணிப் பெருமைப்படும் கன்னட தெலுங்கு மொழியினர் சமற்கிருதம் பெற்ற செம்மொழித் தகுதியைத் தாமும் பெற்றதாக எண்ணி மகிழவேண்டும்.
கன்னடம்
கன்னட மொழியிலுள்ள எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த அணியிலக்கண நூலாகிய கவிராச மார்கம் வடமொழியில் பல்லவர் காலத்தில் தோன்றிய தண்டியலங்காரத்தின் மொழி பெயர்ப்புநூல். இந்த மொழிபெயர்ப்பு நூலை எவரும் மூலநூலாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இது எழுத்தும் சொல்லும் குறித்த மொழியிலக்கண நூலும் அன்று. அல்மிடி என்னும் இடத்தில் கிடைத்த கன்னடக் கல்வெட்டு கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இடைக்கால சோழர் காலத்தது. இதனை கி.பி. 4ஆம் நூற்றாண்டுக்குரியது என்பது தவறு. கோயிலுக்கு நிலம் கொடையளிக்கப் பட்டதைக்கூறும் இக்கல்வெட்டில் கடைசி வரிகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டன என அறிஞர் கருதுகின்றனர்.
இதில் உள்ளே எனப் பொருள்படும் உள் எனும் தமிழ்ச்சொல் வட்டார வழக்குத்திரிபாக ஒள் என ஆளப்பட்டுள்ளது. இச்சொல் தெலுங்கில் லோ எனத் திரிந்துள்ளது. வட்டார வழக்குத் திரிபுகள் தனிமொழியாக வளர்ந்த வளர்ச்சியைக் காட்டாது. பழம் என்னும் சொல்லைப் பயம் எனச் சென்னை வட்டாரத்தில் பேசுவதால் சென்னைத் தமிழ் தனிமொழியாக ஏற்றுக் கொள்ளப்படாது. இதனைக் கன்னட வல்லுநர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை கன்னடமும் தெலுங்கும் வட்டார மொழிகளாகவே இருந்து அதன்பின்னர் வேறுபட்ட வினைச்சொல் திரிபுகளால் தனிமொழிகளாயின. வினைச்சொல் திரிபுகளே தனிமொழித் தன்மையைக் காட்டும் திறனுள்ளவை.
கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் கன்னட மொழிக்குக் கேசிராசன் எழுதிய சப்தமணி தர்ப்பணம் என்னும் இலக்கண நூல் வெளிவந்தது. இந்த பழங்கன்னட இலக்கண நூலில் இதன் ஆசிரியர் கன்னடத்தில் மறைந்து வரும் சிறப்பு ழகர எழுத்துகள் உள்ள 180 பழங்கன்னடச் சொற்களை எடுத்துக் காட்டி அந்தோ இத்தகைய பழங்கன்னடச் சொற்கள் மறைந்து வருகின்றனவே என வருத்தப்பட்டுள்ளார். பழங்கன்னடம் அவர் காலத்தில் கூட தமிழின் வட்டார வழக்காக இருந்தது என்பதை இது நிலைநாட்டுகிறது.
தொன்மை இலக்கிய வளம் எதுவும் இல்லாமல் கன்னடம் செம்மொழியாக வேண்டும் என வீரப்பமொய்லி போன்ற கன்னட அரசியல் சார்பாளர் கோரிக்கை விடுப்பது நல்லதன்று. வடமொழி தாக்கத்திற்கு முன்பு கன்னடம் தமிழாகவே இருந்தது என்னும் மொழி வரலாறு இவர்களுக்குத் தெரியவில்லை. சங்க காலத்தில் மைசூரை ஆண்ட மையூர்க்கிழான் என்பவன், இளஞ்சேரல் இரும்பொறைக்குப் பெண் கொடுத்த மாமன் என்னும் நிலவரலாறும் இவர்களுக்குத் தெரியவில்லை. சங்க காலத் தொடக்கம் வரை மராட்டியத்தை ஆண்ட வாணனும் கருநாடகத்தை ஆண்ட மன்னர் அனைவரும் தமிழ்வேந்தர்களின் வழிமரபினர் என்னும் அரசியல் வரலாறும் இவர்களுக்குத் தெரியவில்லை.
தெலுங்கு
தெலுங்குத் தனிமொழியாக வளர்ந்த காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது. தெலுங்கின் முதல் இலக்கணம் சமற்கிருதத்தில் எழுதப்பட்டது. வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட பாரத இராமாயண புராணங்கள் தவிர தெலுங்குப் புலவர்களால் எழுதப்பட்ட தொன்மை இலக்கியம் எதுவும் இல்லை. கன்னடத்தாரைப் போன்றே தெலுங்கரும் கல்வெட்டுகளில் தெலுங்குச் சொல் இருப்பதாகச் சொல்லிக் கொள்கின்றனர்.
கல்வெட்டுச் சொல் செம்மொழியின் அடிப்படைத் தேவையான இலக்கியத் தொன்மையைக் காட்டாது. தமிழிலுள்ள சங்க இலக்கியங்கள், மணிமேகலை, சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களுக்கு ஈடாகத் தெலுங்கில் மண்ணின் மணம் காட்டும் தொன்மையான நூல் ஒன்றுகூட இல்லையென சி.ஆர். ரெட்டி என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
இல், அல் என்பன தமிழிலுள்ள எதிர்மறை இடைநிலைகள். இவை ஆங்கிலத்தில் illegal, Unhappy என வழக்கு பெற்றுள்ளன. இதனால் தமிழைப் போன்று ஆங்கிலத்தையும் செம்மொழியாக அறிவிக்கவேண்டும் என எவரும் பேசத் துணிவதில்லை. தெலுங்கருக்கு மட்டும் இந்த அசட்டுத் துணிச்சல் எப்படி வருகிறது என்று தெரியவில்லை. சொல்லைச் சான்று காட்டுவதை எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
சுமேரிய கல்வெட்டில் தெலுங்குச் சொல் உள்ளது என்பதெல்லாம் அவைக்கு உதவாதவை. கல்வெட்டில் உள்ள சொல். மொழிச் சொல் என்பதைக் கல்வெட்டு அறிஞர்களால் நிறுவ முடியாது. மொழியியல் அறிஞர்களால்தான் நிறுவ முடியும். தொல்காப்பியத்தின் வரையறைப்படி தமிழில் மெய்யெழுத்து புள்ளி பெறும். இது ஆந்திர மாநிலத்துப் பட்டிப்புரோலு என்னுமிடத்தில் கிடைத்த தமிழ்க் கல்வெட்டில் செப்பமாகக் காணப்படுகிறது. ஆந்திரமாநிலத்தில் கிடைத்த மிகத் தொன்மையான கல்வெட்டுகள் அனைத்தும் தமிழ்க் கல்வெட்டுகளாகவே உள்ளன.
புத்த சமயத்தாரின் கல்வெட்டுகளிலும் தெலுங்குச் சொல் உள்ளதா எனத் தேடிப் பார்த்துச் சோர்ந்து போகின்றனர். வெறும் சொல்தொன்மை காட்டுவதாயின் எசுகிமோ மொழி கூட செம்மொழியாகிவிடும். ஏனெனில் உலகம் முதல் தாய்மொழியின் அடிப்படைச் சொற்கூறுகளில் ஒரு சிலவேனும் உலக மொழிகள் அனைத்திலும் ஊடாடியிருப்பதை அமெரிக்க மொழிநூலறிஞர் மெரிட்ரூலன் எடுத்துக் காட்டியிருக்கிறார்.
தெலுங்கரா ஆந்திரரா?
தெலுங்கு நண்பர்கள் முதலில் தம்மை ஆந்திரரா அல்லது தெலுங்கரா எனத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். மராட்டியம் உள்ளிட்டதும் குந்தளத்தைத் தலைமை இடமாகக் கொண்டதுமான கீழக்கரை முதல் மேலைக்கரை வரையிலான விரிந்த நாட்டை ஆண்ட சாதவாகன மன்னர்கள் கி.மு.230 - கி.பி.130 பிராகிருத மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தனர். அக்காலத்தில் தெலுங்குமொழி தோன்றவில்லை. பிராகிருத மொழிக்கு அக்காலத்தில் வடதமிழ் என்னும் பெயர் நிலவியது. ஆந்திர சாதவாகனரின் பிராகிருத மொழி இப்பொழுது மராட்டிய மொழியாக மாறிவிட்டது.
நூற்றுவர்கன்னர் என்னும் சதகர்ணிகன் சேர மரபினான ஆதனுங்கன் என்னும் தமிழ் மன்னனின் வழிவந்தவர்கள். ஆந்திரர் தமிழ்வள்ளல் ஆய்அண்டிரனின் முன்னோர் வழியினர். சதகர்ணிகன் சேரன் செங்குட்டுவனுக்கு நண்பராக மட்டுமின்றி உறவினராகவும் இருந்தனர். சாதவாகனர் அவையில் இருபது தமிழ்ப் புலவர்கள் இருந்தனர் என்பதை காதாசப்தசதி என்னும் நூலால் அறிய முடிகிறது. அவர்கள் வெளியிட்ட நாணயத்தில் ஒரு பக்கம் தமிழிலும் மறுபக்கத்தில் பிராகிருதத்திலும் மன்னன் பெயர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தது. தமிழும் வடதமிழராகிய பிராகிருதமும் ஆட்சிமொழிகளாக இருந்தன என்பது இதனால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சாதவாகனம் என்னும் பெயரிலும் ஆந்திர மன்னரும் நன்னூல் என்னும் பெயரில் கன்னட சங்க மன்னரும் தமிழுக்கு இலக்கண நூல்கள் இயற்றச் செய்தனர். கன்னட மக்களின் முன்னோரும் ஆந்திரரின் முன்னோரும் தமிழைத் தாய்மொழியாக மதித்தும் போற்றினர். அந்த வரலாற்றுணர்வை இப்பொழுதுள்ளவர்கள் மதிக்க வேண்டும். கன்னடத்தாருக்கும் தெலுங்கருக்கும் உண்மையான வரலாறு தெரியவில்லை.
தெலுங்கர் தம்மை ஆந்திரர் எனச் சொல்லிக் கொள்வதாயின் ஆந்திரரின் பிராகிருத மொழி 1996இல் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு விட்டது. மீண்டும் செம்மொழித் தகுதி கேட்பதில் பொருளில்லை. நீங்கள் தெலுங்கர் எனச் சொல்லிக் கொள்வதாயின் இலக்கியத் தொன்மையில்லை. பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு குமாரிலபட்டர் என்பவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மராட்டியம், குசராத்தி ஆகிய ஐந்து மொழிகளையும் ஐந்து (பஞ்ச) திராவிட மொழிகள் எனக் குறிப்பிட்டார். வால்டேர் பல்கலைக்கழகத்துத் தெலுங்குப் பேராசிரியரின் கருத்துப்படி ஆந்திர மாநிலத்தில் குடியேற்றப்பட்டது, மொழியினர் கூட்டுறவால் துளு - துளுவு - துனுகு - தெளுகு - தெலுங்கு எனத் திரிந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்குமுன் மராட்டியம் தவிர்ந்த ஆந்திர மாநிலத்தின் மொழி தமிழாகவே இருந்தது.
மொழியியல் பேராசிரியராகிய பத்திரிராசு கிருட்டிணமூர்த்தியும் சில சொற்பட்டியல்களைக் காட்டியே தெலுங்கின் தொன்மை காட்ட முயன்றார். மொழியியல் வரலாறுகளை ஊன்றிக் கவனிக்காத ஐராவதம் மகாதேவனாரும் மனம் போன போக்கில் தெலுங்கின் தொன்மைக்கு ஒரு பக்கமும் சமற்கிருத உறவுக்கு மறுபக்கமும் உறவுகாட்டி எல்லோருக்கும் நல்ல பிள்ளையாகக் காட்டிக் கொள்கிறார்கள். மொழியறிஞர்களே உலக அளவில் உண்மையை நிலைநாட்ட முடியும். இந்திய அரசும் மொழி வல்லுநரிடமே கருத்து கேட்க வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக